முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » பதினோராம் திருமுறை » 12.6. ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை
பதினோராம் திருமுறை - 12.6. ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை

12.6. ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை
1328 |
திங்கட் கொழுந்தொடு பொங்கரவு திளைக்கும் கங்கைப் பேரியாற்றுக் கடுவரற் கலுழியின் இதழியின் செம்பொன் இருகரை சிதறிப் புதலெருக்கு மலர்த்தும் புரிபுன் சடையோன் திருவருள் பெற்ற இருபிறப் பாளன் --- (5) முத்தீ வேள்வி நான்மறை வளர ஐவேள் வுயர்த்த அறுதொழி லாளன் ஏழிசை யாழை எண்டிசை அறியத் துண்டப் படுத்த தண்டமிழ் விரகன் காழி நாடன் கவுணியர் தலைவன் --- (10) மாழை நோக்கி மலைமகள் புதல்வன் திருந்திய பாடல் விரும்பினர்க் கல்லது கடுந்துயர் உட்புகக் கைவிளிக் கும்இந் நெடும்பிற விக்கடல் நீந்துவ தரிதே. | 1 |
1329 | அரியோடு நான்முகத்தோன் ஆதிசுரர்க் கெல்லாம் தெரியாமை செந்தழலாய் நின்ற - ஒருவன்சீர் தன்தலையின் மேல்தரித்த சம்பந்தன் தாளிணைகள் என்தலையின் மேலிருக்க என்று. | 2 |
1330 | என்றும் அடியவர் உள்ளத் திருப்பன இவ்வுலகோர் நன்று மலர்கொடு தூவித் துதிப்பன நல்லசங்கத் தொன்றும் புலவர்கள் யாப்புக் குரியன ஒண்கலியைப் பொன்றும் கவுணியன் சைவ சிகாமணி பொன்னடியே. | 3 |
1331 | அடுசினக் கடகரி அதுபட உரித்த படர்சடைக் கடவுள்தன் திருவருள் அதனால் பிறந்தது கழுமலம் என்னும் கடிநக ரதுவே வளர்ந்தது தேங்கமழ் வாவிச் சிலம்பரை யன்பெறு பூங்குழல் மாதிடு போனகம் உண்டே பெற்றது --- (5) குழகனைப் பாடிக் கோலக் காப்புக் கழகுடைச் செம்பொற் றாளம் அவையே தீர்த்தது தாதமர் மருகற் சடையனைப் பாடிப் பேதுறு பெண்ணின் கணவனை விடமே அடைத்தது அரைசோ டிசையா அணிமறைக் காட்டுக் --- (10) குரைசேர் குடுமிக் கொழுமணிக் கதவே ஏறிற்று அத்தியும் மாவும் தவிர அரத்துறை முத்தின் சிவிகை முன்னாள் பெற்றே பாடிற்று அருமறை ஓத்தூர் ஆண்பனை அதனைப் பெருநிறம் எய்தும் பெண்பனை யாவே கொண்டது --- (15) பூவிடு மதுவில் பொறிவண் டுழலும் ஆவடு துறையில் பொன்னா யிரமே கண்டது உறியொடு பீலி ஒருகையிற் கொள்ளும் பறிதலைச் சமணைப் பல்கழு மிசையே நீத்தது அவிழ்ச்சுவை யேஅறிந் தரனடி பரவும் --- (20) தமிழ்ச்சுவை அறியாத் தம்பங் களையே நினைந்தது அள்ளற் பழனக் கொள்ளம் பூதூர் இக்கரை ஓடம் அக்கரைச் செலவே மிக்கவர் ஊனசம் பந்தம் அறுத்துயக் கொளவல ஞானசம் பந்தன்இஞ் ஞாலத் திடையே. --- (25) | 4 |
1332 | நிலத்துக்கு மேல்ஆறு நீடுலகத் துச்சித் தலத்துக்கு மேலேதான் என்பர் - சொலத்தக்க சுத்தர்கள்சேர் காழிச் சுரன்ஞான சம்பந்தன் பத்தர்கள்போய் வாழும் பதி. | 5 |
1333 | பதிகம் பலபாடி நீடிய பிள்ளை பரசுதரற் கதிகம் அணுக்கன் அமணர்க்குக் காலன் அவதரித்த மதியம் தவழ்மாட மாளிகைக் காழிஎன் றால்வணங்கார் ஒதியம் பணைபோல் விழுவர்அந் தோசில ஊமர்களே. | 6 |
