முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » பதினோராம் திருமுறை » 11.5. திருவொற்றியூர் ஒருபா ஒருபது
பதினோராம் திருமுறை - 11.5. திருவொற்றியூர் ஒருபா ஒருபது

11.5. திருவொற்றியூர் ஒருபா ஒருபது
1026 |
இருநில மடந்தை இயல்பினின் உடுத்த பொருகடல் மேகலை முகமெனப் பொலிந்த ஒற்றி மாநகர் உடையோய் உருவின் பெற்றிஒன் றாகப் பெற்றோர் யாரே மின்னின் பிறக்கம் துன்னும்நின் சடையே. ---- (5) மன்னிய அண்டம்நின் சென்னியின் வடிவே. பாவகன் பரிதி பனிமதி தன்னொடும் மூவகைச் சுடரும்நின் நுதல்நேர் நாட்டம் தண்ணொளி ஆரந் தாரா கணமே விண்ணவர் முதலா வேறோர் இடமாக் --- (10) கொண்டுறை விசும்பே கோலநின் ஆகம் எண்திசை திண்தோள் இருங்கடல் உடையே அணியுடை அல்குல் அவனிமண் டலமே மணிமுடிப் பாந்தள்நின் தாளிணை வழக்கே ஒழியா தோடிய மாருதம் உயிர்ப்பே --- (15) வழுவா ஓசை முழுதும்நின் வாய்மொழி வானவர் முதலா மன்னுயிர் பரந்த ஊனமில் ஞானத் தொகுதிநின் உணர்வே நெருங்கிய உலகினில் நீர்மையும் நிற்றலும் சுருங்கலும் விரிதலும் தோற்றுநின் தொழிலே -- (20) அமைத்தலும் அழித்தலும் ஆங்கதன் முயற்சியும் இமைத்தலும் விழித்தலும் ஆகும்நின் இயல்பே என்றிவை முதலா இயல்புடை வடிவினோ டொன்றிய துப்புரு இருவகை ஆகி முத்திறக் குணத்து நால்வகைப் பிறவி --- (25) அத்திறத் தைம்பொறி அறுவகைச் சமயமோ டேழுல காகி எண்வகை மூர்த்தியோ டூழிதோ றூழி எண்ணிறந் தோங்கி எவ்வகை அளவினிற் கூடிநின்று அவ்வகைப் பொருளும்நீ ஆகிய இடத்தே. | 1 |
1027 | இடத்துறை மாதரோ டீருடம் பென்றும் நடத்தினை நள்ளிருள் நவிற்றினை என்றும் புலியதள் என்பொடு புனைந்தோய் என்றும் பலிதிரி வாழ்க்கை பயின்றோய் என்றும் அருவமும் உருவமும் ஆனாய் என்றும் --- (5) திருவமர் மாலொடு திசைமுகன் என்றும் உளனே என்றும் இலனே என்றும் தளரான் என்றும் தளர்வோன் என்றும் ஆதி என்றும் அசோகினன் என்றும் போதியிற் பொலிந்த புராணன் என்றும் --- (10) இன்னவை முதலாத் தாமறி அளவையின் மன்னிய நூலின் பன்மையுள் மயங்கிப் பிணங்கு மாந்தர் பெற்றிமை நோக்கி அணங்கிய அவ்வவர்க் கவ்வவை ஆகி அடையப் பற்றிய பளிங்கு போலும் --- (15) ஒற்றி மாநகர் உடையோய் உருவே. | 2 |
1028 | உருவாம் உலகுக் கொருவன் ஆகிய பெரியோய் வடிவிற் பிறிதிங் கின்மையின் எப்பொரு ளாயினும் இங்குள தாமெனின் அப்பொருள் உனக்கே அவயவம் ஆதலின் முன்னிய மூவெயில் முழங்கெரி ஊட்டித் ---- (5) தொன்னீர் வையகம் துயர்கெடச் சூழ்ந்ததும் வேள்வி மூர்த்திதன் தலையினை விடுத்ததும் நீள்விசும் பாளிதன் தோளினை நெரித்ததும் ஓங்கிய மறையோற் கொருமுகம் ஒழித்ததும் பூங்கணை வேளைப் பொடிபட