அலை ஒசை - 3.7 வெள்ளி வீதியிலே
சரித்திரத்தில் புகழ் பெற்ற டில்லி மாநகருக்கு மறுபடியும் நேயர்களை
அழைத்துச்செல்ல வேண்டியதாகிறது. 1943-ம் வருஷத்தின் பிற்பகுதியில் டில்லி நகரம்
அதிவிரைவாகப்பணப் பெருக்கமும் ஜனப் பெருக்கமும் அடைந்து கொண்டு வந்தது. யுத்தம்
இந்தியாவின்எல்லையை நெருங்கி வந்து கொண்டிருந்ததை முன்னிட்டுத் தலைநகரில் யுத்த
முஸ்தீப்புகள்தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. பிரிட்டிஷ் சோல்ஜர்களும்
அமெரிக்க சோல்ஜர்களும்கூர்க்க சிப்பாய்களும் சீக்கியத் துருப்புகளும் தென்
இந்திய வீரர்களும் எங்கே பார்த்தாலும்காணப்பட்டார்கள். டாக்ஸி கார்களுக்கும்,
டோங்கா வண்டிகளுக்கும், ரிக்ஷாக்களுக்கும் கூடஎன்றுமில்லாத கிராக்கி
ஏற்பட்டிருந்தது. இத்தகைய நிலைமையில் டில்லி ரயில்வே ஸ்டேஷனில் வந்திறங்கிய
சூரியாவுக்கு வண்டி எங்கே கிடைக்கப் போகிறது. ஸ்டேஷன் வாசலில் வந்து நின்ற
சூரியா ஐந்து நிமிஷம் தயங்கி நின்று யோசனையில் ஆழ்ந்திருந்தான். புதுடில்லிப்
பக்கம்நடையைக் கட்டுவதா அல்லது முதலில் பழைய டில்லிக்குப் போவதா என்னும்
பிரச்சனை தான்அவனை அத்தகைய சிந்தனைக்கு உள்ளாக்கியிருந்தது. கடைசியில் பழைய
டில்லிக்கே சீட்டு விழுந்தது. விடுவிடு என்று பழைய டில்லியை நோக்கி நடந்தான்.
பழைய டில்லியில் 'சாந்தினிசவுக்' என்னும் வீதிக்கு வந்ததும் சூரியாவின் நடை
மெதுவாயிற்று. அவனுடைய உள்ளமோ சிலநூறு வருஷம் பின்னால் சென்று அந்தப் பிரசித்தி
பெற்ற 'வெள்ளி வீதி'யில் அவ்வப்போது நடந்தசரித்திர நிகழ்ச்சிகளைப் பற்றிச்
சிந்திக்கலாயிற்று.
அந்தச் 'சாந்தினி சவுக் ஒரு காலத்தில் உலகத்திலேயே மிகப் பணக்கார வீதி என்றுபெயர் பெற்றிருந்தது. தங்க நகைக் கடைகளும் நவரத்தின ஆபரணக் கடைகளும்உலகமெங்குமிருந்து வந்த பலவித அபூர்வமான பொருள்களின் கடைகளும் அவ்வீதியில் இருந்தன. மன்னாதி மன்னர்களெல்லாம் அணிய விரும்பக்கூடிய பட்டுப் பட்டாடைகளும் ரத்தினக் கம்பளங்களும் பல கடைகளில் விற்கப்பட்டன. அந்த வீதியில் வசித்தவர்கள், கடைவைத்திருந்தவர்கள் அனைவரும் செல்வத்தில் சிறந்த சீமான்கள். இப்படியாகச் செல்வம்குவிந்திருந்த இடத்துக்கு ஆபத்துக்கள் வருவது இயற்கை யேயல்லவா? ஆபத்து ஒரு தடவைஅல்ல, எத்தனையோ தடவைகள் அந்த வெள்ளி வீதிக்கு வந்தது. ஐந்நூற்றைம்பது வருஷங்கள் முன்னால் மங்கோலியா தேசத்திலிருந்து தைமூர் என்னும் அசுரன் ஒரு பெரிய ராட்சதப் படையுடன் வந்தான். அச்சமயம் டில்லியில் முகம்மது துக்ளக் என்னும் பாதுஷா அரசாண்டான்.தைமூரும் முகம்மது துக்ளக்கும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் தான். இது காரணமாகத்தைமூர் கருணை காட்டினானா? இல்லை. முகம்மது துக்ளக்கின் சைன்யத்தை டில்லிக்கோட்டை வாசலிலே தோற்கடித்து நகருக்குள் புகுந்தான். ஆயிரமாயிரம் பிரஜைகளைக்கொன்று குவித்தான்; வெள்ளி வீதியின் செல்வத்தைக் கொள்ளையடித்தான்; இரத்தினகம்பளங்களின் மீது இராஜ குமாரர்களும் இராஜகுமாரிகளும் நடமாடிய இடமெல்லாம் இரத்தஆறு ஓடும்படி செய்தான்.
