முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.115.திரு இராமனதீச்சரம்
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.115.திரு இராமனதீச்சரம்

1.115.திரு இராமனதீச்சரம்
பண் - வியாழக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பண் - வியாழக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - இராமநாதேசுவரர்.
தேவியார் - சரிவார்குழலியம்மை.
1238 |
சங்கொளிர் முன்கையர் தம்மிடையே அங்கிடு பலிகொளு மவன்கோபப் பொங்கர வாடலோன் புவனியோங்க எங்கும னிராமன தீச்சரமே. |
1.115.1 |
சங்கு வளையல்கள் அணிந்த முன்கைகளை உடைய முனி பன்னியர் வாழும் வீதிகளிடையே சென்று அங்கு அவர்கள் இடும் பலியை மகிழ்வோடு கொள்பவனும், சினம் பொங்கும் அரவைப் பிடித்து ஆட்டுபவனும், உலக மக்கள் உயர்வுபெற எங்கும் நிறைந்திருப்பவனுமாகிய சிவபிரானது தலம் இராமனதீச்சரம்.
1239 |
சந்தநன் மலரணி தாழ்சடையன் தந்தம தத்தவன் றாதையோதான் அந்தமில் பாடலோ னழகனல்ல எந்தவ னிராமன தீச்சரமே. |
1.115.2 |
அழகிய நல்ல மலர்களை அணிந்து தாழ்ந்து தொங்கும் சடையினை உடையவனும், தந்தத்தையும் மதத்தையும் உடைய விநாயகப் பெருமானின் தந்தையும், முடிவற்ற இசைப்பாடல்களைப் பாடுபவனும், அழகனும், எங்கள் தவப்பேறாய் விளங்கும் நல்லவனுமாய சிவபிரானது தலம், இராமனதீச்சரம்.
1240 |
தழைமயி லேறவன் றாதையோதான் மழைபொழி சடையவன் மன்னுகாதில் குழையது விலங்கிய கோலமார்பின் இழையவ னிராமன தீச்சரமே. |
1.115.3 |
தழைத்த பீலியோடு கூடிய மயில்மீது ஏறிவரும் முருகனது தந்தையும். உலகிற்கு நீர்வளந்தரும் கங்கை பாயும் சடையினை உடையவனும், காதில் நிலைபெற்று விளங்கும் குழையை அணிந்தவனும், அழகிய மார்பில் குறுக்காக முப்புரிநூல் அணிந்தவனுமாகிய சிவபிரானது தலம் இராமனதீச்சரம்.
1241 |
சத்தியு ளாதியோர் தையல்பங்கன் முத்திய தாகிய மூர்த்தியோதான் அத்திய கையினி லழகுசூலம் வைத்தவ னிராமன தீச்சரமே. |
1.115.4 |
சத்திகளில் முதல்வியாக விளங்கும் உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவனும், உயிர்கட்கு முத்திப்பேறாக விளங்கும் கடவுளும், தீயேந்திய கையில் அழகிய சூலத்தைத் தாங்கியவனுமாகிய சிவபிரானது தலம் இராமனதீச்சரம்.
1242 |
தாழ்ந்தகு ழற்சடை முடியதன்மேல் தோய்ந்த விளம்பிறை துலங்குசென்னிப் பாய்ந்தகங் கையொடு படவரவம் ஏய்ந்தவ னிராமன தீச்சரமே. |
1.115.5 |
தலையில், தாழ்ந்த கூந்தலால் இயன்ற சடை முடியின்மேல், அழகு தோய்ந்த இளம்பிறை, பாய்ந்துவரும் கங்கை, படம் பொருந்திய அரவம் ஆகியவற்றைச் சூடிய சிவபிரானது தலம் இராமனதீச்சரம்.
