மகுடபதி - 7.பயங்கரச் சிரிப்பு
மோட்டார் வண்டியில் இருந்தோர் கள்ளிப்பட்டிக் கார்க்கோடக் கவுண்டரும், சிங்கமேடு தங்கசாமிக் கவுண்டருந்தான்.
பெரியண்ணன் அவர்களைக் கண்டதும் பயப்பிராந்தி அடைந்தான். தனக்கு ஏதோ தீங்கு வந்து விடப் போகிறதோ என்பதற்காக அல்ல. செந்திருவை எண்ணித்தான் அவன் பயந்தான். அவளை இங்கே பார்த்தால் இவர்கள் என்ன செய்கிறார்களோ, என்னமோ? போதாதற்கு மகுடபதி இந்தச் சமயம் பார்த்து வந்து சேர்ந்தானே? இவர்கள் வேறு விதமாக சந்தேகிக்கலாமல்லவா? அறியாத பெண்ணின் பேச்சைக் கேட்டுப் புறப்பட்டு வந்தது பிசகாய்ப் போயிற்றே? - குழந்தைதான் சொல்லிற்று என்றால் அறுபது வயதான எனக்குக் கூடவா புத்தியில்லாமல் போகவேண்டும்? கவுண்டர் சென்னைப் பட்டணத்துக்கல்லவா போவதாகச் சொன்னார்? வருவதற்கு ஒரு வாரம் பிடிக்கும் என்றாரே? இங்கே எப்படி இருக்கிறார்? - இம்மாதிரி எண்ணங்கள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டு அவன் உள்ளத்தில் எழுந்தன. கையில் லாந்தரைப் பிடித்தபடி அசையாமலும் பேசாமலும் அவர்களைப் பார்த்தபடியே நின்றான்.
பெரியண்ணனைப் பார்த்ததில் இரண்டு கவுண்டர்களுக்குங்கூட ரொம்ப ஆச்சரியம் உண்டாயிற்று என்பது அவர்களுடைய முகபாவத்திலிருந்து நன்றாய்த் தெரிந்தது. சற்று நேரம் அவர்களும் அவனுடைய முகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
தங்கசாமிக் கவுண்டர், "யார், பெரியண்ணனா? இதென்ன தமாஷ்? நீ எங்கே வந்து சேர்ந்தாய்?" என்று கேட்டுக் கொண்டே காரிலிருந்து இறங்கினார்.
அருகில் சென்று அவன் முகத்தைப் பார்த்ததும், "என்னப்பா, இது? ஏன் இப்படிப் பேயடித்தவன் மாதிரி விழித்துக் கொண்டு நிற்கிறாய்?" என்றார்.
இதற்கும் பெரியண்ணன் பேசாமல் நின்றான். கார்க்கோடக் கவுண்டரும் இறங்கி வந்து, "ஒருவேளை மகாத்மா காந்தி பக்தி முற்றிப்போய் சத்தியாக்கிரகம் பண்ணவே வந்துவிட்டான் போலிருக்கு" என்றார்.
"ஏனப்பா, அப்படியா? நீ சத்தியாக்கிரகம் பண்ணப் போறாயா, அல்லது உன்னைத்தான் கிரகம் பிடிச்சிருக்கா?"
இப்படிச் சொன்ன தங்கசாமிக் கவுண்டர் திடீரென்று ஏதோ நினைவு வந்தவர் போல், "கவுண்டர்! வீட்டிலே எல்லாரும் சுகந்தானே? உடம்பு காயலா ஒன்றுமில்லையே?" என்று கலங்கிய குரலில் கேட்டார்.
"எல்லாரும் சுகந்தானுங்க" என்று மெலிந்த குரலில் பெரியண்ணன் சொன்னான்.
"அப்படியென்றால், நீ எங்கே வந்தே?"
பதில் இல்லாமற் போகவும், இரு கவுண்டர்களும் உள்ளே நுழைந்தார்கள்.
மேல் மச்சில் வெளிச்சம் தெரிந்தது. ஆள் நடமாடும் சத்தமும், கதவு சாத்தும் சத்தமும் கேட்டது. கவுண்டர்களின் ஆச்சரியம் அதிகமாயிற்று.
"பெரியண்ணா! மச்சுமேலே யார்?"
பதில் இல்லை.
