வடமலை நிகண்டு

வடமலை நிகண்டு, 17ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூலாகும். இதன் ஆசிரியர் ஈசுர பாரதியார் ஆவார். இறையூர் வடமலை நிகண்டு, பல்பொருட் சூடாமணி என்ற பெயர்களைப் பெற்றிருந்த இது, மூன்று பகுதிகளாக இருந்தது. இருப்பினும், இரண்டாவது பகுதியே தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் உ. வே. சாமிநாத அய்யர் என்பவரால் ஓலைச்சுவடி பாதுகாக்கப்பட்டது.1983 ஆம் ஆண்டு உ.வே.சா. நூல் நிலைய வெளியீடாக,. இரா. நாகசாமி அவர்கள் அதனைப் பதிப்பித்தார்.
இதில் 10 வருக்கத் தொகுதிகளும், அதில் 93 வருக்கங்களும் உள்ளன. அவ்வருக்கங்களில் மொத்தம் 1452 சூத்திரங்களும் அடங்கியுள்ளன.
|
உலக்கை யெனும்பெய ரோண நாளு முரோங்கலு மெனவே யுரைத்தனர் புலவர். | 251 |
|
உறுவ னெனும்பெயர் அசோகமர் கடவுளும் இருடியு மெனவே யியம்பப் பெறுமே. | 252 |
|
உறையுள் எனும்பெய ரூரு நாடும் வீட்டின் பெயரும் விளம்புவர் புலவர். | 253 |
|
உயவை யெனும்பெயர் கானை யாறுங் காக்கணங் கருவிளைப் பெயருங் கருதுவர். | 254 |
|
உழையெனும் பெயரே யாழி னரம்பும் இடமும் மானும் இயம்புவர் புலவர். | 255 |
|
உம்பல் எனும்பெயர் விலங்கினாண் பெயருங் குடிவழித் தோன்றலும் யானையுங் கூறுவர். | 256 |
|
உவாவெனும் பெயரினை யோனும் யானையும் ஈருவா வின்பெயர் தானும் விளம்புவர். | 257 |
|
உண்டை யெனும்பெயர் படையின துறுப்பும் திரண்ட வடிவின் பெயருஞ் செப்புவர். | 258 |
|
உளையெனும் பெயரே பரிக்க டிவாளத் தணிம யிராயவு மஃறிணை மயிரும் ஆண்பான் மயிரொடு சத்த வொலியுமாம். | 259 |
|
உடையெனும் பெயரே செல்வமும் கூறையும் குடைவேலு முடைமைப் பெயரும் கூறுவர். | 260 |
|
உணர்வெனும் பெயரே உளத்தின் தெளிவும் ஞானமு மெனவே நவிலப் பெறுமே. | 261 |
|
உரையெனும் பெயரே சத்த வொலியும் தேய்தலு மொழியுஞ் செப்புவர் புலவர். | 262 |
|
உவளக மெனும்பெயர் மதிலும் பள்ளமும் ஆய ரூருமோர் பக்கமும் வாவியும். | 263 |
| உயிரெனும் பெயரே சீவனுங் காற்றுமாம். | 264 |
|
உறழ்வெனும் பெயரிடை யீடு முவமையும் புணர்வும் செறிவும் புகலப் பெறுமே. | 265 |
| உருத்த லெனும்பெயர் தோன்றுதல் சினமுமாம். | 266 |
|
உக்கம் எனும்பெய ரிடையின் பக்கமும் விசிறியு மிடபப் பெயரும் விளம்புவர். | 267 |
|
உம்ப ரெனும்பெயர் உயர்நில மேடையும் தேவரும் விசும்பும் செப்பப் பெறுமே. | 268 |
|
உரமெனும் பெயரே யூக்கமும் ஞானமும் பெலமு மருமமும் பேசுவர் புலவர். | 269 |
|
உருவெனும் பெயரே நிறமும் வடிவமும் அட்டையின் பெயரு மாகு மென்ப. | 270 |
| உவப்பெனும் பெயரே யுயரமு மகிழ்ச்சியும். | 271 |
|
உறவி யெனும்பெயர் உயிர்நிலைக் களமும் நீரூற்றும் உறவும் எறும்பும் உணர்த்துவர். | 272 |
|
உறுப்பெனும் பெயரே யுடலு மங்கமும் படையின துறுப்பும் பகர்ந்தனர் புலவர். | 273 |
| உடலெனும் பெயரே யுடம்பும் பொருளுமாம். | 274 |
| உவணம் எனும்பெயர் கழுகும் பருந்துமாம். | 275 |
| உளர்தல் எனும்பெயர் உதறலும் வருடலும். | 276 |
| உள்ள மெனும்பெயர் நெஞ்சமு நினைவுமாம். | 277 |
| உழப்பெனும் பெயரே வலியு முச்சாகமும். | 278 |
|
உள்ள மெனும்பெயர் முயற்சியின் பெயரும் நெஞ்சின் பெயரு நிகழ்த்துவர் புலவர். | 279 |
|
உறுகண் எனும்பெயர் நோயும் துன்பமும் மிடியும் பயமும் விளம்பப் பெறுமே. | 280 |
|
உஞற்றெனும் பெயரே வழுக்குடன் ஒளிர்ட்சியுந் தாளாண் மையுமெனச் சாற்றினர் புலவர். | 281 |
| உறதி யெனும்பெயர் கல்வியும் நன்மையும். | 282 |
உகர வருக்கம் முற்றும்.
