மகாகவி பாரதியார் நூல்கள் - குயில் பாட்டு
1. குயில்
காலை யிளம்பரிதி வீசுங் கதிர்களிலே நீலக் கடலோர் நெருப்பெதிரே சேர்மணிபோல் மோகனமாஞ் சோதி பொருந்தி முறைதவறா வேகத் திரைகளினால் வேதப் பொருள்பாடி வந்து தழுவும் வளஞ்சார் கரையுடைய |
5 |
செந்தமிழ்த் தென்புதுவை யென்னுந் திருநகரின் மேற்கே, சிறுதொலையில் மேவுமொரு மாஞ்சோலை, நாற்கோணத் துள்ளபல நத்தத்து வேடர்களும் வந்து பறவைசுட வாய்ந்த பெருஞ்சோலை; - அந்தமாஞ் சோலை யதனிலோர் காலையிலே, |
10 |
வேடர் வாராத விருந்துத் திருநாளில், பேடைக் குயிலொன்று பெட்புறவோர் வான்கிளையில் வீற்றிருந்தே, ஆண்குயில்கள் மேனி புளகமுற, ஆற்ற லழிவுபெற, உள்ளத் தனல் பெருக, சோலைப் பறவையெல்லாம் சூழ்ந்து பரவசமாய்க் |
15 |
காலைக் கடனிற் கருத்தின்றிக் கேட்டிருக்க, இன்னமுதைக் காற்றினிடை எங்குங் கலந்ததுபோல், மின்னற் சுவைதான் மெலிதாய் மிகவினிதாய் வந்து பரவுதல்போல், வானத்து மோகினியாள் இந்தவுரு வெய்தித்தான் ஏற்றம் விளங்குதல்போல், |
20 |
இன்னிசைத் தீம்பாடல் இசைத்திருக்கும் விந்தைதனை முன்னிக் கவிதைவெறி மூண்டே நனவழியப் பட்டப் பகலிலே பாவலர்க்குத் தோன்றுவதாம் நெட்டைக் கனவின் நிகழ்ச்சியிலே - கண்டேன் யான். கன்னிக் குயிலொன்று காவிடத்தே பாடியதோர் |
25 |
இன்னிசைப் பாட்டினிலே யானும் பரவசமாய், ''மனிதவுரு நீங்கிக் குயிலுருவம் வாரோதோ? இனிதிக் குயிற்பேட்டை என்றும் பிரியாமல், காதலித்துக் கூடிக் களியுடனே வாழோமோ? நாதக் கனலிலே நம்முயிரைப் போக்கோமோ?'' |
30 |
என்றுபல வெண்ணி ஏக்கமுறப் பாடிற்றால். அன்றுநான் கேட்டது அமரர்தாங் கேட்பாரோ? குக்குக்கூ வென்று குயில்பாடும் பாட்டினிலே தொக்க பொருளெல்லாம் தோன்றியதென் சிந்தைக்கே; அந்தப் பொருளை அவனிக் குரைத்திடுவேன்; |
35 |
விந்தைக் குரலுக்கு, மேதினியீர், என்செய்கேன்! |
2. குயிலின் பாட்டு
ராகம் - சங்கராபரணம் தாளம் - ஏக தாளம் ஸ்வரம்: ''ஸகா - ரிமா - காரீ பாபாபாபா - மாமாமாமா ரீகா - ரிகமா - மாமா'' |
|
சந்த பேதங்களுக்குத் தக்கபடி மாற்றிக் கொள்க. |
|
காதல், காதல், காதல், காதல் போயிற் காதல் போயிற் சாதல், சாதல், சாதல். |
(காதல்) |
1. அருளே யாநல் லொளியே; ஒளிபோ மாயின், ஒளிபோ மாயின், இருளே, இருளே, இருளே. |
(காதல்) |
2. இன்பம், இன்பம், இன்பம்; இன்பத் திற்கோ ரெல்லை காணில், துன்பம், துன்பம், துன்பம். |
(காதல்) |
3. நாதம், நாதம், நாதம்; நாதத் தேயோர் நலிவுண் டாயின், சேதம், சேதம், சேதம். |
(காதல்) |
4. தாளம், தாளம், தாளம்; தாளத் திற்கோர் தடையுண் டாயின், கூளம், கூளம், கூளம். |
(காதல்) |
5. பண்ணே, பண்ணே, பண்ணே; பண்ணிற் கேயோர் பழுதுண் டாயின். மண்ணே, மண்ணே, மண்ணே. |
(காதல்) |
6. புகழே, புகழே, புகழே; புகழுக் கேயோர் புரையுண் டாயின், இகழே, இகழே, இகழே. |
(காதல்) |
7. உறுதி, உறுதி, உறுதி; உறுதிக் கேயோர் உடைவுண் டாயின், இறுதி, இறுதி, இறுதி. |
(காதல்) |
8. கூடல், கூடல், கூடல் கூடிப் பின்னே குமரன் போயின், வாடல், வாடல், வாடல். |
(காதல்) |
9. குழலே, குழலே, குழலே; குழலிற் கீறல் கூடுங்காலை, விழலே, விழலே, விழலே. |
(காதல்) |
3. குயிலின் காதற் கதை
மோகனப் பாட்டு முடிவுபெறப் பாரெங்கும் ஏக மவுன மியன்றதுகாண்; மற்றதிலோர் இன்ப வெறியுந் துயரும் இணைந்தனவால். பின்புநான் பார்க்கப் பெடைக்குயிலஃ தொன்றல்லால் மற்றைப் பறவை மறைந்தெங்கோ போகவுமிவ் |
5 |
ஒற்றைக் குயில் சோக முற்றுத் தலைகுனிந்து வாடுவது கண்டேன். மரத்தருகே போய்நின்று, ''பேடே! திரவியமே! பேரின்பப் பாட்டுடையாய்! ஏழுலகம் இன்பத்தீ ஏற்றுந் திறனுடையாய்! பீழையுனக் கெய்தியதென்? பேசாய்!'' எனக் கேட்டேன். |
10 |
மாயக் குயிலதுதான் மானுடவர் பேச்சினிலோர் மாயச்சொல் கூற மனந் தீயுற நின்றேன். ''காதலை வேண்டிக் கரைகின்றேன், இல்லை யெனில் சாதலை வேண்டிக் தகிக்கின்றேன்'' என்றதுவால், ''வானத்துப் புள்ளெல்லாம் மையலுறப் பாடுகிறாய். |
15 |
ஞானத்திற் புட்களிலும் நன்கு சிறந்துள்ளாய், காதலர்நீ யெய்துகிலாக் காரணந்தான் யா'' தென்றேன். வேதனையும் நாணும் மிகுந்த குரலினிலே கானக் குயிலிக் கதைசொல்ல லாயிற்று:- ''மானக் குலைவும் வருத்தமுநான் பார்க்காமல், |
20 |
உண்மை முழுதும் உரைத்திடுவேன் மேற்குலத்தீர்! பெண்மைக் கிரங்கிப் பிழைபொறுத்தல் கேட்கின்றேன் அறிவும் வடிவுங் குறுகி, அவனியிலே சிறியதொரு புள்ளாய்ச் சிறியேன் பிறந்திடினும், தேவர் கருணையிலோ தெய்வச் சினத்தாலோ |
25 |
யாவர் மொழியும் எளிதுணரும் பேறு பெற்றேன்; மானுடவர் நெஞ்ச வழக்கெல்லாந் தேர்ந்திட்டேன்: கானப் பறவை கலகலெனும் ஓசையிலும், காற்று மரங்களிடைக் காட்டும் இசைகளிலும், ஆற்று நீரோசை அருவி யொலியினிலும், |
30 |
நீலப் பெருங்கடலெந் நேரமுமே தானிசைக்கும் ஓலத் திடையே உதிக்கும் இசையினிலும், மானுடப் பெண்கள் வளமொரு காதலினால் ஊனுருகப் பாடுவதில் ஊறிடுந்தேன் வாரியிலும், ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும், நெல்லிடிக்குங் |
35 |
கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும் கண்ண மிடிப்பார்தஞ் சுவைமிகுந்த பண்களிலும் பண்ணை மடவார் பழகு பல பாட்டினிலும் வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக் கொட்டி யிசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும், |
40 |
வேயின் குழலோடு வீணைமுதலா மனிதர் வாயினிலுங் கையாலும் வாசிக்கும் பல்கருவி நாட்டினிலுங் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும் பாட்டினிலும், நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன். நாவும் மொழிய நடுக்கமுறும் வார்த்தைகளைப் |
45 |
பாவிமனந் தானிறுகப் பற்றிநிற்ப தென்னையோ? நெஞ்சத்தே தைக்க நெடுநோக்கு நோக்கிடுவீர். மஞ்சரே, என்றன் மனநிகழ்ச்சி காணீரோ? காதலை வேண்டிக் கரைகின்றேன், இல்லையெனில், சாதலைத் வேண்டித் தவிக்கின்றேன்'' என்றதுவே. |
50 |
சின்னக் குயிலிதனைச் செப்பியவப் போழ்தினிலே, என்னைப் புதியதோர் இன்பச் சுரங்கவர, உள்ளத் திடையும் உயிரிடையும் ஆங்கந்தப் பிள்ளைக் குயிலினதோர் பேச்சன்றி வேறற்றேன்; ''காதலோ காதலினிக் காதல் கிடைத்திலதேல் |
55 |
சாதலோ சாதல்'' எனச் சாற்றுமொரு பல்லவியென் உள்ளமாம் வீணைதனில், உள்ளவீ டத்தனையும் விள்ள ஒலிப்பதால் வேறொர் ஒலியில்லை. சித்தம் மயங்கித் திகைப்பொடுநான் நின்றிடவும், அத்தருணத் தேபறவை யத்தனையுந் தாந்திரும்பிச் |
60 |
சோலைக் கிளையிலெலாந் தோன்றி யொலித்தனவால், நீலக் குயிலும் நெடிதுயிர்த்தாங் கிஃதுரைக்கும், 'காதல் வழிதான் கரடுமுர டாமென்பார்; சோதித் திருவிழியீர்! துன்பக் கடலினிலே நல்லுதுறுதி கொண்டதோர் நாவாய்போல் வந்திட்டீர்; |
65 |
அல்லலற நும்மோ டளவாளாய் நான்பெறுமிவ் வின்பத் தினுக்கும் இடையூறு மூண்டதுவே; அன்பொடு நீரிங்கே அடுத்தநான் காநாளில் வந்தருளல் வேண்டும், மறவாதீர், மேற்குலத்தீர்! சிந்தை பறிகொண்டு செல்கின்றீர் வாரீரேல், |
70 |
ஆவி தரியேன், அறிந்திடுவீர், நான் காநாள். பாவியந்த நான்குநாள் பத்துயுகமாகக் கழிப்பேன், சென்று வருவீர், என்சிந்தை கொடுபோகின்றீர், சென்று வருவீர்'' எனத் தேறாப் பெருந்துயரங் கொண்டு சிறுகுயிருங் கூறி மறைந்ததுகாண். |
75 |
4. காதலோ காதல்!
கண்டதொரு காட்சி கனவுநன வென்றறியேன், எண்ணுதலுஞ் செய்யேன், இருபதுபேய் கொண்டவன்போல் கண்ணும் முகமும் களியேறிக் காமனார் அம்பு நுனிகள் அகத்தே அமிழ்ந்திருக்க, கொம்புக் குயிலுருவங் கோடிபல கோடியாய் |
5 |
ஒன்றே யாதுவாய் உலகமெலாந் தோற்றமுற சென்றே மனைபோந்து சித்தந் தனதின்றி, நாளொன்று போவதற்கு நான்பட்ட பாடனைத்தும் தாளம் படுமோ? தறுபடுமோ? யார் படுவார்? நாளொன்று போயினது; நானு மெனதுயிரும், |
10 |
நீளச்சிலை கொண்டு நின்றதொரு மன்மதனும் மாயக் குயிலுமதன் மாமாயத் தீம்பாட்டும், சாயைபோ லிந்திரமா சாலம்போல் வையமுமா மிஞ்சி நின்றோம். ஆங்கு மறுநாள் விடிந்தவுடன், (வஞ்சனை நான் கூறவில்லை) மன்மதனார் விந்தையால், |
15 |
புத்திமனஞ் சித்தம் புலனொன் றறியாமல், வித்தைசெயுஞ் சூத்திரத்தின் மேவுமொரு பொம்மை யென காலிரண்டுங் கொண்டு கடுகவுநான் சோலையிலே நீலிதனைக் காண வந்தேன், நீண்ட வழியினிலே நின்றபொருள் கண்ட நினைவில்லை. சோலையிடைச் |
20 |
சென்றுநான் பார்க்கையிலே, செஞ்ஞாயிற் றொண்கதிரால் பச்சைமர மெல்லாம் பளபளென என்னுளத்தின் இச்சை யுணர்ந்தனபோல் ஈண்டும் பறவையெல்லாம் வேறெங்கோ போயிருப்ப வெம்மைக் கொடுங்காதல் மீறலெனைத் தான்புரிந்த விந்தைச் சிறுகுயிலைக் |
25 |
காணநான் வேண்டிக் கரைகடந்த வேட்கையுடன் கோணமெலாஞ் சுற்றிமரக் கொம்பையெலாம் நோக்கி வந்தேன். |
5. குயிலும் குரங்கும்
மற்றைநாட் கண்ட மரத்தே குயிலில்லை, சுற்றுமுற்றும் பார்த்தும் துடித்து வருகையிலே - வஞ்சனையே! பெண்மையே! மன்மதனாம் பொய்த்தேவே! நெஞ்சகமே! தொல்விதியின் நீதியே! பாழுலகே! கண்ணாலே நான்கண்ட காட்சிதனை என்னுரைப்பேன்! |
5 |
பெண்ணால் அறிவிழக்கும் பித்தரெலாங் கேண்மினோ! காதலைப் போற்றுங் கவிஞரெலாங் கேண்மினோ! மாதரெலாங் கேண்மினோ! வல்விதியே கேளாய் நீ! மாயக் குயிலோர் மரக்கிளையின் வீற்றிருந்தே பாயும் விழி நீர் பதைக்குஞ் சிறியபுடல் |
10 |
விம்மிப் பரிந்து சொலும் வெந்துயர்ச்சொல் கொண்டதுவாய் அம்மவோ! மற்றாங்கோர் ஆண்குரங்கு தன்னுடனே ஏதேதோ கூறி இரங்கும் நிலைகண்டேன். தீதேது? நன்றேது? செய்கைத் தெளிவேது? அந்தக் கணமே அதையுங் குரங்கினையும் |
15 |
சிந்தக் கருதி உடைவாளிற் கைசேர்த்தேன், கொன்றுவிடு முன்னே குயிலுரைக்கும் வார்த்தைகளை நின்று சற்றே கேட்பதற்கென் நெஞ்சம் விரும்பிடவும், ஆங்கவற்றின் கண்ணில் அகப்படா வாறாருகே ஓங்கு மரத்தின்பால் ஒளிந்துநின்று கேட்கையிலே, |
20 |
பேடைக் குயிலிதனைப் பேசியது: - ''வானரரே! ஈடறியா மேன்மையழ கேய்ந்தவரே! பெண்மைதான் எப்பிறப்புக் கொண்டாலும், ஏந்தலே! நின்னழகைத் தப்புமோ? மையல் தடுக்குந் தரமாமோ? மண்ணிலுயிர்க் கெல்லாந் தலைவரென மானிடரே, |
25 |
எண்ணிநின்றார் தம்மை; எனிலொருகால் ஊர்வகுத்தல், கோயில், அரசு, குடிவகுப்புப் போன்ற சில வாயிலிலே, அந்த மனிதர் உயர்வெனலாம். மேனி யழகினிலும், விண்டுரைக்கும் வார்த்தையிலும் கூனி யிருக்கும் கொலுநேர்த்தி தன்னிலுமே, |