"இதென்ன உனக்குப் பிரம்மஹத்தி பிடித்துவிட்டதா? மேலே யார், சொல்கிறாயா, இல்லையா?"
பெரியண்ணன் தடுமாறிக் கொண்டு, "குழந்தை" என்றான்.
"எந்தக் குழந்தை?" என்று தங்கசாமிக் கவுண்டர் வியப்புடன் கேட்டார்.
"எனக்கு எல்லாம் தெரிந்து போய் விட்டது" என்றார் கார்க்கோடக் கவுண்டர். தங்கசாமிக் கவுண்டரின் காதோடு ஏதோ சொன்னார்.
தங்கசாமிக் கவுண்டரின் கண்ணில் தீப்பொறி பறந்தது. "என்ன? இருக்கவே இருக்காது!" என்றார்.
"பெரியண்ணா! எந்தக் குழந்தை? பட்டணத்துக் குழந்தையா?"
"ஆமானுங்க."
அவ்வளவுதான்; அதற்குமேல் தங்கசாமிக் கவுண்டர் அங்கே நிற்கவில்லை. தடதடவென்று மச்சுப்படிகளின் மேலே ஏறினார். கார்க்கோடக் கவுண்டரும் பின் தொடர்ந்து ஏறினார். பெரியண்ணன் லாந்தரைக் கீழே வைத்துக் கதவைத் தாளிட்டு விட்டுத் தள்ளாடிக் கொண்டே ஏறினான். அவன் மனது ஒரே குழம்பலாய்க் குழம்பிற்று. செந்திருவை அங்கே அழைத்து வந்ததற்கு ஏதாவது பொய்க் காரணங் கண்டு பிடிக்க அவன் விரும்பினான். ஆனால் யோசனை ஒன்றுமே ஓடவில்லை. அவன் தலை சுழன்றது.
ஒருவர் பின் ஒருவராக இரண்டு கவுண்டர்களும் வருவதைப் பார்த்ததும், செந்திரு கதிகலங்கியவளாய்ச் சமுக்காளத்திலிருந்து எழுந்து நின்றாள். சித்தப்பாவை அவள் ஒருவாறு எதிர்பார்த்தாள். அவருக்கு என்ன சமாதானம் சொல்லி, எப்படித் தப்புவது என்று யோசித்துக் கொண்டிருந்தாள். கார்க்கோடக் கவுண்டரும் சேர்ந்தாற்போல் வருவதைக் கண்டதும், எல்லா யோசனையும் போய்விட்டது. பக்கத்து அறையில் மகுடபதி இருக்கிறான் என்பதை நினைத்ததும், அவளுடைய வயிற்றையும் நெஞ்சையும் என்னவோ செய்தது! மயிலாப்பூரில் அவளுடைய வீட்டுக் கூடத்தில் பழநியாண்டவர் படம் ஒன்று மாட்டியிருக்கும். தினம் அப்படத்திற்கு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டுவதுண்டு. குழந்தை செந்திரு அப்படத்தின் முன்னால் நமஸ்காரம் செய்து "ஸ்வாமி! பழனி ஆண்டவனே! பரீட்சையில் எனக்கு நல்ல மார்க் வரவேணும்; முதலாவதாக நான் தேறவேண்டும்" என்று வேண்டிக் கொள்வாள். இப்போது திடீரென்று அந்தப் படத்தின் ஞாபகம் வந்தது! "ஸ்வாமி! ஆண்டவனே! இந்த ஆபத்திலிருந்து நீதான் என்னைக் காப்பாற்ற வேண்டும்" என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டாள்.
தங்கசாமிக் கவுண்டர் அவளை வியப்புடனும் ஆங்காரத்துடனும் உற்றுப் பார்த்தபடி அருகில் வந்தார்.
"செந்திரு, நீயா, இந்தக் காரியம் செய்தாய்? என்ன நெஞ்சு அழுத்தம் உனக்கு! பாவி!..."
கவுண்டரின் உதடுகளும் மீசையும் படபடப்பினால் துடித்தன.
"பாவி! உன் அப்பாவின் பெயரை இப்படியா நீ கெடுக்க வேணும்! மருதாசலக் கவுண்டரின் மகளா நீ? ஆஹா! அண்ணன் மட்டும் இப்போது உயிரோடிருந்தால்..."
