முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » எட்டாம் திருமுறை - திருவாசகம், திருக்கோவையார் » பதின்மூன்றாம் அதிகாரம்
எட்டாம் திருமுறை - திருக்கோவையார் - பதின்மூன்றாம் அதிகாரம்

பதின்மூன்றாம் அதிகாரம்
13. பகற்குறி
பேரின்பக் கிளவி்
பகற்குறித் துறைமுப் பதினோ(டு) இரண்டு இயற்கைபோல் சிவத்தோ(டு) இயலுறுக் கூட்டிப் பிரித்த அருளின் பெரும்பகற் குறியே. |
1. குறியிடங் கூறல்
வானுழை வாள்அம்ப லத்தரன் குன்றென்று வட்கிவெய்யோன் தானுழை யாஇரு ளாய்ப்புற நாப்பண்வண் தாரகை போல் தேனுழை நாக மலர்ந்து திகழ்பளிங் கான்மதியோன் கானுழை வாழ்வுபெற் றாங்கெழில் காட்டுமொர் கார்ப்பொழிலே. |
116 |
கொளு வாடிடத்(து) அண்ணல் வண்தழை எதிர்ந்தவள் ஆடிடத்(து) இன்னியல்(பு) அறிய உரைத்தது. |
2. ஆடிடம் படர்தல்
புயல்வளர் ஊசல்முன் ஆடிப்பொன் னேபின்னைப் போய்ப்பொலியும் அயல்வளர் குன்றில்நின் றேற்றும் அருவி திருவுருவில் கயல்வளர் வாட்கண்ணி போதரு காதரம் தீர்த்தருளும் தயல்வளர் மேனியன் அம்பலத் தான்வரைத் தண்புனத்தே. |
117 |
கொளு வண்தழை எதிர்த்த ஒண்டொடிப் பாங்கி நீடமைத் தோளிய(டு) ஆடிடம் படர்ந்தது. |
3. குறியிடத்துக் கொண்டு சேறல்
தினைவளங் காத்துச் சிலம்பெதிர் கூஉய்ச்சிற்றில் முற்றிழைத்துச் கனைவளம் பாய்ந்து துணைமலர் கொய்து தொழுதெழுவர் வினைவளம் நீறெழ நீறணி அம்பல வன்தன்வெற்பில் புனைவளர் கொம்பர்அன் னாய்அன்ன காண்டும் புனமயிலே. |
118 |
கொளு அணிவளர் ஆடிடத்(து) ஆய வெள்ளம் மணிவளர் கொங்கையை மருங்குஅ கன்றது. |
4. இடத்துய்த்து நீங்கல்
நரல்வேய் இனநின தோட்(டு)உடைந்(து) உக்கநன் முத்தம்சிந்திப் பரல்வேய் அறையுறைக் கும்பஞ் சடிப்பரன் தில்லையன்னாய் வரல்வேய் தருவன்இங் கேநில்உங் கேசென்றுன் வார்குழற்(கு)ஈர்ங் குரல்வேய் அளிமுரல் கொங்கார் தடமலர் கொண்டுவந்தே. |
119 |
கொளு மடத்தகை மாதரை இடத்தகத்து உய்த்து நீங்கல் உற்ற பாங்கி பகர்ந்தது. |
5. உவந்துரைத்தல்
படமா கணப்பள்ளி இக்குவ டாக்கியப் பங்கயக்கண் நெடுமால் எனஎன்னை நீநினைந் தோநெஞ்சத் தாமரையே இடமா இருக்கலுற் றோதில்லை நின்றவன் ஈர்ங்கயிலை வடமார் முலைமட வாய்வந்து வைஇற்றுஇவ் வார்பொழிற்கே. |
120 |
கொளு களிமயிற் சாயலை ஒருசிறைக் கண்ட ஒளிமலர்த் தாரோன் உவந்துரைத்தல். 5 |
16. மருங்கணைதல்
தொத்தீன் மலர்ப்பொழில் தில்லைத்தொல் லோன்அருள் என்னமுன்னி முத்தீன் குவளைமென் காந்தளின் மூடித்தன் ஏர்அளப்பான் ஒத்(து)ஈர்ங் கொடியின் ஒதுங்குகின் றாள்மருங் குல்நெருங்கப் பித்தீர் பணைமுலை காள்என்னுக்கு இன்னும் பெருக்கின்றதே. |
