முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » பதினோராம் திருமுறை » 4.1. பொன்வண்ணத்தந்தாதி
பதினோராம் திருமுறை - 4.1. பொன்வண்ணத்தந்தாதி

4.1. பொன்வண்ணத்தந்தாதி
169 |
பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்திலங்கும் மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை வெள்ளிக்குன்றம் தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை தன்னைக்கண்ட என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே |
1 |
170 |
ஈசனைக் காணப் பலிகொடு செல்லஎற் றேஇவளோர் பேயனைக் காமுறு பிச்சிகொ லாமென்று பேதையர்முன் தாயெனை ஈர்ப்பத் தமியேன் தளரஅத் தாழ்சடையோன் வாவெனைப் புல்லவென் றான்இமை விண்டன வாட்கண்களே |
2 |
171 |
கண்களங் கஞ்செய்யக் கைவளை சோரக் கலையுஞ்செல்ல ஒண்களங் கண்ணுதல் வேர்ப்பஒண் கொன்றையந் தார்உருவப் பெண்களங் கம்மிவள் பேதுறும் என்பதோர் பேதைநெஞ்சம் பண்களங் கம்மிசை பாடநின் றாடும் பரமனையே |
3 |
172 |
பரமனை யேபலி தேர்ந்துநஞ் சுண்டது பன்மலர்சேர் பிரமனை யேசிரங் கொண்டுங் கொடுப்பது பேரருளாம் சரமனை யேஉடம் பட்டும் உடம்பொடு மாதிடமாம் வரமனை யேகிளை யாகும்முக் கண்ணுடை மாதவனே |
4 |
173 |
தவனே உலகுக்குத் தானே முதல்தான் படைத்தவெல்லாம் சிவனே முழுதும்என் பார்சிவ லோகம் பெறுவர்செய்ய அவனே அடல்விடை ஊர்தி கடலிடை நஞ்சமுண்ட பவனே எனச்சொல்லு வாரும் பெறுவர்இப் பாரிடமே |
5 |
174 |
இடமால் வலந்தான் இடப்பால் துழாய்வலப் பால்ஒண்கொன்றை வடமால் இடந்துகில் தோல்வலம் ஆழி இடம்வலம்மான் இடமால் கரிதால் வலஞ்சே திவனுக் கெழில்நலஞ்சேர் குடமால் இடம்வலங் கொக்கரை யாம்எங்கள் கூத்தனுக்கே |
6 |
175 |
கூத்துக் கொலாம் இவர் ஆடித் திரிவது கோல்வளைகள் பாத்துக் கொலாம்பலி தேர்வது மேனி பவளம்கொலாம் ஏத்துக் கொலாம்இவர் ஆதரிக் கின்ற திமயவர்தம் ஓத்துக் கொலாம்இவர் கண்டதிண் டைச்சடை உத்தமரே |
7 |
176 |
உத்தம ராய்அடி யார்உல காளத் தமக்குரிய மத்தம் அராமதி மாடம் பதிநலம் சீர்மைகுன்றா எத்தம ராயும் பணிகொள்ள வல்ல இறைவர்வந்தென் சித்தம ராய்அக லாதுடன் ஆடித் திரிதவரே |
8 |
177 |
திரிதவர் கண்ணுள்ளும் உள்ளத்தின் உள்ளும் திரிதரினும் அரிதவர் தன்மை அறிவிப்ப தாயினும் ஆழிநஞ்சேய் கரிதவர் கண்டம் வெளிதவர் சாந்தம்கண் மூன்றொடொன்றாம் பரிதவர் தாமே அருள்செய்து கொள்வர்தம் பல்பணியே |
9 |
178 |
பணிபதம் பாடிசை ஆடிசை யாகப் பனிமலரால் அணிபதங் கன்பற் கொளப்பனை அத்தவற் கேயடிமை துணிபதங் காமுறு தோலொடு நீறுடல் தூர்த்துநல்ல தணிபதங் காட்டிடுஞ் சஞ்சலம் நீஎன் தனிநெஞ்சமே |
10 |
179 |
நெஞ்சம் தளிர்விடக் கண்ணீர் ததும்ப முகம்மலர அஞ்செங் கரதலம் கூம்பஅட் டாங்கம் அடிபணிந்து தஞ்சொல் மலரால் அணியவல் லோர்கட்குத் தாழ்சடையான் வஞ்சங் கடிந்து திருத்திவைத் தான்பெரு வானகமே |
11 |
180 |
வானகம் ஆண்டுமந் தாகினி ஆடிநந் தாவனம் சூழ் தேனக மாமலர் சூடிச்செல் வோரும் சிதவல்சுற்றிக் கானகந் தேயத் திரிந்திரப் போரும் கனகவண்ணப் பால்நிற நீற்றற் கடியரும் அல்லாப் படிறருமே |
12 |
181 |