ஊகார வருக்கம்
|
ஊக்க மெனும்பெய ருள்ளத்தின் மிகுதியும் பெலமு முச்சாகமும் பேசப் பெறுமே. | 283 |
|
ஊழ்எனும் பெயரே பகையும் பழமையும் மரபும் வெயிலும் விதியும் வழங்குவர். | 284 |
| ஊதிய மெனும்பெயர் லாபமும் கல்வியும். | 285 |
|
ஊழ்த்த லெனும்பெயர் பதனழிவுஞ் செவ்வியும் நினைத்தலும் எனவே நிகழ்த்தப் பெறுமே. | 286 |
| ஊசி யெனும்பெயர் எழுத்தாணியுஞ் சூரியும். | 287 |
|
ஊறெனும் பெயரே தீண்டலுந் தீமையும் கொலையும் இடையூறுங் கூறப் பெறுமே. | 288 |
|
ஊற்றெனும் பெயரே யூற்றி னுடனே ஊன்றிய கோலும் உரைத்தனர் புலவர். | 289 |
|
ஊர்தி யெனும்பெயர் விமானமுந் தேரும் யானையும் பரியும் சிவிகையும் பாண்டிலும். | 290 |
ஊகார வருக்கம் முற்றும்.
எகர வருக்கம்
|
என்றூழ் எனும்பெயர் இரவியும் வெயிலும் கோடைக் காலமும் கூறப்பெறுமே. | 291 |
|
எல்லெனும் பெயரே யிரவியும் ஒளியும் இருளு மிகழ்ச்சியும் இயம்புவர் பெரியோர். | 292 |
|
எலியெனும் பெயரே யெலியின் விகற்பமும் பூர நாளொடு மதுவும் புகலுவர். | 293 |
|
எருவை யெனும் பெயர் கொறுக்கையுடனே கழுகுந் தாம்பிரப் பெயரும் கருதுவர். | 294 |
|
எறுழெனும் பெயரே தண்டா யுதமும் பெலமு மெனவே பேசப் பெறுமே. | 295 |
| எக்கர் எனும்பெயர் சொரிதலும் குவிதலும். | 296 |
|
எகின மென்னும்பெயர் புளிமாவு மன்னமும் காவரிமாவு நீர்நாயும் புளியின்றருவும் புகலப்பெறுமே. | 297 |
|
எஃகெனும் பெயரே வேலுங் கூர்மையும் உருக்கு மெனவே யுரைத்தனர் புலவர். | 298 |
| எள்த லெனும்பெயர் இகழ்தலு நகையுமாம். | 299 |
|
எற்றெனும் பெயரே யிரக்கமும் எறிதலும் அடித்தலும் எத்தன்மைத் தென்றலு மாமே. | 300 |
| எற்றுதல் எனும்பெயர் எறிதலும் புடைத்தலும். | 301 |
|
எண்ணெனும் பெயரே யெள்ளு மிலக்கமுஞ் சொதிடப் பெயரும் விசாரமு மெளிமையும். | 302 |
| எழிலெனும் பெயரே யிளமையு மழகுமாம். | 303 |
| எல்லை யெனும்பெயர் அளவையும் இரவியும். | 304 |
எகர வருக்கம் முற்றும்.
ஏகார வருக்கம்
| ஏல்வை யெனும்பெயர் வாவியும் பொழுதுமாம். | 305 |
|
ஏமம் எனும்பெயர் இன்பமும் வெண்ணீறுஞ் சேமமும் பொன்னுமே மாப்பு மயக்கும் காவலும் இரவுங் கருதுவர் புலவர். | 306 |
|
ஏறெனும் பெயரிடி யேற்றின் பெயரும் விலங்கி னாண்பாற் பெயரு மிடபமும் அசுபதிப் பெயரு மாகு மென்ப. | 307 |
| ஏனல் எனும்பெயர் தினைதினைப் புனமுமாம். | 308 |
|
ஏனாதி யெனும்பெயர் மயிர்வினை யோனும் மந்திரித் தந்திரிப் பெயரும் வழங்குக. | 309 |
|
ஏந்த லெனும்பெயர் பெருமையு முயரமும் தலைவனும் எனவே சாற்றினர் புலவர். | 310 |
|
ஏதி யெனும்பெயர் ஆயுதப் பொதுவும் வாளும் எனவே வகுத்தனர் புலவர். | 311 |
| ஏதம் எனும்பெயர் குற்றமும் துன்பமும். | 312 |
|
ஏணி யெனும்பெயர் எல்லையு முலகமு மானுங் கண்ணே ணியுமே வழங்குவர். | 313 |
|
ஏங்கல் எனும்பெயர் ஒலியும் இரங்கலும் ஏங்குதற் பெயரும் இயம்புவர் புலவர். | 314 |
|
ஏற்றல் எனும்பெயர் எதிர்ந்துபோர் செய்தலும் கோடலின் பெயருங் கூறுவர் புலவர். | 315 |
|
ஏரெனும் பெயரே யழகுமுழு பெற்றமும் உழவுடை யோனும் உரைக்கப் பெறுமே. | 316 |
| ஏனையெனும் பெயரிடைச் சொல்லும் ஒலியுமாம். | 317 |
| ஏவலெனும் பெயர் வியங்கோளும் வறுமையும். | 318 |
|
ஏல மெனும்பெய ரேலவி கற்பமும் மயிர்ச்சாந் துமென வழங்குவர் புலவர். | 319 |
ஏகார வருக்கம் முற்றும்.
