முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » பதினோராம் திருமுறை » 11.4. திருஏகம்பமுடையார் திருவந்தாதி
பதினோராம் திருமுறை - 11.4. திருஏகம்பமுடையார் திருவந்தாதி

11.4. திருஏகம்பமுடையார் திருவந்தாதி
926 |
மெய்த்தொண்டர் செல்லும் நெறியறி யேன்மிக நற்பணிசெய் கைத்தொண்டர் தம்மிலும் நற்றொண் டுவந்திலன் உண்பதற்கே பொய்த்தொண்டு பேசிப் புறம்புற மேஉன்னைப் போற்றுகின்ற இத்தொண்ட னேன்பணி கொள்ளுதி யோகச்சி ஏகம்பனே. | 1 |
927 | ஏகம்பனே என்னை ஆள்பவ னேஇமை யோர்க்கிரங்கிப் போகம்பன் னாளும் கொடுக்கின்ற நாயக பொங்கும்ஐவாய் நாகம்பொன் னாரம் எனப்பொலி வுற்றுநல் நீறணியும் ஆகம்பொன் மாமலை ஒப்பவ னேயென்பன் ஆதரித்தே. | 2 |
928 | தரித்தேன் மனத்துன் திகழ்தரு நாமம் தடம்பொழில்வாய் வரித்தேன் முரல்கச்சி ஏகம்ப னேஎன்றன் வல்வினையை அரித்தேன் உனைப்பணி யாதவர் ஏழைமை கண்டவரைச் சிரித்தேன் உனக்கடி யாரடி பூணத் தெளிந்தனனே. | 3 |
929 | தெளிதரு கின்றது சென்றென் மனம்நின் திருவடிவம் அளிதரு நின்னருட் கையம் இனியில்லை அந்திச் செக்கர் ஒளிதரு மேனிஎம் ஏகம்ப னேஎன் றுகந்தவர்தாள் தளிதரு தூளிஎன் றன்தலை மேல்வைத்த தன்மைபெற்றே. | 4 |
930 | பெற்றுகந் தேன்என்றும் அர்ச்சனை செய்யப் பெருகுநின்சீர் கற்றுகந் தேன்என் கருத்தினி தாக்கச்சி ஏகம்பத்தின் பற்றுகந் தேறும் உகந்தவ னேபட நாகக்கச்சின் சுற்றுகந் தேர்விடை மேல்வரு வாய்நின் துணையடியே. | 5 |
931 | அடிநின்ற சூழல் அகோசரம் மாலுக் கயற்கலரின் முடிநின்ற சூழ்முடி காண்பரி தாயிற்றுக் கார்முகிலின் இடிநின்ற சூழ்குரல் ஏறுடை ஏகம்ப யாம்எங்ஙனே வடிநின்ற சூலப் படையுடை யாயை வணங்குவதே. | 6 |
932 | வணக்கம் தலைநின் திருவடிக் கேசெய்யும் மையல்கொண்டோர் இணக்கன்றி மற்றோர் இணக்கறி வோமல்லம் வல்லரவின் குணக்குன்ற வில்லி குளிர்கச்சி ஏகம்பம் பாடின் அல்லால் கணக்கன்று மற்றொரு தேவரைப் பாடும் கவிநலமே. | 7 |
933 | நலந்தர நானொன்று சொல்லுவன் கேண்மின்நல் லீர்கள்அன்பு கலந்தர னார்கச்சி ஏகம்பம் கண்டு கனல்திகிரி சலந்தரன் ஆகம் ஒழிக்கவைத் தாய்தக்கன் வேள்வியெல்லாம் நிலந்தர மாகச்செய் தாயென்று பூசித்து நின்மின்களே. | 8 |
934 | மின்கள்என் றார்சடை கொண்டல்என் றார்கண்டம் மேனிவண்ணம் பொன்கள்என் றார்வெளிப் பாடுதம் பொன்அடி பூண்டுகொண்ட என்களென் றாலும் பிரிந்தறி யார்கச்சி ஏகம்பத்தான் தன்களென் றார்உல கெல்லாம் நிலைபெற்ற தன்மைகளே. | 9 |
935 | தன்மையிற் குன்றாத் தவத்தோர் இமையவர் தாம்வணங்கும் வன்மையிற் குன்றா மதிற்கச்சி ஏகம்பர் வண்கயிலைப் பொன்மயிற் சாயலும் சேயரிக் கண்ணும் புரிகுழலும் மென்மையிற் சாயும் மருங்குலும் காதல் விளைத்தனவே. | 10 |
936 | தனமிட் டுமைதழு வத்தழும் புற்றவர் தம் அடியார் மனம்விட் டகலா மதிற்கச்சி ஏகம்பர் வான்கயிலைச் சினம்விட் டகலாக் களிறு வினாவியோர் சேயனையார் புனம்விட் டகலார் பகலாம் பொழுதும்நம் பூங்கொடியே. | 11 |
937 | பூங்கொத் திருந்தழை யார்பொழில் கச்சிஏ கம்பர்பொற்பார் கோங்கத் திருந்த குடுமிக் கயிலைஎம் பொன்னொருத்தி பாங்கொத் திருந்தனை ஆரணங் கேபடர் கல்லருவி ஆங்கத் திருந்திழை ஆடிவந் தாற்கண் டடிவருத்தே. | 12 |
