முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.036.திரு ஐயாறு
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.036.திரு ஐயாறு

1.036.திரு ஐயாறு
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - செம்பொன்சோதீசுரர்.
தேவியார் - அறம்வளர்த்தநாயகியம்மை.
382 |
கலையார் மதியோ டுரநீரும் நிலையார் சடையா ரிடமாகும் மலையா ரமுமா மணிசந்தோ டலையார் புனல்சே ருமையாறே. |
1.036.1 |
ஒரு கலைப் பிறைமதியோடு வலிய கங்கை நீரும் நிலையாகப் பொருந்திய சடையை உடைய சிவபிரானது இடம், மலையிலிருந்து கொணர்ந்த முத்துக்கள் சிறந்த மணிகள் சந்தனம் ஆகியவற்றை அள்ளி வரும் அலைகளை உடைய காவிரிபாயும் திருவையாறு ஆகும்.
383 |
மதியொன் றியகொன் றைவடத்தான் மதியொன் றவுதைத் தவர்வாழ்வு மதியின் னொடுசேர் கொடிமாடம் மதியம் பயில்கின் றவையாறே. |
1.036.2 |
பிறைமதி பொருந்திய சடையில் கொன்றை மாலையை அணிந்தவனும், தக்க யாகத்தில் வீரபத்திரரை ஏவிச் சந்திரனைக் காலால் பொருத்த உதைத்தவனுமான சிவபெருமான் வாழுமிடம், மதியோடு சேரும் கொடிகளைக் கொண்டதும் மதி தங்குமாறு உயர்ந்த மாடவீடுகளை உடையதுமான திருவையாறு ஆகும்.
384 |
கொக்கின் னிறகின் னொடுவன்னி புக்க சடையார்க் கிடமாகும் திக்கின் னிசைதே வர்வணங்கும் அக்கின் னரையா ரதையாறே. |
1.036.3 |
கொக்கிறகு என்னும் மலரோடு வன்னிப் பச்சிலைகளும் பொருந்திய சடைமுடியை உடையவர்க்கு உரிய இடம், எண் திசைகளிலும் வாழும் தேவர்களால் வணங்கப் பெறுபவரும், சங்கு மணிகள் கட்டிய இடையினை உடையவருமான அப்பெருமானின் திருவையாறாகும்.
385 |
சிறைகொண் டபுரம் மவைசிந்தக் கறைகொண் டவர்கா தல்செய்கோயில் மறைகொண் டநல்வா னவர்தம்மில் அறையும் மொலிசே ருமையாறே. |
1.036.4 |
சிறகுகளோடு கூடிய முப்புரங்களும் அழியச் சினந்தவராகிய சிவபிரான் விரும்பும் கோயில், மக்கள் கண்களுக்குப் புலனாகாது மறைந்து இயங்கும் நல்ல தேவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் ஒலி நிறைந்துள்ள திருவையாறு ஆகும்.
386 |
உமையா ளொருபா கமதாகச் சமைவா ரவர்சார் விடமாகும் அமையா ருடல்சோர் தரமுத்தம் அமையா வருமந் தணையாறே. |
1.036.5 |
உமையம்மை ஒருபாகத்தே விளங்கப் பொருந்தியவராகிய சிவபெருமான் சாரும் இடம், மலையிடையே உள்ள மூங்கில்கள் முத்துக்களைச் சொரிய அவை காவிரியாற்றில் பொருந்தி வரும் குளிர்ந்து திருவையாறாகும்.
387 |
தலையின் றொடைமா லையணிந்து கலைகொண் டதொர்கை யினர்சேர்வாம் நிலைகொண் டமனத் தவர்நித்தம் மலர்கொண் டுவணங் குமையாறே . |
1.036.6 |
தலையோட்டினால் தொகுக்கப்பட்டுள்ள மாலையை அணிந்து மானைக் கையின்கண் கொண்டவராகிய சிவபிரானது இடம், இறைவன் திருவடிக்கண் நிலைத்த மனமுடையவராகிய அடியவர் நாள்தோறும் மலர்கொண்டு தூவி வழிபாடு செய்யும் திருவையாறாகும்.