1334 | கவள மாளிகைத் திவளும் யானையின் கவுள்தலைக் கும்பத்து உம்பர்ப் பதணத் தம்புதம் திளைக்கும் பெருவளம் தழீஇத் திருவளர் புகலி விளங்கப் பிறந்த வளங்கொள்சம் பந்தன் ---- (5) கருதியஞ் செவ்விச் சுருதியஞ் சிலம்பில் தேமரு தினைவளர் காமரு புனத்து மும்மதஞ் சொரியும் வெம்முகக் கைம்மா மூரி மருப்பின் சீரிய முத்துக் கொடுஞ்சிலை வளைத்தே கொடுஞ்சரந் துரந்து --- (10) முற்பட வந்து முயன்றங் குதவிசெய் வெற்பனுக் கலது சுணங்கணி மென்முலைச் சுரிகுழல் மாதினை மணஞ்செய மதிப்பது நமக்குவன் பழியே. | 7 |
1335 | பழிஒன்றும் ஓராதே பாய்இடுக்கி வாளா கழியுஞ் சமண்கையர் தம்மை - அழியத் துரந்தரங்கச் செற்றான் சுரும்பரற்றும் பாதம் நிரந்தரம்போய் நெஞ்சே நினை. | 8 |
1336 | நினைஆ தரவெய்தி மேகலை நெக்கு வளைசரிவாள் தனைஆவ என்றின் றருளுதி யேதடஞ் சாலிவயற் கனையா வருமேதி கன்றுக் கிரங்கித்தன் கால்வழிபால் நனையா வருங்காழி மேவிய சீர்ஞான சம்பந்தனே. | 9 |
1337 | தனமலி கமலத் திருவெனும் செல்வி விருப்பொடு திளைக்கும் வீயா இன்பத்து ஆடக மாடம் நீடுதென் புகலிக் காமரு கவினார் கவுணியர் தலைவ பொற்பமர் தோள நற்றமிழ் விரக --- (5) மலைமகள் புதல்வ கலைபயில் நாவ நினாது பொங்கொளி மார்பில் தங்கிய திருநீறு ஆதரித் திறைஞ்சிய பேதையர் கையில் வெள்வளை வாங்கிச் செம்பொன் கொடுத்தலின் பிள்ளை யாவது தெரிந்தது பிறர்க்கே. --- (10) | 10 |
1338 | பிறவியெனும் பொல்லாப் பெருங்கடலை நீந்தத் துறவியெனும் தோற்றோணி கண்டீர் -நிறைஉலகிற் பொன்மாலை மார்பன் புனற்காழிச் சம்பந்தன் தன்மாலை ஞானத் தமிழ். | 11 |
1339 | ஞானந் திரளையி லேஉண் டனையென்று நாடறியச் சோனந் தருகுழ லார்சொல் லிடாமுன் சுரும்புகட்குப் பானந் தருபங்க யத்தார் கொடுபடைச் சால்வழியே கூனந் துருள்வயல் சூழ்காழி மேவிய கொற்றவனே. | 12 |
1340 | அவனிதலம் நெரிய எதிர்எதிர் மலைஇச் சொரிமதக் களிற்று மத்தகம் போழ்ந்து செஞ்சே றாடிச் செல்வன அரியே எஞ்சாப் படவர வுச்சிப் பருமணி பிதுங்கப் பிடரிடைப் பாய்வன பேழ்வாய்ப் புலியே இடையிடைச் --- (5) செறியிருள் உருவச் சேண்விசும் பதனிற் பொறியென விழுவன பொங்கொளி மின்னே உறுசின வரையால் உந்திய கலுழிக் கரையால் உழல்வன கரடியின் கணனே நிரையார் பொருகடல் உதைந்த சுரிமுகச் சங்கு ---- (10) செங்கயல் கிழித்த பங்கய மலரின் செம்மடல் நிறைய வெண்முத் துதிர்க்கும் பழனக் கழனிக் கழுமல நாடன் வைகையில் அமணரை வாதுசெய் தறுத்த சைவ சிகாமணி சம்பந்தன் வெற்பிற் --- (15) சிறுகிடை யவள்தன் பெருமுலை புணர்வான் நெறியினில் வரலொழி நீமலை யோனே. | 13 |
1341 | மலைத்தலங்கள் மீதேறி மாதவங்கள் செய்து முலைத்டங்கள் நீத்தாலும் மூப்பர் - கலைத்தலைவன் சம்பந்தற் காளாய்த் தடங்காழி கைகூப்பித் தம்பந்தம் தீராதார் தாம். | 14 |
1342 | தாமரை மாதவி சேறிய நான்முகன் தன்பதிபோல் காமரு சீர்வளர் காழிநன் னாடன் கவித்திறத்து நாமரு மாதவர் போல்அழ கீந்துநல் வில்லிபின்னே நீர்மரு வாத சுரத்தெங்ஙன் ஏகும்என் நேரிழையே. | 15 |