படிறா யினசொல்லிப் பாழுடல் ஓம்பிப் பலகடைச் சென் றிடறா தொழிதும் எழுநெஞ்ச மேஎரி ஆடிஎம்மான் கடல்தா யினநஞ்சம் உண்ட பிரான்கழல் சேர்தல்கண்டாய் உடல்தான் உளபயன் ஆவசொன் னேன்இவ் வுலகினுள்ளே |
13 |
182 |
உலகா ளுறுவீர் தொழுமின்விண் ணாள்வீர் பணிமின்நித்தம் பலகா முறுவீர் நினைமின் பரமனொ டொன்றலுற்றீர் நலகா மலரால் அருச்சிமின் ஆள்நர கத்துநிற்கும் அலகா முறுவீர் அரனடி யாரை அலைமின்களே |
14 |
183 |
அலையார் புனல்அனல் ஞாயி றவனி மதியம்விண்கால் தொலையா உயிருடம் பாகிய சோதியைத் தொக்குமினோ தலையாற் சுமந்துந் தடித்துங் கொடித்தேர் அரக்கன்என்னே கலையான் ஒருவிரல் தாங்ககில் லான்விட்ட காரணமே |
15 |
184 |
காரணன் காமரம் பாடவோர் காமர்அம் பூடுறத்தன் தாரணங் காகத் தளர்கின்ற தையலைத் தாங்குவர்யார் போரணி வேற்கண் புனற்படம் போர்த்தன பூஞ்சுணங்கார் ஏரணி கொங்கையும் பொற்படம் மூடி இருந்தனவே |
16 |
185 |
இருந்தனம் எய்தியும் நின்றுந் திரிந்துங் கிடந்தலைந்தும் வருந்திய வாழ்க்கை தவிர்த்திடு போகநெஞ் சேமடவாள் பொருந்திய பாகத்துப் புண்ணியன் புண்ணியல் சூலத்தெம்மான் திருந்திய போதவன் தானே களையும்நம் தீவினையே |
17 |
186 |
தீவினை யேனைநின் றைவர் இராப்பகல் செத்தித்தின்ன மேவினை வாழ்க்கை வெறுத்தேன் வெறுத்துவிட் டேன்வினையும் ஓவின துள்ளந் தெளிந்தது கள்ளங் கடிந் தடைந்தேன் பாவின செஞ்சடை முக்கணன் ஆரணன் பாதங்களே |
18 |
187 |
பாதம் புவனி சுடர்நய னம்புவ னம்உயிர்ப் போங் கோதம் உடுக்கை உயர்வான் முடிவிசும் பேஉடம்பு வேதம் முகம்திசை தோள்மிகு பன்மொழி கீதம்என்ன போதம் இவற்கோர் மணிநிறம் தோற்பது பூங்கொடியே |
19 |
188 |
கொடிமேல் இடபமுங் கோவணக் கீளுமோர் கொக்கிறகும் அடிமேற் கழலும் அகலத்தில் நீறும்ஐ வாயரவும் முடிமேல் மதியும் முருகலர் கொன்றையும் மூவிலைய வடிவேல் வடிவும்என் கண்ணுள்எப் போதும் வருகின்றவே |
20 |
189 |
வருகின்ற மூப்பொடு தீப்பிணிக் கூற்றம்வை கற்குவைகல் பொருகின்ற போர்க்கொன்றும் ஆற்றகில் லேன்பொடி பூசிவந்துன் அருகொன்றி நிற்க அருளுகண் டாய்அழல் வாய்அரவம் வெருகொன்ற வெண்மதி செஞ்சடை மேல்வைத்த வேதியனே |
21 |
190 |
வேதியன் பாதம் பணிந்தேன் பணிந்துமெய்ஞ் ஞானமென்னும் சோதியென் பால்கொள்ள உற்றுநின் றேற்கின்று தொட்டிதுதான் நீதியென் றான்செல்வம் ஆவதென் றேன்மேல் நினைப்புவண்டேர் ஓதிநின் போல்வகைத் தேயிரு பாலும் ஒழித்ததுவே |
22 |
191 |
ஒழித்தேன் பிறவியை ஊர்ந்தேன் உவகையை ஓங்கிற்றுள்ளம் இழித்தேன் உடம்பினை ஏலேன் பிறரிடை இம்மனையும் பழித்தேன் பழியே விளைக்கும்பஞ் சேந்தியக் குஞ்சரமும் தெழித்தேன் சிவனடி சேர்ந்தேன் இனிமிகத் தெள்ளியனே |
23 |
192 |
தெள்ளிய மாந்தரைச் சேர்ந்திலன் தீங்கவி பாடலுற்றேன் ஒள்ளிய சொல்லும் பொருளும் பெறேன் உரைத் தார்உரைத்த கள்ளிய புக்காற் கவிகள்ஒட் டார்கடல் நஞ்சயின்றாய் கொள்ளிய அல்லகண் டாய்புன்சொல் ஆயினும் கொண்டருளே |
24 |
193 |
அருளால் வருநஞ்சம் உண்டுநின் றாயை அமரர்குழாம் பொருளார் கவிசொல்ல யானும்புன் சொற்கள் புணர்க்கலுற்றேன் இருளா சறவெழில் மாமதி தோன்றவும் ஏன்றதென்ன வெருளா தெதிர்சென்று மின்மினி தானும் விரிகின்றதே |
25 |
194 |
