சிதம்பரப்பாட்டியல்

| 3 |
நிரலியற்சீர் நேர்நேர்தே மாநிரைநேர் புளிமா நிரைநிரையே கருவிளமே நேர்நிரைகூ விளம்பின் வருநேர்காய் வெள்ளைநிரை வரிற்கனிவஞ் சிச்சீர் மற்றுநேர் நிரைவரிற்றன் நிழல்நேர்நேர் தண்பூப் பரவுநிரை நேர்நறும்பூ நிரைநிரைவந் தக்காற் பகருநறு நிழலாமீ ரெட்டிவைநா லசைச்சீர் விரவுவஞ்சி நாண்மலரோ ரசைச்சீரீ ரசைச்சீர் மேவியபோற் றளைதமக்கு விளங்கிமரு விடுமே. |
"நிரலியற்சீர்.....நேர்நிரைகூவிளம்" என்றது, இந்த ஈரசைச்சீர் நான்கும் ஆசிரியச்சீர் என்றவாறு. நேர்நேர் நிரைநேர் நிரைநிரை நேர்நிரை எனவும்,தேமா புளிமா கருவிளம் கூவிளம் எனவும் வரும்.
"பின்வரும் நேர்காய் வெள்ளை" என்றது, அவை நிரலே நிற்க, பின்னேவரும் நேர்,நேர் நேர்நேர்; தேமாங்காய்: பிறவுமன்ன;
இவை நாலும் வெண்சீர் என்றவாறு; "நிரைவரிற் கனிவஞ்சிச்சீர்" என்றது, இப்படியே பின்னே நிரை நாலும் வந்தால்
நேர்நேர்நிரை; தேமாங்கனி; பிறவுமன்ன; இவை நாலும் வஞ்சிச்சீர் என்றவாறு,
"மற்றும் நேர்நிரை வரில்.....பகருநறுநிழல்" என்றது, அவ்வாறு பின்னே நேர்நிரைவந்தால் நேர்நேர்நேர்நிரை: தேமாந்
தண்ணிழல்: பிறவுமன்ன; அப்படிப்பின்னே நேர்நேர் வந்தால் நேர்நேர்நேர் நேர்: தேமாந்தண்பூ: பிறவுமன்ன; பின்னே
நிரைநேர் வந்தால் நேர்நேர் நிரைநேர்: தேமாநறும்பூ: பிறவுமன்ன; பின்றான் நிரைநிரை வந்தால் நேர் நேர்நிரைநிரை:
தேமாநறுநிழல்: பிறவுமன்ன; இவைபதினாறு பொதுச்சீரும் வஞ்சி.
"நாண்மலரோ ரசைச்சீர்"என்றது. நாள் எனவும் மலரெனவும் வருமி வையிரண்டும் ஓரசைச்சீர் என்றவாறு. ஆகச்சீர் முப்பது.
இந்த ஓரசைச்சீருக் குத்தளை ஆசிரியச்சீருக்குரைத்த தளையெனக்கொள்க.
'நிரல்' என்பதனையும் பின்னென்பதனையும் எல்லாவற்றிற்கும் தீபமாக ஒட்டிக் கொள்க.
"இயற்சீ ராசிரியச்சீ ரகவற், சீரென மொழிப சிறந்திசி னோரே."
வாய்பாடு:-
நேர்நேர் தேமா, நிரைநேர் புளிமா, நிரைநிரை கருவிளம், நேர்நிரை கூவிளம்: இவை ஆசிரியச்சீர்.
நேர்நேர்நேர் தேமாங்காய், நிரைநேர்நேர் புளிமாங்காய், நிரை நிரைநேர் கருவிளங்காய்,நேர்நிரைநேர் கூவிளங்காய்,இவை
வெண்சீர்.
நேர் நேர்நிரை தேமாங்கனி, நிரைநேர்நிரை புளிமாங்கனி, நிரைநிரைநிரை கருவிளங்கனி, நேர்நிரைநிரை
கூவிளங்கனி:இவை வஞ்சிச்சீர்.