விழித்ததும் ------ (10) திறல்கெட அரக்கனைத் திருவிரல் உறுத்ததும் குறைபடக் கூற்றினைக் குறிப்பினில் அடர்த்ததும் என்றிவை முதலா ஆள்வினை எல்லாம் நின்றுழிச் செறிந்தவை நின்செய லாதலின் உலவாத் தொல்புகழ் ஒற்றி யூர ----- (15) பகர்வோர் நினக்குவே றின்மை கண்டவர் நிகழ்ச்சியின் நிகழின் அல்லது புகழ்ச்சியிற் படுப்பரோ பொருளுணர்ந் தோரே. | 3 |
1029 | பொருள்உணர்ந் தோங்கிய பூமகன் முதலா இருள்துணை யாக்கையில் இயங்கு மன்னுயிர் உருவினும் உணர்வினும் உயர்வினும் பணியினும் திருவினும் திறலினும் செய்தொழில் வகையினும் வெவ்வே றாகி வினையொடும் பிரியாது ---- (5) ஒவ்வாப் பன்மையுள் மற்றவர் ஒழுக்கம் மன்னிய வேலையுள் வான்திரை போல நின்னிடை எழுந்து நின்னிடை ஆகியும் பெருகியும் சுருங்கியும் பெயர்ந்தும் தோன்றியும் விரவியும் வேறாய் நின்றனை விளக்கும் --- (10) ஓவாத் தொல்புகழ் ஒற்றி யூர மூவா மேனி முதல்வ நின்னருள் பெற்றவர் அறியின் அல்லது மற்றவர் அறிவரோ நின்னிடை மயக்கே. | 4 |
1030 | மயக்கமில் சொல்நீ ஆயினும் மற்றவை துயக்க நின்திறம் அறியாச் சூழலும் உறைவிடம் உள்ளம் ஆயினும் மற்றது கறைபட ஆங்கே கரந்த கள்ளமும் செய்வினை உலகினில் செய்வோய் எனினும் ----- (5) அவ்வினைப் பயன்நீ அணுகா அணிமையும் இனத்திடை இன்பம் வேண்டிநின் பணிவோர் மனத்திடை வாரி ஆகிய வனப்பும் அன்பின் அடைந்தவர்க் கணிமையும் அல்லவர்ச் சேய்மையும் நாள்தொறும் ------ (10) என்பினை உருக்கும் இயற்கைய ஆதலின் கண்டவர் தமக்கே ஊனுடல் அழிதல் உண்டென உணர்ந்தனம் ஒற்றி யூர மன்னிய பெரும்புகழ் மாதவத் துன்னிய செஞ்சடைத் தூமதி யோயே. -------- (15) | 5 |
1031 | தூமதி சடைமிசைச் சூடுதல் தூநெறி ஆமதி யான்என அமைத்த வாறே அறனுரு வாகிய ஆனே றேறுதல் இறைவன் யானென இயற்று மாறே அதுஅவள் அவனென நின்றமை யார்க்கும் ---- (5) பொதுநிலை யானென உணர்த்திய பொருளே முக்கணன் என்பது முத்தீ வேள்வியில் தொக்க தென்னிடை என்பதோர் சுருக்கே வேத மான்மறி ஏந்துதல் மற்றதன் நாதன் நான்என நவிற்று மாறே -- (10) மூவிலை ஒருதாள் சூலம் ஏந்துதல் மூவரும் யான்என மொழிந்த வாறே எண்வகை மூர்த்தி என்பதிவ் வுலகினில் உண்மை யான்என உணர்த்திய வாறே நிலம்நீர் தீவளி உயர்வான் என்றும் ------ (15) உலவாத் தொல்புகழ் உடையோய் என்றும் பொருளும் நற்பூதப் படையோய் என்றும் தெருளநின் றுலகினில் தெருட்டு மாறே ஈங்கிவை முதலா வண்ணமும் வடிவும் ஓங்குநின் பெருமை உணர்த்தவும் உணராத் ------- (20) தற்கொலி மாந்தர் தம்மிடைப் பிறந்த சொற்பொருள் வன்மையிற் சுழலும் மாந்தர்க் காதி யாகிய அறுதொழி லாளர் ஓதல் ஓவா ஒற்றி யூர சிறுவர் தம் செய்கையிற் படுத்து ------- (25) முறுவலித் திருத்திநீ முகப்படும் அளவே. | 6 |