விரிகின்ற ஞாயிறு போன்றது மேனியஞ் ஞாயிறுசூழ்ந் தெரிகின்ற வெங்கதிர் ஒத்தது செஞ்சடை அச்சடைக் கீழ்ச் சரிகின்ற காரிருள் போன்றது கண்டம்அக் காரிருட்கீழ்ப் புரிகின்ற வெண்முகில் போன்றுள தால்எந்தை ஒண்பொடியே |
26 |
195 |
பொடிக்கின் றிலமுலை போந்தில பல்சொற் பொருள்தெரியா முடிக்கின் றிலகுழல் ஆயினும் கேண்மின்கள் மூரிவெள்ளம் குடிக்கொண்ட செஞ்சடைக் கொண்டலங் கண்டன்மெய்க் கொண்டணிந்த கடிக்கொன்றை நாறுகின் றாள்அறி யேன்பிறர் கட்டுரையே |
27 |
196 |
உரைவளர் நான்மறை ஓதி உலகம் எலாந் திரியும் விரைவளர் கொன்றை மருவிய மார்பன் விரிசடைமேல் திரைவளர் கங்கை நுரைவளர் தீர்த்தஞ் செறியச் செய்த கரைவளர் ஒத்துள தாற்சிர மாலைஎம் கண்டனுக்கே |
28 |
197 |
கண்டங் கரியன் கரியீர் உரியன் விரிதருசீர் அண்டங் கடந்த பெருமான் சிறுமான் தரித்தபிரான் பண்டன் பரம சிவனோர் பிரமன் சிரம்அரிந்த புண்தங் கயிலன் பயிலார மார்பன்எம் புண்ணியனே |
29 |
198 |
புண்ணியன் புண்ணியல் வேலையன் வேலைய நஞ்சன்அங்கக் கண்ணியன் கண்ணியல் நெற்றியன் காரணன் கார்இயங்கும் விண்ணியன் விண்ணியல் பாணியன் பாணி கொள உமையாள் பண்ணியன் பண்ணியல் பாடலன் ஆடற் பசுபதியே |
30 |
199 |
பதியார் பலிக்கென்று வந்தார் ஒருவர்க்குப் பாவைநல்லீர் கதியார் விடைஉண்டு கண்மூன் றுளகறைக் கண்டமுண்டு கொதியார் மழுவுண்டு கொக்கரை உண்டிறை கூத்துமுண்டு மதியார் சடைஉள மால்உள தீவது மங்கையர்க்கே |
31 |
200 |
மங்கைகொங் கைத்தடத் திங்குமக் குங்குமப் பங்கநுங்கி அங்கமெங் கும்நெகச் சங்கமங் கைத்தலத் துங்கவர்வான் கங்கைநங் கைத்திரைப் பொங்குசெங் கண்அர வங்கள்பொங்கிப் பங்கிதங் கும்மலர்த் திங்கள்தங் கும்முடிப் பண்டங்கனே |
32 |
201 |
பண்டங்கன் வந்து பலிதாஎன்றான்பக லோற் கிடென்றேன் அண்டங் கடந்தவன் அன்னம்என்றான்அயன் ஊர்தியென்றேன் கொண்டிங் குன்ஐயம்பெய் என்றான் கொடித்தேர் அநங்கன்என்றேன் உண்டிங் கமைந்ததென் றாற்கது சொல்ல உணர்வுற்றதே |
33 |
202 |
உற்றடி யார்உல காளஓர் ஊணும் உறக்கும் இன்றிப் பெற்றம தாவதென் றேனும் பிரான்பெரு வேல்நெடுங்கண் சிற்றடி யாய்வெண்பல் செவ்வாய் இவள்சிர மாலைக்கென்றும் இற்றிடை யாம்படி யாகஎன் னுக்கு மெலிக்கின்றதே |
34 |
203 |
மெலிக்கின்ற வெந்தீ வெயில்வாய் இழுதழல் வாய்மெழுகு கலிக்கின்ற காமம் கரதலம் எல்லி துறக்கம் வெங்கூற் றொலிக்கின்ற நீருறு தீயொளி யார்முக்கண் அத்தர்மிக்க பலிக்கென்று வந்தார் கடிக்கொன்றை சூடிய பல்லுயிரே |
35 |
204 |
பல்லுயிர் பாகம் உடல்தலை தோல்பக லோன்மறல்பெண் வில்லிஓர் வேதியன் வேழம் நிரையே பறித்துதைத்துப் புல்லியுஞ் சுட்டும் அறுத்தும் உரித்துங்கொண் டான் புகழே சொல்லியும் பாடியும் ஏத்தக் கெடும்நங்கள் சூழ்துயரே |
36 |
205 |
துயருந் தொழும்அழும் சோரும் துகிலுங் கலையுஞ்செல்லப் பெயரும் பிதற்றும் நகும்வெய் துயிர்க்கும் பெரும்பணிகூர்ந் தயரும் அமர்விக்கும் மூரி நிமிர்க்கும்அந் தோஇங்ஙனே மயரும் மறைக்காட் டிறையினுக் காட்பட்ட வாணுதலே |
37 |
206 |
வாணுதற் கெண்ணம்நன் றன்று வளர்சடை எந்தைவந்தால் நாணுதற் கெண்ணாள் பலிகொடுசென்று நகும்நயந்து பேணுதற் கெண்ணும் பிரமன் திருமால் அவர்க் கரிய தாணுவுக் கென்னோ இராப்பகல் நைந்திவள் தாழ்கின்றதே |