ஐகார வருக்கம்
|
ஐயம் எனும்பெயர் பிச்சைகொள் கலனும் பிச்சையும் வெண்ணெயுஞ் சந்தே கமுமாம். | 320 |
|
ஐயை யெனும்பெயர் உமையும் துர்க்கையும் அருந்தவப் பெண்ணும் அரசாளும் காளியும் புதல்வியும் என்னப் புகன்றனர் புலவர். | 321 |
|
ஐயெனும் பெயரே குருவும் அரசனும் எழிலும் இருமலு மிடைச்சொல்லுங் கோழையும் தலைவனும் தாரமும் சாற்றப் பெறுமே. | 322 |
|
ஐயன் எனும்பெயர் குருவுஞ் சாத்துனுந் தந்தையு முதல்வனு மந்தணண் பெயருமாம். | 323 |
| ஐதெனும் பெயரே நொய்தும் விரைவுமாம். | 324 |
ஐகார வருக்கம் முற்றும்.
ஒகர வருக்கம்
|
ஒளியெனும் பெயரே யொண்சுட ரோனும் விதுவும் கனலும் விளக்கொடு கீர்த்தியும் கேட்டை யுமொளிப் பினிடமுங் கிரணமும். | 325 |
|
ஒலியெனும் பெயரே ஓசையும் காற்றும் இடியு மெனவே யியம்பப் பெறுமே. | 326 |
|
ஒழுக்க மெனும்பெயர் வழியும் குலமும் ஆசா ரமுமென அறியப் பெறுமே. | 327 |
|
ஒலியல் எனும்பெயர் ஒண்புனல் யாறும ணில்லுஞ் சருமமும் உடுத்த ஆடையுமாம். | 328 |
|
ஒளிவட்ட மெனும்பெயர் சக்கரா யுதமும் கண்ணா டியுமெனக் கருதுவர் புலவர். | 329 |
|
ஒண்மை யெனும்பெயர் நன்மையு மழகும் மிகுதியும் ஒழுங்கு மறிவும் விளம்புவர். | 330 |
| ஒதுக்க மெனும்பெயர் மறைவும் நடையுமாம். | 331 |
| ஒன்றெனும் பெயரோ ரெண்ணு முத்தியுமாம். | 332 |
|
ஒல்லை யெனும்பெயர் சிறுபொழுதும் விரைவும் தொல்லையும் எனவே சொல்லுவர் புலவர். | 333 |
| ஒதுங்கல் எனும்பெயர் ஒதுங்குதல் நடையுமாம். | 334 |
ஒகர வருக்கம் முற்றும்.
ஓகார வருக்கம்
|
ஓண மெனும்பெயர் மாதவ னாளும் வருபுனல் யாறும் வகுத்தனர் புலவர். | 335 |
|
ஓரை யெனும்பெயர் அரிவையர் கூட்டமும் அவர்விளை யாடலும் விளையாடு கலனும் இராசியின் பொதுவு மிடைச்சொல் லுமாமே. | 336 |
|
ஓங்க லெனும்பெய ருயரமு மலையும் மேடு மூங்கிலுந் தலைவனும் விளம்புவர். | 337 |
|
ஓடை யெனும்பெயர் வாவியின் பெயரும் யானை நுதலணி பட்டமும் கிடங்கும் ஒருகொடிப் பெயரும் உரைத்தனர் புலவர். | 338 |
|
ஒதை யெனும்பெயர் சத்த வொலியும் புரிசையுள் ளுயர்வும் பொருந்திய மேடையும் நதியும் நகரமும் நவிலப் பெறுமே. | 339 |
|
ஓரி யெனும்பெயர் முசுவும் நரியும் அரிவையர் மயிரொழித் தெல்லா மயிரும் கொடைதரு மொருவள்ளல் பெயருங் கூறுவர். | 340 |
|
ஓவியரெனும் பெயர் சித்திர காரரும் சிற்பநூல் வினைஞரும் செப்பப் பெறுமே. | 341 |
|
ஓட்ட மெனும்பெயர் மேலுதடும் தோல்வியும் ஓடுதற் பெயரும் உரைத்தனர் புலவர். | 342 |
| ஓதனம் எனும்பெயர் உணவும் சோறுமாம். | 343 |
|
ஓவெனும் பெயரே நீர்த்தகை கதவும் நீக்கமும் இரக்கக் குறிப்பின் வார்த்தையுமாம். | 344 |
|
ஓதிமம் எனும்பெயர் அன்னமும் வெற்பும் கவரி மாவின் பெயருங் கருதுவர். | 345 |
|
ஓதி யெனும்பெயர் வெற்பு மனனமும் பெண்பான் மயிரு மறிவும் பூஞையும் ஒத்தியு மெனவே யுரைக்கப் பெறுமே. | 346 |
|
ஒளியெனும் பெயர் யானைக் கூட்டமும் ஒழுங்கு மெனவே யுரைத்தனர் புலவர். | 347 |
ஓகார வருக்கம் முற்றும்.