121 |
கொளு வாணுதல் அரிவை நாணுதல் கண்ட கோதை வேலவன் ஆதர வுரைத்தது. |
7. பாங்கியறிவுரைத்தல்
அளிநீ(டு) அளகத்தின் அட்டிய தாதும் அணியணியும் ஒளிநீள் கரிகுழல் சூழ்ந்தஒண் மாலையும் தண்நறவுண் களிநீ யெனச்செய் தவன்கடல் தில்லையன் னாய்கலங்கல் தெளிநீ அனையபொன் னேபண்ணு கோலம் திருநுதலே. |
122 |
கொளு நெறி குழற் பாங்கி அறிவறி வித்தது. |
8. உண்மகிழ்ந்துரைத்தல்
செழுநீர் மதிக்கண்ணிச் சிற்றம் பலவன் திருக்கழலே கெழுநீர் மையில்சென்று கிண்கிணி வாய்க் கொள்ளும் கள்ளகத்த கழுநீர் மலரிவள் யானதன் கண்மரு விப்பிரியாக் கொழுநீர் நறப்பரு கும்பெரு நீர்மை அளிகுவமே. |
123 |
கொளு தண்மலர்க் கோதையை உண்மகிழ்ந்(து) உரைத்தது. |
9. ஆயத்து உய்த்தல்
கொழுந்தா ரகைமுகை கொண்டலம் பாசடை விண்மடுவில் எழுந்தார் மதிக்கம லம்எழில் தந்தென இப்பிறப்பில் அழுந்தா வகையெனை ஆண்டவன் சிற்றம் பலம்அனையாய் செழுந்தா(து) அவிழ்பொழில் ஆயத்துச் சேர்க் திருத்தகவே. |
124 |
கொளு கனைகடல் அன்ன கார்மயில் கணத்துப் புனைமட மானைப் புகவிட்டது. |
10. தோழி வந்து கூடல்
பொன்அனை யான்தில்லைப் பொங்கர வம்புன் சடைமிடைந்த மின்னனை யான்அருள் மேலவர் போன்மெல் விரல் வருந்த மென்னனை யாய்மறி யேபறி யேல்வெறி யார்மலர்கள் இன்னன யான்கொணர்ந் தேன்மணந் தாழ்குழற்(கு) ஏய்வனவே. |
125 |
கொளு நெறியுறு குழலியை நின்றிடத்(து) உய்த்துப் பிறைநுதற் பாங்கி பெயர்ந்தவட்(கு) உரைத்தது. |
11. ஆடிடம் புகுதல்
அறுகால் நிறைமலர் ஐம்பால் நிறையணிந் தேன் அணியார் துறுகான் மலர்த்தொத்துத் தோகைதொல் லாயம்மெல் லப்புகுக சிறுகால் மருங்குல் வருந்தா வகைமிக என்சிரத்தின் உறுகால் பிறர்க்(கு)அரி யோன்புலி யூரன்ன ஒண்ணுதலே. |
126 |
கொளு தனிவிளை யாடிய தாழ்குழல் தோழி பனிமதி நுதலிய(டு) ஆடிடம் படர்ந்தது. |
12. தனிகண்டு உரைத்தல்
தழங்கும் அருவிஎம் சீறூர் பெரும இதுமதுவும் கிழங்கும் அருந்தி இருந்(து) எம்மோ(டு) இன்று கிளர்ந்துகுன்றர் முழங்கும் குரவை இரவிற்கண்(டு) ஏகுக முத்தன்முத்தி வழங்கும் பிரான்எரி யாடிதென் தில்லை மணிநகர்க்கே. |
127 |
கொளு வேயத்த தோளியை ஆயத்து உயத்துக் குனிசிலை அண்ணலைத் தனிகண்(டு) உரைத்தது. |
13. பருவங் கூறி வரவு விலக்கல்
தள்ளி மணிசிந்தம் உந்தித் தறுகண் கரிமருப்புத் தெள்ளி நறவம் திசைதிசை பாயும் மலைச்சிலம்பா வெள்ளி மலையன்ன மால்விடை யோன்புலி யூர்விளங்கும் வள்ளி மருங்குல் வருத்துவ போன்ற வனமுலையே. |