1343 | இழைகெழு மென்முலை இதழிமென் மலர்கொயத் தழைவர ஒசித்த தடம்பொழில் இதுவே காமர் சுனைகுடைந் தேறித் துகிலது புனையநின்று எனையுங் கண்டு வெள்கிடம் இதுவே தினைதொறும் பாய்கிளி இரியப் பைவந் தேறி --- (5) ஆயவென் றிருக்கும் அணிப்பரண் இதுவே ஈதே இன்புறு சிறுசொல் அவைபல இயற்றி அன்புசெய் தென்னை ஆட்கொளும் இடமே பொன்புரை தடமலர்க் கமலக் குடுமியி லிருந்து நற்றொழில் புரியும் நான்முகன் நாட்டைப் --- (10) புற்கடை கழீஇப் பொங்கு சராவத்து நெய்த்துடுப் பெடுத்த முத்தீப் புகையால் நாள்தொறும் மறைக்குஞ் சேடுறு காழி எண்டிசை நிறைந்த தண்டமிழ் விரகன் நலங்கலந் தோங்கும் விலங்கலின் மாட்டுப் --- (15) பூம்புனம் அதனிற் காம்பன தோளி பஞ்சில் திருந்தபடி நோவப் போய்எனை வஞ்சித் திருந்த மணியறை இதுவே. | 16 |
1344 | வேழங்கள் எய்பவர்க்கு வில்லாவ திக்காலம் ஆழங் கடல்முத்தம் வந்தலைக்கும் - நீள்வயல்சூழ் வாய்ந்ததிவண் மாட மதிற்காழிக் கோன்சிலம்பிற் சாய்ந்தது வண்தழையோ தான். | 17 |
1345 | தழைக்கின்ற சீர்மிகு ஞானசம் பந்தன் தடமலைவாய் அழைக்கின்ற மஞ்ஞைக் கலர்ந்தன கோடல்அம் பெய்திடுவான் இழைக்கின்ற தந்தரத் திந்திர சாபம்நின் எண்ணமொன்றும் பிழைக்கின்ற தில்லைநற் றேர்வந்து தோன்றிற்றுப் பெய்வளையே. | 18 |
1346 | வளைகால் மந்தி மாமரப் பொந்தில் விளைதேன் உண்டு வேணுவின் துணியாற் பாறை யில்துயில் பனைக்கை வேழத்தை உந்தி எழுப்பும் அந்தண் சிலம்ப அ.திங்கு என்னையர் இங்கு வருவர் பலரே --- (5) அன்னை காணில் அலர்தூற் றும்மே பொன்னார் சிறுபரற் கரந்த விளிகுரற் கிங்கிணி சேவடி புல்லிச் சில்குரல் இயற்றி அமுதுண் செவ்வாய் அருவி தூங்கத் தாளம் பிரியாத் தடக்கை அசைத்துச் ---- (10) சிறுகூத் தியற்றிச் சிவன்அருள் பெற்ற நற்றமிழ் விரகன் பற்றலர் போல இடுங்கிய மனத்தொடும் ஒடுங்கிய சென்று பருதியுங் குடகடல் பாய்ந்தனன் கருதிநிற் பதுபிழை கங்குலிப் புனத்தே. -- (15) | 19 |
1347 | தேம்புனமே உன்னைத் திரிந்து தொழுகின்றேன் வாம்புகழ்சேர் சம்பந்தன் மாற்றலர்போல் - தேம்பி அழுதகன்றாள் என்னா தணிமலையர் வந்தால் தொழதகன்றாள் என்றுநீ சொல்லு. | 20 |
1348 | சொற்செறி நீள்கவி செய்தன்று வைகையில் தொல்அமணர் பற்செறி யாவண்ணம் காத்தசம் பந்தன் பயில்சிலம்பில் கற்செறி வார்சுனை நீர்குடைந் தாடும் கனங்குழையை இற்செறி யாவண்ணம் காத்திலை வாழி இரும்புனமே. | 21 |
1349 | புனலற வறந்த புன்முளி சுரத்துச் சினமலி வேடர் செஞ்சரம் உரீஇப் படுகலைக் குளம்பின் முடுகு நாற்றத் தாடும் அரவின் அகடு தீயப் பாடு தகையின் பஞ்சுரங் கேட்டுக் --- (5) கள்ளியங் கவட்டிடைப் பள்ளி கொள்ளும் பொறிவரிப் புறவே உறவலை காண்நீ நறைகமழ் தேம்புனல் வாவித் திருக்கழு மலத்துப் பையர வசைத்த தெய்வ நாயகன் தன்அருள் பெற்ற பொன்னணிக் குன்றம் ---- (10) மானசம் பந்தம் மண்மிசைத் துறந்த ஞானசம் பந்தனை நயவார் கிளைபோல் வினையேன் இருக்கும் மனைபிரி யாத வஞ்சி மருங்குல் அஞ்சொற் கிள்ளை ஏதிலன் பின்செல விலக்கா தொழிந்தனை -- (15) ஆதலின் புறவே உறவலை நீயே. | 22 |