2 வது ககர வருக்கத் தொகுதி
ககர அகர வருக்கம்
|
கலையெனும் பெயரே கல்வியு நூலு மானி னேறு மகர விராசியும் மதியின் பங்கு மரத்தின் சுவடு மாண்முகப் பெயருங் கால நுட்பமும் புடைவை யுஞ்செகுமே கலையும் புகலுவர். | 348 |
|
கனலி யெனும்பெயர் கனலு மருக்கனும் பன்றியு மெனவே பகரப் பெறுமே. | 349 |
|
கரமெனும் பெயரே கையுங் கழுதையும் கிரணமு நஞ்சுங் குடியிறைப் பெயருமாம். | 350 |
|
கழியெனும் பெயரே காலைக் காலமு மிகுதியுங் கழிமுகப் பெயரும் விளம்புவர். | 351 |
|
கவியெனும் பெயரே கவிவல் லோனும் குதிரை வாய்ப்பெய் கருவியுங் குரங்கும் வெள்ளியுங் கவிதை விகற்பமும் விளம்புவர். | 352 |
|
கவையெனும் பெயரே கவருங் காடும் எள்ளிளங் காயு மாயிலிய நாளுமாம். | 353 |
|
கணையெனும் பெயரே யம்புந் திரட்சியும் பூர நாளும் புகலப் பெறுமே. | 354 |
|
களிறெனும் பெயரே யத்த நாளும் எள்ளும் சுறாமுத லிவற்றி னாண்பாலும் யானையும் புகல்வரி னிதுணர்ந் தோரே. | 355 |
|
கள்வ னெனும்பெயர் கடக விராசியுங் கருநிறத் தவனொடு களிறு ஞெண்டுஞ் சோரனு முகவுஞ் சொல்லுவர் புலவர். | 356 |
|
கன்னி யெனும்பெயர் பெண்ணு மிளமையு மழிவிலாப் பொருளுங் குமரி யாறும் கற்றாழை யினொடு கன்னி யிராசியுந் துர்க்கையு மெனவே சொல்லப் பெறுமே. | 357 |
| கள்ளெனும் பெயர்தேன் மதுவுங் களவுமாம். | 358 |
|
கலியெனும் பெயரே கடையுகப் பெயரும் வலியு மொலியும் வலியோன் பெயருமாம். | 359 |
|
கணமெனும் பெயரே கால நுட்பமும் உடுவுங் கூட்டமும் நோயும் வட்டமும் திரட்சியின் பெயரின் விகற்பமுஞ் செப்புவர். | 360 |
|
கன்ன லெனும்பெயர் கரகமுங் கரும்பும் நாழிகை வட்டமு நாழிகைப் பெயரும் சருக்கரைப் பெயருங் குப்பமுஞ் சாற்றுவர். | 361 |
|
கடிகை யெனும்பெயர் கதவொடு தாளுந் துண்டமும் நாழிகைப் பெயருஞ் சொல்லுவர். | 362 |
|
கடியெனும் பெயரே காவலும் விரைவும் அச்சமுங் கூர்மையும் வரைவுஞ் சிறப்பும் விளக்கமும் புதுவையு மணமு முடுகலும் பேயு நெற்கரிப்பும் பேசுவர் புலவர். | 363 |
|
கழுதெனும் பெயரே காவற் பரணும் வண்டும் பேயும் வழங்கப் பெறுமே. | 364 |
|
கம்மெனும் பெயரே ககனமும் பிரமனும் தலைவனும் வெளுப்பும் புலனும் வாயுவும் சுவர்க்கமும் புத்தியுஞ் சொல்லுவர் புலவர். | 365 |
|
கயமெனும் பெயரே களிறும் ஆழமுங் குளமும் புனலுங் குறைவுமோர் நோயுமாம். | 366 |
| கமல மெனும்பெயர் தாமரை புனலுமாம். | 367 |
|
கவந்த மெனும்பெயர் தலைகுறை பிணமும் நீரும் பேயு நிகழ்த்துவர் புலவர். | 368 |
|
கனமெனும் பெயரே மேகமும் பாரமும் தேகமும் அடைகொடுத் தலுஞ்செம் பொன்னும் முட்டிய வண்டிலின் முலைக்கன முமாமே. | 369 |
|
கரக மெனும்பெயர் ஆலாங் கட்டியும் கங்கையுந் துளியுங் கமண்டல முமாமே. | 370 |
|
கந்தர மெனும்பெயர் கழுத்து மேகமும் மலைமுழை யுமென வழங்கப் பெறுமே. | 371 |
|
ககன மெனும்பெயர் காடுஞ் சேனையும் விசும்பு மெனவே விளம்பப் பெறுமே. | 372 |
|
கழையெனும் பெயரே கரும்பு மூங்கிலும் புணர்த நாட்பெயரும் புகலப் பெறுமே. | 373 |
|
கயினி யெனும்பெயர் அந்த நாளும் விதவையு மெனவே விளம்பப் பெறுமே. | 374 |
|