38 |
207 |
தாழுஞ் சடைசடை மேலது கங்கையக் கங்கைநங்கை வாமுஞ் சடைசடை மேலது திங்கள்அத் திங்கட்பிள்ளை போழுஞ் சடைசடை மேலது பொங்கர வவ்வரவம் வாழுஞ் சடைசடை மேலது கொன்றையெம் மாமுனிக்கே |
39 |
208 |
முனியே முருகலர் கொன்றையி னாய்என்னை மூப்பொழித்த கனியே கழலடி அல்லாற் களைகண்மற் றொன்றுமிலேன் இனியேல் இருந்தவம் செய்யேன் திருந்தஅஞ் சேநினைந்து தனியேன் படுகின்ற சங்கடம் ஆர்க்கினிச் சாற்றுவனே |
40 |
209 |
சாற்றுவன் கோயில் தலையும் மனமும் தவம்இவற்றால் ஆற்றுவன் அன்பெனும் நெய்சொரிந் தாற்றிஅஞ் சொல்மலரால் ஏற்றுவன் ஈசன்வந் தென்மனத் தான்என் றெழுந்தலரே தூற்றுவன் தோத்திரம் ஆயின வேயினிச் சொல்லுவனே |
41 |
210 |
சொல்லா தனகொழு நாவல்ல சோதியுட் சோதிதன்பேர் செல்லாச் செவிமரம் தேறித் தொழாதகை மண்திணிந்த கல்லாம் நினையா மனம்வணங்காத்தலை யும்பொறையாம் அல்லா அவயவந் தானும் மனிதர்க் கசேதனமே |
42 |
211 |
தனக்குன்றம் மாவையம் சங்கரன் தன்னருள் அன்றிப்பெற்றால் மனக்கென்றும் நஞ்சிற் கடையா நினைவன் மதுவிரியும் புனக்கொன்றை யான்அரு ளால்புழுவாகிப் பிறந்திடினும் எனக்கென்றும் வானவர் பொன்னுல கோடொக்க எண்ணுவனே |
43 |
212 |
எண்ணம் இறையே பிழைக்குங் கொலாம்இமை யோர்இறைஞ்சும் தண்ணம் பிறைச்சடைச் சங்கரன் சங்கக் குழையன்வந்தென் உள்நன் குறைவ தறிந்தும் ஒளிமா நிறங்கவர்வான் கண்ணும் உறங்கா திராப்பகல் எய்கின்ற காமனுக்கே |
44 |
213 |
காமனை முன்செற்ற தென்றாள் அவள்இவள் காலன்என்னும் தாமநன் மார்பனை முன்செற்ற தென்றுதன் கையெறிந்தாள் நாம்முனஞ் செற்றதன் றாரைஎன் றேற்கிரு வர்க்கும் அஞ்சி ஆமெனக் கிற்றிலர் அன்றெனக் கிற்றிலர் அந்தணரே |
45 |
214 |
அந்தணராம் இவர்ஆருர் உறைவதென் றேன்அதுவே சந்தணை தோளியென் றார்தலை யாயசலவர் என்றேன் பந்தணை கையாய் அதுவும்உண் டென்றார் உமையறியக் கொந்தணை தாரீர் உரைமின்என் றேன்துடி கொட்டினரே |
46 |
215 |
கொட்டும் சிலபல சூழநின் றார்க்கும்குப் புற்றெழுந்து நட்ட மறியும் கிரீடிக்கும் பாடும் நகும்வெருட்டும் வட்டம் வரும்அருஞ் சாரணை செல்லும் மலர்தயங்கும் புட்டங் கிரும்பொழில் சூழ்மறைக் காட்டரன் பூதங்களே |
47 |
216 |
பூதப் படையுடைப் புண்ணியரேபுறஞ் சொற்கள்நும்மேல் ஏதப் படஎழு கின்றன வாலிளை யாளொடும்மைக் காதற்படுப்பான் கணைதொட்ட காமனைக் கண்மலராற் சேதப் படுத்திட்ட காரணம் நீரிறை செப்புமினே |
48 |
217 |
செப்பன கொங்கைக்குத் தேமலர்க் கொன்றை நிறம்பணித்தான் மைப்புரை கண்ணுக்கு வார்புனல் கங்கைவைத் தான்மனத்துக் கொப்பன இல்லா ஒளிகிளர் உன்மத்தமும் அமைத்தான் அப்பனை அம்மனைநீயென் பெறாதுநின் றார்க்கின்றதே |
49 |
218 |
ஆர்க்கின்ற நீரும் அனலும் மதியும் ஐவாய்அரவும் ஓர்க்கின்ற யோகும் உமையும் உருவும் அருவும்வென்றி பார்க்கின்ற வேங்கையும் மானும் பகலும் இரவும்எல்லாம் கார்க்கொன்றை மாலையி னார்க்குடன் ஆகிக் கலந்தனவே |
50 |
219 |
கலந்தனக் கென்பலர் கட்டவிழ் வார்கொன்றை கட்டரவார் சலந்தனக் கண்ணிய கானகம் ஆடியோர் சாணகமும் நிலந்தனக் கில்லா அகதியன் ஆகிய நீலகண்டத் தலந்தலைக் கென்னே அலந்தலை யாகி அழிகின்றதே |