தைமூர் டில்லியில் இரண்டு வாரம் தங்கியிருந்து ஹதாஹதம் செய்துவிட்டுப் புறப்பட்டுச்சென்றான். அவன் போன பிறகு டில்லி நகரம் ஒரு பயங்கர சொப்பனத்திலிருந்து விழித்துஎழுந்தது போல எழுந்தது. கண்டது கனவல்லவென்றும் உண்மையான பயங்கரம் என்றும்உணர்ந்தது. ஆயினும், அந்த அதிசயமான ஜீவசக்தியுள்ள நகரம் மறுபடியும் அதிசீக்கிரத்தில்சீரும் செல்வமும் பெற்றுக் குபேர புரியாயிற்று. இரத்த ஆறு ஓடிய 'வெள்ளி வீதி'யில் மறுபடியும்தங்க மொகராக்கள் குலுங்கும் சத்தமும் இராஜ குமாரிகளின் பாதச் சிலம்பின் சத்தமும் கேட்கத்தொடங்கின. டில்லியின் சரித்திரத்தில் முந்நூற்று நாற்பது வருஷங்கள் சென்றன. பாபர் முதல்ஔரங்கசீப் வரையில் மொகலாய சக்ரவர்த்திகள் வீற்றிருந்து அரசு செலுத்திய இடத்தில் இப்போது முகம்மதுஷா என்பவன் அரசு புரிந்தான். அப்போது பாரஸீகத்திலிருந்து நாதிர்ஷாஎன்னும் கொடிய அரக்கன் பெரும் சைன்யத்துடன் படையெடுத்து வந்தான். மறுபடியும் 'சாந்தினிசவுக்'குக்கு ஆபத்து வந்தது. 'சாந்தினி சவுக்'குக்கு அருகில் இருந்த மசூதியின் கோபுரத்தில், உட்கார்ந்து கொண்டு நாதிர்ஷா தன் மூர்க்கப் படைகள் டில்லி வாசிகளைப் படுகொலைசெய்யும் காட்சியைப் பார்த்துக் களித்தான். கொலைக்குப் பிறகு கொள்ளையும் அடித்தான். மீண்டும் அந்த வீதியில் இரத்த ஆறு ஓடியது; இரத்த ஏரி தேங்கி நின்றது. இந்த பயங்கரசம்பவத்தின் ஞாபகார்த்தமாக அந்த வீதியின் ஒரு முனையிலுள்ள வாசலுக்குக் 'கூனிதர்வாஜா'(இரத்த வாசல்) என்னும் பெயர் இன்று வரையில் வழங்கி வருகிறது.