128 |
கொளு மாந்தளிர் மேனியை வரைந்(து) எய்தா(து) ஏந்தல் இவ்வா(று) இயங்கல் என்றது. |
14. வரைவு உடம்படாது மிகுத்துக் கூறல்
மாடஞ்செய் பொன்னக ரும்நிக ரில்லைஇம் மாதர்க்கென்னப் பீடஞ்செய் தாமரை யோன்பெற்ற பிள்ளையை உள்ளவரைக் கீடஞ்செய் தென்பிறப் புக்கெடத் தில்லைநின் றோன்கயிலைக் கூடஞ்செய் சாரல் கொடிச்சியென் றோநின்று கூறுவதே. |
129 |
கொளு வரைவு கடாய வாணுதல் தோழிக்கு விரைமலர்த் தாரோன் மிகுத்துரைத்தது. |
15. உண்மை கூறி வரைவு கடாதல்
வேய்தந்த வெண்முத்தம் சிந்துபைங் கார்வரை மீன்பரப்பிச் சேய்தந்த வானக மானும் சிலம்பதன் சேவடிக்கே ஆய்தந்த அன்புதந் தாட்கொண்ட அம்பல வன்மலையில் தாய்தந்தை கானவர் ஏனல்எங் காவல்இத் தாழ்வரையே. |
130 |
கொளு கல்வரை நாடன் இல்ல(து) உரைப்ப ஆங்கவள் உண்மை பாங்கி பகர்ந்தது. |
16. வருத்தங் கூறி வரைவு கடாதல்
மன்னும் திருவருந் தும்வரை யாவிடின் நீர்வரைவென்(று) உன்னும் அதற்குத் தளர்ந்தொளி வாடுதிர் உம்பரெலாம் பன்னும் புகழ்ப்பர மன்பரஞ் சோதிசிற் றம்பலத்தான் பொன்னங் கழல்வழுத் தார்புலன் என்னப் புலம்புவனே. |
131 |
கொளு கினங்குழை முகத்தவள் மனங்குழை வுணர்த்தி நிரைவளைத் தோளி வரைவு கடாயது. |
17. தாய் அச்சங்கூறி வரைவு கடாதல்
பனித்துண்டம் சூடும் படர்சடை அம்பல வன்உலகம் தனித்துண் டவன்தொழும் தாளோன் கயிலைப் பயில்சிலம்பா கனித்தொண்டை வாய்ச்சி கதிர்முலைப் பாரிப்புக் கண்டழிவுற்(று) இனிக்கண் டிலம்பற்றுச் சிற்றிடைக்(கு) என்றஞ்சும் எம்அனையே. |
132 |
கொளு மடத்தகை மாதர்க்கு அடுப்பன அறியா வேற்கண் பாங்கி ஏற்க உரைத்தது. |
18. இற்செறி அறிவித்து வரைவு கடாதல்
ஈவிளை யாட நறவிளை(வு) ஓர்ந்தெமர் மால்பியற்றும் வேய்விளை யாடும்வெற் பாவுற்று நோக்கிஎம் மெல்லியலைப் போய்விளை யாடல்என் றாள்அன்னை அம்பலத் தான்புரத்தில் தீவிளை யாட நின் றேவிளை யாடி திருமலைக்கே. |
133 |
கொளு விற்செறி நுதலியை இற்செறி உரைத்தது. |
19. தமர் நினைவு உரைத்து வரைவு கடாதல்
சுற்றும் சடைக்கற்றைச் சிற்றம் பலவன் தொழாதுதொல்சீர் கற்றும் அறியல ரின்சிலம் பாஇடை நைவதுகண்(டு) எற்றும் திரையின் அமிர்தை இனித்தமர் இற்செறிப்பார் மற்றும் சிலபல சீறூர் பகர்பெரு வார்த்தைகளே. |
134 |
கொளு விற்செறி நுதலியை இற்செறி விப்பரென்(று) ஒளிவே லவற்கு வெளியே உரைத்தது. |
20. எதிர்கோள் கூறி வரைவு கடாதல்
வழியும் அதுஅன்னை என்னின் மகிழ்வும்வந்(து) எந்தையும்நின் மொழியின் வழிநிற்கும் சுற்றம்முன்னேவயம் அம்பலத்துக் குழிஉம்பர் ஏத்தும்எம் கூத்தன்குற் றாலமுற் றும்அறியக் கெழி உம்ம வேபணைத் தோள்பல என்னோ கிளக்கின்றதே. |