51 |
220 |
அழிகின்ற தாருயிர் ஆகின்ற தாகுலம் ஏறிடும்மால் இழிகின்ற சங்கம் இருந்த முலைமேல் கிடந்தனபீர் பொழிகின்ற கண்ணீர் புலர்ந்தது வாய்கலை போனவந்தார் மொழிகின்ற தென்இனி நான்மறை முக்கண் முறைவனுக்கே |
52 |
221 |
முறைவனை மூப்புக்கு நான்மறைக் கும்முதல் ஏழ்கடலந் துறைவனைச் சூழ்கயி லாயச் சிலம்பனைத் தொன்மைகுன்றா இறைவனை எண்குணத் தீசனை ஏத்தினர் சித்தந்தம்பால் உறைவனைப் பாம்பனை யாம்பின்னை என்சொல்லி ஓதுவதே |
53 |
222 |
ஓதவன் நாமம் உரையவன் பல்குணம் உன்னைவிட்டேன் போதவன் பின்னே பொருந்தவன் வாழ்க்கை திருந்தச்சென்று மாதவ மாகிடு மாதவ மாவளர் புன்சடையான் யாதவன் சொன்னான் அதுகொண் டொழிஇனி ஆரணங்கே |
54 |
223 |
ஆரணங் கின்முகம் ஐங்கணை யான்அகம் அவ்வகத்தில் தோரணந் தோள்அவன் தேரகல் அல்குல்தொன் மைக்கண்வந்த பூரண கும்பம் முலைஇவை காணப் புரிசடைஎம் காரணன் தாள்தொழும் அன்போ பகையோ கருதியதே |
55 |
224 |
கருதிய தொன்றில்லை ஆயினும் கேண்மின்கள் காரிகையாள் ஒருதின மும்முள ளாகஒட் டாதொடுங் கார்ஒடுங்கப் பொருதநன் மால்விடைப் புண்ணியன் பொங்கிளங் கொன்றைஇன்னே தருதிர்நன் றாயிடும் தாரா விடிற்கொல்லுந் தாழ்இருளே |
56 |
225 |
இருளார் மிடற்றால் இராப்பகல் தன்னால் வரைமறையால் பொருளார் கமழ்கொன்றை யால்முல்லை புற்றர வாடுதலால் தெருளார் மதிவிசும் பால்பெளவந்தெண்புனல் தாங்குதலால் அருளாற் பலபல வண்ணமு மால்அரன் ஆயினனே |
57 |
226 |
ஆயினஅந்தணர் வாய்மை அரைக்கலை கைவளைகள் போயின வாள்நிகர் கண்ணுறு மைந்நீர் முலையிடையே பாயின வேள்கைக் கரபத் திரத்துக்குச் சூத்திரம்போல் ஆயின பல்சடை யார்க்கன்பு பட்டஎம் ஆயிழைக்கே |
58 |
227 |
இழையார் வனமுலை வீங்கி இடையிறு கின்ற திற்றால் பிழையாள் நமக்கிவை கட்டுண்க என்பது பேச்சுக்கொலாம் கழையார் கழுக்குன்ற வாணனைக் கண்டனைக் காதலித்தாள் குழையார் செவியொடு கோலக் கயற்கண்கள் கூடியவே |
59 |
228 |
கூடிய தன்னிடத் தான்உமை யாளிடத் தானைஐயா றீடிய பல்சடை மேற்றெரி வண்ணம் எனப்பணிமின் பாடிய நான்மறை பாய்ந்தது கூற்றைப் படர்புரஞ்சுட் டாடியநீறுசெஞ் சாந்திவை யாம்எம் அயன்எனவே |
60 |
229 |
அயமே பலிஇங்கு மாடுள தாணுவோர் குக்கிக்கிடப் பயமே மொழியும் பசுபதி ஏறெம்மைப் பாய்ந்திடுமால் புயமேய் குழலியர் புண்ணியர் போமின் இரத்தல்பொல்லா நயமே மொழியினும் நக்காம் அம் மாஉம்மை நாணுதுமே |
61 |
230 |
நாணா நடக்க நலத்தார்க் கிடையில்லை நாம்எழுத ஏணார் இருந்தமி ழால்மற வேனுந் நினைமின்என்றும் பூணார் முலையீர் நிருத்தன் புரிசடை எந்தைவந்தால் காணாவிடேன்கண்டி ரவா தொழியேன் கடிமலரே |
62 |
231 |
கடிமலர்க் கொன்றை தரினும்புல் லேன்கலை சாரஒட்டேன் முடிமலர் தீண்டின் முனிவன் முலைதொடு மேற்கெடுவன் அடிமலர் வானவர் ஏத்தநின் றாய்க்கழ கல்லஎன்பன் தொடிமலர்த் தோள்தொடு மேல்திரு வாணை தொடங்குவனே |
63 |
232 |
தொடங்கிய வாழ்க்கையை வாளா துறப்பர் துறந்தவரே அடங்கிய வேட்கை அரன்பால் இலர்அறு காற்பறவை முடங்கிய செஞ்சடை முக்கண னார்க்கன்றி இங்கும்அன்றிக் கிடங்கினிற் பட்ட கராஅனை யார்பல கேவலரே |