1350 | அலைகடலின் மீதோடி அந்நுளையர் வீசும் வலைகடலில் வந்தேறு சங்கம் - அலர்கடலை வெண்முத் தவிழ்வயல்சூழ் வீங்குபுனற் காழியே ஒண்முத் தமிழ்பயந்தான் ஊர். | 23 |
1351 | ஊரும் பசும்புர வித்தேர் ஒளித்த தொளிவிசும்பில் கூரும் இருளொடு கோழிகண் துஞ்சா கொடுவினையேற் காரும் உணர்ந்திலர் ஞானசம் பந்தன்அந் தாமரையின் தாரும் தருகிலன் எங்ஙனம் யான்சங்கு தாங்குவதே. | 24 |
1352 | தேமலி கமலப் பூமலி படப்பைத் தலைமுக டேறி இளவெயிற் காயும் கவடிச் சிறுகாற் கர்க்கட கத்தைச் சுவடிச் சியங்கும் சூல்நரி முதுகைத் துன்னி எழுந்து செந்நெல் மோதும் --- (5) காழி நாட்டுக் கவுணியர் குலத்தை வாழத் தோன்றிய வண்டமிழ் விரகன் தெண்டிரைக் கடல்வாய்க் காண்டகு செவ்விக் களிறுகள் உகுத்த முட்டைமுன் கவரும் பெட்டையங் குருகே ---- (10) வாடை அடிப்ப வைகறைப் போதிற் தனிநீ போந்து பனிநீர் ஒழுகக் கூசிக் குளிர்ந்து பேசா திருந்து மேனி வெளுத்த காரணம் உரையாய் இங்குத் தணந்தெய்தி நுமரும் --- (15) இன்னம்வந் திலரோ சொல்லிளங் குருகே. | 25 |
1353 | குருகும் பணிலமும் கூன்நந்தும் சேலும் பெருகும் வயற்காழிப் பிள்ளை - அருகந்தர் முன்கலங்க நட்ட முடைகெழுமு மால்இன்னம் புன்கலங்கல் வைகைப் புனல். | 26 |
1354 | புனமா மயில்சாயல் கண்டுமுன் போகா கிளிபிரியா இனமான் விழிஒக்கும் என்றுவிட் டேகா இருநிலத்துக் கனமா மதிற்காழி ஞானசம் பந்தன் கடமலைவாய்த் தினைமா திவள்காக்க எங்கே விளையும் செழுங்கதிரே. | 27 |
1355 | கதிர்மதி நுழையும் படர்சடை மகுடத் தொருத்தியைக் கரந்த விருத்தனைப் பாடி முத்தின் சிவிகை முன்னாட் பெற்ற அத்தன் காழி நாட்டுறை அணங்கோ மொய்த்தெழு தாமரை அல்லித் தவிசிடை வளர்ந்த --- (5) காமரு செல்வக் கனங்குழை அவளோ மீமருத் தருவளர் விசும்பில் தவநெறி கலக்கும் உருவளர் கொங்கை உருப்பசி தானோ வாருணக் கொம்போ மதனன் கொடியோ ஆரணி யத்துள் அருந்தெய்வ மதுவோ ---- (10) வண்டமர் குழலும் கெண்டையங் கண்ணும் வஞ்சி மருங்கும் கிஞ்சுக வாயும் ஏந்திள முலையும் காந்தளங் கையும் ஓவியர் தங்கள் ஒண்மதி காட்டும் வட்டிகைப் பலகை வான்துகி லிகையால் --- (15) இயக்குதற் கரியதோர் உருவுகண் டென்னை மயக்கவந் துதித்ததோர் வடிவிது தானே. | 28 |
1356 | வடிக்கண்ணி யாளைஇவ் வான்சுரத்தி னூடே கடிக்கண்ணி யானோடும் கண்டோம் - வடிக்கண்ணி மாம்பொழில்சேர் வைகை அமண்மலைந்தான் வண்காழிப் பூம்பொழிலே சேர்ந்திருப்பார் புக்கு. | 29 |
1357 | குருந்தும் தரளமும் போல்வண்ண வெண்ணகைக் கொய்மலராள் பொருந்தும் திரள்புயத் தண்ணல்சம் பந்தன்பொற் றாமரைக்கா வருந்தும் திரள்கொங்கை மங்கையை வாட்டினை வானகத்தே திருந்தும் திரள்முகில் முந்திவந் தேறுதிங் கட்கொழுந்தே. | 30 |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
12.6. ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை - பதினோராம் திருமுறை - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - ஞானசம், சம்பந்தன், பந்தன், விரகன், திளைக்கும், பிள்ளை, கவுணியர்