அலை ஒசை - 2.16 தேவபட்டணம் தேர்தல்
"என் உயிருக்குயிரான அருமைத் தோழி சீதாவுக்கு, உன்னுடைய அன்பான
கடிதம்கிடைத்தது. நீங்கள் எல்லாரும் தாஜ்மகாலுக்குப் போனது பற்றியும் ஆக்ரா
கோட்டையில்பார்த்த அதிசயங்களைப் பற்றியும் விவரமாக எழுதியிருந்ததைப் படித்து
அளவில்லாத சந்தோஷம்அடைந்தேன், ரொம்ப ரொம்ப வந்தனம். அதையெல்லாம் படித்தபோது எனக்கு
உங்களுடன் வந்து எல்லாக் காட்சிகளையும் பார்த்தது மாதிரியே இருந்தது. உங்களுடன்
வந்து நேரில் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே என்று வருத்தமாயும் இருந்தது.
அந்தப் பாக்கியம்எனக்கு எப்போது கிடைக்குமோ, தெரியவில்லை! இந்த ஜன்மத்தில்
கிடைக்கும் என்றேதோன்றவில்லை. இவரிடம் நீங்கள் எல்லாரும் தாஜ்மகால் பார்த்தது
பற்றிச் சொல்லி,"எப்போதாவது நாமும் போய் வரலாமா?" என்று கேட்டேன். வழக்கம் போல்
தூக்கி எறிந்துபேசிவிட்டார். "நம்முடைய தமிழ்நாட்டில் பார்க்கவேண்டியது எவ்வளவோ
இருக்கிறது.தஞ்சாவூர்ப் பெரிய கோவிலைப் பார்க்கவில்லை; மாமல்லபுரத்துக்
கற்கோயில்களைப் பார்க்கவில்லை. தாஜ்மகால் பார்க்காததுதான் குறையாய்ப்
போய்விட்டதாக்கும்!" என்றார். இவரிடம் ஏன் சொன்னோம் என்று ஆகிவிட்டது. எங்கள்
பேச்சை ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்த என் மாமியார் வேறே ஆரம்பித்துவிட்டாள். 'ஏதோ
காசி ராமேசுவரம்போகவேண்டும் என்று ஆசைப் படுவார்கள்; கேட்டதுண்டு. அந்த மாதிரி
புண்ணிய ஸ்தலங்களுக்குப் போனால் போகிற கதிக்காவது பிரயோஜனமாக இருக்கும். துருக்க
ராஜாக்கள் கட்டி வைத்த சமாதிகளைப் பார்க்க வேண்டுமென்று யாராவது ஆசைப்படுவார்களா?
இந்தக் காலத்துப் பெண் களுடைய புத்தி ஏன்தான் ப்படியெல்லாம் போகிறதோ,தெரியவில்லை!"
என்று ஒரு நாளெல்லாம் எனக்கு மண்டகப்படி செய்து கொண்டி ருந்தாள்!வெறும் வாயை
மெல்லுகிறவளுக்கு ஒரு பிடி அவல் கிடைத்ததுபோல் ஆயிற்று.