தகப்பனாரின் பெயரைக் கேட்டதும் செந்திருவுக்கு திடீரென்று மனோதைரியம் உண்டாயிற்று. அவள் ஒரு புது மனுஷியானாள். தன்னுடைய தகப்பனாரே ஆவி ரூபத்தில் வந்து தனக்குப் பின்னால் நிற்பதாக அவளுக்குத் தோன்றிற்று. தனக்கு அபாயம் நேராமல் அவர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உண்டாயிற்று.
திடீரென்று ஆவேசம் வந்தவள் போல் அவள், "அப்பா பேச்சை ஏன் எடுக்கிறீர்கள் சித்தப்பா! அப்பா உயிரோடு இருந்தால் என் கதி இப்படியாயிருக்குமா? தலை நரைச்ச கிழவருக்கு என்னைக் கல்யாணம் கட்டிக் கொடுக்க யோசித்திருப்பாரா?" என்றாள்.
தங்கசாமிக் கவுண்டருக்கு அப்போது வந்த கோபத்தில் அவருடைய உடம்பெல்லாம் நடுங்கிற்று. திரும்பி அவர் கள்ளிப்பட்டிக் கவுண்டரைப் பார்த்தார். கள்ளிப்பட்டிக் கவுண்டரின் முகத்தில் விஷம் நிறைந்த ஒரு புன்னகை காணப்பட்டது. மற்றபடி கோபதாபம் ஒன்றுமில்லை. அவர் சிங்கமேட்டாரைப் பார்த்து, "ஏன் இவ்வளவு பதட்டப் படுகிறீர்கள்? இதை அவளாகச் செய்யவில்லை. யாருடைய துர்ப்போதனையின் பேரிலேயோ நடந்திருக்கிறது. உட்கார்ந்து சாவகாசமாக விசாரியுங்கள்" என்றார்.
இப்படிச் சொல்லிவிட்டு அவர் ஹாலின் வீதிப் பக்கத்துச் சுவரில் இருந்த ஜன்னலண்டை போய் ஜன்னல் கதவுகளைச் சாத்தினார். பிறகு, மச்சுபடிகளின் வழியாகக் கீழே இறங்கிப் போனார்.
சிங்கமேட்டுக் கவுண்டர் மேஜைக்குப் பக்கத்திலிருந்த நாற்காலியில் போய்த் தொப்பென்று விழுந்தார். அளவில்லாத கோபத்தினால் அவருடைய உடம்பு தளர்ந்து போயிருந்தது. தூரத்தில் நடுங்கிக் கொண்டு நின்ற பெரியண்ணனைப் பார்த்து, "கவுண்டா, இங்கே வா!" என்றார்.
பெரியண்ணன் மேஜையண்டை மெதுவாக வந்து நின்றான்.
"எதற்காக இங்கே வந்தீர்கள்? என்ன எண்ணத்துடன் வந்தீர்கள்? யாருடைய தூண்டுதலைக் கேட்டு வந்தீர்கள்? நிஜத்தை, உள்ளதை உள்ளபடி சொல்லிவிடு; இல்லாவிட்டால் இங்கிருந்து உயிரோடு திரும்பிப் போகமாட்டாய்" என்றார்.
பெரியண்ணன், மனத்திற்குள், "என் உயிரோடு போவதாயிருந்தால் பாதகமில்லையே? இந்தக் குழந்தையையும் அல்லவா மாட்டி வைத்து விட்டேன்?" என்று நினைத்துக் கொண்டான்.
அவன் செந்திருவைப் பார்த்தான். செந்திரு, "என்ன பயம் பாட்டா? உயிருக்கு மேலே ஒன்றுமில்லையே? இந்த மாதிரி உயிர் வைத்துக் கொண்டு வாழ்கிறதைவிடச் செத்துப் போவதே நல்லது. எல்லாவற்றையும் சொல்லிவிடு" என்றாள். இப்படிச் சொல்லிவிட்டு அவள் சமுக்காளத்தில் உட்கார்ந்தாள்.
இதற்குள், கள்ளிப்பட்டிக் கவுண்டர், மச்சுப்படி ஏறி மறுபடியும் மேலே வந்தார். அவருடைய ஒரு கை முதுகுப் பக்கம் போயிருந்தது. அந்தக் கையில் ஒரு கயிற்றுச் சுருளும் ஒரு கொடிப் பிரம்பும் இருந்தன. இன்னொரு கையில் டார்ச் லைட் ஒன்று இருந்தது. பெரியண்ணன் இதையெல்லாம் பார்த்து விட்டான். இதற்கு முன்னால் ஒரு போதும் அறிந்திராத ஒரு வித நோவு அவனுடைய அடி வயிற்றில் உண்டாயிற்று.