938 | வருத்தம் தருமெய்யும் கையில் தழையும் வன்மாவினவும் கருத்தந் தரிக்கும் நடக்கவின் றைய கழல்நினையத் திருத்தந் தருளும் திகழ்கச்சி ஏகம்பர் சீர்க்கயிலைத் துருத்தந் திருப்பதன் றிப்புனங் காக்கும் தொழில்எமக்கே. | 13 |
939 | எம்மையும் எம்மைப் பணிகொள்ளும் கம்பர் எழிற்கயிலை உம்மையும் மானிடம் இப்புனத் தேவிட்டு வந்தமைந்தர் தம்மையும் மானையும் சிந்தையும் நோக்கங் கவர்வஎன்றோ அம்மையும் அம்மலர்க் கண்ணும் பெரியீர் அருளுமினே. | 14 |
940 | அருளைத் தருகம்பர் அம்பொற் கயிலையுள் எம்மையரம் பிருளைக் கரிமறிக் கும்இவர் ஐயர் உறுத்தியெய்ய வெருளக் கலைகணை தன்னொடும் போயின வில்லிமைக்கு மருளைத் தருசொல்லி எங்கோ விளையுண்டிவ் வையகத்தே. | 15 |
941 | வையார் மழுப்படை ஏகம்பர் ஈங்கோய் மலைப்புனத்துள் ஐயார் வருகலை ஏனம் கரிதொடர் வேட்டையெல்லாம் பொய்யான ஐயர் மனத்தவெம் பூங்கொடி கொங்கைபொறாப் பையார் அரவிடை ஆயிற்று வந்து பரிணமித்தே. | 16 |
942 | பருமுத் துதிர்த்திடும் சீர்மத்த யானை நுதல்பகுந்திட் டுருமொத்த திண்குரற் சீயம் திரிநெறி ஓங்குவைவாய்ப் பொருமுத் தலைவேற் படைக்கம்பர் பூங்கயி லைப் புனத்துள் தருமுத் தனநகை தன்நசை யால்வெற்பு சார்வரிதே. | 17 |
943 | அரிதன் திருக்கண் இடநிரம் பாயிரம் போதணிய அரிதன் திருவடிக் கர்ச்சித்த கண்ணுக் கருளுகம்பர் அரிதன் திருக்கங் குலியால் அழிந்த கயிலையல்லிங் கரிதென் றிருப்பதெம் பால்வெற்ப எம்மையர்க் கஞ்சுதுமே. | 18 |
944 | அஞ்சரத் தான்பொடி யாய்விழத் தீவிழித் தன்புசெய்வோர் நெஞ்சரத் தாழ்வுகந் தோர்கச்சி ஏகம்பர் நீள்கயிலைக் குஞ்சரத் தாழ்வரை வீழநுங் கொம்புய்யக் கும்பமூழ்கும் வெஞ்சரத் தாரன வோஅல்ல வோஇவ் வியன்முரசே. | 19 |
945 | சேய்தந் தகைமை உமைகண வன்திரு ஏகம்பத்தான் தாய்தந்தை யாய்உயிர் காப்போன் கயிலைத் தயங்கிருள்வாய் வேய்தந்த தோளிநம் ஊச லொடும் விரை வேங்கைதன்னைப் பாய்தந்து பூசலுண் டாங்கொண்ட தோசைப் பகடுவந்தே. | 20 |
946 | வந்தும் மணம்பெறின் பொன்னனை யீர்மன்னும் ஏகம்பர்தம் முந்தும் அருவிக் கயிலை மலையுயர் தேன்இழிச்சித் தந்தும் மலர்கொய்தும் தண்திசை மேயுங் கிளிகடிந்தும் சிந்தும் புகர்மலை கைச்சும்இச் சாரல் திரிகுவனே. | 21 |
947 | திரியப் புரமெய்த ஏகம்ப னார்திக ழுங்கயிலைக் கிரியக் குறவர் பருவத் திடுதர ளம்வினையோம் விரியச் சுருள்முத லானும் அடைந்தோம் விரைவிரைந்து பிரியக் கதிர்முத்தின் நீர்பெற்ற தென்அங்குப் பேசுமினே. | 22 |
948 | பேசுக யாவரு மைக்கணி யார்என்று பித்தர்எங்கும் பூசுகை யார்திரு நீற்றெழில் ஏகம்பர் பொற்கயிலைத் தேசுகை யார்சிலை வெற்பன் பிரியும் பரிசிலர்அக் கூசுகை யாதுமில் லாக்குலை வேங்கைப் பெயர்நும்மையே. | 23 |
949 | பெயரா நலத்தொழில் ஏகம்ப னார்பிறை தோய்கயிலைப் பெயரா திருக்கப் பெறுகிளி காள்புன மேபிரிவின் துயரால் வருந்தி மனமும்இங் கோடித் தொழுதுசென்ற தயரா துரையும்வெற் பற்கடி யேற்கும் விடைதமினே. | 24 |
950 | தம்மைப் பிறவிக் கடல்கடப் பிப்பவர் தாம்வணங்கும் மும்மைத் திருக்கண் முகத்தெழில் ஏகம்பர் மொய்கயிலை அம்மைக் கருங்கண்ணி தன்னொடின் பந்தரும் தண்புனமே எம்மைக் கவலை செயச்சொல்லி யோவல்லி எய்தியதே. | 25 |