நாதிர்ஷா வந்து போன இருபது வருஷத்துக்கெல்லாம் அவனுடைய ஸ்தானத்துக்கு வந்திருந்த ஆமத்ஷா அப்தாலி என்பவன் டில்லி மீது படை எடுத்து வந்தான். நாதிர்ஷா பாக்கிவைத்து விட்டுப் போன செல்வத்தை எல்லாம் ஆமத்ஷா கொள்ளையடித்தான்; படுகொலையும்நடத்தினான். இந்தத் தடவையும் அந்த டில்லி நகரில் பெரும் கொடுமைக்கு உள்ளான பகுதி'வெள்ளி வீதி' தான். ஆமத்ஷாவுக்குப் பிறகு ஸிந்தியாக்களும், ஹோல்கார்களும்ரோஹில்லர்களும் படையெடுத்து வந்து தங்கள் பங்குக்குக் கொள்ளை யடிக்கும்கைங்கரியத்தைச் செய்தனர். கடைசி கடைசியாகப் பிரிட்டிஷாருடைய பெரும் கருணைக்கு டில்லி மாநகரம் பாத்திரமாயிற்று. 1857-ம் ஆண்டில் 'சிப்பாய்க் கலகம்' என்று அழைக்கப்பட்ட புரட்சி தோல்வியுற்றதும் பிரிட்டிஷ் துருப்புகள் டில்லியைப் பழி வாங்கின. ஒரு வாரம்நகரமெல்லாம் கொள்ளையும் கொலையுமாக இருந்தது. ஒரு வாரத்துக்குப் பிறகு பிரிட்டிஷ்அதிகாரிகள் தங்கள் சைன்யத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தார்கள். வரைமுறை இல்லாமல்கொலை செய்ததை நிறுத்தி, முறைப்படி விசாரித்துக் கலகக்காரர்களைத் தண்டிக்கத்தொடங்கினார்கள்! நாதிர்ஷாவும் ஆமத்ஷாவும் படுகொலை நடத்திய அதே வெள்ளி வீதியில் பிரிட்டிஷ் இராணுவ கோர்ட்டின் தூக்குமரம் நாட்டப்பட்டது. சுமார் ஆயிரம் பேர் தூக்கிலிடப்பட்டார்கள்.
அத்தகைய பயங்கரச் சம்பவங்களுக்கு இடமான சரித்திரப் பிரசித்தி பெற்ற 'சாந்தினிசவுக்'கென்னும் வெள்ளி வீதியில் சூரியா நடந்து சென்று கொண்டிருந்தான். நடந்துகொண்டிருக்கையில் அவனுடைய மனக்கண்ணின் முன்னால் மேற்கூறிய சரித்திர நிகழ்ச்சிகள்எல்லாம் வரிசைக்கிரமமாக வந்து கொண்டிருந்தன. அந்த நிகழ்ச்சிகளைக் கற்பனை செய்து பார்த்தபோது அவனுடைய உடம்பு சிலிர்த்தது. ஒவ்வொரு சமயம் தலை சுற்றுவது போலிருந்தது. இன்னொரு பக்கத்தில் அளவில்லாத அதிசயம் அவனைப் பற்றிக்கொண்டிருந்தது. இவ்வளவுகொடூரங்களுக்கும் பயங்கரங்களுக்கும் உள்ளான இந்த வெள்ளி வீதி இன்றைய தினம் எவ்வளவுகலகலப்பாயிருக்கிறது! எத்தனை கடைகள்? அவற்றில் எவ்வளவு விலை உயர்ந்த பொருள்கள்! வீதியில் நடப்பதற்கு இடமின்றி நெருங்கியிருக்கும் ஜனக்கூட்டத்தை என்னவென்று சொல்வது?எத்தனை விதமான ஜனங்கள்? எத்தனை நிலத்தினர்? எத்தனை மதத்தினர்? ஹிந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், வங்காளிகள், பஞ்சாபியர், தென்னிந்தியர், இங்கிலீஷ் டாம்மிகள்,அமெரிக்க நிபுணர்கள் அம்மம்மா! இது என்ன கூட்டம்? இது என்ன பணப் பெருக்கம்?அமெரிக்கர்கள் எப்படிப் பணத்தை வாரி இறைக்கிறார்கள்? 'சரித்திரம் திரும்பி வரும்' என்றுசொல்கிறார்களே?