64 |
233 |
வலந்தான் கழல்இடம் பாடகம் பாம்பு வலம்இடமே கலந்தான் வலம்நீ றிடம்சாந் தெரிவலம் பந்திடமென் பலந்தார் வலம்இடம் ஆடகம் வேல்வலம் ஆழிஇடம் சலந்தாழ் சடைவலம் தண்ணங் குழல்இடம் சங்கரற்கே |
65 |
234 |
சங்கரன் சங்கக் குழையன் சரணார விந்தந்தன்னை அங்கரங் கூப்பித் தொழுதாட் படுமின்தொண் டீர்நமனார் கிங்கரர் தாம்செய்யும் கீழா யினமிறை கேட்டலுமே இங்கரம் ஆயிரம் ஈரஎன் நெஞ்சம் எரிகின்றதே |
66 |
235 |
எரிகின்ற தீயொத் துளசடை ஈசற்கத் தீக்கிமையோர் சொரிகின்ற பாற்கடல் போன்றது சூழ்புனல் அப்புனலிற் சரிகின்ற திங்களோர் தோணிஒக்கின்றதத் தோணிஉய்ப்பான் தெரிகின்ற திண்கழை போன்றுள தால்அத்திறல் அரவே |
67 |
236 |
அரவம் உயிர்ப்ப அழலும்அங் கங்கை வளாய்க்குளிரும் குரவங் குழல்உமை ஊடற்கு நைந்துறு கும்அடைந்தோர் பரவும் புகழ்அண்ணல் தீண்டலும் பார்வா னவைவிளக்கும் விரவும் இடர்இன்பம் எம்இறை சூடிய வெண்பிறையே |
68 |
237 |
பிறைத்துண்டம் சூடலுற் றோபிச்சை கொண்டனல் ஆடலுற்றோ மறைக்கண்டம் பாடலுற் றோஎன்பும் நீறும் மருவலுற்றோ கறைக்கண்டம் புல்லலுற் றோகடு வாய்அர வாடலுற்றோ குறைக்கொண் டிவள்அரன் பின்செல்வ தென்னுக்குக் கூறுமினே |
69 |
238 |
கூறுமின் ஈசனைச் செய்ம்மின்குற் றேவல் குளிர்மின்கண்கள் தேறுமின் சித்தம் தெளிமின் சிவனைச் செறுமின்செற்றம் ஆறுமின் வேட்கை அறுமின் அவலம் இவைநெறியா ஏறுமின் வானத் திருமின் விருந்தாய் இமையவர்க்கே |
70 |
239 |
இமையோர் கொணர்ந்திங் கிழித்திட நீர்மைகெட் டேந்தல்பின்போய் அமையா நெறிச்சென்றோர் ஆழ்ந்த சலமகளாய் அணைந்தே எமையாளு டையான் தலைமக ளாஅங் கிருப்பஎன்னே உமையா ளவள்கீழ் உறைவிடம் பெற்றோ உறைகின்றதே |
71 |
240 |
உறைகின் றனர்ஐவர் ஒன்பது வாயில்ஓர் மூன்றுளதால் மறைகின்ற என்பு நரம்போ டிறைச்சி உதிரம்மச்சை பறைகின்ற தோல்போர் குரம்பை பயன்இல்லை போய்அடைமின் அறைகின்ற தெண்புனல் செஞ்சடைக் கொண்டோன் மலரடிக்கே |
72 |
241 |
அடிக்கண்ணி கைதொழு தார்க்ககன் ஞாலங் கொடுத்தடிநாய் வடிக்கண்ணி நின்னைத் தொழவளை கொண்டனை வண்டுண்கொன்றைத் கடிக்கண்ணி யாய்எமக் கோருர் இரண்டகங் காட்டினையால் கொடிக்கண்ணி மேல்நல்ல கொல்லே றுயர்த்த குணக்குன்றமே |
73 |
242 |
குன்றெடுத் தான்செவி கண்வாய் சிரங்கள் நெரிந்தலற அன்றடர்த் தற்றுகச் செற்றவன் நற்றவர்க் கற்றசிவன் மன்றிடைத் தோன்றிய நெல்லிக் கனிநிற்ப மானுடர்போய் ஒன்றெடுத் தோதிப் புகுவர் நரகத் துறுகுழியே |
74 |
243 |
குழிகட் கொடுநடைக் கூன்பற் கவட்டடி நெட்டிடைஊன் உழுவைத் தழைசெவித் தோல்முலைச் சூறை மயிர்ப்பகுவாய்த் தெழிகட் டிரைகுரல் தேம்பல் வயிற்றுத் திருக்குவிரற் கழுதுக் குறைவிடம் போல்கண்டன் ஆடும் கடியரங்கே |
75 |
244 |
அரங்கா மணிஅன்றில் தென்றல்ஓர் கூற்றம் மதியம் அந்தீச் சரங்காமன் எய்யஞ்சு சந்துட் பகையால் இவள்தளர்ந்தாள் இரங்கா மனத்தவர் இல்லை இரங்கான் இமையவர்தம் சிரங்கா முறுவான் எலும்புகொள் வான்என்றன் தேமொழிக்கே |
76 |
245 |
