முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் » 6.03. திரு மூல நாயனார் புராணம்
பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 6.03. திரு மூல நாயனார் புராணம்

6.03. திரு மூல நாயனார் புராணம்
3564 |
அந்தி இளம் பிறைக் கண்ணி அண்ணலார் கயிலையினில் முந்தை நிகழ் கோயிலுக்கு முதல் பெரு நாயகம் ஆகி இந்திரன் மால் அயன் முதலாம் இமயவர்க்கு நெறி அருளும் நந்தி திருவருள் பெற்ற நான் மறை யோகிகள் ஒருவர் | 6.3.1 |
3565 | மற்றவர் தாம் அணி மாதி வரும் சித்தி பெற்று உடையார் கொற்றவனார் திருக் கயிலை மலை நின்றும் குறு முனிபால் உற்றது ஒரு கேண்மையினால் உடன் சில நாள் உறைவதற்கு நல் தமிழின் பொதிய மலை நண்ணுதற்கு வழி கொண்டார் | 6.3.2 |
3566 | மன்னு திருக் கேதாரம் வழி பட்டு மா முனிவர் பன்னு புகழ்ப் பசுபதி நேபாளத்தைப் பணிந்து ஏத்தித் துன்னு சடைச் சங்கரனார் ஏற்ற தூ நீர்க் கங்கை அன்ன மலி அகன் துறை நீர் அருங்கரையின் மருங்கு அணைந்தார் | 6.3.3 |
3567 | கங்கை நீர்த் துறை ஆடிக் கருத்துறை நீள் கடல் ஏற்றும் அங்கணர் தாம் மகிழ்து அருளும் அவிமுத்தம் பணிந்து ஏத்தி மங்குல் வளர் வரை விந்தம் மன்னு பருப்பதம் இறைஞ்சி திங்கள் அணி சடையார் திருக்காளத்தி மலை சேர்ந்தார் | 6.3.4 |
3568 | நீடு திருக்காளத்தி நிலவு தாணுவை வணங்கி ஆடு திரு அரங்கான ஆலவனம் தொழுது ஏத்தித் தேடும் இருவர்க்கு அரியார் திரு ஏகாம்பரம் பணிந்து மாடுயர் மா மதில் காஞ்சி வள நகரின் வைகினார் | 6.3.5 |
3569 | நற்பதி அங்கு அமர் யோக முனிவர்களை நயந்து போய்க் கற்புரிசைத் திருவதிகை கலந்து இறைஞ்சிக் கறை கண்டர் அற்புதக் கூத்து ஆடுகின்ற அம்பலம் சூழ் திருவீதிப் பொற்பதியாம் பெரும் பற்ற புலியூர் வந்து அணைந்தார் | 6.3.6 |
3570 | எவ்வுலகும் உய்ய எடுத்து அருளிய சேவடியாரைச் செவ்விய அன்புற வணங்கிச் சிந்தை களிவரத் திளைத்து வவ்விய மெய் உணர்வின் கண் வரும் ஆனந்தக் கூத்தை அவ்வியல்பில் கும்பிட்டு அங்கு ஆராமை அமர்ந்திருந்தார் | 6.3.7 |
3571 | தட நிலை மாளிகைப் புலியூர் தன்னில் உறைந்து இறைஞ்சிப் போய் அடல் விடையின் மேல் வருவார் அமுது செய அஞ்சாதே விடம் அளித்தது எனக் கருதி மேதினிக்கு வளம் நிறைத்தே கடல் வயிறு நிறையாத காவிரியின் கரை அணைந்தார் | 6.3.8 |
3572 | காவிரி நீர்ப் பெரும் தீர்த்தம் கலந்து ஆடிக் கடந்து ஏறி ஆவின் அரும் கன்று உறையும் ஆவடு தண் துறை அணைந்து சேவில் வரும் பசுபதியார் செழும் கோயில் வலம் வந்து மேவு பெரும் காதலினால் பணிந்து அங்கு விருப்பு உறுவார் | 6.3.9 |