30 |
வானரர்தஞ் சாதிக்கு மாந்தர் நிக ராவாரோ? ஆன வரையும் அவர் முயன்று பார்த்தாலும், பட்டுமயிர் மூடப்படாத தமதுடலை எட்டுடையால் மூடி எதிருமக்கு வந்தாலும், மீசையையும் தாடியையும் விந்தைசெய்து வானரர்தம் |
35 |
ஆசை முகத்தினைப் போல லாக்க முயன்றிடினும் ஆடிக் குதிக்கும் அழகிலுமை நேர்வதற்கே கூடிக் குதிக்கும் குதித்தாலும், கோபுரத்தில் ஏறத் தெரியாமல் ஏணி வைத்துச் சென்றாலும், வேறெத்தைச் செய்தாலும் வேகமுறப் பாய்வதிலே |
40 |
வானரர்போ லாவரோ? வாலுக்குப் போவதெங்கே? ஈனமுறுங் கச்சை இதற்கு நிகராமோ? பாகையிலே வாலிருக்கப் பார்த்ததுண்டு கந்தைபோல்; வேகமுறத் தாவுகையில் வீசி எழுவதற்கே தெய்வங் கொடுத்த திருவாலைப் போலாமோ? |
45 |
சைவசுத்த போசனமும் சாதுரியப் பார்வைகளும் - வானரர் போற் சாதியொன்று மண்ணுலகின் மீதுளதோ? வானரர் தம்முள்ளே மணிபோல் உமையடைந்தேன், பிச்சைப் பறவைப் பிறப்பிலே தோன்றிடினும், நிச்சயமா முன்புரிந்த நேமத் தவங்களினால் |
50 |
தேவரீர் காதல்பெறுஞ் சீர்த்தி கொண்டேன்; தம்மிடத்தே ஆவலினாற் பாடுகின்றேன். ஆரியரே கேட்டருள்வீர்!'' (வானரப் பேச்சினிலே மைக்குயிலி பேசியதை யானறிந்து கொண்டுவிட்டேன், யாதோ ஒரு திறத்தால்) காதல், காதல் காதல்; காதல் போயிற் காதல் போயிற் சாதல், சாதல், சாதல். முதலியன (குயிலின் பாட்டு) நீசக்குயிலும் நெருப்புச் சுவைக்குரலில் |
55 |
ஆசை ததும்பி அமுதூறப் பாடியதே: - காட்டின் விலங்கறியும், கைக்குழந்தை தானறியும், பாட்டின் சுவையதனைப் பாம்பறியும் என்றுரைப்பார். வற்றற் குரங்கு மதிமயங்கிக் கள்ளினிலே முற்றும் வெறிபோல் முழுவெறிகொண் டாங்ஙனே |
60 |
தாவிக் குதிப்பதுவுந் தாளங்கள் போடுவதும் ''ஆவி யுருகுதடி, ஆஹா ஹா'' என்பதுவும், கண்ணைச் சிமிட்டுவதும், காலாலுங் கையாலும் மண்ணைப் பிறாண்டியெங்கும் வாரியிறைப்பதுவும் ''ஆசைக் குயிலே! அரும் பொருளே! தெய்வதமே! |
65 |
பேச முடியாப் பெருங்காதல் கொண்டுவிட்டேன், காதலில்லை யானாற் கணத்திலே சாதலென்றாய்; காதலினாற் சாகுங் கதியினிலே தன்னை வைத்தாய், எப்பொழுதும் நின்னை இனிப்பிரிவ தாற்றுகிலேன், இப்போதே நின்னை முத்தமிட்டுக் களியுறுவேன்'' |
70 |
என்றுபல பேசுவதும் என்னுயிரைப் புண்செயவே, கொன்றுவிட எண்ணிக் குரங்கின்மேல் வீசினேன் கைவாளை யாங்கே! கனவோ? நனவுகொலோ? தெய்வ வலியோ? சிறு குரங்கென் வாளுக்குத் தப்பி முகஞ்சுளித்துத் தாவி யொளித்திடவும், |
75 |
ஒப்பிலா மாயத் தொருகுயிலுந் தான்மறைய, சோலைப் பறவை தொகைதொகையாத் தாமொலிக்க, மேலைச் செயலறியா வெள்ளறிவிற் பேதையேன் தட்டுத் தடுமாறிச் சார்பனைத்துந் தேடியுமே, குட்டிப் பிசாசக் குயிலையெங்கும் காணவில்லை. |
80 |
6. இருளும் ஒளியும்
வான நடுவிலே மாட்சியுற ஞாயிறுதான் மோனவொளி சூழ்ந்திடவும் மொய்ம்பிற் கொலுவிருந்தான், மெய்யெல்லாஞ் சோர்வு விழியில் மயக்கமுற, உய்யும் வழியுணரா துள்ளம் பதைபதைக்க, நாணுந் துயரும் நலிவுறுத்த நான்மீண்டு |
5 |
பேணும்மனை வந்தேன்; பிரக்கினைபோய் வீழ்ந்துவிட்டேன், மாலையிலே மூர்ச்சைநிலை மாறித் தெளிவடைந்தேன்; நாலுபுறமுமெனை நண்பர் வந்து சூழ்ந்துநின்றார். ''ஏனடா மூர்ச்சையுற்றாய்? எங்கு சென்றாய்? ஏது செய்தாய்? வானம் வெளிறுமுன்னே வைகறையி லேதனித்துச் |
10 |
சென்றனை என்கின்றாரச் செய்தி என்னே? ஊணின்றி நின்றதென்னே?'' என்று நெரித்துவிட்டார் கேள்விகளை, இன்னார்க் கிதுசொல்வ தென்று தெரியாமல், ''என்னாற் பலவுரைத்தல் இப்பொழுது கூடாதாம். நாளை வருவீரேல் நடந்ததெலாஞ் சொல்வேன் இவ் |
15 |
வேளை எனைத்தனியே விட்டகல்வீர்'' என்றுரைத்தேன். நண்பரெல்லாஞ் சென்றுவிட்டார்; நைந்துநின்ற தாயார்தாம் உண்பதற்குப் பண்டம் உதவிநல்ல பால்கொணர்ந்தார், சற்று விடாய்தீர்ந்து தனியே படுத்திருந்தேன்; முற்றும் மறந்து முமுத்துயிலில் ஆழ்ந்து விட்டேன். |
20 |
பண்டு நடந்ததனைப் பாடுகின்ற இப்பொழுதும், மண்டு துயரரெனது மார்பை யெலாங் கவ்வுவதே! ஓடித் தவறி உடையனவாம் சொற்களெலாம், கூடி மதியிற் குவிந்திடுமாம் செய்தியெலாம், நாசக் கதையை நடுவே நிறுத்திவிட்டுப் |
25 |
பேசு மிடைப் பொருளின் பின்னே மதிபோக்கிக் கற்பனையும் வர்ணனையுங் காட்டிக் கதைவளர்க்கும் விற்பனர்தஞ் செய்கை விதமுந் தெரிகிலன்யான், மேலைக் கதையுரைக்க வெள்கிக் குலையுமனம், காரைக் கதிரழகின் கற்பனைகள் பாடுகிறேன். |
30 |
தங்க முருக்கித் தழல் கறைத்துத் தேனாக்கி எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ? வான்வெளியைச் சோதி கவர்ந்து சுடர்மயமாம் விந்தையினை ஓதிப் புகழ்வார் உவமையொன்று காண்பாரோ? கண்ணையினி தென்றுரைப்பார்; கண்ணுக்குக் கண்ணாகி |
35 |
விண்ணை அளக்கும்மொளி மேம்படுமோர் இன்பமன்றோ? மூலத் தனிப்பொருளை மோனத்தே சிந்தை செய்யும் மேலவரும் அஃதோர் விரியுமொளி என்பாரேல் நல்லொளிக்கு வேறுபொருள் ஞாலமிசை யொப் புளதோ? புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கி |