மொழியக்கண் டான்பழி மூளக்கண் டான்பிணி முன்கைச் சங்கம் அழியக்கண் டான்அன்றில் ஈரக்கண் டான்தென்றல் என்உயிர்மேல் சுழியக்கண் டான்துயர் கூரக்கண் டான்துகில் சூழ்கலையும் கழியக்கண் டான்தில்லைக் கண்ணுத லான்கண்ட கள்ளங்களே |
77 |
246 |
கள்ள வளாகங் கடிந்தடி மைப்படக் கற்றவர்தம் உள்ள வளாகத் துறுகின்ற உத்தமன் நீள்முடிமேல் வெள்ள வளாகத்து வெண்ணுரை சூடி வியன்பிறையைக் கொள்ள அளாய்கின்ற பாம்பொன் றுளது குறிக்கொண்மினே |
78 |
247 |
குறிக்கொண் டிவள்பெய்த கோல்வளை யேவந்து கோள்இழைத்தீர் வெறிக்கொண்ட வெள்ளிலம் போதோ எலும்போ விரிசடைமேல் உறைக்கொன்றை யோஉடைத் தோலோ பொடியோ உடைகலனோ கறைக்கண்ட ரேநுமக் கென்னோ சிறுமி கடவியதே |
79 |
248 |
கடவிய தொன்றில்லை ஆயினுங் கேண்மின்கள் காரிகையாள் மடவிய வாறுகண் டாம்பிறை வார்சடை எந்தைவந்தால் கிடவிய நெஞ்சம் இடங்கொடுத் தாட் கவலங் கொடுத்தான் தடவிய கொம்பதன் தாள்மேல் இருந்து தறிக்குறுமே |
80 |
249 |
தறித்தாய் அயன்தலை சாய்த்தாய் சலந்தர னைத்தழலாப் பொறித்தாய் அனங்கனைச் சுட்டாய் புரம்புன லும்சடைமேற் செறித்தாய்க் கிவைபுகழ் ஆகின்ற கண்டிவள் சில்வளையும் பறித்தாய்க் கிதுபழி ஆகுங்கொ லாம்என்று பாவிப்பனே |
81 |
250 |
பாவிக்கும் பண்டையள் அல்லள் பரிசறி யாள்சிறுமி ஆவிக்கும் குற்குலு நாறும் அகம்நெக அங்கம் எங்கும் காவிக்கண் சோரும்பொச் சாப்புங் கறைமிடற் றானைக்கண்ணில் தாவிக்கும் வெண்ணகை யாள்அம்மெல் லோதிக்குச் சந்தித்தவே |
82 |
251 |
சந்தித்த கூற்றுக்குக் கூற்றாம் பிணிக்குத் தனிமருந்தாம் சிந்திக்கிற் சிந்தா மணியாகித் தித்தித் தமுதமுமாம் வந்திக்கில் வந்தென்னை மால்செய்யும் வானோர் வணங்கநின்ற அந்திக்கண் ஆடியி னான்அடி யார்களுக் காவனவே |
83 |
252 |
ஆவன யாரே அழிக்கவல் லார்அமை யாவுலகில் போவன யாரே பொதியகிற் பார்புரம் மூன்றெரித்த தேவனைத் தில்லைச் சிவனைத் திருந்தடி கைதொழுது தீவினை யேன்இழந் தேன்கலை யோடு செறிவளையே |
84 |
253 |
செறிவளை யாய்நீ விரையல் குலநலம் கல்விமெய்யாம் இறையவன் தாமரைச் சேவடிப் போதென்றெல் லோரும்ஏத்தும் நிறையுடை நெஞ்சிது வேண்டிற்று வேண்டிய நீசர்தம்பால் கறைவளர் கண்டனைக்காணப் பெரிதும் கலங்கியதே |
85 |
254 |
கலங்கின மால்கடல் வீழ்ந்தன கார்வரை ஆழ்ந்ததுமண் மலங்கின நாகம் மருண்டன பல்கணம் வானங்கைபோய் இலங்கின மின்னொடு நீண்ட சடைஇமை யோர்வியந்தார் அலங்கல்நன் மாநடம் ஆர்க்கினி ஆடுவ தெம்மிறையே |
86 |
255 |
எம்மிறைவன் இமையோர் தலை வன்உமை யாள்கணவன் மும்முறை யாலும் வணங்கப் படுகின்ற முக்கண்நக்கற் கெம்முறை யாள்இவள் என்பிழைத் தாட்கிறை என்பிழைத்தான் இம்முறை யாலே கவரக் கருதிற் றெழிற்கலையே |
87 |
256 |
கலைதலை சூலம் மழுக்கனல் கண்டைகட் டங்கம்கொடி சிலைஇவை ஏந்திய எண்டோட் சிவற்கு மனஞ்சொற்செய்கை நிலைபிழை யாதுகுற் றேவல்செய்தார்நின்ற மேருஎன்னும் மலைபிழை யார்என்ப ரால் அறிந் தோர்கள்இம் மாநிலத்தே |
88 |
257 |
மாநிலத் தோர்கட்குத் தேவர் அனையஅத் தேவர்எல்லாம் ஆனலத் தாற்றொழும் அஞ்சடை ஈசன் அவன்பெருமை தேனலர்த் தாமரை யோன்திரு மாலவர் தேர்ந்துணரார் பாநலத் தாற்கவி யாமெங்ங னேஇனிப் பாடுவதே |
89 |
258 |