1032 | அளவினில் இறந்த பெருமையை ஆயினும் எனதுளம் அகலா தொடுங்கிநின் றுளையே மெய்யினை இறந்த மெய்யினை ஆயினும் வையகம் முழுதும்நின் வடிவெனப் படுமே கைவலத் திலைநீ எனினும் காதல் --- (5) செய்வோர் வேண்டும் சிறப்பொழி யாயே சொல்லிய வகையால் துணையலை ஆயினும் நல்லுயிர்க் கூட்ட நாயகன் நீயே எங்கும் உள்ளோய் எனினும் வஞ்சனை தங்கிய அவரைச் சாராய் நீயே, அ.தான்று ----- (10) பிறவாப் பிறவியை பெருகாப் பெருமையை துறவாத் துறவியை தொடராத் தொடர்ச்சியை நுகரா நுகர்ச்சியை நுணுகா நுணுக்கினை அகலா அகற்சியை அணுகா அணிமையை செய்யாச் செய்கையை சிறவாச் சிறப்பினை ----- (15) வெய்யை தணியை விழுமியை நொய்யை செய்யை பசியை வெளியை கரியை ஆக்குதி அழித்தி ஆன பல்பொருள் நீக்குதி தொகுத்தி நீங்குதி அடைதி ஏனைய வாகிய எண்ணில் பல்குணம் ----- (20) நினைதொறும் மயக்கும் நீர்மைய ஆதலின் ஓங்குகடல் உடுத்த ஒற்றி யூர ஈங்கிது மொழிவார் யாஅர் தாஅம் சொல்நிலை சுருங்கின் அல்லது நின்இயல் அறிவோர் யார்இரு நிலத்தே. ---- (25) | 7 |
1033 | நிலத்திடைப் பொறையாய் அவாவினில் நீண்டு சொலத்தகு பெருமைத் தூரா ஆக்கை மெய்வளி ஐயொடு பித்தொன் றாக ஐவகை நெடுங்காற் றாங்குடன் அடிப்ப நரையெனும் நுரையே நாடொறும் வெளுப்ப ----- (5) திரையுடைத் தோலே செழுந்திரை யாகக் கூடிய குருதி நீரினுள் நிறைந்து மூடிய இருமல் ஓசையின் முழங்கிச் சுடுபசி வெகுளிச் சுறவினம் எறியக் குடரெனும் அரவக் கூட்டம்வந் தொலிப்ப ------- (10) ஊன்தடி எலும்பின் உள்திடல் அடைந்து தோன்றிய பல்பிணிப் பின்னகஞ் சுழலக் கால்கையின் நரம்பே கண்ட மாக மேதகு நிணமே மெய்ச்சா லாக முழக்குடைத் துளையே முகங்க ளாக ------- (15) வழுக்குடை மூக்கா றோதம்வந் தொலிப்ப இப்பரி சியற்றிய உடலிருங் கடலுள் துப்புர வென்னும் சுழித்தலைப் பட்டிங் காவா என்றுநின் அருளினைப் பெற்றவர் நாவா யாகிய நாதநின் பாதம் --- (20) முந்திச் சென்று முறைமையின் வணங்கிச் சிந்தைக் கூம்பினைச் செவ்விதின் நிறுத்தி உருகிய ஆர்வப் பாய்விரித் தார்த்துப் பெருகிய நிறையெனும் கயிற்றிடைப் பிணித்துத் துன்னிய சுற்றத் தொடர்க்கயி றறுத்து --- (25) மன்னிய ஒருமைப் பொறியினை முறுக்கிக் காமப் பாரெனும் கடுவெளி அற்ற தூமச் சோதிச் சுடர்க்குற நிறுத்திச் சுருங்கா உணர்ச்சித் துடுப்பினைத் துழாவி நெருங்கா அளவில் நீள்கரை ஏற்ற --- (30) வாங்க யாத்திரை போக்குதி போலும் ஓங்குகடல் உடுத்த ஒற்றியூ ரோயே. | 8 |