கடமெனும் பெயரே யானைத் திரளும் மற்றதன் கொடிறு மதமும் கானமும் யாக்கை யும்அருஞ் சுரப்பெயருங் கயிறும் நீதியுங் கும்பமு நெடுமநச் சாரலும் எதிர்ப்பை கடன்குட முழவு மியம்புவர். | 375 |
|
கவலை யெனும்பெயர் கவர்படு வழியும் துன்பமுஞ் செந்தினைப் பெயருமோர் கொடியுமாம். | 376 |
|
கடக மெனும்பெயர் கங்கணப் பெயரும் வட்ட வடிவு மலையின் பக்கமும் படைவீ டுமெனப் பகர்ந்தனர் புலவர். | 377 |
|
கட்சி யெனும்பெயர் காடுங் கூடும் கிடப்பிட முமெனக் கிளத்துவர் புலவர். | 378 |
|
கண்டக மெனும்பெயர் வாளுஞ் சுரிகையும் முள்ளுங் கானமு மொழியப் பெறுமே. | 379 |
|
கணியெனும் பெயரே மருத நன்னிலமும் வேங்கை மரமும் விளம்புவர் புலவர். | 380 |
| கங்கெனும் பெயர்கருந் தினைவரம் பருகுமாம். | 381 |
|
களமெனும் பெயர்களா மரமுங் கழுத்தும் கருநிற மும்போர்க் களமும் விடமுமாம். | 382 |
|
கடையெனும் பெயரே கதவு முடிவும் இடமு மெனவே யியம்பப் பெறுமே. | 383 |
|
கறையெனும் பெயரே கருமையு முரலுங் குருதி மாசுங் குடியிறைப் பெயருமாம். | 384 |
|
கண்ட மெனும்பெயர் கரியின் கச்சையுந் துண்டமு மெய்புகு கருவியும் வாளுங் கண்ட சர்க்கரையுந் தேசமுங் கழுத்தும் இடுதிரைப் பெயரும் இயம்புவர் புலவர். | 385 |
|
கதுப்பெனும் பெயரே யிருபான் மயிரும் கொடிறும் விலங்கின் றிரளுங் கூறுவர். | 386 |
|
கந்தெனும் பெயரே பண்டி யுளிரும்பும் கம்பமும் திரட்சி யாக்கையின் மூட்டும் ஆதார நிலையும் காய்க்கு மரமுமாம். | 387 |
|
கடிப்ப மெனும்பெயர் காதணிப் பொதுவும் அணிகலச் செப்பும் அச்சு மணியும் வாச்சியத் தொன்றும் பதக்க மெனவே பகர்ந்தனர் புலவர். | 388 |
|
கன்றெனும் பெயரே யொருசார் விலங்கினது கன்றும் இளமரக் கன்றும் சிறுமையும் கைவளை விகற்பமுங் கருதப் பெறுமே. | 389 |
|
கலாப மெனும்பெயர் மேகலைப் பெயரும் மணிவடப் பெயரு மயிலிறகு மாமே. | 390 |
|
கரண்ட மெனும்பெய ரணிகலச் செப்பும் நீர்க்காக் கையுமென நிகழ்த்துவர் புலவர். | 391 |
|
கரண மெனும்பெயர் மெய்க்கூத்தின் விகற்பமும் கலவியுங் கணிதமும் புலனுங் கருதுவர். | 392 |
|
கல்லெனும் பெயரே யருவியு மோசையும் மலையுங் கற்பொதுப் பெயரும் வழங்குப. | 393 |
| கவிகை யெனும்பெயர் குடையுங் கொடையுமாம். | 394 |
|
கணிச்சி யெனும்பெயர் மழுவுந் தறிகையுந் தோட்டியு முளியுஞ் சொல்லுவர் புலவர். | 395 |
|
கதையெனும் பெயரே காரணச் சொல்லுந் தண்டா யுதமொடு வார்த்தையுஞ் சாற்றுவர். | 396 |
|
கச்ச மெனும்பெயர் புரோசக் கயிறும் மரக்காலு மளவும் வழங்கப் பெறுமே. | 397 |
| கதவெனும் பெயரே கபாடமும் காவலும். | 398 |
|
கறுப்பெனும் பெயரே கருமையும் சினமும் வெறுத்திடு சினக்குறிப் புமென விளம்புவர். | 399 |
|
கம்பலை யெனும்பெயர் நடுக்கமு மச்சமுந் துன்பமுஞ் சத்த வொலியுஞ் சொல்லுவர். | 400 |
| கம்பம் எனும்பெயர் நடுக்கமும் தூணுமாம். | 401 |
| கண்டூ வெனும்பெயர் காஞ்சொறி தினவுமாம். | 402 |
|
கந்த மெனும்பெயர் மணமு மைம்புலனும் கிழங்கு மெனவே கிளத்துவர் புலவர். | 403 |
|
கறங்கெனும் பெயரே காற்றாடி வட்டமும் கழலுஞ் சத்த வொலியும் சொல்லுவர். | 404 |
| கஞற லெனும்பெயர் பொலிவும் சிறுமையும். | 405 |