பாடிய வண்டுறை கொன்றையி னான்படப் பாம்புயிர்ப்ப ஓடிய தீயால் உருகிய திங்களின் ஊறல்ஒத்த தாடிய நீறது கங்கையுந் தெண்ணீர் யமுனையுமே கூடிய கோப்பொத்த தால்உமை பாகம்எம் கொற்றவற்கே |
90 |
259 |
கொற்றவ னேஎன்றும் கோவணத் தாய்என்றும் ஆவணத்தால் நற்றவ னேஎன்றும் நஞ்சுண்டி யேஎன்றும் அஞ்சமைக்கப் பெற்றவ னேஎன்றும் பிஞ்ஞக னேஎன்றும் மன்மதனைச் செற்றவ னேஎன்றும் நாளும் பரவும்என் சிந்தனையே |
91 |
260 |
சிந்தனை செய்ய மனம்அமைத் தேன்செப்ப நாஅமைத்தேன் வந்தனை செய்யத் தலைஅமைத் தேன்கை தொழஅமைத்தேன் பந்தனை செய்வதற் கன்பமைத் தேன்மெய் அரும்பவைத்தேன் வெந்தவெண் ணீறணி ஈசற் கிவையான் விதித்தனவே |
92 |
261 |
விதித்தன வாழ்நாள் பெரும்பிணி விச்சைகள் கொண்டுபண்டே கொதிப்பினில் ஒன்றுங் குறைவில்லை குங்குமக் குன்றனைய பதித்தனங் கண்டனம் குன்றம்வெண் சந்தனம் பட்டனைய மதித்தனங் கண்டனம் நெஞ்சினி என்செய்யும் வஞ்சனையே |
3 |
262 |
வஞ்சனை யாலே வரிவளை கொண்டுள்ள மால்பனிப்பத் துஞ்சும் பொழுதும் உறத்தொழுதேன் சொரி மால் அருவி அஞ்சன மால்வரை வெண்பிறை கவ்விஅண் ணாந்தனைய வெஞ்சின ஆனையின் ஈருரி மூடிய வீரனையே |
94 |
263 |
வீரன் அயன்அரி வெற்பலர் நீர்எரி பொன்எழிலார் காரொண் கடுக்கை கமலம் துழாய்விடை தொல்பறவை பேர்ஒண் பதிநிறம் தார்இவர் ஊர்திவெவ் வேறென் பரால் யாரும் அறியா வகைஎங்கள் ஈசர் பரிசுகளே |
95 |
264 |
பரியா தனவந்த பாவமும் பற்றும்மற் றும்பணிந்தார்க் குரியான் எனச்சொல்லி உன்னுட னாவன் எனஅடியார்க் கரியான் இவன்என்று காட்டுவன் என்றென் றிவைஇவையே பிரியா துறையும் சடையான் அடிக்கென்றும் பேசுதுமே |
96 |
265 |
பேசுவ தெல்லாம் அரன்திரு நாமம்அப் பேதை நல்லாள் காய்சின வேட்கை அரன்பாலது அறு காற்பறவை மூசின கொன்றை முடிமே லதுமுலை மேல்முயங்கப் பூசின சாந்தம் தொழுமால் இவைஒன்றும் பொய்யலவே |
97 |
266 |
பொய்யா நரகம் புகினுந் துறக்கம் புகினும்புக்கிங் குய்யா உடம்பினோ டூர்வ நடப்ப பறப்பஎன்று நையா விளியினும் நானிலம் ஆளினும் நான்மறைசேர் மையார் மிடற்றான் அடிமற வாவரம் வேண்டுவனே |
98 |
267 |
வேண்டிய நாள்களிற் பாதியும் கங்குல் மிகஅவற்றுள் ஈண்டிய வெந்நோய் முதலது பிள்ளைமை மேலதுமூப் பாண்டின அச்சம் வெகுளி அவாஅழுக் காறிங்ஙனே மாண்டன சேர்தும் வளர்புன் சடைமுக்கண் மாயனையே |
99 |
268 |
மாயன்நன் மாமணி கண்டன் வளர்சடை யாற்கடிமை ஆயின தொண்டர் துறக்கம் பெறுவது சொல்லுடைத்தே காய்சின ஆனை வளரும் கனக மலையருகே போயின காக்கையும் அன்றே படைத்தது பொன்வண்ணமே |
100 |
269 |
ஆக்கியோன் பெயர் அன்றுவெள் ளானையின் மீதிமை யோர்சுற் றணுகுறச்செல் வன்றொண்டர் பின்பரி மேற்கொண்டு வெள்ளி மலையரன்முன் சென்றெழில் ஆதி உலாஅரங் கேற்றிய சேரர்பிரான் மன்றிடை ஓதுபொன் வண்ணத்தந்தாதி வழங்கிதுவே |
101 |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
4.1. பொன்வண்ணத்தந்தாதி - பதினோராம் திருமுறை - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - னேஎன்றும், எவ்வண்ணம், கொன்றை, செஞ்சடை, சடைசடை, அவ்வண்ணம், வேட்கை, துறக்கம், சங்கரன், எந்தைவந்தால், நான்மறை, போன்றது, காரணன், நெஞ்சம், வாழ்க்கை, புண்ணியன், ஆயினும், இராப்பகல், கேண்மின்கள்