வளைகாப்புக் கலியாணத்துக்குப் பிறகு நான் இங்கே வந்ததிலிருந்து என்னுடையநிலைமை முன்னைவிட ரொம்ப மோசமாயிருக்கிறதடி, சீதா! நான் என்னவென்று சொல்வேன்?ஒரு விஷயத்தைக் கேள்! எங்கள் வீட்டுக்கு எதிர் வீட்டில் தாமோதரன்பிள்ளை என்று ஒருவர்இருக்கிறார் அவரும் வக்கீல்தான். என் மாமனாரும் அவரும் வெகு காலம் ரொம்பசிநேகிதமாயிருந்தார்களாம். தாமோதரம்பிள்ளையின் மகனுக்கு அமரநாத் என்று பெயர்.அமரநாத்துக்கும் இவருக்கும் ரொம்ப சிநேகிதம் . நம்ம சூரியா இங்கே படித்தபோது மூன்றுபேரும் சேர்ந்தாற்போலேயே இருப்பார்களாம். அமரநாத்துக்கு இரண்டு வருஷத்துக்கு முன்னால் கலியாணம் நடந்தது. பெண், திருநெல்வேலிப் பெண்; அவளுடைய தகப்பனார் டிபுடிகலெக்டராம். நம் இரண்டு பேரையும்விட அதிகமாகப் படித்தவள். படித்திருக்கிறோம் என்றகர்வம் கொஞ்சம் கூடக் கிடையாது. அவளுடைய கலியாணத்தின் போதே எனக்கும் அவளுக்கும்பழக்கம் ஏற்பட்டது. ஒரு வருஷத்துக்கு முன்னால் அவள் இந்த ஊருக்கு வந்ததிலிருந்து அவள்எனக்கு சிநேகிதியானாள். உன்னைப் போன்ற பிராண சிநேகிதியில்லாவிட்டாலும் பேச்சுத்துணைக்குச் சௌகரியமாயிருந்தது. வெளியில் எங்கும் போகாமல் வீட்டிலேயே அடைந்துகிடந்த எனக்கு, சித்ராவின் சிநேகிதம் ஆறுதலா யிருந்தது. தினசரி நானாவது அவள் வீட்டுக்குப்போவேன் அல்லது அவளாவது எங்கள் வீட்டுக்கு வருவாள். இம்மாதிரி நாங்கள் சிநேகமானதுஎங்கள் அகத்துக்காரர்களுக்கும் ரொம்பச் சந்தோஷமாயிருந்தது.
சீதா! அதெல்லாம் இப்போது பழங்கதையாகப் போய் விட்டது. இப்போது நாங்கள்ஒருவர் வீட்டுக்கு ஒருவர் போவதில்லை. ஒருவரை யொருவர் பார்ப்பதுமில்லை; பேசுவதுமில்லைகாரணம் என்ன தெரியுமா? நான் ராஜம்பேட்டைக்குப் போயிருந்தபோது இந்த ஊரில்முனிசிபாலிடி எலெக்ஷன் வந்ததாம். அந்த எலெக்ஷனில் எதிர் வீட்டுத் தாமோதரன்பிள்ளைநின்றாராம். என் மாமனாருடைய இன்னொரு சிநேகிதரான ராஜாராம்அய்யர் என்பவரும்நின்றாராம். என் மாமனார் ராஜாராமய்யருக்காக வேலை செய்தாராம். ஏதோ ஒரு கூட்டத்தில்தாமோதரன்பிள்ளையை 'வெள்ளைக்காரனுக்கு வால் பிடிக்கிறவன்' என்று சொன்னாராம்.அதற்காகத் தாமோதரன்பிள்ளை இவரைப் 'பாப்பாரப் புத்தியைக் காட்டி விட்டான்!' என்றுதிட்டிவிட்டாராம். இதிலிருந்து சண்டை முற்றிவிட்டது. இப்போது இரண்டு குடும்பத்துக்கும்பேச்சு வார்த்தையுமில்லை; போக்குவரத்துமில்லை. முப்பது வருஷமாகச் சிநேகிதர்களாகஇருந்தவர்கள் இப்போது 'குத்து வெட்டு' என்கிற நிலைமைக்கு வந்து விட்டார்கள். அடியே!சீதா! வயதானால் புத்தி கெட்டுப் போய் விடுமோடி! முனிசிபாலிடி என்றால், குப்பைத் தொட்டி கூட்டுகிற சமாசாரமாம்! தோட்டிகளை வைத்துத் தெருக் கூட்டும் வேலையைச் சரியாய்ச்செய்வதற்குதான் முனிசிபாலிடியாம்! சம்பளம் கிடையாதாம்! இந்தக் குப்பை கூட்டுகிற பதவிக்காக இப்படி இவர்கள் சண்டை போட்டுக்கொள்ள வேண்டுமா என்றுஆச்சரியமாயிருக்கிறது. இதன் காரணமாக எனக்கு இங்கே கிடைத்திருந்த ஒருசிநேகிதியையும் இழந்துவிட்டேன். சற்று நேரம் எதிர் வீட்டுக்கு போய்ப் பேசிக் கொண்டிருப்பதும் போய்விட்டது. வீடு அசல் சிறைச்சாலை ஆகிவிட்டது.