இரண்டு கவுண்டர்களையும் அவன் மாறி மாறிப் பார்த்து தட்டுத் தடுமாறலுடன் "தெரியாத்தனமாய் நடந்து போச்சுங்க? என்னை என்ன வேணுமானாலும் செய்துக்குங்க! குழந்தையை மன்னிச்சுடுங்க! உங்கள் காலிலே விழுந்து கேட்கிறேன்!" என்றான்.
செந்திருவுக்கு இது கொஞ்சமும் பிடிக்கவில்லை என்று அவளுடைய முகத் தோற்றத்திலிருந்தே தெரிந்தது.
"என்ன பாட்டா! உனக்குப் பைத்தியமா? எதற்காக என்னை மன்னிக்க வேண்டும்? நான் என்ன தப்பு செய்து விட்டேன் மன்னிப்பதற்கு?" என்றாள்.
கிழவன் அவளைக் கொஞ்சம் கோபமாய்ப் பார்த்து, "செந்திரு! நீ அறியாக் குழந்தை! உனக்கு ஒன்றும் தெரியாது, சற்றே நீ பேசாமலிரு" என்றான். அப்போது அவனுடைய பார்வை சாத்தியிருந்த அறைக் கதவின் மேல் போயிற்று.
அது கள்ளிப்பட்டிக் கவுண்டரின் கூரிய பார்வையிலிருந்து தப்பவில்லை. அவர் மேஜைக்குப் பக்கத்திலிருந்த நாற்காலி ஒன்றில் உட்கார்ந்திருந்தார். இன்னொரு காலி நாற்காலியின் மேல் கயிற்றுச் சுருள், பிரம்பு, டார்ச் லைட் இவை இருந்தன. மேஜையின் மேல் முழங்கையை ஊன்றியபடி மற்ற மூன்று பேரையும் அவர் கவனித்துக் கொண்டிருந்தார்.
சிங்கமேட்டுக் கவுண்டரைப் பார்த்து, அவர், "அறியாப் பெண் படபடப்பாய்ப் பேசினால் அதற்காக நீங்களும் கோபித்துக் கொள்ளலாமா? எங்கே கிளம்பி வந்தார்கள், என்னத்திற்காக, என்று கேளுங்கள்" என்றார்.
பெரியண்ணன் உடனே, "குழந்தைக்குச் சிநேகிதப் பெண் இந்த ஊருக்கு வந்திருக்கிறதாம். அவசரமாய்ப் பார்க்க வேணுமென்று கடிதம் வந்ததாம். உடனே கிளம்பித் தான் ஆகவேண்டுமென்று பிடிவாதம் பிடித்தது. நானும் தெரியாத்தனமாய் அழைத்துக் கொண்டு வந்து விட்டேன். செய்தது பிசகுதான்" என்றான்.
செந்திரு அப்போது, "சித்தப்பா! நான் நிஜத்தைச் சொல்லிவிடுகிறேன். எனக்கு இந்த வயதில் கல்யாணம் கட்டிக் கொள்ள இஷ்டமில்லை. அதற்காகத்தான் புறப்பட்டு வந்தேன். நீங்கள் என்னைக் கொன்றாலும் சரிதான். என் மனது மட்டும் மாறாது" என்றாள்.
கள்ளிப்பட்டிக் கவுண்டர், தங்கசாமிக் கவுண்டரின் காதோடு ஏதோ சொன்னார்.
"இது நீயாகச் சொல்கிறாயா? வேறு யாருடைய போதனையின் பேரிலாவது சொல்கிறாயா?"
"யாரும் எனக்குப் போதிக்கவில்லை; நானாகத்தான் சொல்கிறேன்."
"இங்கே கிளம்பி வந்தது நீயாகத்தான் வந்தாயா? யாராவது வரச் சொன்னதுண்டா?"
"நானாகத்தான் வந்தேன்."
கார்க்கோடக் கவுண்டர் "பொய்" என்று சொல்லிக் கொண்டு நாற்காலியிலிருந்த பிரம்பை எடுத்து, மேஜையின் மேல் சிங்கமேட்டுக் கவுண்டர் பக்கத்தில் வைத்தார்.