951 | இயங்கும் திரிபுரம் எய்தஏ கம்பர் எழிற்கயிலைத் தயங்கு மலர்ப்பொழில் காள்தையல் ஆடரு வித்தடங்காள் முயங்கு மணியறை காள்மொழி யீர்ஒழி யாதுநெஞ்சம் மயங்கும் பரிசுபொன் னார்சென்ற சூழல் வகுத்தெமக்கே. | 26 |
952 | வகுப்பார் இவர்போல் மணத்துக்கு நாள்மணந் தன்னொடின்பம் மிகுப்பார்கள் ஆருயிர் ஒன்றாம் இருவரை விள்ளக்கள்வாய் நெகுப்பால் மலர்கொண்டு நின்றார் கிடக்க நிலாவுகம்பர் தொகுப்பால் மணிசிந் தருவிக் கயிலைஇச் சூழ்புனத்தே. | 27 |
953 | புனங்குழை யாதென்று மென்தினை கொய்ததும் போகலுற்ற கனங்குழை யாள்தற் பிரிய நமக்குறும் கையறவால் மனங்குழை யாவரும் கண்களி பண்பல பாடுந்தொண்டர் இனங்குழை யாத்தொழும் ஏகம்பர் இக்கயி லாயத்துள்ளே. | 28 |
954 | உள்ளம் பெரியரல் லாச்சிறு மானுடர் உற்றசெல்வம் கள்ளம் பெரிய சிறுமனத் தார்க்கன்றிக் கங்கையென்னும் வெள்ளம் பெரிய சடைத்திரு ஏகம்பர் விண்அரணம் தள்ளம் பெரிகொண் டமைத்தார் அடியவர் சார்வதன்றே. | 29 |
955 | அன்றும் பகையடர்க் கும்பரி மாவும் மதஅருவிக் குன்றும் பதாதியும் தேரும் குலவிக் குடைநிழற்கீழ் நின்றும் பொலியினும் கம்பர்நன் னீறு நுதற்கிலரேல் என்றும் அரசும் முரசும் பொலியா இருநிலத்தே. | 30 |
956 | நிலத்திமை யோரில் தலையாய்ப் பிறந்து மறையொடங்கம் வலத்திமைப் போதும் பிரியா எரிவளர்த் தாலும்வெற்பன் குலத்துமை யோர்பங்கர் கச்சியுள் ஏகம்பம் கூடித்தொழும் நலத்தமை யாதவர் வேட்டுவர் தம்மின் நடுப்படையே. | 31 |
957 | படையால் உயிர்கொன்று தின்று பசுக்களைப் போலச்செல்லும் நடையால் அறிவின்றி நட்பிடைப் பொய்த்துக் குலங்களினும் கடையாய்ப் பிறக்கினும் கச்சியுள் ஏகம்பத் தெங்களையாள் உடையான் கழற் கன்ப ரேல்அவர் யாவர்க்கும் உத்தமரே. | 32 |
958 | உத்துங்க யானை உரியார் விரலால் அரக்கன்சென்னி பத்துங்கை யான இருபதும் சோர்தர வைத்திலயம் ஒத்துங்கை யாலவன் பாடக் கயிலையின் ஊடுகைவாள் எத்துங்கை யான்என் றுகந்தளித் தார்கச்சி ஏகம்பரே. | 33 |
959 | அம்பரம் கால்அனல் நீர்நிலம் திங்கள் அருக்கன்அணு அம்பரம் கொள்வதோர் வேழத் துரியவன் தன்னுருவாம் எம்பரன் கச்சியுள் ஏகம்பத் தான்இடை யாதடைவான் நம்பரன் தன்னடி யார்அறி வார்கட்கு நற்றுணையே. | 34 |
960 | துணைத்தா மரையடி யும்பவ ளத்திரள் நன்குறங்கும் பணைத்தோள் அகலமும் கண்டத்து நீலமும் அண்டத்துமின் பிணைத்தா லனசடை யுந்திரு முக்கணும் பெண்ணொர்பக்கத் தணைத்தார் எழிற்கம்பர் எங்கள் பிரானார்க் கழகியவே. | 35 |
961 | அழகறி விற்பெரி தாகிய ஏகம்பர் அத்தர்கொற்றம் பழகறி விற்பெரி யோர்தமைப் பற்றலர் பற்றும்அன்பின் குழகறி வேற்பினுள் ஒன்றறி யாரறி யாமைதெய்வம் கிழகெறி யப்பட் டுலந்தார் உலகிற் கிடந்தனரே. | 36 |
962 | கிடக்கும் ஒருபால் இரைக்கின்ற பாம்பொரு பால்மதியம் தொடக்குண் டிலங்கும் மலங்கும் திரைக்கங்கை சூடுங்கொன்றை வடக்குண்டு கட்டத் தலைமாலை வாளால் மலைந்தவெம்போர் கடக்கும் விடைத்திரு ஏகம்பர் கற்றைச் சடைமுடியே. | 37 |