40 |
மண்ணைத் தெளிவாக்கி, நீரில் மலர்ச்சி தந்து விண்ணை வெளியாக்கி விந்தைசெயுஞ் சோதியினைக் காலைப் பொழுதினிலே கண்விழித்து நான்தொழுதேன். நாலு புறத்துமுயிர் நாதங்க ளோங்கிடவும், இன்பக் களியில் இயங்கும் புவிகண்டேன். |
45 |
துன்பக் கதையின் தொடருரைப்பேன், கேளீரோ! |
7. குயிலும் மாடும்
காலைத் துயிலெழுந்து, காலிரண்டு முன்போலே சோலைக் கிழுத்திட, நான் சொந்தவுணர் வில்லாமே சோலையினில் வந்துநின்று, சுற்றுமுற்றுந் தேடினேன். கோலப் பறவைகளின் கூட்டமெலாங் காணவில்லை. மூலையிலோர் மாமரத்தின் மோட்டுக் கிளியினிலே |
5 |
நீலக் குயிலிருந்து நீண்ட கதை சொல்லுவதும், கீழே யிருந்தோர் கிழக்காளை மாடதனை ஆழ மதியுடனே ஆவலுறக் கேட்பதுவும், கண்டேன், வெகுண்டேன், கலக்கமுற்றேன்; நெஞ்சிலனல் கொண்டேன், குமைந்தேன், குமுறினேன், மெய்வெயர்த்தேன்; |
10 |
கொல்லவாள் வீசல் குறித்தேன். இப் பொய்ப்பறவை சொல்லுமொழி கேட்டதன்பின் 'கொல்லுதலே சூழ்ச்சி' யென முன்போல் மறைந்துநின்றேன்; மோகப் பழங்கதையைப் பொன்போற் குரலும் புதுமின்போல் வார்த்தைகளும் கொண்டு, குயிலாங்கே கூறுவதாம். 'நந்தியே! |
15 |
பெண்டிர் மனத்தைப் பிடித்திழுக்கும் காந்தமே! காமனே! மாடாகக் காட்சிதரும் மூர்த்தியே! பூமியிலே மாடுபோற் பொற்புடைய சாதியுண்டோ ? மானுடருந் தம்முள் வலிமிகுந்த மைந்தர் தமை மேனுயுறுங் காளையென்று மேம்பா டுறப்புகழ்வார். |
20 |
காளையர்தம் முள்ளே கனமிகுந்தீர் ஆரியரே! நீள முகமும், நிமிர்ந்திருக்கும் கொம்புகளும், பஞ்சுப் பொதிபோல் படர்ந்த திருவடிவும், மிஞ்சுப் புறச்சுமையும், வீரத் திருவாலும், வானத் திடிபோல 'மா'வென் றுறுமுவதும், |
25 |
ஈனப் பறவை முதுகின்மிசை ஏறிவிட்டால் வாலைக் குழைத்து வளைத்தடிக்கும் நேர்மையும், பல் காலம்நான் கண்டு கடுமோக மெய்திவிட்டேன். பார வடிவும் பயிலு முடல்வலியும் தீர நடையும் சிறப்புமே இல்லாத |
30 |
சல்லித் துளிப்பறவைச் சாதியிலே நான் பிறந்தேன். அல்லும் பகலுநிதம் அற்ப வயிற்றினுக்கே காடெல்லாஞ் சுற்றிவந்து காற்றிலே எற்றுண்டு, மூட மனிதர் முடைவயிற்றுக் கோருணவாம், சின்னக் குயிலின் சிறுகுலத்தி லேதோன்றி |
35 |
என்னபயன் பெற்றேன்? என்னைப் போலோர் பாவியுண்டோ ? சேற்றிலே தாமரையும் சீழுடைய மீன் வயிற்றில் போற்றுமொளி, முத்தும் புறப்படுதல் கேட்டிலிரோ? நீசப் பிறப்பொருவர் நெஞ்சிலே தோன்றிவரும் ஆசை தடுக்கவல்ல தாகுமோ? காமனுக்கே |
40 |
சாதிப் பிறப்புத் தராதரங்கள் தோன்றிடுமோ? வாதித்துப் பேச்சை வளர்த்தோர் பயனுமில்லை, மூடமதியாலோ, முன்னைத் தவத்தாலோ, ஆடவர்தம் முள்ளே அடியாளுமைத் தெரிந்தேன். மானுடராம் பேய்கள் வயிற்றுக்குச் சோறிடவும் |
45 |
கூனர்தமை ஊர்களிலே கொண்டு விடுவதற்கும் தெய்வமென நீருதவி செய்தபின்னர் மேனிவிடாய் எய்தி யிருக்க மிடையினிலே, பாவியேன் வந்துமது காதில் மதுரவிசை பாடுவேன்; வந்து முதுகில் ஒதுங்கிப் படுத்திருப்பேன், |
50 |
வாலிலடி பட்டு மனமகிழ்வேன், 'மா' வென்றே ஒலிடுநும் பேரொலியோ டொன்றுபடக் கத்துவேன், மேனியுளே உண்ணிகளை மேவாது கொன்றிடுவேன், கானிடையே சுற்றிக் கழனியெலாம் மேய்ந்து, நீர் மிக்கவுண வுண்டுவாய் மென்றசைதான் போடுகையில் |
55 |
பக்கத்திருந்து பலகதைகள் சொல்லிடுவேன், காளை யெருதரே! காட்டிலுயர் வீரரே! தாளைச் சரணடைந்தேன். தையலெனைக் காத்தருள்வீர். காதலுற்று வாடுகின்றேன். காதலுற்ற செய்தியினை மாத ருரைத்தல் வழக்கமில்லை என்றறிவேன். |
60 |
ஆனாலும் என்போல் அபூர்வமாங் காதல் கொண்டால், தானா வுரைத்தலின்றிச் சாரும் வழியுளதோ? ஒத்த குலத்தவர்பால் உண்டாகும் வெட்கமெலாம், இத்தரையில் மேலோர்முன் ஏழையர்க்கு நாணமுண்டோ ? தேவர் முன்னே அன்புரைக்க சிந்தை வெட்கங் கொள்வ துண்டோ ? |
65 |
காவலர்க்குத் தங்குறைகள் காட்டாரோ கீழடியார்? ஆசைதான் வெட்கம் அறியுமோ?'' என்றுபல நேசவுரை கூறி நெடிதுயிர்த்துப் பொய்க்குயிலி பண்டுபோ லேதனது பாழடைந்த பொய்ப்பாட்டை எண்டிசையும் இன்பக் களியேறப் பாடியதே; |
70 |
பாட்டு முடியும்வரை பாரறியேன், விண்ணறியேன்; கோட்டுப் பெருமரங்கள் கூடிநின்ற காவறியேன்! தன்னை யறியேன்; தனைப்போல் எருதறியேன்; பொன்னை நிகர்த்தகுரல் பொங்கிவரும் இன்பமொன்றே கண்டேன், படைப்புக் கடவுளே! நான் முகனே! |
75 |
பண்டே யுலகு படைத்தனைநீ என்கின்றார். நீரைப் படைத்து நிலத்தைத் திரட்டி வைத்தாய் நீரைப் பழைய நெருப்பிற் குளிர்வித்தாய். காற்றைமுன்னே ஊதினாய் காணரிய வானவெளி தோற்றுவித்தாய், நின்றன், தொழில்வலிமை யாரறிவார்? |
80 |
உள்ளந்தான் கவ்வ ஒருசிறிதுங் கூடாத கொள்ளைப் பெரியவுருக் கொண்ட பலகோடி வட்ட வுருளைகள் போல் வானத்தில் அண்டங்கள் எட்ட நிரப்பியவை எப்போதும் ஓட்டுகின்றாய்; எல்லா மசைவில் இருப்பதற்கே சக்திகளைப் |
85 |
பொல்லாப் பிரமா, புகுத்திவிட்டாய் அம்மாவோ! காலம் படைத்தாய் கடப்பதிலாத் திக்கமைத்தாய்; ஞாலம் பலவினிலும் நாடோ றுந் தாம்பிறந்து தோன்றி மறையும் தொடர்பாப் பல அனந்தம்! சான்ற உயிர்கள் சமைத்துவிட்டாய், நான்முகனே! |