இதைக் கவனித்த செந்திரு கோபாவேசத்துடன், "சித்தப்பா! நான் துர்ப்போதனைக் காளாகவில்லை. உங்களுக்குத்தான் துர்மந்திரிகள் இருக்கிறார்கள். அதனால் தான் உங்களுக்குக் கடன் வந்தது. அதற்காக என்னை விற்கப் பார்க்கிறீர்கள்" என்றாள்.
தங்கசாமிக் கவுண்டர் மேஜை மீதிருந்த பிரம்பை எடுத்துக் கொண்டு செந்திருவை நோக்கிப் போனார். பெரியண்ணன் அவருக்கு முன்னால் வந்து தரையில் விழுந்து காலைப் பிடித்துக் கொண்டான். கவுண்டர் அவனை உதறித் தள்ளிவிட்டு மேலே போய் செந்திருவின் மேல் பிரம்பை வீசினார். அவளுடைய தோளில் சுளீரென்று விழுந்தது. செந்திரு 'வீல்' என்று கத்திக் கொண்டு கீழே விழுந்தாள். இன்னும் பல அடிகளை எதிர்பார்த்து அவள் கண்ணை இறுக மூடிக் கொண்டு பல்லையும் கடித்துக் கொண்டாள்.
ஆனால், மேலே அடி விழவில்லை. ஏனெனில் அச்சமயம் கதவு தாழ்ப்பாள் திறக்கும் சத்தம் கேட்டது.
"பாவிகளா! சண்டாளர்களா! அனாதைப் பெண்ணை அடிக்காதீர்கள்! என்னை அடித்துக் கொன்று விடுங்கள்" என்று கத்திக் கொண்டு மகுடபதி திறந்த அறையிலிருந்து ஓடி வந்தான்.
கள்ளிப்பட்டிக் கவுண்டர் கலகலவென்று சிரித்தார். அந்தச் சிரிப்பின் தொனி பயங்கரமாயிருந்தது. பெரியண்ணன் உடம்பு வெடவெடவென்று ஆடிற்று.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 26 | 27 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
7.பயங்கரச் சிரிப்பு - Magudapathy - மகுடபதி - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - கவுண்டர், பெரியண்ணன், கொண்டு, தங்கசாமிக், என்றார், செந்திரு, கள்ளிப்பட்டிக், கவுண்டரின், பார்த்து, கார்க்கோடக், என்றாள், குழந்தை, உண்டாயிற்று, அவளுடைய, என்றான், மகுடபதி, திடீரென்று, கவுண்டரும், வந்தது, வந்தீர்கள், விட்டேன், செய்து, யாருடைய, உடம்பு, நின்றான், சிங்கமேட்டுக், எனக்கு, சொல்கிறாயா, செந்திருவை, முன்னால், பிரம்பை, இப்படிச், சித்தப்பா, உயிரோடு, அவனுடைய, தெரிந்தது, என்னைக், இரண்டு, அப்போது, அவருடைய, கையில், சொன்னார், செந்திருவுக்கு, சொல்லிவிட்டு, கல்யாணம், கவுண்டரைப், கட்டிக், கத்திக், போனார், பக்கத்திலிருந்த, டார்ச், இன்னொரு, இருந்தன, தெரியாத்தனமாய், விழுந்து, கிளம்பி, அதற்காக, மேஜையின், கயிற்றுச், மட்டும், போயிருந்தது, மேஜைக்குப், வந்தேன், எதற்காக, சொல்லிவிடு, பாட்டா, கொண்டான், நானாகத்தான், வைத்துக், மாதிரி, பார்த்ததும், அருகில், சத்தியாக்கிரகம், எல்லாரும், கேட்டார், குரலில், ஒன்றுமில்லையே, கொண்டே, இதென்ன, இவர்கள், தனக்கு, கண்டதும், புறப்பட்டு, பெரியண்ணனைப், உற்றுப், ஆச்சரியம், கவுண்டர்களும், சத்தமும், இப்போது, வேண்டிக், ஆண்டவனே, வேண்டும், கொண்டாள், இந்தக், வந்தார், ஸ்வாமி, செய்தது, உனக்குப், பெரியண்ணா, கேட்டது, எந்தக், காதோடு, அவருக்கு, ஏறினார், உனக்கு