963 | கற்றைப் பவளச் சடைவலம் பூக்கமழ் கொன்றையந்தார் முற்றுற் றிலாமதி யின்கொழுந் தேகம்பர் மொய்குழலாம் மற்றைத் திசையின் மணிப்பொற் கொழுந்தத் தரங்கழுநீர் தெற்றிப் பொலிகின்ற சூட்டழ காகித் திகழ்தருமே. | 38 |
964 | தருமருட் டன்மை வலப்பால் கமலக்கண் நெற்றியின்மேல் திருமலர்க் கண்பிள வின்றிக ழுந்தழல் செல்வக்கம்பர் கருமலர்க் கண்இடப் பாலது நீலம் கனிமதத்து வருநுதற் பொட்டணங் குக்குயர்ந் தோங்கும் மலர்க்குழலே. | 39 |
965 | மலர்ந்த படத்துச்சி ஐந்தினும் செஞ்சுடர் மாமணிவிட் டலர்ந்த மணிக்குண் டலம்வலக் காதினில் ஆடிவரும் நலந்திரு நீள்வயி ரம்வெயிற் பாய நகுமணிகள் கலந்தசெம் பொன்மக ரக்குழை ஏகம்பர் காதிடமே. | 40 |
966 | காதலைக் கும்வலத் தோள்பவ ளக்குன்றம் அங்குயர்ந்து போதலைக் கும்பனிப் பொன்மலை நீற்றின் பொலியகலம் தாதலைக் குங்குழல் சேர்பணைத் தோள்நறுஞ் சாந்தணிந்து சூதலைக் கும்முலை மார்பிடம் ஏகம்பர் சுந்தரமே. | 41 |
967 | தரம்பொற் பழியும் உலகட்டி எய்த்துத் தரந்தளரா உரம்பொற் புடைய திருவயி றாம்வலம் உம்பர்மும்மைப் புரம்பொற் பழித்தகம் பர்க்குத் தரத்திடு பூண்முலையும் நிரம்பப் பொறாது தளரிள வஞ்சியும் நேர்வுடைத்தே. | 42 |
968 | உடைப்புலி ஆடையின் மேலுர கக்கச்சு வீக்கிமுஞ்சி வடத்தொரு கோவணந் தோன்றும் அரைவலம் மற்றையல்குல் தொடக்குறு காஞ்சித் தொடுத்த அரசிலை தூநுண்டுகில் அடல்பொலி ஏறுடை ஏகம்பம் மேய அடிகளுக்கே. | 43 |
969 | அடிவலப் பாலது செந்தா மரையொத் ததிர்கழல்சூழ்ந் திடிகுரற் கூற்றின் எருத்திற வைத்த திளந்தளிரின் அடியிடப் பாலது பஞ்சுற அஞ்சுஞ் சிலம்பணிந்த வடிவுடைத் தார்கச்சி ஏகம்பம் மேய வரதருக்கே. | 44 |
970 | தருக்கவற் றான்மிக்க முப்புரம் எய்தயன் தன்தலையை நெருக்கவற் றோட மழுவாள் விசைத்தது நெற்களென்றும் பருக்கவற் றாங்கச்சி ஏகம்பர் அத்தர்தம் பாம்புகளின் திருக்கவற் றாலிட் டருளும் கடகத் திருக்கரமே. | 45 |
971 | கரத்தத் தமருகத் தோசை கடுத்தண்டம் மீபிளப்ப அரத்தத்த பாதம் நெரித்திட் டவனி தலம்நெரியத் தரத்தத் திசைகளுக் கப்புறம் போர்ப்பச் சடைவிரித்து வரத்தைத் தருகம்பர் ஆடுவர் எல்லியும் மாநடமே. | 46 |
972 | நடனம் பிரான்உகந் துய்யக்கொண் டானென்று நான்மறையோர் உடன்வந்து மூவா யிரவர் இறைஞ்சி நிறைந்தஉண்மைக் கடனன்றி மற்றறி யாத்தில்லை அம்பலம் காளத்தியாம் இடம்எம் பிரான்கச்சி ஏகம்பம் மேயாற் கினியனவே. | 47 |
973 | இனியவர் இன்னார் அவரையொப் பார்பிறர் என்னவொண்ணாத் தனியவர் தையல் உடனாம் உருவர் அறம்பணித்த முனியவர் ஏறும் உகந்தமுக் கண்ணவர் சண்டிஅன்புக் கினியவர் காய்மழு வாட்படை யார்கச்சி ஏகம்பரே. | 48 |
974 | பரவித் தனைநினை யக்கச்சி ஏகம்பர் பண்ணும்மையல் வரவித் தனையுள்ள தெங்கறிந் தேன் முன் அவர்மகனார் புரவித் தனையடிக் கக்கொடி தாய்விடி யாஇரவில் அரவித் தனையுங்கொண் டார்மட வார்முன்றில் ஆட்டிடவே. | 49 |
975 | இடவம் சுறுக்கெனப் பாயுமுஞ் சென்னி நகுதலைகண் டிடஅஞ் சுவர்மட வார்இரி கின்றனர் ஏகம்பத்தீர் படம்அஞ்சு வாயது நாகம் இரைக்கும் அதனுக்குமுற் படஅஞ் சுவர்எங்ங னேபலி வந்திடும் பாங்குகளே. | 50 |