135 |
கொளு ஏந்திழைத் தோழி ஏந்தலை முன்னிக் கடியா மாறு நொடிதுஏ(கு) என்றது. |
21. ஏறுகோள் கூறி வரைவு கடாதல்
படையார் கருங்கண்ணி வண்ணப் பயோதரப் பாரமும் நுண் இடையார் மெலிவுகண்(டு) அண்டர்கள் ஈர்முல்லை வேலிஎம்முர் விடையார் மருப்புத் திருத்திவிட் டார்வியன் தென்புலியூர் உடையார் கடவி வருவது போலும் உருவினதே. |
136 |
கொளு என்னையர் துணிவு இன்ன(து) என்றது. |
22. அயல் உரை உரைத்து வரைவு கடாதல்
உருப்பனை அன்னகைக் குன்றொன்(று) உரித்(து)உர ஊர்எரித்த நெருப்பனை அம்பலத்(து) ஆதியை உம்பர்சென்(று) ஏத்திநிற்கும் திருப்பனை யூர்அனை யாளைப்பொன் னாளைப் புனைதல் செப்பிப் பொருப்பனை முன்னின்(று) என் னோவினை யேன்யான் புகல்வதுவே. |
137 |
கொளு கயல்புரை கண்ணியை அயலுரை உரைத்தது. |
23. தினை முதிர்வு வரைவு கடாதல்
மாதிடம் கொண்(டு)அம் பலத்துநின் றோன்வட வான்கயிலைப் போதிடம் கொண்டபொன் வேங்கை தினைப்புனம் கொய்கஎன்று தாதிடம் கொண்டுபொன் வீசித்தன் கள்வாய் சொரியநின்று சோதிடம் கொண்(டு)இதுஎம் மைக்கெடு வித்தது தூமொழியே. |
138 |
கொளு ஏனல் விளையாட்(டு) இனிஇல் லையென மானல் தோழி மடந்தைக்(கு) உரைத்தது. |
24. பகல் வரல் விலக்கி வரைவு கடாதல்
வடிவார் வயல்தில்லை யோன்மல யத்துநின் றும்வருதேன் கடிவார் களிவண்டு நின்றலர் தூற்றப் பெருங்கணியார் நொடிவார் நமக்கினி நோதக யான்உமக்(கு) என்னுரைக்கேன் தடிவார் தினைஎமர் காவேம் பெருமஇத் தண்புனமே. |
139 |
கொளு அகல்வரை நாடனைப் பகல்வரல் என்றது. |
25. தினையடு வெறுத்து வரைவு கடாதல்
நினைவித்துத் தன்னைஎன் நெஞ்சத்து இருந்(து)அம் பலத்துநின்று புனைவித்த ஈசன் பொதியின் மலைப்பொருப் பன்விருப்பில் தினைவித்திக் காத்துச் சிறந்துநின் றேமுக்குச் சென்றுசென்று வினைவித்திக் காத்து விளைவுண்ட தாகி விளைந்ததுவே. |
140 |
கொளு தண்புனத் தோடு தளர்வுற்றுப் பண்புனை மொழிப் பாங்கி பகர்ந்தது. |
26. வேங்கையடு வெறுத்து வரைவு கடாதல்
கனைகடற் செய்தநஞ் சுண்டுகண் டார்க்(கு)அம் பலத்(துஐ அமிழ்தாய் வினைகெடச் செய்தவன் விண்தோய் கயிலை மயிலனையாய் நனைகெடச் செய்தனம் ஆயின் நமைக்கெடச் செய்திடுவான் தினைகெடச் செய்திடு மாறும்உண் டோஇத் திருக்கணியே. |
141 |
கொளு நீங்குக இனிநெடுந் தகையென வேங்கை மேல்வைத்து விளம்பியது |
27. இரக்கமுற்று வரைவு கடாதல்
