முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » பதினோராம் திருமுறை » 12.1. திருநாரையூர் விநாயகர் திருஇரட்டைமணிமாலை
பதினோராம் திருமுறை - 12.1. திருநாரையூர் விநாயகர் திருஇரட்டைமணிமாலை

12.1. திருநாரையூர் விநாயகர் திருஇரட்டைமணிமாலை
1036 |
என்னை நினைந்தடிமை கொண்டென் இடர்கெடுத்துத் தன்னை நினையத் தருகின்றான் - புன்னை விரசுமகிழ் சோலை வியன்நாரை யூர்முக்கண் அரசுமகிழ் அத்திமுகத் தான். | 1 |
1037 | முகத்தாற் கரியன்என் றாலும் தனையே முயன்றவர்க்கு மிகத்தான் வெளியன்என் றேமெய்ம்மை உன்னும் விரும்படியார் அகத்தான் திகழ்திரு நாரையூர் அம்மான் பயந்தஎம்மான் உகத்தா னவன்தன் உடலம் பிளந்த ஒருகொம்பனே. | 2 |
1038 | கொம்பனைய வள்ளி கொழுநன் குறுகாமே வம்பனைய மாங்கனியை நாரையூர் - நம்பனையே தன்னவலம் செய்துகொளும் தாழ்தடக்கை யாய்என்நோய் பின்னவலம் செய்வதெனோ பேசு. | 3 |
1039 | பேசத் தகாதெனப் பேயெரு தும்பெருச் சாளியும்என் றேசத் தகும்படி ஏறுவ தேயிமை யாதமுக்கட் கூசத் தகுந்தொழில் நுங்கையும் நுந்தையும் நீயும்இந்தத் தேசத் தவர்தொழு நாரைப் பதியுள் சிவக்களிறே. | 4 |
1040 | களிறு முகத்தவனாய்க் காயம்செந் தீயின் ஒளிறும் உருக்கொண்ட தென்னே - அளறுதொறும் பின்நாரை யூர்ஆரல் ஆரும் பெரும்படுகர் மன்நாரை யூரான் மகன். | 5 |
1041 | மகத்தினில் வானவர் பல்கண் சிரம்தோள் நெரித்தருளும் சுகத்தினில் நீள்பொழில் நாரைப் பதியுட் சுரன்மகற்கு முகத்தது கைஅந்தக் கையது மூக்கந்த மூக்கதனின் அகத்தது வாய்அந்த வாயது போலும் அடுமருப்பே. | 6 |
1042 | மருப்பைஒரு கைக்கொண்டு நாரையூர் மன்னும் பொருப்பைஅடி போற்றத் துணிந்தால் - நெருப்பை அருந்தஎண்ணு கின்றஎறும் பன்றே அவரை வருந்தஎண்ணு கின்ற மலம். | 7 |
1043 | மலஞ்செய்த வல்வினை நோக்கி உலகை வலம்வருமப் புலஞ்செய்த காட்சிக் குமரற்கு முன்னே புரிசடைமேற் சலஞ்செய்த நாரைப் பதியரன் தன்னைக் கனிதரவே வலஞ்செய்து கொண்ட மதக்களி றேஉன்னை வாழ்த்துவனே. | 8 |
1044 | வனஞ்சாய வல்வினைநோய் நீக்கி வனசத் தனஞ்சாய லைத்தருவான் அன்றோ - இனஞ்சாயத் தேரையூர் நம்பர்மகன் திண்தோள் நெரித்தருளும் நாரையூர் நம்பர்மக னாம். | 9 |
1045 | நாரணன் முன்பணிந் தேத்தநின் றெல்லை நடாவியவத் தேரண வும்திரு நாரையூர் மன்னு சிவன்மகனே காரண னேஎம் கணபதி யேநற் கரிவதனா ஆரண நுண்பொரு ளேயென் பவர்க்கில்லை அல்லல்களே. | 10 |
1046 | அல்லல் களைந்தான்தன் அம்பொன் உலகத்தின் எல்லை புகுவிப்பான் ஈண்டுழவர் - நெல்லல்களை செங்கழுநீர் கட்கும் திருநாரை யூர்ச்சிவன்சேய் கொங்கெழுதார் ஐங்கரத்த கோ. | 11 |
1047 | கோவிற் கொடிய நமன்தமர் கூடா வகைவிடுவன் காவிற் திகழ்தரு நாரைப் பதியிற் கரும்பனைக்கை மேவற் கரிய இருமதத் தொற்றை மருப்பின்முக்கண் ஏவிற் புருவத் திமையவள் தான்பெற்ற யானையையே. | 12 |
1048 | யானேத் தியவெண்பா என்னை நினைந்தடிமை தானே சனார்த்தனற்கு நல்கினான் - தேனே தொடுத்தபொழில் நாரையூர்ச் சூலம் வலன்ஏந்தி எடுத்த மதமுகத்த ஏறு. | 13 |
1049 | ஏறிய சீர்வீ ரணக்குடி ஏந்திழைக் கும்இருந்தேன் நாறிய பூந்தார்க் குமரற்கும் முன்னினை நண்ணலரைச் சீறிய வெம்பணைச் சிங்கத்தி னுக்கிளை யானைவிண்ணோர் வேறியல் பால்தொழு நாரைப் பதியுள் விநாயகனே. | 14 |
1050 | கனமதில்சூழ் நாரையூர் மேவிக் கசிந்தார் மனமருவி னான்பயந்த வாய்ந்த - சினமருவு கூசாரம் பூண்டமுகக் குஞ்சரக்கன் றென்றார்க்கு மாசார மோசொல்லு வான். | 15 |
1051 | வானிற் பிறந்த மதிதவ ழும்பொழில் மாட்டளிசூழ் தேனிற் பிறந்த மலர்த்திரு நாரைப் பதிதிகழும் கோனிற் பிறந்த கணபதி தன்னைக் குலமலையின் மானிற் பிறந்த களிறென் றுரைப்பர்இவ் வையகத்தே. | 16 |
1052 | வையகத்தார் ஏத்த மதில்நாரை யூர்மகிழ்ந்து பொய்யகத்தார் உள்ளம் புகலொழிந்து - கையகத்தோர் மாங்கனிதன் கொம்பண்டம் பாசமழு மல்குவித்தான் ஆங்கனிநஞ் சிந்தைஅமர் வான். | 17 |
1053 | அமரா அமரர் தொழுஞ்சரண் நாரைப் பதிஅமர்ந்த குமரா குமரர்க்கு முன்னவ னேகொடித் தேர்அவுணர் தமரா சறுத்தவன் தன்னுழைத் தோன்றின னேஎனநின் றமரா மனத்தவர் ஆழ்நர கத்தில் அழுந்துவரே. | 18 |
1054 | அவமதியா துள்ளமே அல்லலற நல்ல தவமதியால் ஏத்திச் சதுர்த்தோம் - நவமதியாம் கொம்பன் விநாயகன்கொங் கார்பொழில்சூழ் நாரையூர் நம்பன் சிறுவன்சீர் நாம். | 19 |
1055 | நாந்தன மாமனம் ஏத்துகண் டாய்என்றும் நாண்மலரால் தாந்தன மாக இருந்தனன் நாரைப் பதிதன்னுளே சேர்ந்தன னேஐந்து செங்கைய னேநின் திரள்மருப்பை ஏந்தின னேஎன்னை ஆண்டவ னேஎனக் கென்னையனே. | 20 |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
12.1. திருநாரையூர் விநாயகர் திருஇரட்டைமணிமாலை - பதினோராம் திருமுறை - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - நாரைப், நாரையூர், பிறந்த