நேர்நேர்நேர்நிரை தேமாந்தண்ணிழல், நிரைநேர்நேர்நிரை புளிமாந்தண்ணிழல், நிரைநிரைநேர்நிரை கருவிளந்தண்ணிழல்,
நேர்நிரைநேர்நிரை கூவிளந்தண்ணிழல் எனவும்,
நேர்நேர்நேர்நேர் தேமாந்தண்பூ, நிரைநேர்நேர்நேர் புளிமாந்தண்பூ, நிரைநிரைநேர்நேர் கருவிளந்தண்பூ,நேர்நிரை நேர்நேர்
கூவிளந்தண்பூ எனவும்;
நேர்நேர்நிரைநேர் தேமாநறும்பூ, நிரைநேர்நிரைநேர் புளிமாநறும்பூ, நிரைநிரைநிரைநேர் கருவிளநறும்பூ,
நேர்நிரைநிரைநேர் கூவிளநறும்பூ எனவும்,
நேர்நேர்நிரைநிரை தேமாநறுநிழல், நிரைநேர்நிரைநிரை புளிமாநறுநிழல், நிரைநிரைநிரைநிரை கருவிளநறுநிழல்,
நேர்நிரைநிரைநிரை கூவிளநறுநிழல் எனவும் வரும்:
இவை பொதுச் சீர்.நாண் மலர் என்பன ஓரசைச்சீர். இவற்றிற்கு உதாரணம்:-
"குன்றக் குறவன் காதன் மடமகள்
வரையா மகளிர் புரையுஞ் சாயலள்
ஐய லரும்பிய முலையள்
செய்ய வாயினள் மார்பினள் சுணங்கே'
இவ்வாசிரியப்பாவினுள் நான்காசிரியவுரிச்சீரூம் வந்தவாறு கண்டு கொள்க.
"பொன்னார மார்பிற் புனைகழற்காற் கிள்ளிபே
ருன்னேனென் றூழுலக்கை பற்றினேற்-கென்னோ
மனனொடு வாயெல்லா மல்குநீர்க் கோழிப்
புனனாடன் பேரே வரும்"
இவ்வெண்பாவினுள் வெண்பாவுரிச்சீர் நான்கும் வந்தவாறு கண்டுகொள்க.
"சுறமறிவன துறையெல்லாம்
இறவீன்பன வில்லெல்லாம்
மீன்றிரிவன கிடங்கெல்லலாம்
தேன்றாழ்வன பொழிலெல்லாம்
எனவாங்கு:
தண்பணை தழீஇய விருக்கை
மண்கெழு நெடுமதின் மன்ன னூரே."
இவ்வஞ்சிப்பாவினுள் வஞ்சியுரிச்சீர் நான்கும் வந்தவாறு கண்டுகொள்க.
"அங்கண்வானத் தமரரசரும்
வெங்களியானை வேல்வேந்தரும்
வடிவார்கூந்தன் மங்கையரும்
கடிமலரேந்திக் கதழ்ந்திறைஞ்சக்
சிங்கஞ்சுமந்த மணியணைமிசைக்
கொங்கவிரசோகின் குளிர்நிழற்கீழ்ச்
செழுநீர்ப்பவளத் திரள்காம்பின்
முழுமதிபுரையு முக்குடை நீழல்
வெங்கண்வினைப்பகை விளிவெய்தப்
பொன்புனைநெடு மதில் புடைவளைப்ப
வனந்தகதுட்டய மவையெய்த
நனந்தலையுலகுட னவைநீங்க
மந்தமாருத மருங்கசைப்ப
அந்தரதுந்துபி நின்றியம்ப
இலங்குதாமரை யெழுந்தலமர
நலங்கிளர்பூமழை நனிசொரிதர
இனிதிருந்,தருணெறி நடாத்திய வாதிதன்
திருவடி பரவுதும் சித்திபெறற் பொருட்டே.
இக்குறளடி வஞ்சிப்பாவினுள் பொதுச்சீர் பதினாறும் அடிதோறும் வந்தவாறு கண்டுகொள்க.
"நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத் தவல மிலர்"
இவ்வெண்பாவினுள் 'இலர்'என நிரையசைச் சீராயினவாறு கண்டுகொள்க.