976 | பாங்குடை கோள்புலி யின்அதள் கொண்டீர்நும் பாரிடங்கள் தாங்குடை கொள்ளப் பலிகொள்ள வந்தீர் தடங்கமலம் பூங்குடை கொள்ளப் புனற்கச்சி ஏகம்பம் கோயில்கொண்டீர் ஈங்கிடை கொள்ளக் கலைகொள்ள வந்தீர் இடைக்குமின்றே. | 51 |
977 | இடைக்குமின் தோற்கும் இணைமுலை யாய்முதி யார்கள்தஞ்சொல் கடைக்கண்நன் றாங்கச்சி ஏகம்பர் ஐயங் கொளக்கடவும் விடைக்குமுன் தோற்றநில் லேநின் றினியிந்த மொய்குழலார் கிடைக்குமுன் தோற்றநஞ் சங்கிது வோதங் கிறித்துவமே. | 52 |
978 | கிறிபல பேசிச் சதிரால் நடந்து விடங்குபடக் குறிபல பாடிக் குளிர்கச்சி ஏகம்பர் ஐயங்கொள்ள நெறிபல வார்குழ லார்மெலி வுற்ற நெடுந்தெருவில் செறிபல வெள்வளை போயின தாயர்கள் தேடுவரே. | 53 |
979 | தேடுற் றிலகள்ள நோக்கம் தெரிந்தில சொற்கள்முடி கூடுற் றிலகுழல் கொங்கை பொடித்தில கூறும்இவள் மாடுற் றிலமணி யின்மட அல்குலும் மற்றிவள்பால் நாடுற் றிலஎழில் ஏகம்ப னார்க் குள்ளம் நல்கிடத்தே. | 54 |
980 | நல்கும் புகழ்க்கட வூர்நன் மறையவன் உய்யநண்ணிக் கொல்கின்ற கூற்றைக் குமைத்த வெங் கூற்றம் குளிர்திரைகள் மல்கும் திருமறைக் காட்டமிர் தென்றும் மலைமகள் தான் புல்கும் பொழிற்கச்சி ஏகம்பம் மேவிய பொன்மலையே. | 55 |
981 | மலையத் தகத்தியன் அர்ச்சிக்க மன்னி வடகயிலை நிலையத் தமரர் தொழஇருந் தான்நெடு மேருஎன்னும் சிலையத்தன் பைம்பொன் மதில்திரு ஏகம்பத் தான்திகழ்நீர் அலையத் தடம்பொன்னி சூழ்திரு ஐயாற் றருமணியே. | 56 |
982 | மணியார் அருவித் தடம்இம யங்குடக் கொல்லிகல்லின் திணியார் அருவியின் ஆர்த்த சிராமலை ஐவனங்கள் அணியார் அருவி கவர்கிளி ஒப்பும்இன் சாரல்விந்தம் பணிவார் அருவினை தீர்க்கும்ஏ கம்பர் பருப்பதமே. | 57 |
983 | பருப்பதம் கார்தவழ் மந்தரம் இந்திர நீலம்வெள்ளை மருப்பதங் கார்கருங் குன்றியங் கும்பரங் குன்றம் வில்லார் நெருப்பதங் காகுதி நாறும் மகேந்திரம் என்றிவற்றில் இருப்பதங் காவுகந் தான்கச்சி ஏகம்பத் தெம்மிறையே. | 58 |
984 | இறைத்தார் புரம்எய்த வில்லிமை நல்லிம வான்மகட்கு மறைத்தார் கருங்குன்றம் வெண்குன்றம் செங்குன்ற மன்னல்குன்றம் நிறைத்தார் நெடுங்குன்றம் நீள்கழுக் குன்றம்என் தீவினைகள் குறைத்தார் முதுகுன்றம் ஏகம்பர் குன்றென்று கூறுமினே. | 59 |
985 | கூறுமின் தொண்டர்குற் றாலம்நெய்த் தானம் துருத்தியம்பேர் தேறுமின் வேள்விக் குடிதிருத் தோணி புரம்பழனம் ஆறுமின் போல்சடை வைத்தவன் ஆருர் இடைமருதென் றேறுமின் நீரெம் பிரான்கச்சி ஏகம்பம் முன்நினைந்தே. | 60 |
986 | நினைவார்க் கருளும் பிரான்திருச் சோற்றுத் துறைநியமம் புனைவார் சடையோன் புகலூர் புறம்பயம் பூவணம்நீர் புனைவார் பொழில்திரு வெண்காடு பாச்சில் அதிகையென்று நினைவார் தருநெஞ்சி னீர்கச்சி ஏகம்பம் நண்ணுமினே. | 61 |
987 | நண்ணிப் பரவும் திருவா வடுதுறை நல்லம்நல்லூர் மண்ணில் பொலிகடம் பூர்கடம் பந்துறை மன்னுபுன்கூர் எண்ணற் கரிய பராய்த்துறை ஏர்கொள் எதிர்கொள்பாடி கண்ணிப் பிறைச்சடை யோன்கச்சி ஏகம்பம் காண்மின் சென்றே. | 62 |
988 | சென்றேறி விண்ணுறும் அண்ணா மலைதிகழ் வல்லம்மென்பூ வின்தேறல் பாய்திரு மாற்பேறு பாசூர் எழில்அழுந்தூர் வன்தே ரவன்திரு விற்பெரும் பேறு மதில்ஒற்றியூர் நின்றேர் தருகச்சி ஏகம்பம் மேயார் நிலாவியவே. | 63 |