1243 |
சரிகுழ லிலங்கிய தையல்காணும் பெரியவன் காளிதன் பெரியகூத்தை அரியவ னாடலோ னங்கையேந்தும் எரியவ னிராமன தீச்சரமே. |
1.115.6 |
பிடரியின்மேல் விளங்கும் சுருண்ட கூந்தலினளாகிய உமையம்மை அருகிலிருந்து காணும் பெரியவனும், காளியின் பெரிய கூத்தோடு போட்டியிட்டு அவளால் அறிதற்கு அரியவனாய், நடனமாடுபவனும், அழகிய கையில் எரி ஏந்தி விளங்குபவனுமாகிய சிவபிரானது தலம் இராமனதீச்சரம்.
1244 |
மாறிலா மாதொரு பங்கன்மேனி நீறது வாடலோ னீள்சடை மேல் ஆறது சூடுவா னழகன்விடை ஏறவ னிராமன தீச்சரமே. |
1.115.7 |
தனக்கு ஒப்பாரில்லாத அழகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவனும், திருமேனியில் திருநீற்றை அணிந்தவனும், நீண்ட சடைமுடியின்மேல் கங்கையைச் சூடியவனும் அழகனும், விடையின்மேல் ஏறி வருபவனுமாகிய சிவபிரானது தலம் இராமனதீச்சரம்.
1245 |
தடவரை யரக்கனைத் தலைநெரித்தோன் படவர வாட்டிய படர்சடையன் நடமது வாடலா னான்மறைக்கும் இடமவ னிராமன தீச்சரமே. |
1.115.8 |
பெரிய கயிலை மலையால் இராவணனின் தலையை நெரித்தவனும், படம் பொருந்திய பாம்பை ஆட்டி மகிழ்பவனும், விரிந்த சடைமுடியை உடையவனும், நடனம் புரிபவனும், நான்கு வேதங்கட்கும் இடமாக விளங்குபவனும் ஆகிய சிவபிரானது தலம் இராமனதீச்சரம்.
1246 |
தனமணி தையல்தன் பாகன்றன்னை அனமணி யயனணி முடியுங்காணான் பனமணி வரவரி பாதங்காணான் இனமணி யிராமன தீச்சரமே. |
1.115.9 |
அழகிய தனபாரங்களையுடைய உமையம்மையின் கேள்வனும், அன்னமாகத் தன்னை மாற்றிக் கொண்டு, அழகிய முடியைக் காணாது திரும்பிய நான்முகன், திருவடியைக் காணாத, படங்களில் மணிகளையுடைய ஆதிசேடனாகிய அணையில் துயிலும் திருமால் ஆகியோர் வணங்க அருள் புரிந்தவனுமாகிய சிவபிரானது தலம் பல்வகையான மணிக்குவைகளையுடைய இராமனதீச்சரம் ஆகும்.
1247 |
தறிபோலாஞ் சமணர்சாக் கியர்சொற்கொளேல் அறிவோரா னாம மறிந்துரைமின் மறிகையோன் றன்முடி மணியார்கங்கை எறிபவ னிராமன தீச்சரமே. |
1.115.10 |
மரத்தால் இயன்ற தடிபோன்ற அறிவற்ற சமண புத்தருடைய சொற்களைக் கேளாதீர். மெய்ஞ்ஞானியர்கள் வாயினால் இறைவன் திருப்பெயரை அறிந்து சொல்வீர்களாக. அப்பெருமான் மான் இளங்கன்றை ஏந்திய கையனாய்த் தனது முடியில், மணிகளோடு கூடிய கங்கை நதி அலை, மோதுபவனாய், இராமனதீச்சரத்தில் எழுந்தருளியுள்ளான். சென்று வழிபடுக.
1248 | தேன்மலர்க் கொன்றையோன் * * * * * * * * * * | 1.115.11 |
தேன் பொருந்திய கொன்றை மாலையைச் சூடியவன்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 113 | 114 | 115 | 116 | 117 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திரு இராமனதீச்சரம் - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - இராமனதீச்சரம், தீச்சரமே, னிராமன, சிவபிரானது, விளங்கும், பொருந்திய, உடையவனும், கொண்டவனும், பாகமாகக், கையில், தோய்ந்த, திருமுறை, உமையம்மையை, அணிந்தவனும், சென்று, சடையினை, தந்தையும், அழகனும், திருச்சிற்றம்பலம், றாதையோதான்