90 |
சால மிகப்பெரிய சாதனைகாண் இஃதெல்லாம்! தாலமிசை நின்றன் சமர்த்துரைக்க வல்லார் யார்? ஆனாலும் நின்றன் அதிசயங்கள் யாவினுமே கானா முதம்படைத்த காட்சிமிக விந்தையடா! காட்டுநெடு வானம், கடலெல்லாம் விந்தையெனில், |
95 |
பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா! பூதங்க ளொத்துப் புதுமைதரல் விந்தையெனில் நாதங்கள் நேரும் நயத்தினுக்கு நேராமோ? ஆசைதருங் கோடி அதிசயங்கள் கண்டதிலே, ஓசைதரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ! |
100 |
செத்தைக் குயில்புரிந்த தெய்விகத்தீம் பாட்டெனுமோர் வித்தை முடிந்தவுடன், மீட்டுமறி வெய்திநான் கையினில் வாயெடுத்துக் காளையின் மேல் வீசினேன். மெய்யிற் படுமுன் விரைந்துததுதான் ஓடிவிட, வன்னக் குயில்மறைய மற்றைப் பறவையெலாம் |
105 |
முன்னைப்போற் கொம்பு முனைகளிலே வந்தொலிக்க, நாணமில்லாக் காதல்கொண்ட நானுஞ் சிறுகுயிலை வீணிலே தேடியபின், வீடுவந்து சேர்ந்துவிட்டேன். * * * எண்ணியெண்ணிப் பார்த்தேன் எதுவும் விளங்கவில்லை. கண்ணிலே நீர்ததும்பக் கானக் குயிலெனக்கே |
110 |
காதற் கதையுரைத்து நெஞ்சங் கதைத்ததையும், பேதைநா னங்கு பெரியமயல் கொண்டதையும், இன்பக் கதையின் இடையே தடையாகப் புன்பறவை யெல்லாம் புகுந்த வியப்பினையும் ஒன்றைப் பொருள்செய்யா உள்ளத்தைக் காமவனல் |
115 |
தின்றெனது சித்தம் திகைப்புறவே செய்ததையும், சொற்றைக் குரங்கும் தொழுமாடும் வந்தெனக்கு முற்றும் வயிரிகளா மூண்ட கொடுமையையும், இத்தனைகோ லத்தினுக்கு யான்வேட்கை தீராமல், பித்தம் பிடித்த பெரிய கொடுமையையும் |
120 |
எண்ணியெண்ணிப் பார்த்தேன். எதுவும் விளங்கவில்லை; கண்ணிரண்டும் மூடக் கடுந்துயிலில் ஆழ்ந்துவிட்டேன். |
8. நான்காம் நாள்
நான் காம்நாள் என்னை நயவஞ் சனைபுரிந்து வான்காதல் காட்டி மயக்கிச் சதிசெய்த பொய்ம்மைக் குயிலென்னைப் போந்திடவே கூறியநாள் மெய்ம்மை யறிவிழந்தேன். வீட்டிலே மாடமிசை சித்தத் திகைப்புற்றோர் செய்கை யறியாமல், |
5 |
எத்துக் குயிலென்னை எய்துவித்த தாழ்ச் சியெலாம் மீட்டும் நினைத்தங்கு வீற்றிருக்கும் போழ்தினிலே, காட்டுத் திசையினிலென் கண்ணிரண்டும் நாடியவால், வானத்தே ஆங்கோர் கரும்பறவை வந்திடவும் யானதனைக் கண்டே, 'இது நமது பொய்க்குயிலோ?' |
10 |
என்று திகைத்தேன்; 'இருந்தொலைக்கே நின்றதனால் நன்று வடிவம் துலங்கவில்லை; நாடுமனம் ஆங்கதனை விட்டுப் பிரிவதற்கு மாக வில்லை. ஓங்குந் திகைப்பில் உயர்மாடம் விட்டுநான் வீதியிலே வந்துநின்றேன். மேற்றிசையில் அவ்வுருவம் |
15 |
சோதிக் கடலிலே தோன்றுகரும் புள்ளியெனக் காணுதலும், சற்றே கடுகி யருகே போய், 'நாணமிலாப் பொய்க்குயிலோ', என்பதனை நன்கறிவோம் என்ற கருத்துடனே யான்விரைந்து சென்றிடுங்கால், நின்ற பறவையுந்தான் நேராகப் போயினதால். |
20 |
யான் நின்றால் தான்நிற்கும் சென்றால் தான்செல்லும்; மேனிநன்கு தோன்ற அருகினிலே மேவாது வானி லதுதான் வழிகாட்டிச் சென்றிடவும் யான்நிலத்தே சென்றேன் இறுதியில் முன்புநாம் கூறியுள்ள மாஞ்சோலை தன்னைக் குறுகியந்த |
25 |
ஊரிலாப் புள்ளுமத னுள்ளே மறைந்ததுவால், மாஞ்சோலைக் குள்ளே மதியிலிநான் சென்றாங்கே ஆஞ்சோதி வெள்ளம் அலையுமொரு கொம்பரின்மேல் சின்னக் கருங்கயிலி செவ்வனே வீற்றிருந்து, பொன்னங்குழலின் புதிய ஒளிதனிலே |
30 |
பண்டைப் பொய்க்காதற் பழம்பாட்டைத் தாம்பாடிக் கொண்டிருத்தல் கண்டேன், குமைந்தேன்; எதிரேபோய், '' நீசக் குயிலே, நிலையறியாப் பொய்ம்மையே, ஆசைக் குரங்கினையும் அன்பார் எருதினையும் எண்ணிநீ பாடும் இழிந்த புலைப்பாட்டை |
35 |
நண்ணியிங்கு கேட்க நடத்திவந்தாய் போலுமெனை'' என்று சினம்பெருகி ஏதேதோ சொல்லுரைத்தேன். கொன்றுவிட நெஞ்சிற் குறித்தேன்; மறுபடியும் நெஞ்ச மிளகி நிறுத்திவிட்டேன். ஈங்கிதற்குள், வஞ்சக் குயிலி மனத்தை இரும்பாக்கிக் |
40 |
கண்ணிலே பொய்ந்நீர் கடகடவெனத் தானூற்றப் பண்ணிசைபோ லின்குரலாற் பரவியது கூறிடுமால்; 'ஐயனே, என்னுயிரின் ஆசையே! ஏழையெனை வையமிசை வைக்கத் திருவுளமோ? மற்றெனையே கொன்றுவிடச் சித்தமோ? கூறீர், ஒருமொழியில்! |
45 |
அன்றிற் சிறுபறவை ஆண்பிரிய வாழாது, ஞாயிறுதான் வெம்மைசெயில், நாண்மலக்கு வாழ்வுளதோ? தாயிருந்து கொன்றால் சரண்மதலைக் கொன்றுளதோ? தேவர் சினந்துவிட்டால், சிற்றுயிர்கள் என்னாகும்? ஆவற் பொருளே! அரசே! என் ஆரியரே! |
50 |
சிந்தையில் நீர் என்மேற் சினங்கொண்டால் மாய்ந்திடுவேன் வெந்தழலில் வீழ்வேன், விலங்குகளின் வாய்ப்படுவேன். குற்றம்நீர் என்மேற்கொணர்ந்ததனை யானறிவேன். குற்றநுமைக் கூறுகிலேன்; குற்றமிலேன் யானம்ம! புன்மைக் குரங்கைப் பொதிமாட்டை நான்கண்டு |
55 |
மென்மையுறக் காதல் விளையாடி னேன்என்றீர்; என்சொல்கேன்! எங்ஙனுய்வேன்! ஏதுசெய்கேன், ஐயனே! நின்சொல் மறக்க நெறியில்லை; ஆயிடினும் என்மேல் பிழையில்லை; யாரிதனை நம்பிடுவார்? நின்மேல் சுமைமுழுதும் நேராகப் போட்டுவிட்டேன். |
60 |