1034 | ஒற்றி யூர உலவா நின்குணம் பற்றி யாரப் பரவுதல் பொருட்டா என்னிடைப் பிறந்த இன்னாப் புன்மொழி நின்னிடை அணுகா நீர்மைய ஆதலின் ஆவலித் தழுதலின் அகன்ற அம்மனை --- (5) கேவலம் சேய்மையிற் கேளாள் ஆயினும் பிரித்தற் கரிய பெற்றிய தாகிக் குறைவினில் ஆர்த்தும் குழவிய தியல்பினை அறியா தெண்ணில் ஊழிப் பிறவியின் மயங்கிக் கண்ணிலர் கண்பெற் றாங்கே --- (10) தாய்தலைப் படநின் தாளிணை வணக்கம் வாய்தலை அறியா மயக்குறும் வினையேன் மல்கிய இன்பத் தோடுடன் கூடிய எல்லையில் அவாவினில் இயற்றிய வாகக் கட்டிய நீயே அவிழ்க்கின் அல்லது ---- (15) எட்டனை யாயினும் யான்அவிழ்க் கறியேன் துன்னிடை இருளெனும் தூற்றிடை ஒதுங்கி வெள்ளிடை காண விருப்புறு வினையேன் தந்தையும் தாயும் சாதியும் அறிவும்நம் சிந்தையும் திருவும் செல்கதித் திறனும் --- (20) துன்பமும் துறவும் தூய்மையும் அறிவும் இன்பமும் புகழும் இவைபல பிறவும் சுவைஒளி ஊறோசை நாற்றம் தோற்றம் என்றிவை முதலா விளங்குவ எல்லாம் ஒன்றநின் அடிக்கே ஒருங்குடன் வைத்து --- (25) நின்றனன் தமியேன் நின்னடி அல்லது சார்வுமற் றின்மையின் தளர்ந்தோர் காட்சிக் சேர்விட மதனைத் திறப்பட நாடி எய்துதற் கரியோய் யான்இனிச் செய்வதும் அறிவனோ தெரியுங் காலே. --- (30) | 9 |
1035 | காலற் சீறிய கழலோய் போற்றி மூலத் தொகுதி முதல்வ போற்றி ஒற்றி மாநகர் உடையோய் போற்றி முற்றும் ஆகிய முதல்வ போற்றி அணைதொறும் சிறக்கும் அமிர்தே போற்றி ---- (5) இணைபிறி தில்லா ஈச போற்றி ஆர்வம் செய்பவர்க் கணியோய் போற்றி தீர்வில் இன்சுவைத் தேனேபோற்றி வஞ்சனை மாந்தரை மறந்தோய் போற்றி நஞ்சினை அமிர்தாய் நயந்தோய் போற்றி ------- (10) விரிகடல் வையக வித்தே போற்றி புரிவுடை வனமாய்ப் புணர்ந்தோய் போற்றி காண முன்பொருள் கருத்துறை செம்மைக் காணி யாகிய அரனே போற்றி வெம்மை தண்மையென் றிவைகுணம் உடைமையின் ------ (15) பெண்ணோ டாணெனும் பெயரோய் போற்றி மேவிய அவர்தமை வீட்டினிற் படுக்கும் தீப மாகிய சிவனே போற்றி மாலோய் போற்றி மறையோய் போற்றி மேலோய் போற்றி வேதிய போற்றி ----- (20) சந்திர போற்றி தழலோய் போற்றி இந்திர போற்றி இறைவ போற்றி அமரா போற்றி அழகா போற்றி குமரா போற்றி கூத்தா போற்றி பொருளே போற்றி போற்றி என்றுனை ---- (25) நாத்தழும் பிருக்க நவிற்றின் அல்லது ஏத்துதற் குரியோர் யார்இரு நிலத்தே. | 10 |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
11.5. திருவொற்றியூர் ஒருபா ஒருபது - பதினோராம் திருமுறை - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - போற்றி, என்றும், அல்லது, ஆயினும், மன்னிய, நின்னிடை, ஆதலின், உடையோய், யான்என, எனினும், தொல்புகழ், மாநகர், என்றிவை, உடுத்த, முதல்வ