ஒருவேளை 'மறுபடியும் இந்த வெள்ளி வீதிக்குத் துர்த்திசை ஏற்படுமா? கொள்ளையும்கொலையும் இங்கே நடக்குமா? இரத்த ஆறு ஓடுமா? ஜெர்மானியரோ, ஜப்பானியரோ, ருஷியரோ, இங்கே படையெடுத்து வருவார்களா? மறுபடியும் இந்த வெள்ளி வீதி ரணகளம்ஆகுமா...? இப்படியெல்லாம் சூரியா சிந்தித்துக்கொண்டே நடந்தான். மனம் சிந்தனை செய்துகொண்டிருக்கையில் கண்கள் தங்கள் வேலையைச் செய்து கொண்டிருந்தன. யாரையோ,எதையோ, அவனுடைய கண்கள் சுற்றிச் சுழன்று தேடிக் கொண்டிருந்தன. ஆயினும் பலன்கிட்டவில்லையென்று அவனுடைய முகத்தில் காணப்பட்ட ஏமாற்றமான தோற்றம் தெரிவித்தது. சூரியா வெள்ளி வீதியைக் கடந்து இன்னும் அப்பால் சென்று கடைசியாக ஜும்மா மசூதியைஅடைந்தான். ஷாஜஹான் சக்கரவர்த்தி கட்டியதும் இந்தியாவிலேயே பெரியதுமான அந்தகம்பீர மசூதியைக் கீழிருந்து அண்ணாந்து பார்த்தான். பிறகு அதன் படிகளில் ஏறினான், முக்கால்வாசிப் பார்த்தான். பிறகு சற்றுத் தூரத்திலிருந்த கோட்டையைப் பார்த்தான்.கோட்டைக்கும் மசூதிக்கும் நடுவிலிருந்த பகுதி ஒரு காலத்தில் ஜன நெருக்கம் வாய்ந்த பகுதியாயிருந்ததென்றும், அங்கிருந்த ஆயிரக்கணக்கான வீடுகளையும் மசூதிகளையும் பிரிட்டிஷ் துருப்புகள் பீரங்கி வைத்து இடித்து நாசமாக்கித் திறந்தவெளியாகச் செய்து விட்டார்கள் என்றும் நினைவு கூர்ந்தான். அவன் நின்று கொண்டிருந்த புகழ்பெற்ற ஜும்மா மசூதி கூட பிரிட்டிஷ் துருப்புகளின் ஆதிக்கத்தில் கொஞ்ச காலம் இருந்தது. தைமூரும் நாதிர்ஷாவும்ஆமத்ஷாவும் காட்டுமிராண்டிகள் என்று சொல்லத்தக்க பழைய காலத்து ராட்சதர்கள்.
ஆனால் படித்தவர்கள் என்றும் நாகரிகமடைந்தவர்கள் என்றும் சொல்லிக் கொள்ளும்பிரிட்டிஷார் இந்த டில்லி மாநகரில் செய்த அக்கிரமங்களைப்பற்றி என்னவென்று சொல்வது?அவற்றை எண்ணிப் பார்த்தபோது சூரியாவின் இரத்தம் கொதித்தது. ஹிந்துக்களும்முஸ்லிம்களும் தங்களுடைய அற்பமாற்சரியங்களை ஒழித்துப் பிரிட்டிஷாரை இந்தியாவை விட்டுஓட்டும் காலம் வருமா? பழைய டில்லியிலும் புது டில்லியிலும் யூனியன் ஜாக் கொடி இறங்கிஇந்திய சுதந்திரக் கொடி பறக்கும் நாள் வருமா? அந்த நாளைப் பார்க்கத் தனக்குக் கொடுத்துவைத்திருக்குமா...? இவ்விதம் சூரியா எண்ணமிட்டுக் கொண்டிருந்தபோது யாரோ தன் இடதுகையை இரும்புப் பிடியாகப் பிடித்ததை உணர்ந்து சூரியா திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 25 | 26 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
3.7 வெள்ளி வீதியிலே - Alai Osai - அலை ஒசை - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - வெள்ளி, டில்லி, அவனுடைய, சூரியா, பிரிட்டிஷ், மறுபடியும், வீதியில், பார்த்தான், எத்தனை, என்னும், கொண்டிருந்தன, கொண்டு, முகம்மது, சென்று, செய்து, என்றும், வந்தான், வந்தது, பெரும், நாதிர்ஷா, படையெடுத்து, டில்லியில், என்பவன், கொள்ளையும், குக்கு, ஆமத்ஷா, பார்த்தபோது, சொல்வது, கண்கள், ஜும்மா, டில்லியிலும், என்னவென்று, வரையில், துருப்புகள், இருந்தது, தங்கள், உள்ளான, தைமூர், நடந்தான், சாந்தினிசவுக், வீதிக்கு, சூரியாவின், அத்தகைய, நின்று, சரித்திரத்தில், பெருக்கமும், அமெரிக்க, பிரசித்தி, சாந்தினி, தைமூரும், வீதியின், கொள்ளையடித்தான், ஆயினும், முன்னால், வருஷங்கள், காலத்தில், கடைகளும், ஆபத்து, சத்தமும்