வழுவா இயல்எம் மலையர் விதைப்பமற்(று) யாம் வளர்த்த கொழுவார் தினையின் குழாங்கள்எல் லாம்எம் குழாம்வணங்கும் செழுவார் கழல்தில்லைச் சிற்றம் பலவரைச் சென்றுநின்று தொழுவார் வினைநிற்கி லேநிற்ப தாவ(து)இத் தொல்புனத்தே. |
142 |
கொளு செழுமலை நாடற்குக் கழுமலுற்(று) இரங்கியது. |
28. கொய்தமை கூறி வரைவு கடாதல்
பொருப்பர்க்(கு) யாம் ஒன்று மாட்டோம் புகலப் புகல்எமக்காம் விருப்பர்க்(கு) யாவர்க்கும் மேலவர்க்கு மேல்வரும் ஊர்எரித்த நெருப்பர்க்கு நீ(டு)அம் பலவருக்(கு) அன்பர் குலநிலத்துக் கருப்பற்று விட்டெனக் கொய்தற்ற தின்றிக் கடிப்பினமே. |
143 |
கொளு நீடிரும் புனத்தினி ஆடேம் என்று வரைவு தோன்ற வுரைசெய்தது. |
29. பிரிவு அருமை கூறி வரைவு கடாதல்
பரிவுசெய்(து) ஆண்(டு)அம் பலத்துப் பயில்வோன் பரங்குன்றின்வாய் அருவிசெய் தாழ்புனத்(து) ஐவனம் கொய்யவும் இவ்வனத்தே பிரிவுசெய் தால்அரி தேகொள்க போயடும் என்றும்பெற்றி இருவிசெய் தாளின் இருந்(து)இன்று காட்டும் இளங்கிளியே. |
144 |
கொளு மறைப்புறக் கிளவியின் சிறைப்புறத்(து) உரைத்தது. |
30. மயிலொடு கூறி வரைவு கடாதல்
கணியார் கருத்தின்று முற்றிற்று யாம்சென்றும் கார்ப்புனமே மணியார் பொழில்காள் மறத்திற்கண் டீர்மன்னும் அம்பலத்தோன் அணியார் கயிலை மயில்காள் அயில்வேல் ஒருவர்வந்தால் துணியா தனதுணிந் தார்என்னும் நீர்மைகள் சொல்லுமினே. |
145 |
கொளு நீங்கரும் புனம்விடு நீள்பெருந் துயரம் பாங்கி பகர்ந்து பருவரல் உற்றது. |
31. வறும்புனம் கண்டு வருந்தல்
பொதுவினில் தீர்த்(து)என்னை யாண்டோன் புலியூர் அரன்பொருப்பே இதுவெனில் என்னின்(று) இருக்கின்ற வா(று)எம் இரும்பொழிலே எதநுமக்(கு)எய்திய(து) என்உற் றனிர்அறை ஈண்டருவி மதுவினில் கைப்புவைத் தாலொத்த வாமற்(று)இவ் வான்புனமே. |
146 |
கொளு மென்புனம் விடுத்து மெல்லியல் செல்ல மின்பொலி வேலோன் மெலிவுற்றது. |
32. பதி நோக்கி வருந்தல்
ஆனந்த மாக்கடல் ஆடுசிற் றம்பலம் அன்னபொன்னின் தேனுந்து மாமலைச் சீறூர் இதுசெய்ய லாவதில்லை வானுந்து மாமதி வேண்டி அழும்மழப் போலுமன்னோ நானுந் தளர்ந்தனன் நீயும் தளர்ந்தனை நன்னெஞ்சமே. |
147 |
கொளு மதிநுதல் அரிவை பதிபுகல் அரிதென மதிநனி கலங்கிப் பதிமிக வாடியது. |
பகற்குறி முற்றிற்று.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதின்மூன்றாம் அதிகாரம் - எட்டாம் திருமுறை - திருக்கோவையார் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கடாதல், உரைத்தது, பாங்கி, சிற்றம், என்றது, ஆடிடம், இற்செறி, பகர்ந்தது, அம்பலத், சீறூர்