வெவ்விதியே! நீ என்னை மேம்பாடுறச் செய்து செவ்விதினிங் கென்னை என்றன் வேந்தனொடு சேர்த்திடினும் அல்லாதென் வார்த்தை அவர்சிறிதும் நம்பாமே புல்லாக எண்ணிப் புறக்கணித்துப் போய்விட, நான் அக்கணத்தே தீயில் அழிந்துவிழ நேரிடினும், |
65 |
எக்கதிக்கும் ஆளாவேன்; என்செய்கேன்? வெவ்விதியே! |
9. குயில் தனது பூர்வ ஜன்மக் கதையுரைத்தல்
''தேவனே! என்னருமைச் செல்வமே? என்னுயிரே! போவதன் முன்னொன்று புகல்வதனைக் கேட்டருள் வீர்! முன்னம்ஒருநாள் முடிநீள் பொதியமலை தன்னருகே நானும் தனியேயோர் சோலைதனில் தாங்கிளையி லேதோ மனதிலெண்ணி வீற்றிருந்தேன். |
5 |
ஆங்குவந்தார் ஓர் முனிவர். ஆரோ பெரியரென்று பாதத்தில் வீழ்ந்து பரவினேன்; ஐயரெனை ஆதரித்து வாழ்த்தி அருளினார். மற்றதன்பின், 'வேத முனிவரே, மேதினியில் கீழ்ப்பறவைக் சாதியிலே நான் பிறந்தேன், சாதிக் குயில்களைப்போல் |
10 |
இல்லாமல், என்றன் இயற்கை பிரிவாகி, எல்லாம் மொழியும் எனக்கு விளங்குவதேன்? மானுடர்போல் சித்தநிலை வாயித்திருக்குஞ் செய்தியேன்? யானுணரச் சொல்வீர்' என வணங்கிக் கேட்கையிலே, கூறுகின்றாய் ஐயர்: 'குயிலே! கேள், முற்பிறப்பில் |
15 |
வீறுடைய வெந்தொழிலார் வேடர் குலத்தலைவன் வீர முருகனென்னும் வேடன் மகளாகச் சேர வளநாட்டில் தென்புறத்தே ஓர்மலையில் வந்து பிறந்து வள்ர்ந்தாய் நீ, நல்லிளமை முந்து மழகினிலே மூன்றுதமிழ் நாட்டில் |
20 |
யாரும் நினக்கோர் இணையில்லை என்றிடவே சீருயர நின்றாய்; செழுங்கான வேடரிலுன் மாமன் மகனொருவன் மாடனெனும் பேர்கொண்டான், காமன் கணைக்கிரையாய், நின்னழகைக் கண்டுருகி, நின்னை மணக்க நெடுநாள் விரும்பி, அவன் |
25 |
பொன்னை மலரைப் புதுத்தேனைக் கொண்டுனக்கு நித்தம் கொடுத்து நினைவெல்லாம் நீயாகச் சித்தம் வருந்துகையில், தேமொழியே, நீயவனை மாலையிட வாக்களித்தாய்; மையலினா லில்லை; அவன் சால வருந்தல் சகிக்காமல் சொல்லிவிட்டாய். |
30 |
ஆயிழையே, நின்றன் அழகின் பெருங்கீர்த்தி தேயமெங்குந் தான்பரவத் தேனமலையின் சார்பினிலோர் வேடர்கோன், செல்வமும் நல் வீரமுமே தானுடையான், நாடனைத்தும் அஞ்சி நடுங்குஞ் செயலுடையான், மொட்டைப் புலியனுந்தன் முத்த மகனான |
35 |
நெட்டைக் குரங்கனுக்கு நேரான பெண்வேண்டி, நின்னை மணம் புரிய நிச்சயித்து, நின்னப்பன் தன்னை யணுகி, ''நின்னேர் தையலையென் பிள்ளைக்குக் கண்ணாலஞ் செய்யும் கருத்துடையேன்'' என்றிடலும், எண்ணாப் பெருமகிழ்ச்சி எய்தியே, நின்தந்தை |
40 |
ஆங்கே உடம்பட்டான்; ஆறிரண்டு நாட்களிலே பாங்கா மணம்புரியத் தாமுறுதி பண்ணிவிட்டார், பன்னிரண்டு நாட்களிலே பாவையுனைத் தேன்மலையில் அன்னியன்கொண் டேகிடுவான் என்னும் அதுகேட்டு, மாடன் மனம்புகைந்து மற்றைநாள் உன்னை வந்து |
.45 |
நாடிச் சினத்துடனே நானா மொழிகூற, நீயும் அவனிடத்தே நீண்ட கருணையினால், ''காயுஞ் சினந்தவிர்ப்பாய் மாடா, கடுமையினால் நெட்டைக் குரங்கனுக்குப் பெண்டாக நேர்ந்தாலும், கட்டுப் படிஅவர்தங் காவலிற்போய் வாழ்ந்தாலும் |
50 |
மாதமொரு மூன்றில் மருமம் சிலவெய்து பேதம் விளைவித்துப் பின்னிங்கே வந்திடுவேன்; தாலிதனை மீட்டுமவர் தங்களிடமே கொடுத்து நாலிரண்டு மாதத்தே நாயகனா நின்றனையே பெற்றிடுவேன்; நின்னிடத்தே பேச்சுத் தவறுவனோ? |
55 |
மற்றிதனை நம்பிடுவாய் மாடப்பா'' என்றுரைத்தாய்; காதலினா லில்லை, கருணையினால் இஃதுரைத்தாய், (மாதரசாய், வேடன் மகளான முற்பிறப்பில், சின்னக் குயிலியென்று செப்பிடுவார் நின்நாமம்) பின்னர்ச் சிலதினங்கள் சென்றதன்பின் பெண்குயிலி, |
60 |
நின்னொத்த தோழியரும் நீயுமொரு மாலையிலே மின்னற் கொடிகள் விளையாடு தல்போலே காட்டி னிடையே களித்தாடி நிற்கையிலே, வேட்டைக் கெனவந்தான் வெல்வேந்தன் சேரமான் தன்னருமை மைந்தன்; தனியே, துணைபிரிந்து, |
65 |
மன்னவன்றன் மைந்தனொரு மானைத் தொடர்ந்துவரத் தோழியரும் நீயும் தொகுத்துநின்றே ஆடுவதை வாழியவன் கண்டுவிட்டான், மையல் கரைகடந்து நின்னைத் தனக்காக நிச்சயித்தான்; மாது நீ மன்னவனைக் கண்டவுடன் மாமோகங் கொண்டுவிட்டாய். |
70 |
நின்னையவன் நோக்கினான்; நீயவனை நோக்கி நின்றாய்; அன்னதொரு நோக்கினிலே ஆவி கலந்துவிட்டீர். தோழியரும் வேந்தன் சுடர்க்கோலந் தான்கண்டே ஆழியரசன் அரும்புதல்வன் போலு மென்றே அஞ்சி மறைத்து விட்டார். ஆங்கவனும் நின்னிடத்தே. |
75 |
''வஞ்சித் தலைவன் மகன்யான்'' எனவுரைத்து, ''வேடர் தவமகளே! விந்தை யழகுடையாய்! ஆடவனாத் தோன்றி யதன்பயனை இன்று பெற்றேன்; கண்டதுமே நின்மிசைநான் காதல்கொண்டேன்'' என்றிசைக்க, மண்டு பெருங்காதல் மனத்தடக்கி நீ மொழிவாய்; |
80 |
''ஐயனே! உங்கள் அரமனையில் ஐந்நூறு தையலருண் டாம்; அழகில் தன்னிகரில் லாதவராம்; கல்வி தெரிந்தவராம்; கல்லுருகப் பாடுவராம்; அன்னவரைச் சேர்ந்தே நீர் அன்புடனே வாழ்ந்திருப்பீர், மன்னவரே வேண்டேன், மலைக்குறவர் தம்மகள்யான்; |
85 |
கொல்லு மடற்சிங்கம் குழிமுயலை வேட்பதுண்டோ ? வெல்லுதிறல்மாவேந்தர் வேடருள்ளோ பெண்ணெடுப்பார்? பத்தினியா வாழ்வதல்லாம் பார்வேந்தர் தாமெனினும் நத்தி விரைமகளா நாங்கள்குடி போவதில்லை, பொன்னடியைப் போற்றுகின்றேன், போய் வருவீர் தோழியரும் |
90 |