989 | நிலாவு புகழ்த்திரு வோத்தூர் திருஆமாத் தூர்நிறைநீர் சுலாவு சடையோன் புலிவலம் வில்வலம் கொச்சைதொண்டர் குலாவு திருப்பனங் காடுநன் மாகறல் கூற்றம்வந்தால் அலாய்என் றடியார்க் கருள்புரி ஏகம்பர் ஆலயமே. | 64 |
990 | ஆலையங் கார்கரு காவைகச் சூர்திருக் காரிகரை வேலையங் கேறு திருவான்மி யூர்திரு ஊறல்மிக்க சோலையங் கார்திருப் போந்தைமுக் கோணம் தொடர்கடுக்கை மாலையன் வாழ்திரு ஆலங்கா டேகம்பம் வாழ்த்துமினே. | 65 |
991 | வாழப் பெரிதெமக் கின்னருள் செய்யும் மலர்க்கழலோர் தாழச் சடைத்திரு ஏகம்பர் தம்மைத் தொழதவர்போய் வாழப் பரற்சுரம் ஆற்றா தளிரடி பூங்குழல் எம் ஏழைக் கிடையிறுக் குங்குய பாரம் இயக்குறினே. | 66 |
992 | உறுகின்ற வெவ்வழல் அக்கடம் இக்கொடிக் குன்பின்வரப் பெறுகின்ற வண்மையி னால்ஐய பேரருள் ஏகம்பனார் துறுகின்ற மென்மலர்த் தண்பொழில் கச்சியைச் சூழ்ந்திளையோர் குறுகின்ற பூங்குவ ளைக்குறுந் தண்பணை என்றுகொளே. | 67 |
993 | கொள்ளுங் கடுங்கதி ரிற்கள்ளி தீச்சில வேய்உலறி விள்ளும் வெடிபடும் பாலையென் பாவை விடலைபின்னே தெள்ளும் புனற்கச்சி யுள்திரு ஏகம்பர் சேவடியை உள்ளும் அதுமறந் தாரெனப் போவ துரைப்பரிதே. | 68 |
994 | பரிப்பருந் திண்மைப் படையது கானர் எனிற்சிறகு விரிப்பருந் துக்கிறை ஆக்கும்வெய் யேன்அஞ்சல் செஞ்சடைமேல் தரிப்பருந் திண்கங்கை யார்திரு வேகம்பம் அன்னபொன்னே வரிப்பருந் திண்சிலை யேயும ராயின் மறைகுவனே. | 69 |
995 | வனவரித் திண்புலி யின்அதள் ஏகம்ப மன்னருளே எனவரு பொன்னணங் கென்னணங் கிற்கென் எழிற்கழங்கும் தனவரிப் பந்தும் கொடுத்தெனைப் புல்லியும் இற்பிரிந்தே இனவரிக் கல்லதர் செல்வதெங் கே ஒல்கும் ஏழைநெஞ்சே. | 70 |
996 | நெஞ்சார் தரஇன்பம் செய்கழல் ஏகம்பர் கச்சியன்னாள் பஞ்சார் அடிவைத்த பாங்கிவை ஆங்கவள் பெற்றெடுத்த வெஞ்சார் வொழியத்தன் பின்செல முன்செல் வெடுவெடென்ற அஞ்சா அடுதிறற் காளைதன் போக்கிவை அந்தத்திலே. | 71 |
997 | இலவவெங் கான்உனை யல்லால் தொழுஞ்சரண் ஏகம்பனார் நிலவும் சுடரொளி வெய்யவ னேதண் மலர்மிதித்துச் செலவும் பருக்கை குளிரத் தளிரடி செல்சுரத்துன் உலவுங் கதிர்தணி வித்தருள் செய்யுன் உறுதுணைக்கே. | 72 |
998 | துணையொத்த கோவையும் போலெழில் பேதையும் தோன்றலுமுன் இணையொத்த கொங்கையொ டேஒத்த காதலொ டேகினரே அணையத்தர் ஏறொத்த காளையைக் கண்டனம் மற்றவரேல் பிணையொத்த நோக்குடைப் பெண்ணிவள் தன்னொடும் பேசுமினே. | 73 |
999 | மின்நலிக் கும்வணக் கத்திடை யாளையும் மீளியையும் நென்னல்இப் பாக்கைவந் தெய்தின ரேல்எம் மனையிற்கண்டீர் பின்னரிப் போக்கருங் குன்று கடந்தவர் இன்றுகம்பர் மன்னரி தேர்ந்து தொழுங்கச்சி நாட்டிடை வைகுவரே. | 74 |
1000 | உவரச்சொல் வேடுடைக் காடுகந் தாடிய ஏகம்பனார் அவரக்கன் போன விமானத்தை ஆயிரம் உண்மைசுற்றும் துவரச் சிகரச் சிவாலயம் சூலம் துலங்குவிண்மேல் கவரக் கொடிதிளைக் குங்கச்சி காணினும் கார்மயிலே. | 75 |
1001 | கார்மிக்க கண்டத் தெழில்திரு ஏகம்பர் கச்சியின்வாய் ஏர்மிக்க சேற்றெழில் நெல்நடு வோர்ஒலி பொன்மலைபோல் போர்மிக்க செந்நெல் குவிப்போர் ஒலிகருப் பாலையொலி நீர்மிக்க மாக்கட லின்ஒலி யேஒக்கும் நேரிழையே. | 76 |