|
கரிணி யெனும்பெயர் கடகரிப் பெயரும் பிடியின் பெயரும் பேசுவர் புலவர். | 406 |
|
கதலி யெனும்பெயர் காற்றா டியுடனே வாழையுந் துவசமும் தேற்றா மரமுமாம். | 407 |
|
கடவு ளெனும்பெயர் நன்மையுந் தெய்வமும் முனிவன் பெயரு மொழியப் பெறுமே. | 408 |
|
கணக்கெனும் பெயரே கலைகளின் விகற்பமும் எண்ணின் பெயரும் இயம்புவர் புலவர். | 409 |
|
கச்சை யெனும்பெயர் கவசமும் கயிறும் தழும்பு மெனவே சாற்றினர் புலவர். | 410 |
|
கயிலெனும் பெயர்பூ ணின்கடைப் புணர்வும் பிடர்த்தலை பெயரும் பேசப் பெறுமே | 411 |
|
கஞ்ச மெனும்பெயர் கமலமுந் தாளமும் வெண்கலசமும் அப்ப விகற்பமுங் கஞ்சாவும் கண்ணா டியுமெனக் கருதுவர் புலவர். | 412 |
|
கலிங்க மெனும்பெயர் ஊர்க்குருவியும் புடைவையும் வானம் பாடியும் கலிங்க தேசமுமாம். | 413 |
| கந்தருவ மெனும்பெயர் பெண்ணோடு குதிரையாம். | 414 |
|
சுகமெனும் பெயரே புள்ளின் பொதுவும் அம்பின் பெயரு மாகு மென்ப. | 415 |
|
கவடெனும் பெயரே புரோசக் கயிறும் மரத்தின் கவடு மனக்க படமுமாம். | 416 |
|
கருமை யெனும்பெயர் கறுப்பும் பெருமையும் பெலமும் புலவோர் பேசப் பெறுமே. | 417 |
|
கரேணு வெனும்பெயர் கொலையானை யினொடு பிடியா னையுமெனப் பேசப் பெறுமே. | 418 |
|
கனைத்த லெனும்பெயர் ஒலித்தலின் பெயரும் திரண்ட விருளின் பெயருஞ் செப்புவர். | 419 |
|
கடைப்பிடி யெனும்பெயர் மறப்பிலா தவனும் தேற்றமு மெனவே செப்பப் பெறுமே. | 420 |
|
கட்டளை யெனும்பெயர் இட்டிகை யியற்றலுந் தத்துவ விகற்பமு நிறையறி கருவியும் பிறவின ஒப்பும் ஓரிராசியும் பேசுவர். | 421 |
| கண்ட லெனும்பெயர் கைதைநீர் முள்ளியாம் | 422 |
| கரைதல் எனும்பெயர் ஒலித்தல் கூவுதலுமாம். | 423 |
| கதழ்வெனும் பெயரே சிறப்பும் வேகமுமாம். | 424 |
| களியெனும் பெயரே களிப்பொடு குழம்புமாம். | 425 |
|
கத்திகை யெனும் பெயர் சிறுகொடிப் பெயரும் தொடையல் விகற்பமும் வாசந்தியும் சொல்லுவர். | 426 |
| கந்துக மெனும்பெயர் குதிரையும் பந்துமாம். | 427 |
|
கப்பண மெனும்பெயர் கைவேல் விகற்பமும் இரும்பினிற் புரிந்திடு நெருஞ்சிமுட் பெயருமாம். | 428 |
| கலாமெனும் பெயரே கொடுமையும் சினமுமாம். | 429 |
|
கரியெனும் பெயரே களிறுஞ் சாட்சியும் இருந்தையு மெனவே யியம்புவர் புலவர். | 430 |
|
கரீர மெனும்பெயர் மிடாவும் அகத்தியும் தந்தியின் பல்லடிப் பெயருஞ் சாற்றுவர். | 431 |
| கனவெனும் பெயரே கனாவு மயக்கமும். | 432 |
|
கட்ட லெனும்பெயர் களைதலும் பிணித்தலும் தடுத்தலு மெனவே சாற்றினர் புலவர். | 433 |
| கந்த னெனும்பெயர் முருகனும் அருகனும். | 434 |
|
களரி யெனும்பெயர் போர்க்களமும் காடும் கருமஞ் செய்யிடமுங் கருதுவர் புலவர். | 435 |
|
கறங்க லெனும்பெயர் சுழற்றுதலு மொலியும் வளைதடிப் பெயரும் வழங்கப் பெறுமே. | 436 |
|
கற்பக மெனும்பெயர் கற்பக தருவும் சொர்க்கமும் பிரமன் வாழ்நாளுஞ் சொல்லுவர். | 437 |
| கடுத்தல் எனும்பெயர் உவமையும் விரைவுமாம். | 438 |
| கதவ மெனும்பெயர்க் கபாடமும் காவலும். | 439 |
|
கரியவ னெனும்பெயர் கண்ணனிந் திரனுடன் சனியின் பெயரும் சாற்றப் பெறுமே. | 440 |