என்னுடைய கதை இருக்கட்டும், சீதா! நீ ரஜினிபூருக்குப் போனது பற்றிச் சுருக்கமாகஎழுதியிருந்தாய். ஏரியில் விழுந்து ஆபத்தில்லாமல் எழுந்ததாக எழுதியிருந்தாய். ஏதோ தமாஷ்என்று நானும் எண்ணினேன். ஆனால் சூரியா எழுதியிருந்த கடிதத்திலிருந்து உண்மைதெரிந்தது. பெரிய கண்டத்திலிருந்து நீ தப்பிப் பிழைத்தாயாமே? அதென்னடி, உன் அகத்துக்காரர் படகிலேயே இருந்து விட்டார்; யாரோ தாரிணி என்று ஒருத்தியாம், அவளும்உங்களோடு படகில் வந்தாளாம். அவள்தான் ஏரியில் குதித்து உன்னைக் காப்பாற்றினாளாமே?அவள் மட்டும் இருந்திராவிட்டால் உன்னுடைய கதி என்ன ஆகியிருக்கும்? என்னுடைய கதிதான்என்ன ஆகியிருக்கும்? ஏதோ ஒரு சமயம் எனக்கு நல்ல காலம் பிறக்கும். உன்னோடு கொஞ்சநாள் தங்கியிருக்கலாம், டில்லி - ஆக்ரா எல்லாம் பார்க்கலாம் என்று ஆசைப்பட்டுக்கொண்டிருக்கிறேன். நீ இப்படியெல்லாம் உன்னை அபாயத்துக்கு உட்படுத்திக் கொள்வது நன்றாயில்லை. உன் அகத்துக்காரரை நான் எபோதாவது பார்க்க நேர்ந்தால், அவரை நன்றாகத்திட்டுவது என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன். ஆண் பிள்ளைக்கு நீந்தத் தெரிய வேண்டாமா?நீந்தத் தெரியாவிட்டாலும் அப்படியா பார்த்துக் கொண்டு படகிலேயே உட்கார்ந்திருப்பது!இவரிடம் நேற்றுச் சொன்னபோது ரொம்பவும் வருத்தப்பட்டார். உன் அகத்துக்காரர் பேரில்கோபமும் பட்டார். "அவனும் ஒரு ஆண் பிள்ளையா?" என்றும் கேட்டு விட்டார். இவர் பேரில்எனக்கு எவ்வளவோ குறை இருக்கிறது. ஆனாலும் அந்த மாதிரி ஆபத்தான நிலைமையில் இவர் சும்மாயிருந்திருக்க மாட்டார் என்பது நிச்சயம்.
சென்ற வருஷம் இந்த ஊர்க் காவேரி வெள்ளத்தில் ஒரு சிறு பெண் முழுகிச் செத்துப்போக இருந்தாளாம். இவர் தைரியமாகக் காவேரியில் குதித்து நீந்திப் போய் அவளைக் கரைசேர்த்து உயிர் பிழைக்கச் செய்தாராம். இது விஷயத்தைப்பற்றி இந்தத் தேவபட்டணம் முழுவதும் சென்ற வருஷத்தில் பெருமையாகப் பேசிக் கொண்டார்கள். உன்னுடைய அகத்துக்காரர்அப்படி நடந்து கொண்டதைப் பற்றி எனக்கு உண்மையாகவே கோபமாயிருக்கிறது, சீதா! சூரியாவைக் கூட நான் நன்றாகத் திட்டிக் கடிதம் எழுதியிருக்கிறேன். உங்களோடு ஆக்ராவுக்கு வந்தவன் ரஜினிபூருக்கு வராமல் எதற்காகத் திரும்பி வரவேண்டும்? அப்படி என்ன தலை போகிறகாரியம் அவனுக்கு? இனிமேல் அப்படியெல்லாம் செய்யக்கூடாது என்றும், உன்னைப்பத்திரமாய்ப் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று எழுதியிருக்கிறேன். சீதா! நீயும் அவனைக்கொஞ்சம் கவனித்துக்கொள். சூரியாவை நினைத்தால் எனக்குப் பரிதாபமாயிருக்கிறது. ஊரை விட்டு, நாட்டை விட்டு, வீடு வாசலை விட்டு, டில்லிப் பட்டணத்துக்குப் போய், நல்ல சாப்பாடு கூடக் கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருக்கிறான். ஒரு அதிசயத்தைக் கேள்! என்னிடம்ஏதாவது பணம் இருந்தால் அனுப்பும்படி எழுதியிருக்கிறான். அல்லது என் கணவரிடம் கேட்டு வாங்கியாவது அனுப்பும்படி எழுதியிருக்கிறான். பணம் வேண்டும் என்று வீட்டுக்கு எழுதவும் மாட்டானாம்; அப்பா பணம் அனுப்பினால் பெற்றுக் கொள்ளவும் மாட்டானாம். இந்த மாதிரிப் பிள்ளை எங்கேயாவது உண்டா? கொஞ்சம் சூரியாவை எனக்காகப் பார்த்துக் கொள்.