1002 | நேர்த்தமை யாமை விறற்கொடு வேடர் நெடுஞ்சுரத்தைப் பார்த்தமை யால்இமை தீந்தகண் பொன்னே பகட்டுரிவை போர்த்தமை யால்உமை நோக்கருங் கம்பர்கச் சிப்பொழிலுள் சேர்த்தமை யால்இமைப் போதணி சீதம் சிறந்தனவே. | 77 |
1003 | சிறைவண்டு பாடும் கமலக் கிடங்கிவை செம்பழுக்காய் நிறைகொண்ட பாளைக் கமுகின் பொழில்இவை தீங்கனியின் பொறைகொண்ட வாழைப் பொதும்புவை புன்சடை ஏகம்பனார் நறைகொண்ட பூங்கச்சி நாடெங்கும் இவ்வண்ணம் நன்னுதலே. | 78 |
1004 | நன்னுத லார்கருங் கண்ணும் செவ்வாயும் இவ் வாறெனப்போய் மன்னித ழார்திரு நீலமும் ஆம்பலும் பூப்பவள்ளை என்னவெ லாம்ஒப்புக் காதென்று வீறிடும் ஏகம்பனார் பொன்னுத லார்விழி யார்கச்சி நாட்டுள்இப் பொய்கையுளே. | 79 |
1005 | உள்வார் குளிர நெருங்கிக் கருங்கிடங் கிட்டநன்னீர் வள்வா ளைகளொடு செங்கயல் மேய்கின்ற எங்களைஆட் கொள்வார் பிறவி கொடாதஏ கம்பர் குளிர்குவளை கள்வார் தருகச்சி நாட்டெழில் ஏரிக் களப்பரப்பே. | 80 |
1006 | பரப்பார் விசும்பிற் படிந்த கருமுகில் அன்னநன்னீர் தரப்பா சிகள்மிகு பண்பொடு சேம்படர் தண்பணைவாய்ச் சுரப்பார் எருமை மலர்தின்னத் துன்னுக ராஒருத்தல் பொரப்பார் பொலிநுத லாய்செல்வக் கம்பர்தம் பூங்கச்சியே. | 81 |
1007 | கச்சார் முலைமலை மங்கைகண் ணாரஎண் ணான்கறமும் வைச்சார் மகிழ்திரு ஏகம்பர் தேவி மகிழவிண்ணோர் விச்சா தரர்தொழு கின்ற விமானமும் தன்மமறா அச்சா லையும்பரப் பாங்கணி மாடங்கள் ஓங்கினவே. | 82 |
1008 | ஓங்கின ஊரகம் உள்ளகம் உம்பர் உருகிடமாம் பாங்கினில் நின்ற தரியுறை பாடகம் தெவ்இரிய வாங்கின வாட்கண்ணி மற்றவர் மைத்துனி வான்கவிகள் தாங்கின நாட்டிருந் தாளது தன்மனை ஆயிழையே. | 83 |
1009 | இழையார் அரவணி ஏகம்பர் நெற்றி விழியின்வந்த பிழையா அருள்நம் பிராட்டிய தின்ன பிறங்கல்உன்னும் நுழையா வருதிரி சூலத்தள் நோக்கரும் பொன்கடுக்கைத் தழையார் பொழிலிது பொன்னே நமக்குத் தளர்வில்லையே. | 84 |
1010 | தளரா மிகுவெள்ளம் கண்டுமை ஓடித் தமைத்தழுவக் கிளையார் வளைக்கை வடுப்படும் ஈங்கோர் கிறிபடுத்தார் வளமாப் பொழில்திரு ஏகம்பம் மற்றிது வந்திறைஞ்சி உளரா வதுபடைத் தோம்மட வாய்இவ் வுலகத்துளே. | 85 |
1011 | உலவிய மின்வடம் வீசி உருமதிர் வுள்முழங்கி வலவிய மாமதம் பாய்முகில் யானைகள் வானில்வந்தால் சுலவிய வார்குழல் பின்னரென் பாரிர் எனநினைந்து நிலவிய ஏகம்பர் கோயிற் கொடியன்ன நீர்மையனே. | 86 |
1012 | நீரென்னி லும்அழுங் கண்முகில் காள்நெஞ்சம் அஞ்சலையென் றாரென்னி லுந்தம ராயுரைப் பார்அம ராவதிக்கு நேரென்னி லுந்தகும் கச்சியுள் ஏகம்பர் நீள்மதில்வாய்ச் சேரென்னி லும்தங்கும் வாட்கண்ணி தான்அன்பர் தேர்வரவே. | 87 |
1013 | வரங்கொண் டிமையோர் நலங்கொள்ளும் ஏகம்பர் கச்சியன்னாய் பரங்கொங்கை தூவன்மின் நீர்முத்தம் அன்பர்தம் தேரின்முன்னே தரங்கொண்டு பூக்கொண்டு கொன்றைபொன் னாகத்தண் காந்தட்கொத்தின் கரங்கொண்டு பொற்சுண்ணம் ஏந்தவும் போந்தன கார்முகிலே. | 88 |
1014 | கார்முகம் ஆரவண் கைக்கொண்ட கம்பர் கழல்தொழுது போர்முக மாப்பகை வெல்லச்சென் றார்நினை யார்புணரி நீர்முக மாக இருண்டு சுரந்தது நேரிழைநாம் ஆர்முக மாக வினைக்கடல் நீந்தும் அயர்வுயிர்ப்பே. | 89 |