3573 | அந்நிலைமைத் தானத்தை அகலாத ஒருகருத்து முன்னி எழும் குறிப்பினால் மூளும் ஆதரவு எய்தப் பின்னும் அகன்று ஏகுவார் பேண வரும் கோக்குலங்கள் பொன்னி நதிக் கரைப் புறவில் புலம்புவன எதிர் கண்டார் | 6.3.10 |
3574 | அந்தணர்தம் சாத்தனூர் ஆமேய்பார் குடித் தோன்றி முந்தை முறை நிரை மேய்ப்பான் மூலன் எனும் பெயருடையான் வந்து தனி மேய் கின்றான் வினைமாள வாழ்நாளை வெந்தொழில் கூற்றுவன் கூற்று உண்ண வீடி நிலத்து இடை வீழ்ந்தான் | 6.3.11 |
3575 | மற்றவன் தன் உடம்பினை அக்கோக் குலங்கள் வந்து அணைந்து சுற்றி மிகக் கதறுன சுழல்வன மோப்பனவாக நல் தவ யோகியார் காணா நம்பர் அருளாலே ஆ உற்றதுயர் இவை நீங்க ஒழிப்பன் என உணர்கின்றார் | 6.3.12 |
3576 | இவன் உயிர் பெற்று எழில் அன்றி ஆக்கள் இடர் நீங்கா என்று அவன் உடலில் தம் உயிரை அடை விக்க அருள் புரியும் தவ முனிவர் தம் உடம்புக்கு அரண் செய்து தாம் முயன்ற பவன வழி அவன் உடலில் தம் உயிரைப் பாய்த்தினார் | 6.3.13 |
3577 | பாய்த்திய பின் திரு மூலராய் எழலும் பசுக்கள் எலாம் நாத் தழும்ப நக்கி மோந்து அணைந்து கனைப் பொடு நயந்து வாய்த்து எழுந்த களிப்பினால் வால் எடுத்துத் துள்ளிப்பின் நீத்த துயரினவாகி நிரைந்து போய் மேந்தனவால் | 6.3.14 |
3578 | ஆவின் நிரை மகிழ்வுறக் கண்ட அளிகூர்ந்த அருளினராய் மேவியவை மேய் விடத்துப் பின் சென்று மேய்ந்தவை தாம் காவிரி முன் துறைத் தண்ணீர் கலந்து உண்டு கரை ஏறப் பூவிரி தண் புறவின் நிழல் இனிதாகப் புறங்காத்தார் | 6.3.15 |
3579 | வெய்ய சுடர்க் கதிரவனும் மேல் பாலை மலை அணையச் சைவ நெறி மெய் உணந்தோர் ஆன் இனங்கள் தாமே முன் பைய நடப்பன கன்றை நினைந்து படர் வன வாகி வைய நிகழ் சாத்தனூர் வந்து எய்தப் பின் போனார் | 6.3.16 |
3580 | போனவர் தாம் பசுக்கள் எல்லாம் மனை தோறும் புகநின்றார் மானம் உடை மனையாளும் வைகிய பின் தாழ்ந்தார் என்று ஆன பயத்துடன் சென்றே அவர் நின்ற வழி கண்டாள் ஈனம் இவர்க்கு அடுத்தது என மெய்தீண்ட அதற்கு இசையார் | 6.3.17 |
3581 | அங்கு அவளும் மக்களுடன் அரும் சுற்றம் இல்லாதாள் தங்கி வெரு உற மயங்கி என் செய்தீர் எனத்தளர இங்கு உனக்கு என்னுடன் அணை ஒன்று இல்லை என எதிர்மறுத்துப் பொங்கு தவத்தோர் ஆங்கோர் பொது மடத்தின் உட்புகுந்தார் | 6.3.18 |
3582 | இல்லாளன் இயல்பு வேறு ஆனமை கண்டு இரவு எல்லாம் சொல் ஆடாது இருந்தவர் பால் அணையாது துயிலாதாள் பல்லார் முன் பிற்றை நாள் இவர்க்கு அடுத்த பரிசு உரைப்ப நல்லார்கள் அவர் திறத்து நாடியே நயந்து உரைப்பார் | 6.3.19 |