388 |
வரமொன் றியமா மலரோன்றன் சிரமொன் றையறுத் தவர்சேர்வாம் வரைநின் றிழிவார் தருபொன்னி அரவங்கொடுசே ருமையாறே. |
1.036.7 |
வரங்கள் பல பெற்ற தாமரை மலர்மேல் விளங்கும் பிரமனின் தலைகளில் ஒன்றை அறுத்த சிவபிரானது இடம், மலை யினின்று இழிந்துபெருகி வரும் காவிரி நதி ஆரவாரித்து வரும் திருவையாறு ஆகும்.
389 |
வரையொன் றதெடுத்த தவரக்கன் சிரமங் கநெரித் தவர்சேர்வாம் விரையின் மலர்மே தகுபொன்னித் திரைதன் னொடுசே ருமையாறே. |
1.036.8 |
கயிலை மலையைப் பெயர்த்த இராவணனின் சிரங்களும் பிறஅங்கங்களும் சிதறுமாறு நெரித்த சிவபிரான் எழுந்தருளிய இடம். மணம் பொருந்திய மலர்களைக் கொண்டு புண்ணிய நதியாகிய காவிரி அலைகளோடு கூடிப் பாய்ந்து வளம் சேர்க்கும் திருவையாறு ஆகும்.
390 |
சங்கக் கயனு மறியாமைப பொங்குஞ் சுடரா னவர்கோயில் கொங்கிற் பொலியும் புனல்கொண்டு அங்கிக் கெதிர்காட் டுமையாறே. |
1.036.9 |
சங்கத்தைக் கையின்கண் கொண்ட திருமாலும் அறியாதவாறு பொங்கி எழும் சுடராகத் தோன்றிய சிவபிரான் உறையும் கோயில், காவிரி, மகரந்தம், தேன் ஆகியன பொலியும் நீரைக் கொண்டு வந்து, அழல் வடிவான இறைவன் திருமுன் அர்க்கியமாகக் காட்டும் திருவையாறாகும்.
391 |
துவரா டையர்தோ லுடையார்கள் கவர்வாய் மொழிகா தல்செய்யாதே தவரா சர்கள்தா மரையானோ டவர்தா மணையந் தணையாறே. |
1.036.10 |
துவராடை தரித்த புத்தர், ஆடையின்றித் தோலைக் காட்டும் சமணர் ஆகியவரின் மாறுபட்ட வாய்மொழிகளை விரும்பாது, தவத்தால் மேம்பட்டவர்கள், பிரமன் முதலிய தேவர்களோடு வந்தணைந்து வழிபடும் தலம் திருவையாறாகும். அதனைச் சென்று வழிபடுமின்.
392 |
கலையார் கலிக்கா ழியர்மன்னன் நலமார் தருஞா னசம்பந்தன் அலையார் புனல்சூ ழுமையாற்றைச் சொலுமா லைவல்லார் துயர்வீடே. |
1.036.11 |
கலைவல்லவர்களின் ஆரவாரம் மிக்க சீகாழிப் பதியில் உள்ளார்க்குத் தலைவனாகிய நன்மை அமைந்த ஞானசம்பந்தன் அலைகளை உடைய காவிரியால் சூழப்பட்ட திருவையாற்றைப் போற்றிப் பாடிய இத்தமிழ் வல்லவர்களின் துயர்கள் நீங்கும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 34 | 35 | 36 | 37 | 38 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திரு ஐயாறு - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருவையாறாகும், திருவையாறு, ருமையாறே, பொருந்திய, சிவபிரான், சிவபிரானது, காவிரி, கையின்கண், இறைவன், கொண்டு, காட்டும், பொலியும், தணையாறே, தவர்சேர்வாம், சிவபெருமான், மணிகள், கலையார், திருச்சிற்றம்பலம், அலைகளை, மதியொன், திருமுறை, மாலையை, கோயில்