குழந்தை வஸந்தி நாளொரு மேனியும் பொழுதொருவண்ணமுமாக வளர்ந்து வருகிறாள்என்று நம்புகிறேன். சமர்த்தாகப் பேசி விளையாடிக் கொண்டிருக்கிறாளா? வஸந்தி பிள்ளைக்குழந்தையாகப் பிறந்திருந்து எனக்குப் பிறப்பது பெண்ணாக இருக்கக்கூடாதா என்று அடிக்கடிஎனக்குத் தோன்றுகிறது. எதற்காக என்று சொல்ல வேண்டுமா? புதிரை நீயே அவிழ்த்துக்கொள். இப்படிக்கு, உன் பிராணசகி லலிதா. மேற்கண்ட கடிதத்தைச் சீதா படித்துவிட்டுக்கடிகாரத்தைப் பார்த்தாள் இரவு மணி 8.30 ஆகியிருந்தது. இன்னும் அவர் ஏன் வரவில்லை?தானும் குழந்தையும் வீட்டில் தனியாக இருக்கிற நாளாகப் பார்த்துத்தானா அவரும்வழக்கத்தைவிட நேரம் கழித்து வீட்டுக்கு வரவேண்டும்? ஆம்; அன்று சீதாவும் குழந்தையும்தன்னந்தனியாக அந்தப் புதுடில்லி வீட்டில் இருந்தார்கள். இதன் காரணம் என்னவென்பதைஅடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 14 | 15 | 16 | 17 | 18 | ... | 27 | 28 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
2.16 தேவபட்டணம் தேர்தல் - Alai Osai - அலை ஒசை - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - எனக்கு, வீட்டுக்கு, இப்போது, எங்கள், விட்டு, பார்த்துக், வீட்டில், இவரிடம், இரண்டு, உன்னுடைய, அகத்துக்காரர், படகிலேயே, விட்டார், ஆகியிருக்கும், குதித்து, ஏரியில், பேசிக், செய்தாராம், எல்லாரும், கூட்டுகிற, வேண்டுமா, பார்க்கலாம், என்னுடைய, நீந்தத், அனுப்பும்படி, எனக்குப், எழுதியிருக்கிறான், மாட்டானாம், வஸந்தி, சூரியாவை, வரவேண்டும், நீங்கள், என்றும், கேட்டு, எழுதியிருக்கிறேன், அல்லது, கொஞ்சம், ஆகிவிட்டது, பார்க்கவில்லை, உங்களுடன், மாதிரி, பார்க்க, இருக்கிறது, எவ்வளவோ, தெரியவில்லை, அந்தப், பார்த்தது, தாஜ்மகால், பற்றிச், இந்தக், புத்தி, தேவபட்டணம், சூரியா, வருஷத்துக்கு, முன்னால், அவளுடைய, சிநேகிதம், அவரும், வந்ததிலிருந்து, படித்தபோது, பற்றியும், தாமோதரன்பிள்ளை, இருந்தது