"பாலொடு தேன்கலந் தற்றே பனிமொழி
வாலெயி றூறிய நீர்"
இவ்வெண்பாவினுள் 'நீர்' என நேரசைச் சீராயினவாறு கண்டுகொள்க.பிறவுமன்ன.இனி,ஓரசைச்சீருக்குத் தளைவருமாறு:-
"உரிமை யின்க ணின்மையால்
அரிமதர் மழைக் கண்ணாள்
செருமதி செய் தீமையால்
பெருமை கொன்ற வென்பவே"
இம்முச்சீரடி வஞ்சிவிருத்தத்துள் 'மழை''செய்' என்னும் அசைச்சீர்கள் இயற்சீரேபோலக்கொண்டு, வருஞ்சீர் முதலசையோடொன்றாமலும் ஒன்றியும் வந்தமையால், முறையே இயற்சீர்வெண்டளையும் ஆசிரியத்தளையுமாயின. (3)
| 4 |
மருவுவிள முன்னர்நிரை நிரையொன்றா சிரிய மாமுன்னேர் வரினேரொன் றாசிரியத் தளையாம் விரவியகாய் முன்னர்நேர் வெண்சீர்வெண் டளையா மின்னே மீட்டுங்காய் முன்னர்நிரை * கலித்தளையா கருதுகனி முன்னர்நே ரொன்றாத வஞ்சி கனிமுனிரை யொன்றியவஞ் சித்தளையா மாமுன் னிரையும்விள முன்னேரு மியற்சீர்வெண் டளையாம் நிழல்கனியாம் பூக்காயா நிகழ்பொதுச்சீர்த் தளைக்கே. |
------- ---
*"மேவுகலித்தளையாம்"எனவும் பாடம்.
என்பது-விளமென நிற்ப நிரையெனவருவது நிரையொன்றாசிரியத் தளை; மாவெனநிற்ப நேரென வருவது
நேரொன்றாசிரியத்தளை; காயெனநிற்ப நேரெனவருவது வெண்சீர் வெண்டளை; காயெனநிற்ப நிரையென வருவது
கலித்தளை; கனியென நிற்ப நேரென வருவது ஒன்றா தவஞ்சித்தளை; கனியெனநிற்ப நிரையெனவருவது ஒன்றிய
வஞ்சித்தளை; மாவென நிற்ப நிரையெனவருவதும் விளமெனநிற்ப நேரெனவருவதும் இயற்சீர் வெண்டளை
எனவரும்;தண்ணிழற்சீருக்கும் நறுநிழல்சீருக்கும் கனிச்சீருக்குரைத்தாங்குத் தளைகொள்க; தண்பூச்சீருக்கும்
நறும்பூச்சீருக்கும் காய்ச்சீருக்கு உரைத்த தளையே கொள்க.இவற்றுக்குதாரணம்:-
"திருமழை தலைஇய விருணிற விசும்பின்
விண்ணதி ரிமிழிசை கடுப்பப்
பண்ணமைந் தவர்தேர் சென்ற வாறே."
இது நிரையொன்றாசிரியத்தளையும் நேரொன்றாசிரியத்தளையும் வந்த செய்யுள்."பொன்னார்*மார்பின்"-இது வெண்சீர்
வெண்டளையும் இயற்சீர்வெண்டளையும் வந்தசெய்யுள்."செல்வப்போர்க் கதக்கண்ணன்"-இஃது கலித்தளையான் வந்த
செய்யுள்."சுறமறிவன துறையெல்லாம்"-இஃது ஒன்றிய வஞ்சித்தளையும் ஒன்றாத வஞ்சித்தளையும் வந்த செய்யுள்.நாலசைப்
பொதுச்சீருக்குத் தளை முன்னர்க்காட்டிய 'அங்கண்வானத்து' என்னும் வஞ்சிப்பாவினுட் கண்டுகொள்க. (4)
| 5 |
நிகழிருசீர் குறளடிமுச் சீர்சிந்து நாற்சீர் நேரொடள வடியைஞ்சீர் நெடிலடியா றாதி திகழ்தருசீர் கழிநெடில்வெள் ளடியிரண்டு மூன்றா சிரியம்வஞ்சி மூன்றுகலி நான்கிழிபு பெருமை யகல்பொருண்மட் டெழுத்தசைசீ ரடியந்த மாதி யாமந்தா தித்தொடையே யடிமுழுது மொருசொற் புகல்வதிரட் டைத்தொடையா மோனைமுத லாகப் புகன்றதொடை புகலாது புகல்வதுசெந் தொடையே. |
"நிகழிருசீர்................அகல்பொருண்மட்டு"--என்பதற்கு உதாரணம் வருமாறு :--
" திரைத்த சாலிகை--நிரைத்த போனிரந்
திரைப்ப தேன்களே--விரைக்கொண் மாலையாய்"
இஃது அடிதோறும் இருசீராதலால், குறளடியான் வந்த செய்யுள்.