என்னைவிட்டுப் போயினரே, என்செய்கேன்?'' என்று நீ நெஞ்சங் கலக்கமெய்தி நிற்கையிலே, வேந்தன் மகன் மிஞ்சுநின்றன் காதல் விழிக்குறிப்பி னாலறிந்தே, பக்கத்தில் வந்து பளிச்சென் றுனது கன்னஞ் செக்கச் சிவக்க முத்தமிட்டான் சினங்காட்டி |
95 |
நீ விலகிச் சென்றாய் - நெறியேது சாமியர்க்கே? - தாவி நின்னைவந்து தழுவினான் மார்பிறுக. ''நின்னையன்றி ஓர் பெண் நிலத்திலுண்டோ என்றனுக்கே? பொன்னை, ஒளிர்மணியே. புத்தமுதே, இன்பமே, நீயே மனையாட்டி, நீயே அரசாணி, |
100 |
நீயே துணை எனக்கு. நீயே குலதெய்வம். நின்னையன்றிப் பெண்ணை, நினைப்பேனொ; வீணிலே என்னை நீ ஐயுறுதல் ஏதுக்காம்? இப்பொழுதே நின்மனைக்குச் சென்றிடுவோம்; நின்வீட்டி லுள்ளோர்பால் என்மனதைச் சொல்வேன். எனதுநிரை யுரைப்பேன். |
105 |
வேத நெறியில் விவாகமுனைச் செய்துகொள்வேன், மாதரசே!'' என்று வலக் கைதட்டி வாக்களித்தான். பூரிப்புக் கொண்டாய் புளகம்நீ எய்திவிட்டாய். வாரிப் பெருந்திரைபோல் வந்த மகிழ்ச்சியிலே நாணந் தவிர்த்தாய்; நனவே தவிர்ந்தவளாய், |
110 |
காணத் தெவிட்டாதோர் இன்பக் கனவிலே சேர்ந்துவிட்டாய், மன்னன்றன் திண்டோ ளை நீயுவகை ஆர்ந்து தழுவி அவனிதழில் தேன்பருகச் சிந்தை கொண்டாய், வேந்தன் மகன், தேனில் விழும் வண்டினைப்போல் விந்தையுறு காந்தமிசை வீழும் இரும்பினைப்போல், |
115 |
ஆவலுடன் நின்னை யறக்தழுவி, ஆங்குனது கோவை யிதழ்பருகிக் கொண்டிருக்கும் வேளையிலே, - சற்றுமுன்னே ஊரினின்று தான்வந் திறங்கியவன், மற்றுநீ வீட்டைவிட்டு மாதருடன் காட்டினிலே கூத்தினுக்குச் சென்றதனைக் கேட்டு குதூகலமாய் |
120 |
ஆத்திரந்தான் மிஞ்சிநின்னை ஆங்கெய்திக் காணவந்தோன், நெட்டைக் குரங்கன் நெருங்கிவந்து பார்த்து விட்டான். ''பட்டப் பகலிலே! பாவிமகள் செய்தியைப் பார்! கண்ணாலங் கூடஇன்னுங் கட்டி முடியவில்லை மண்ணாக்கி விட்டாள்! என்மானந்தொலைத்துவிட்டாள். |
125 |
'நிச்சய தாம்பூலம்' நிலையா நட ந்திருக்கப் பிச்சைச் சிறுக்கி செய்த பேதகத்தைப் பார்த்தாயோ?'' என்று மனதில் எழுகின்ற தீயுடனே நின்று கலங்கினான் செட்டைக் குரங்கனங்கே மாப்பிள்ளைதான் ஊருக்கு வந்ததையும், பெண்குயிலி, |
130 |
தோப்பிலே தானுந்தன் தோழிகளு மாச்சென்று பாடி விளையாடும் பண்புகேட் டேகுரங்கன் ஓடி யிருப்பதோர் உண்மையையும் மாடனிடம் யாரோ உரைத்துவிட்டார்: ஈரிரண்டு பாய்ச்சலிலே நீரோடும் மேனி நெருப்போடுங் கண்ணுடனே |
135 |
மாடனங்கு வந்துநின்றான். மற்றிதனைத் தேன்மலையின் வேடர்கோன் மைந்தன் விழிகொண்டு பார்க்கவில்லை. நெட்டைக் குரங்கனங்கு நீண்ட மரம்போல எட்டிநிற்குஞ் செய்தி இவன்பார்க்க நேரமில்லை. அன்னியனைப் பெண்குயிலி ஆர்ந்திருக்குஞ் செய்தியொன்று |
140 |
தன்னையே இவ்விருவர் தாங்கண்டார், வேறறியார். மாடனதைத் தான்கண்டான், மற்றவனும் அங்ஙனமே. மாடன் வெறிகொண்டான், மற்றுவனும் அவ்வாறே. காவலன்றன் மைந்தனுமக் கன்னிகையும் தானுமங்கு தேவசுகங் கொண்டு விழியே திறக்கவில்லை. |
145 |
ஆவிக் கலப்பின் அமுத சுகந்தனிலே மேவியங்கு மூடி யிருந்த விழிநான்கு ஆங்கவற்றைக் கண்டமையால் ஆவியிலே தீப்பற்றி ஓங்கும் பொறிகள் உதிர்க்கும் விழிநான்கு. மாடனுந்தன் வாளுருவி மன்னவனைக் கொன்றிடவே |
150 |
ஓடிவந்தான்; நெட்டைக் குரங்கனும் வாளோங்கி வந்தான்; வெட்டிரண்டு வீழ்ந்தனகாண் வேந்தன் முதுகினிலே. சட்டெனவே மன்னவனும் தான்திரும்பி வாளுருவி வீச்சிரண்டில் ஆங்கவரை வீழ்த்தினான்; வீழ்ந்தவர்தாம் பேச்சிழந்தே அங்கு, பிணமாகக் கிடந்துவிட்டார். |
155 |
மன்னவனும் சோர்வெய்தி மண்மேல் விழுந்து விட்டான், பின்னவனை நீயும் பெருந்துயர்கொண் டேமடியில் வாரி யெடுத்துவைத்து வாய்புலம்பக் கண்ணிரண்டும் மாரி பொழிய மனமிழந்து நிற்கையிலே கண்ணை விழித்துனது காவலனும் கூறுகின்றான்; |
160 |
''பெண்ணே, இனிநான் பிழைத்திடேன்; சில்கணத்தே ஆவி துறப்பேன், அழுதோர் பயனில்லை. சாவிலே துன்பமில்லை; தையலே, இன்னமும் நாம் பூமியிலே தோன்றிடுவோம், பொன்னே, நினைக்கண்டு காமுறுவேன்; நின்னைக் கலந்தினிது வாழ்ந்திடுவேன்; |
165 |
இன்னும் பிறவியுண்டு; மாதரசே இன்பமுண்டு, நின்னுடன் வாழ்வினினி நேரும் பிறப்பினிலே!'' என்று சொல்லிக் கண்மூடி, இன்பமுறு புன்னகைதான் நின்று முகத்தே நிலவுதர, மாண்டனன்காண். மாடனிங்கு செய்ததோர் மாயத்தால் இப்பொழுது |
170 |
பீடையுற புள்வடிவம் பேதையுனக் கெய்தியது. வாழி நின்றனன் மன்னவனும் தொண்டை வளநாட்டில் ஆழிக் கரையின் அருகேயோர் பட்டினத்தில் மானிடனாத் தோன்றி வளருகின்றான். நின்னையொர கானிடத்தே காண்பான். கனிந்துநீ பாடும்நல்ல |
175 |
பாட்டினைத்தான் கேட்பான். பழவினையின் கட்டினால் மீட்டு நின்மேற் காதல்கொள்வான், மென்குயிலே!'' என்றந்தத் தென் பொதியை மாமுனிவர் செப்பினார். ''சாமீ, குயிலுருவங் கொண்டேன் யான், கோமானோ மென்மை பயிலு மனிதவுருப் பற்றிநின்றான், எம்முள்ளே |
180 |
காதலிசைந் தாலுங் கடிமணந்தான் கூடாதாம். சாதற் பொழுதிலே தார்வேந்தன் கூறியசொல் பொய்யாய் முடியாயதோ?' என்றிசைத்தேன், புன்னகையில் ஐயர் உரைப்பார்: 'அடி பேதாய்! இப்பிறவி தன்னிலும் நீ விந்திகிரிச் சார்பினிலோர் வேடனுக்குக் |