|
கரிலெனும் பெயரே கொடுமையுங் குற்றமும் காழ்த்தலு மெனவே கருதுவர் புலவர். | 441 |
|
கலுழி யெனும்பெயர் கானி யாறும் கலங்கிய நீருங் கருதப் பெறுமே. | 442 |
|
கவன மெனும்பெயர் காடுங் கலக்கமும் விரைவு மெனவே விளம்புவர் புலவர். | 443 |
|
கழித்த லெனும்பெயர் மிகுதலுஞ் சாதலும் கடத்தலு மெனவே கருதப் பெறுமே. | 444 |
|
கழலெனும் பெயரே கழங்குஞ் செருப்பும் காலுங் காலணிப் பெயருங் கருதுவர். | 445 |
|
கழும லெனும்பெயர் மயக்கமும் பற்றும் நிறைவின் பெயரு நிகழ்த்துவர் புலவர். | 446 |
|
கயமெனும் பெயரே மென்மையும் பெருமையும் களவின் பெயருங் கருதப் பெறுமே. | 447 |
|
களப மெனும்பெயர் யானைக் கன்றும் கலவையுஞ் சாந்தும் கருதப் பெறுமே. | 448 |
|
கம்புள் எனும்பெயர் சம்பங் கோழியுஞ் சங்கின் பெயருஞ் சாற்றப் பெறுமே. | 449 |
|
கண்ணெனும் பெயரே கணுவு மூங்கிலும் இடத்தின் பெயரும் விழியு மியம்புவர். | 450 |
|
கருவி யெனும்பெயர் கவசமும் யாழும் பலவினைப் பெயருந் தொடர்பு மீட்டமுந் துணைக்கா ரணமுந் துகிலு மாயுதமும் கசையும் பல்லியப் பெயருங் கலணையுந் தொகுதியு மெனவே சொல்லுவர் புலவர். | 451 |
|
கடுவெனும் பெயரே கடுமரப் பெயரும் விடமும் கடுத்தலும் விளம்பப் பெறுமே. | 452 |
|
கழங்கெனும் பெயரே வேல னாடலுங் கொடியின் கழலுங் கூறுவர் புலவர். | 453 |
|
கலமெனும் பெயரோ ரெண்ணுமா பரணமும் உண்கல மரக்கல மட்கலம் யாவுமாம். | 454 |
| கஞ்ச னெனும்பெயர் பிரமனுங் குறளனும். | 455 |
|
கவ்வை யெனும்பெயர் கவலையுந் துன்பமும் ஆர வாரத்தின் பெயரு மாமே. | 456 |
|
கரையெனும் பெயர்நீர்க் கரையுஞ் சேர்க்கையின் சொல்லின் பெயருஞ் சொல்லப் பெறுமே. | 457 |
|
கண்ணுத லெனும்பெயர் கறைமிடற் றிறையையும் நினைத்தலின் பெயரு நிகழ்த்துவர் புலவர். | 458 |
ககர வருக்கம் முற்றும்.
ககர ஆகார வருக்கம்
|
காரி யெனும்பெயர் சனியுஞ் சாத்தனுங் கருமையுங் காகமுங் கரிக்கு ருவியும் வடுகக் கடவுளுந் தெய்வேந் திரனும் கடுவுமோர் வள்ளலுங் கருதப் பெறுமே. | 459 |
|
கால மெனும்பெயர் விடியற் காலமும் விடிந்த பிற்காலமு முக்கா லமுமாம். | 460 |
|
காலெனும் பெயரே காற்றுங் கூற்றுந் தாளும் பொழுதுந் தறியு மளவையும் வழியுந் தேரி னுருளும் வாய்க்காலும் பெலமு மலர்க்காம்பு மிடமும் பிள்ளையும் முளையு மெனவே மொழிந்தனர் புலவர். | 461 |
|
காள மெனும்பெயர் கருமையு நஞ்சும் ஊது சின்னத்தின் வருக்கமு முரைப்பர். | 462 |
|
காரெனும் பெயரே மாரிக் காலமும் கறுவிய கருமங் கடைமுடி வளவும் தவிராச் சினமு நீருங் கருங்குரங்கும் உழவின் பருவமு மேகமுங் கூந்தலுங் கருமையு மிருளும் வெள்ளாடுங் கருதுவர். | 463 |
|
காஞ்சி யெனும்பெயர் காஞ்சி நன்னகரமும் மேகலைப் பெயருமோர் பண்ணுமோர் மரமுமாம். | 464 |
|
காண்டை யெனும்பெயர் கற்பா ழியினொடு தவத்தோ ரிடமுஞ் சாற்றப் பெறுமே. | 465 |
| காந்தார மெனும்பெய ரிசையுங் காடுமாம். | 466 |
|
காமர மெனும்பெய ரிசைப் பொதுப்பெயரும் அத்த நாளு மோரிசையு மடுப்புமாம். | 467 |
|
காளை யெனும்பெயர் பாலைக் கதிபனும் இளமையோன் பெயரு மெருதும் இயம்புவர். | 468 |
|
