முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் » 10.04. புகழ்த்துணை நாயனார் புராணம்
பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 10.04. புகழ்த்துணை நாயனார் புராணம்

10.04. புகழ்த்துணை நாயனார் புராணம்
4127 |
செருவிலிபுத்தூர் மன்னும் சிவ மறையோர் திருக்குலத்தார் அருவரை வில்லாளி தனக்கு அகத்து அடிமையாம் அதனுக்கு ஒருவர் தமை நிகர் இல்லார் உலகத்துப் பரந்து ஓங்கிப் பொருவரிய புகழ் நீடு புகழ்த்துணையார் எனும் பெயரார் | 10.4.1 |
4128 | தம் கோனைத் தவத்தாலே தத்துவத்தின் வழிபடு நாள் பொங்கோத ஞாலத்து வற்கடமாய்ப் பசி புரிந்தும் எம் கோமான் தனை விடுவேன் அல்லேன் என்று இராப் பகலும் கொங்கார் பன் மலர் கொண்டு குளிர் புனல் கொண்டு அர்ச்சிப்பார் | 10.4.2 |
4129 | மால் அயனுக்கு அரியானை மஞ்சனம் ஆட்டும் பொழுது சாலவுறு பசிப்பிணியால் வருந்தி நிலை தளர்வு எய்திக் கோல நிறை புனல் தாங்கு குடம் தாங்க மாட்டாமை ஆலமணி கண்டத்தார் முடி மீது வீழ்த்து அயர்வார் | 10.4.3 |
4130 | சங்கரன் தன் அருளால் ஓர் துயில் வந்து தமை அடைய அங்கணனும் களவின்கண் அருள் புரிவான் அருந்தும் உணவு மங்கிய நாள் கழிவு அளவும் வைப்பது நித்தமும் ஒரு காசு இங்கு உனக்கு நாம் என்ன இடர் நீங்கி எழுந்திருந்தார் | 10.4.4 |
4131 | பெற்றம் உகந்து ஏறுவார் பீடத்தின் கீழ் ஒரு காசு அற்றம் அடங்கிட அளிப்ப அன்பரும் மற்று அது கைக்கொண்டு உற்ற பெரும் பசி அதனால் உணங்கும் உடம்பு உடன் உவந்து முற்றுஉணர்வு தலை நிரம்ப முகம் மலர்ந்து களி கூர்ந்தார் | 10.4.5 |
4132 | அந்நாள் போல் எந்நாளும் அளித்த காசு அது கொண்டே இன்னாத பசிப் பிணி வந்து இறுத்த நாள் நீங்கிய பின் மின்னார் செஞ்சடையார்க்கு மெய் அடிமைத்தொழில் செய்து பொன்னாட்டின் அமரர் தொழப் புனிதர் அடிநிழல் சேர்ந்தார் | 10.4.6 |
4133 | பந்தணையும் மெல் விரலாள் பாகத்தார் திருப் பாதம் வந்தணையும் மனத் துணையார் புகழ்த்துணையார் கழல் வாழ்த்தி சந்தணியும் மணிப் புயத்துத் தனவீரராம் தலைவர் கொந்தணையும் மலர் அலங்கல் கோட்புலியார் செயல் உரைப்பாம் | 10.4.7 |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
10.04. புகழ்த்துணை நாயனார் புராணம் - பன்னிரண்டாம் திருமுறை - திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் -