"இருது வேற்றுமை யின்மையாற்
சுருதி மேற்றுறக் கத்தினோ
டரிது வேற்றுமை யாகவே
கருது வேற்றடங் கையினாய்"
இஃது அடிதோறும் முச்சீராதலால், சிந்தடியான் வந்த செய்யுள்.
" தேம்பழுத் தினியநீர் மூன்றுந் தீம்பலா
மேம்பழுத் தளிந்தன சுளையும் வேரியு
மாம்பழக் கனிகளு மதுத்தண் டீட்டமும்
தாம்பழுத் துளசில தவள மாடமே"
இஃது அடிதோறும் நாற்சீராதலால், அளவடியான் வந்த செய்யுள்.
வென்றான் வினையின் றொகையாய் விரிந்து தன்கண்
ஒன்றாய்ப் பரந்த உணர்வின்னொழியாது முற்றுஞ்
சென்றான் றிகழுஞ் சுடர்சூழொளி மூர்த்தி யாகி
நின்றா னடிக்கீழ்ப் பணிந்தார்வினை நீங்கி நின்றார்.
இஃது அடிதோறும் ஐஞ்சீராதலால், நெடிலடியான் வந்த செய்யுள்.
" இரைக்கு மஞ்சிறைப் பறவைக ளெனப்பெயர்ந் தினவண்டு புடைசூழ
நுரைக்க ளென்னுமக்* குழம்புக டிகழ்ந்தெழ நுடங்கிய விலயத்தால்
திரைக்க ரங்களிற் செழுமலைச் சந்தனத் திரள்களைக் கரைமேல்வைத்
தரைக்கு மற்றிது குணகடற் றிரையொடு பொருதல தவியாதே"
இஃது அறுசீர்க் கழிநெடிலடியான்வந்த செய்யுள்.
"கணிகொண் டலர்ந்த நறுவேங்கை யோடு கமழ்கின்ற காந்த ளிதழா
லணிகொண் டலர்ந்த வனமாலை சூடி யகிலாவி குஞ்சி கமழ
மணிகுண் டலங்க ளிருபாலும் வந்து வரையாக மீது திவளத்
துணிகொண் டிலங்கு சுடர்வேலி னோடு வருவா னிதென்கொ றுணிவே."
* "குழம்புகொண்டெதிர்ந்தெழ" என்றும் பாடம்.
இஃது எழுசீர்க் கழிநெடிலடியான் வந்த செய்யுள்.
"மூவடிவி னாலிரண்டு சூழ்சுடரு நாண
முழுதுலகு† மூடிமுளைவயிர நாறித்
தூவடிவி னாலிலங்கு வெண்குடையி னீழற்
சுடரோயுன் னடிபோற்றிச் சொல்லுவதொன் றுண்டால்
சேவடிக டாமரையின் சேயிதழ்க டீண்டச்
சிவந்தனவோ சேவடியின் செங்கதிர்கள் பாயப்
பூவடிவு கொண்டனவோ பொங்கொளிகள் சூழ்ந்து
புலன்கொளா வாலெமக்கெம் புண்ணியர்தம் கோவே"
இஃது எண்சீர்க் கழிநெடிலடியான் வந்த செய்யுள்.
"இடங்கை வெஞ்சிலை வலங்கை வாளியி னெதிர்ந்த தாரையை
யிலங்கு மாழியின் விலங்கியோள்
முடங்கு வாலுளை மடங்கன் மீமிசை முனிந்து சென்றுடன்
முரண்ட ராசனை முருக்கியோள்
வடங்கெரண் மென்முலை நுடங்கு நுண்ணிடை மடந்தை
சுந்தரி வளங்கொள் பூண்முலை மகிழ்ந்தகோன்
றடங்கொ டாமரை யிடங்கொள் சேவடி தலைக்கு வைப்
பவர் தமக்கு வெந்துயர் தவிர்க்குமே"
இஃது ஒன்பதின்சீர்க் கழிநெடிலடியான் வந்த செய்யுள்.