3583 | பித்து உற்ற மயல் அன்று பிறிது ஒரு சார்பு உளது அன்று சித்த விகற்பம் களைந்து தெளிந்த சிவ யோகத்தில் வைத்த கருத்தினர் ஆகி வரம்பில் பெருமையில் இருந்தார் இத்தகைமை அளப்பு அரிதால் யாராலும் என உரைப்பார் | 6.3.20 |
3584 | பற்று அறுத்த உபதேசப் பரமர் பதம் பெற்றார் போல் முற்றும் உணர்ந்தனர் ஆகும் முன்னை நிலைமையில் உங்கள் சுற்றம் இயல் பினுக்கு எய்தார் என்று உரைப்பத் துயர் எய்தி மற்றவளும் மையலுற மருங்குள்ளார் கொண்டு அகன்றார் | 6.3.21 |
3585 | இந் நிலைமையில் இருந்தார் எழுந்திருந்து ஆங்கு ஆன் நிரைகள் வந்த நெறியே சென்று வைத்த காப்பினில் உய்த்த முந்தை உடல் பொறைகாணார் முழுது உணர்ந்த மெய்ஞ்ஞானச் சிந்தையினில் வந்த செயல் ஆராய்ந்து தெளிகின்றார் | 6.3.22 |
3586 | தண்ணிலவார் சடையார் தாம் தந்த ஆகமப் பொருளை மண்ணின் மிசைத் திருமூலர் வாக்கினால் தமிழ் வகுப்பக் கண்ணிய அத்திரு அருளால் அவ்வுடலைக் கரப்பிக்க எண் நிறைந்த உணர்வு உடையார் ஈசர் அருள் என உரைத்தார் | 6.3.23 |
3587 | சுற்றிய அக் குலத்துள்ளார் தொடர்ந்தார்கு தொடர்வு இன்மை முற்றவே மொழிந்து அருள அவர் மீண்டு போனதன் பின் பெற்றம் மீது உயர்த்தவர் தாள் சிந்தித்துப் பெருகு ஆர்வச் செற்றம் முதல் கடிந்தவர்தாம் ஆவடுதண் துறை சேர்ந்தார் | 6.3.24 |
3588 | ஆவடு தண் துறை அணைந்து அங்கு அரும் பொருளை உறவணங்கி மேவுவார் புறக் குடபால் மிக்கு உயர்ந்த அரசின் கீழ்த் தேவிருக்கை அமர்ந்து அருளிச் சிவயோகம் தலை நின்று பூவலரும் இதயத்துப் பொருளோடும் உணர்ந்து இருந்தார் | 6.3.25 |
3589 | ஊன் உடம்பில் பிறவிவிடம் தீர்ந்து உலகத்தோய் உய்ய ஞானம் முதல் நான்கு மலர் நல் திரு மந்திர மாலை பான்மை முறை ஓர் ஆண்டுக்கு ஒன்றாக பரம் பொருளாம் ஏன எயிறு அணிந்தாரை ஒன்றவன்தான் என எடுத்து | 6.3.26 |
3590 | முன்னிய அப் பொருள் மாலைத் தமிழ் மூவாயிரம் சாத்தி மன்னிய மூவாயிரத்து ஆண்டு இப்புவிமேல் மகிழ்ந்து இருந்து சென்னி மதி அணிந்தார் தம் திரு அருளால் திருக் கயிலை தன்னில் அணைந்து ஒரு காலும் பிரியாமைத் தாள் அடைந்தார் | 6.3.27 |
3591 | நலம் சிறந்த ஞான யோகக் கிரியா சரியை யெலாம் மலர்ந்த மொழித் திருமூலத் தேவர் மலர்க் கழல் வணங்கி அலர்ந்த புகழ்த் திருவாரூர் அமணர் கலக்கம் கண்ட தலம் குலவு விறல் தண்டி அடிகள் திறம் சாற்றுவாம் | 6.3.28 |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
6.03. திரு மூல நாயனார் புராணம் - பன்னிரண்டாம் திருமுறை - திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - அணைந்து, பணிந்து, பெரும், இருந்தார், கலந்து, நயந்து, திருக், அணைந்தார், முந்தை