முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் » 7.05. கணநாத நாயனார் புராணம்
பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 7.05. கணநாத நாயனார் புராணம்

7.05. கணநாத நாயனார் புராணம்
3923 |
ஆழி மாநிலத்து அகிலம் ஈன்று அளித்தவள் திருமுலை அமுதுண்ட வாழி ஞான சம்பந்தர் வந்து அருளிய வளப்பினது அளப்பு இல்லா ஊழி மாகடல் வெள்ளத்து மிதந்து உலகினுக்கு ஒரு முதலாய் காழி மா நகர் திரு மறையவர் குலக் காவலர் கணநாதர் | 7.5.1 |
3924 | ஆய அன்பர் தாம் அணிமதில் சண்பையின் அமர் பெரும் திருத்தோணி நாயனார்க்கு நல் திருப்பணியாயின நாளும் அன்பொடு செய்து மேய அத் திருத் தொண்டினில் விளங்குவார் விரும்பி வந்து அணைவார்க்குத் தூய கைத் திருத் தொண்டினில் அவர் தமைத் துறை தொறும் பயில்விப்பார் | 7.5.2 |
3925 | நல்ல நந்தவனப் பணி செய்பவர் நறுந்துணர் மலர் கொய்வோர் பல் பணித் தொடை புனைபவர் கொணர் திரு மஞ்சனப் பணிக்கு உள்ளோர் அல்லும் நன் பகலும் திரு அலகிட்டு திரு மெழுக்கு அமைப்போர் எல்லையில் விளக்கு எரிப்பவர் திரு முறை எழுதுவோர் வாசிப்போர் | 7.5.3 |
3926 | இனைய பஃதிருப் பணிகளில் அணைந்தவர்க்கு ஏற்ற அத் திருத்தொண்டின் வினை விளங்கிட வேண்டிய குறை எலாம் முடித்து மேவிடச் செய்தே அனைய அத்திறம் புரிதலில் தொண்டரை ஆக்கி அன்புறு வாய்மை மனை அறம் புரிந்து அடியவர்க்கு இன்பு உற வழிபடும் தொழில் மிக்கார் | 7.5.4 |
3927 | இப் பெரும் சிறப்பு எய்திய தொண்டர் தாம் ஏறு சீர் வளர் காழி மெய்ப் பெரும் திரு ஞான போனகர் கழல் மேவிய விருப்பாலே முப் பெரும் பொழுது அர்ச்சனை வழிபாடு மூளும் அன்பொடு நாளும் ஒப்பில் காதல் கூர் உளங்களி சிறந்திட ஒழுகினார் வழுவாமல் | 7.5.5 |
3928 | ஆன தொண்டினில் அமர்ந்த பேர் அன்பரும் அகல் இடத்தினில் என்றும் ஞானம் உண்டவர் புண்டரீகக் கழல் அருச்சனை நலம் பெற்றுத் தூ நறும் கொன்றை முடியவர் சுடர் நெடும் கயிலை மால்வரை எய்தி மான நற்பெரும் கணங்களுக்கு நாதராம் வழித் தொண்டின் நிலை பெற்றார் | 7.5.6 |
3929 | உலகம் உய்ய நஞ்சுண்டவர் தொண்டினில் உறுதி மெய் உணர்வு எய்தி அலகில் தொண்டருக்கு அறிவு அளித்தவர் திறம் அவனியின் மிசை ஆக்கும் மலர் பெரும் புகழ்ப் புகலியில் வரும் கண நாதனார் கழல் வாழ்த்தி குலவு நீற்று வண் கூற்றுவனார் திறம் கொள்கையின் மொழிகின்றோம் | 7.5.7 |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
7.05. கணநாத நாயனார் புராணம் - பன்னிரண்டாம் திருமுறை - திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - பெரும், தொண்டினில்