"கொங்கு தங்கு கோதை யோதி மாத ரோடு கூடி நீடு மோடை நெற்றி
வெங்கண் யானை வேந்தர் போந்து வேத கீத நாத வென்று நின்று தாழ
அங்க பூர்வ மாதி யாய வாதி நூலி னீதி யோது மாதி யாய
செங்கண் மாலை* காலை சென்று சேர்வர் சோதி சேர்ந்த சித்தி தானே"
------------_
† "மூடியெழின் முளைவயிர நாற்றி" என்றும் பாடம்.
* "மாலை காலை சேர்நர் சேர்வர்" என்றும் பாடம்.
இது பதின்சீர்க்கழிநெடிலடியான் வந்த செய்யுள்.பிறவும் வந்துழிக் கண்டு கொள்க.
"பாலொடு தேன்கலந் தற்றே பனிமொழி
வாலெயி றூறிய நீர்"
இஃது இரண்டடியான் வெண்பாவிற்குச் சிறுமைவந்தவாறு.
"முதுக்குறைந் தனளே முதுக்குறைந் தனளே
மலைய னொள்வேற் கண்ணி
முலையும் வாரா முதுக்குறைந் தனளே"
இது மூன்றடியான் ஆசிரியப்பாவிற்குச் சிறுமை வந்தவாறு."செல்வப்போர்" இது நான்கடியாற் கலிப்பாவிற்குச் சிறுமை வந்தவாறு.
"செங்கண்மேதி கரும்புழக்கி
யங்கணீலத் தலரருந்திப்
பொழிற்காஞ்சி நிழற்றுயிலும்
செழுநீர்-நல்வயற் கழனி யூரன்
புகழ்த லானாப் பெருவண் மையனே'
இது மூன்றடியான் வஞ்சிப்பாவிற்குச் சிறுமை வந்தவாறு.பிறவு மன்ன.
இனி எழுத்தசைச்சீர்.... செந்தொடையே"எனபதற்குதாரணம் அந்தாதித்தொடை வருமாறு:-
"உலகுடன் விளக்கு மொனிதிக ழவிர்மதி
மதிநல னழிக்கும் வளங்கெழு முக்குடை
முக்குடை நீழற் பொற்புடை யாசனம்
ஆசனத் திருந்த திருந்தொளி யறிவன்
ஆசனத் திருந்த திருந்தொளி யறிவனை
யறிவுசே ருள்ளமோ டருந்தவம் புரிந்து
துன்னிய மாந்தரஃ தென்ப
பன்னருஞ் சிறப்பின் விண்மிசை யுலகே"
இது நான்கந்தாதித் தொடையும் வந்த செய்யுள். இனி இரட்டைத்தொடை செந்தொடைகள் வருமாறு:-
(*அடி முடிவிலும் அடுத்த அடி முதலிலும் ஒன்றாக வரும் சொற்கள் மூலத்தில் தடித்த எழுத்துக்களில் காட்டப்பட்டுள்ளன.
அவை மதி-மதி;முக்குடை-முக்குடை;யாசனம்-ஆசனம்; ஆசனத் திருந்த திருந்தொளி யறிவன்;யறிவனை-யறிவுசே;
து-து; ஆகியன.)
இது நான்கந்தாதித் தொடையும் வந்த செய்யுள்.இனி இரட்டைத்தொடை செந்தொடைகள் வருமாறு;-
" ஒக்குமே யொக்குமே யொக்குமே யொக்கும்
விளக்கினிற் சீறெரி யொக்குமே யொக்கும்
குளக்கொட்டிப் பூவி னிறம்"
இஃது ஓரடிமுழுதும் வந்தமொழியே வந்தமையால் இரட்டைத்தொடை.
" பூத்த வேங்கை வியன்சினை யேறி
மயிலின மகவு நாடன்
நன்னுதற் கொடிச்சி மனத்தகத் தோனே"
இது மோனை முதலாகிய தொடையின்றி வந்தமையாற் செந்தொடை; பிறவுமன்ன. (4)
| ‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிதம்பரப்பாட்டியல், Chidambarapattiyal, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்