185 |
கன்னியெனத் தான் பிறந்தாய் கர்ம வசத்தினால், மாடன் குரங்கன் இருவருமே வன்பேயாக் காடுமலை சுற்றி வருகையிலே கண்டுகொண்டார் நின்னையங்கே இப்பிறப்பில் நீயும் பழமைபோல் மன்னனையே சேர்வையென்று தாஞ்சூழ்ந்து மற்றவரும் |
190 |
நின்னைக் குயிலாக்கிநீ செல்லுந் திக்கிலெலாம் நின்னுடனே சுற்றுகின்றார். நீயிதனைத் தேர்கிலையோ?'' என்றார். ''விதியே: இறந்தவர்தாம் வாழ்வாரை நின்று துயருறுத்தல் நீதியோ? பேய்களெனைப் பேதைப் படுத்திப் பிறப்பை மறப்புறுத்தி |
195 |
வாதைப் படுத்தி வருமாயில், யானெனது காதலனைக் காணுங்கால், காய்சினத்தால் ஏதேனும் தீதிழைத்தால் என்செய்வேன்? தேவரே, மற்றிதற் கோர் மாற்றிலை யோ?'' என்று மறுகி நான் கேட்கையிலே, தேற்றமுறு மாமுனிவர் செப்பு கின்றார்; - 'பெண்குயிலே! |
200 |
தொண்டைவள நாட்டிலோர் சோலையிலே வேந்தன்மகன் கண்டுனது பாட்டில் கருத்திளகிக் காதல்கொண்டு நேசம் மிகுதியுற்று நிற்கையிலே, பேயிரண்டும் மோசம் மிகுந்த முழுமாயச் செய்கைபல செய்துபல பொய்த்தோற்றங் காட்டித் திறல் வேந்தன். |
205 |
ஐயமுறச் செய்துவிடும், ஆங்கவனும் நின்றனையே வஞ்சகியென் றெண்ணி மதிமருண்டு நின்மீது வெஞ்சினந்தான் எய்திநினை விட்டுவிட நிச்சயிப்பான். பிந்தி விளைவதெல்லாம் பின்னே நீ கண்டு கொள்வாய். சந்தி ஜபம் செய்யுஞ் சமயமாய்விட்ட' தென்றே |
210 |
காற்றில் மறைந்து சென்றார் மாமுனிவர், காதலரே! மாற்றி உரைக்கவில்லை. மாமுனிவர் சொன்னதெல்லாம் அப்படியே சொல்லிவிட்டேன் ஐயா! திருவுளத்தில் எப்படிநீர் கொள்வீரோ, யானறியேன், ஆரியரே! காத லருள்புரிவீர், காதலில்லை யென்றிடிலோ |
215 |
சாத லருளித் தமது கையால் கொன்றிடுவீர்!'' என்று குயிலும் எனதுகையில் வீழ்ந்ததுகாண். கொன்றுவிட மனந்தான் கொள்ளுமோ? பெண்ணென்றால் பேயு மிரங்காதோ? பேய்கள் இரக்கமின்றி மாயமிழைத் தாலதனை மானிடனுங் கொள்ளுவதோ? |
220 |
காதலிலே ஐயம் கலந்தாலும் நிற்பதுண்டோ ? மாதரன்பு கூறில் மனமிளகார் இங்குளரோ? அன்புடனே யானும் அருங்குயிலைக் கைக்கொண்டு முன்புவைத்து நோக்கிபின் மூண்டுவதும் இன்பவெறி கொண்டதனை முத்தமிட்டேன். கோகிலத்தைக் காணவில்லை. |
225 |
விண்டுரைக்க மாட்டாத விந்தையடா! விந்தையடா! ஆசைக் கடலின் அமுதமடா! அற்புதத்தின் தேசமடா! பெண்மைதான் தெய்விகமாம் காட்சியடா! பெண்ணொருத்தி அங்குநின்றாள்; பேருவகை கொண்டு தான் கண்ணெடுக்காதென்னைக் கணப்பொழுது நோக்கினாள்; |
230 |
சற்றே தலைகுனிந்தாள், சாமீ! இவளழகை எற்றே தமிழில் இசைத்திடுவேன்? கண்ணிரண்டும் ஆளை விழுங்கும் அதிசயத்தைக் கூறுவனோ? மீன விழியில் மிதந்த கவிதையெலாம் சொல்லில் அகப்படுமோ? தூயசுடர் முத்தையொப்பாம் . |
235 |
பல்லில் கனியிதழில் பாய்ந்த நிலவினை யான் என்றும் மறத்தல் இயலுமோ? பாரின்மிசை நின்றதொருமின் கொடிபோல் நேர்ந்தமனிப் பெண்ணரசின் மேனி நலத்தினையும், வெட்டினையுங், கட்டினையும் தேனி லினியாள் திருத்த நிலையினையும். |
240 |
மற்றவர்க்குச் சொல்ல வசமாமோ? ஓர் வார்த்தை கற்றவர்க்குச் சொல்வேன் கவிதைக் கனிபிழிந்த சாற்றினிலே, பண்கூத் தெனுமிவற்றின் சாரமெலாம் ஏற்றி, அதனோடே இன்னமுதைத் தான்கலந்து, காதல் வெயிலிலே காயவைத்த கட்டியினால் |
245 |
மாதவளின் மேனி வகுத்தான் பிரமனென்பேன். பெண்ணவளைக் கண்டு பெருங்களிகொண் டாங்ஙனே நண்ணித் தழுவி நறுங்கள் ளிதழினையே முத்தமிட்டு முத்தமிட்டு மோகப் பெருமயக்கில் சித்தம் மயங்கிச் சிலபோழ் திருந்த பின்னே, . |
250 |
பக்கத் திருந்தமணிப் பாவையுடன் சோலையெலாம் ஒக்க மறைந்திடலும், ஓஹோ! எனக்கதறி வீழ்ந்தேன். பிறகு விழிதிறந்து பார்க்கையிலே சூழ்ந்திருக்கும் பண்டைச் சுவடி, எழுதுகோல், பத்திரிகைக் கூட்டம், பழம்பாய் - வரிசையெல்லாம் |
255 |
ஒத்திருக்க 'நாம் வீட்டில் உள்ளோம்' எனவுணர்ந்தேன். சோலை, குயில், காதல், சொன்னகதை யத்தனையும், மாலை யழகின் மயக்கத்தால் உள்ளத்தே தோன்றியதோர் கற்கனையின் சூழ்ச்சியென்றே கண்டு கொண்டேன். ஆன்ற தமிழ்ப் புலவீர், கற்பனையே யானாலும், |
260 |
வேதாந்த மாக விரித்துப் பொருளுரைக்க யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறீரோ? |
குயில் பாட்டு முற்றிற்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குயில் பாட்டு - Subramaniya Bharathiyar Books - மகாகவி பாரதியார் நூல்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - பாட்டு, கொண்டு, போயிற், நெட்டைக், குயில், வேந்தன், சித்தம், டாயின், கண்டேன், நின்னை, குயிலின், சிந்தை, தோன்றி, குயிலும், நின்றன், இன்பக், கொண்டேன், நின்று, ஆரியரே, கண்ணிரண்டும், பின்னே, நிற்கையிலே, இன்பம், மாமுனிவர், சின்னக், வேண்டிக், நீயும், தோழியரும், சொல்வேன், காணவில்லை, மன்னவனும், விந்தையடா, பெண்குயிலி, பொன்னை, வந்தேன், பெற்றேன், பாட்டினிலும், கேயோர், துன்பம், என்றுபல, என்செய்கேன், மனிதர், என்றன், முற்றும், குயிலே, கேட்கையிலே, கேண்மினோ, வருவீர், கொன்றுவிட