1015 | உயிரா யினஅன்பர் தேர்வரக் கேட்டுமுன் வாட்டமுற்ற பயிரார் புயல்பெற்ற தென்னநம் பல்வளை பான்மைகளாம் தயிரார்பால் நெய்யொடும் ஆடிய ஏகம்பர் தம்மருள்போல் கையிரா வளையழுந் தக்கச் சிறுத்தன கார்மயிலே. | 90 |
1016 | கார்விடை வண்ணத்தன் அன்றேழ் தழுவினும் இன்றுதனிப் போர்விடை பெற்றெதிர் மாண்டார் எனஅண்டர் போதவிட்டார் தார்விடை ஏகம்பர் கச்சிப் புறவிடைத் தம்பொன் நன்பூண் மார்விடை வைகல் பெறுவார் தழுவ மழவிடையே. | 91 |
1017 | விடைபாய் கொடுமையெண் ணாதுமே< லாங்கன்னி வேல்கருங்கண் கடைபாய் மனத்திளங் காளையர் புல்கொலி கம்பர்கச்சி மடைபாய் வயலின முல்லையின் மான்கன்றொ டான்கன்றினம் கடைபாய் தொறும்பதி மன்றில் கடல்போல் கலந்தெழுமே. | 92 |
1018 | எழுமலர்த் தண்பொழில் ஏகம்பர் கச்சி இருங்கடல்வாய்க் கொழுமணப் புன்னைத் துணர்மணற் குன்றில் பரதர்கொம்பே சுழுமலர்ச் சேலல்ல வாளல்ல வேலல்ல நீலமல்ல முழுமலர்க் கூர்அம்பின்ஓர்இரண் டாலும் முகத்தனவே. | 93 |
1019 | முகம்பாகம் பண்டமும் பாகமென் றோதிய மூதுரையை உகம்பார்த் திரேல்என் நலம்உயர் ஏகம்பர் கச்சிமுன்நீர் அகம்பாக ஆர்வின் அளவில்லை என்னின் பவளச் செவ்வாய் நகம்பால் பொழில்பெற்ற நாமுற்ற வர்கொள்க நன்மயலே. | 94 |
1020 | மயக்கத்த நல்லிருள் கொல்லும் சுறவோ டெறிமகரம் இயக்கத் திடுசுழி ஓதம் கழிகிளர் அக்கழித்தார் துயக்கத் தவர்க்கரு ளாக்கம்பர் கச்சிக் கடலபொன்னூல் முயக்கத் தகல்வு பொறாள்கொண்க நீர்வரும் ஊர்க்கஞ்சுமே. | 95 |
1021 | மேயிரை வைகக் குருகுண ராமது உண்டுபுன்னை மீயிரை வண்டோ தமர்புக் கடிய விரிகடல்வாய்ப் பாயிரை நாகங்கொண் டோன்தொழும் கம்பர்கச் சிப்பவ்வநீர் தூயிரை கானல்மற் றார்அறி வார்நந் துறைவர்பொய்யே. | 96 |
1022 | பொய்வரு நெஞ்சினர் வஞ்சனை யாரையும் போகவிடா மெய்வரும் பேரருள் ஏகம்பர் கச்சி விரையினவாய்க் கைவரும் புள்ளொடு சங்கினம் ஆர்ப்பநம் சேர்ப்பர்திண்தேர் அவ்வரு தாமங் களினம் வந் தார்ப்ப அணைகின்றதே. | 97 |
1023 | இன்றுசெய் வோம்இத னில்திரு ஏகம்பர்க் கெத்தனையும் நன்றுசெய் வோம்பணி நாளையென் றுள்ளிநெஞ் சேயுடலில் சென்றுசெ யாரை விடும்துணை நாளும் விடா தடிமை நின்றுசெய் வாரவர் தங்களின் நீள்நெறி காட்டுவரே. | 98 |
1024 | காட்டிவைத் தார்தம்மை யாம்கடிப் பூப்பெய்யக் காதல்வெள்ளம் ஈட்டிவைத் தார்தொழும் ஏகம்பர் ஏதும் இலாதஎம்மைப் பூட்டிவைத் தார்தமக் கன்பது பெற்றுப் பதிற்றுப் பத்துப் பாட்டிவைத் தார்பர வித்தொழு வாம்அவர் பாதங்களே. | 99 |
1025 | பாதம் பரவியோர் பித்துப் பிதற்றினும் பல்பணியும் ஏதம் புகுதா வகையருள் ஏகம்பர் ஏத்தனவே போதம் பொருளால் பொலியாத புன்சொல் பனுவல்களும் வேதம் பொலியும் பொருளாம் எனக்கொள்வர் மெய்த்தொண்டரே. | 100 |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
11.4. திருஏகம்பமுடையார் திருவந்தாதி - பதினோராம் திருமுறை - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - ஏகம்பர், ஏகம்பம், ஏகம்பனார், கம்பர், ஏகம்பத், கச்சியுள், யார்கச்சி, அரிதன், கண்ணும்