முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » எட்டாம் திருமுறை - திருவாசகம், திருக்கோவையார் » 40.குலாப் பத்து - அனுபவம் இடையீடுபடாமை
எட்டாம் திருமுறை - திருவாசகம் - 40.குலாப் பத்து - அனுபவம் இடையீடுபடாமை

40.குலாப் பத்து - அனுபவம் இடையீடுபடாமை
(தில்லையில் அருளியது)
கொச்சகக் கலிப்பா
(தில்லையில் அருளியது)
கொச்சகக் கலிப்பா
ஓடுங் கவந்தியுமே உறவென்றிட் டுள்கசிந்து தேடும் பொருளுஞ் சிவன்கழலே எனத்தெளிந்து கூடும் உயிரும் குமண்டையிடக் குனித்தடியேன் ஆடுங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. | 559 |
துடியோர் இடுகிடைத் தூய்மொழியார் தோள்நசையால் செடியேறு தீமைகள் எத்தனையுஞ் செய்திடினும் முடியேன் பிறவேன் எனைத்தனதாள் முயங்குவித்த அடியேன் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. | 560 |
என்புள் ளுருக்கி இருவினையை ஈடழித்துத் துன்பங் களைந்து துவந்துவங்கள் தூய்மைசெய்து முன்புள்ள வற்றை முழுதழிய உள்புகுத்த அன்பின் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. | 561 |
குறியும் நெறியும் குணமுமிலார் குழாங்கள்தமைப் பிரியும் மனத்தார் பிரிவரிய பெற்றியனைச் செறியுங் கருத்தில் உருத்தமுதாஞ் சிவபதத்தை அறியுங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. | 562 |
பேருங் குணமும் பிணிப்புறும்இப் பிறவிதனைத் தூரும் பரிசு துரிசறுத்துத் தொண்ட ரெல்லாஞ் சேரும் வகையாற் சிவன்கருணைத் தேன்பருகி ஆருங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. | 563 |
கொம்பில் அரும்பாய்க் குவிமலராய்க் காயாகி வம்பு பழுத்துடலம் மாண்டிங்ஙன் போகாமே நம்புமென் சிந்தை நணுகும்வண்ணம் நானணுகும் அம்பொன் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. | 564 |
மதிக்குந் திறலுடைய வல்லரக்கன் தோள்நெரிய மிதக்குந் திருவடி என் தலைமேல் வீற்றிருப்பக் கதிக்கும் பசுபாசம் ஒன்றுமிலோம் எனக்களித்திங் கதிர்க்குங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. | 565 |
இடக்குங் கருமுருட் டேனப்பின் கானகத்தே நடக்குந் திருவடி என்தலைமேல் நட்டமையால் கடக்குந் திறல்ஐவர் கண்டகர்தம் வல்லாட்டை அடக்குங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. | 566 |
பாழ்ச்செய் விளாவிப் பயனிலியாய்க் கிடப்பேற்குக் கீழ்ச்செய் தவத்தாற் கிழியீடு நேர்பட்டுத் தாட்செய்ய தாமரைச் சைவனுக்கென் புன்தலையால் ஆட்செய் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. | 567 |
கொம்மை வரிமுலைக் கொம்பனையாள் கூறனுக்குச் செம்மை மனத்தால் திருப்பணிகள் செய்வேனுக்கு இம்பை தரும்பயன் இத்தனையும் ஈங்கொழிக்கும் அம்மை குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. | 568 |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
40.குலாப் பத்து - அனுபவம் இடையீடுபடாமை - எட்டாம் திருமுறை - திருவாசகம் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கொண்டன்றே, ஆண்டானைக், குலாத்தில்லை, திருவடி