காய மெனும்பெயர் கறியின் கரிப்பும் ஆகமும் விசும்பும் பெருங்கா யமுமாம். | 469 |
|
காத்திர மெனும்பெயர் களிற்றின் முற்காலும் ஆக்கையுங் கனமும் கோப முமாமே. | 470 |
|
காசெனும் பெயரே மணியின் கோவையும் குற்றமுங் காசின் விகற்பமும் கூறுவர். | 471 |
|
காவி யெனும்பெயர் கள்ளும் குவளையும் காவிக் கல்லுங் கருதப் பெறுமே. | 472 |
| காழக மெனும்பெயர் கருநிறந் தூசுமாம். | 473 |
| கான மெனும்பெயர் காடு மிசையுமாம். | 474 |
|
காகுளி யெனும்பெயர் மந்த விசையொடு நாசியி னெழுமொலி தவிசு நவிலுவர். | 475 |
|
கான லெனும்பெயர் கடற்கரைச் சோலையும் மலைசார் சோலைப்பெயரு நல்லொளியும் பேய்த்தேர்ப் பெயரும் பேசப் பெறுமே. | 476 |
|
காவெனும் பெயரே காடிமலர்ச் சோலையும் துலாமுங் காத்தலுந் தோட்சுமைப் பெயருமாம். | 477 |
|
காசை யெனும்பெயர் புற்பிடிப் பெயரும் நாணலும் காசை மரமு நவிலுவர். | 478 |
|
காண மெனும்பெயர் பொன்னும் பொற்காசும் பரியூ ணுஞ்செக்கு மோர்கட் செந்துமாம். | 479 |
|
காம்பு எனும்பெயர் மலர்க்காம்பு மூங்கிலும் பட்டின் விகற்பமும் பகரப் பெறுமே. | 480 |
|
காழெனும் பெயரே மணியின் கோவையு மரத்தின் வயிரமும் விதையும் பரலுமாம். | 481 |
|
காழிய ரெனும்பெயர் கடற்கழிப் பரதரும் ஈரங் கோலியர் பெயரும் இயம்புவர். | 482 |
| கானெனும் பெயரே காடு மணமுமாம். | 483 |
|
காப்ப, எனும்பெயர் வெண்ணீருங் காவலும் தூசுங் கதவும் சொல்லுவர் புலவர். | 484 |
| காத லெனும்பெயர் விருப்பமுங் கோறலும். | 485 |
|
காலிலி யெனும்பெய ரருணனும் சனியும் பாம்பு மெனவே பகரப் பெறுமே. | 486 |
|
காண்ட மெனும்பெயர் காடுந் தீர்த்தமுந் தூசு நூன்முடிவும் படைக்கலப் பொதுவும் அம்புங் கோலு மணிகலச் செப்பும் குதிரை யுங்கமண் டலமு மியம்புவர். | 487 |
| காதை யெனும்பெயர் கதையொடு சொல்லுமாம். | 488 |
|
காம னெனும்பெயர் கணைவேள் பெயரும் ஐந்தரு விறைவன் பெயரு மாமே. | 489 |
|
காம ரெனும்பெயர் கட்ட ழகுடனே விருப்பமு மெனவே விளம்புவர் புலவர். | 490 |
| காம மெனும்பெயர் விரகமும் விருப்பும். | 491 |
ககர ஆகார வருக்கம் முற்றும்.
ககர இகர வருக்கம்
|
கிடக்கை யெனும்பெயர் கிளர்புவிப் பெயரும் சயனமு மென்னச் சாற்றப் பெறுமே. | 492 |
|
கிழமை யெனும்பெயர் குணமு முரிமையும் வாரமு மெனவே வழங்குவர் புலவர். | 493 |
|
கிளையெனும் பெயரே மூங்கிலும் சுற்றமும் கிளைத்தலு மோர்பண் பெயருங் கிளத்துவர். | 494 |
|
கிட்டி யெனும்பெயர் தலையீற் றாவும் தாளமு மெனவே சாற்றுவர் புலவர். | 495 |
|
கின்னர மெனும்பெயர் கின்னர மிதுனமும் யாழின் பெயரு நீர்ப்பறவையு மாந்தையும். | 496 |
|
கிடுகெனும் பெயரே தேர்மரச் சுற்றும் பரிசையு மெனவே பகரப் பெறுமே. | 497 |
|
கிளரெனும் பெயரே கிளர்த்தெழு கிரணமும் கோட்டு மலர்ப்பூந் தாதுங் கூறுவர். | 498 |
|
கிஞ்சுக மெனும்பெயர் முண்முருக் குடனே சென்னிறப் பெயருஞ் செப்பப் பெறுமே. | 499 |
| கிள்ளை யெனும்பெயர் கிளியுங் குதிரையும். | 500 |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வடமலை நிகண்டு, Vadamalai Nigandu, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்

