முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 5.035.திருப்பழனம்
ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 5.035.திருப்பழனம்

5.035.திருப்பழனம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஆபத்சகாயர்.
தேவியார் - பெரியநாயகியம்மை.
1417 | அருவ னாய்அத்தி யீருரி போர்த்துமை உருவ னாயொற்றி யூர்பதி யாகிலும் பருவ ரால்வயல் சூழ்ந்த பழனத்தான் திருவி னாற்றிரு வேண்டுமித் தேவர்க்கே. |
5.035.1 |
அருவத் திருமேனியுடையவனாய் யானையின் ஈரப்பட்ட உரியைப் போர்த்தவனாய். உமையை ஒரு பாகத்தில் உடையவனாய் ஒற்றியூரைத் தன்பதியாக் கொண்டவன் ஆயினும், பருத்த வரால் மீன்கள் நிறைந்த வயல்கள் சூழ்ந்த பழனம் என்னும் தலத்தினுள்ளான் அருட்செல்வத்தினால் இத்தேவர்களுக்குச் செல்வம் பெருகுதலை விரும்பும்.
1418 | வையம் வந்து வணங்கி வலங்கொளும் ஐய னையறி யார்சிலர் ஆதர்கள் பைகொ ளாடர வார்த்த பழனன்பால் பொய்யர் காலங்கள் போக்கிடு வார்களே. |
5.035.2 |
படங்கொண்ட பாம்பை அரையில் ஆர்த்துக் கட்டிய பழனத்தலத்து இறைவனும், உலகத்தினுள்ளார் எல்லாரும் வந்து வணங்கி வலம் கொள்ளுதற்குரிய தலைவனும் ஆகிய பெருமானைச் சில குருடர்கள் அறியார்; சில பொய்யர்கள் வணங்காது வீண் காலங்கள் போக்குவர்.
1419 | வண்ண மாக முறுக்கிய வாசிகை திண்ண மாகத் திருச்சடைச் சேர்த்தியே பண்ணு மாகவே பாடும் பழனத்தான் எண்ணும் நீர் அவ னாயிர நாமமே. |
5.035.3 |
அழகுபெற முறுக்கப்பெற்ற வட்டமாகிய திருச்சடையிற் சேர்த்து உறுதியாகக் கட்டி முடித்துப் பண் பாடும் இறைவனாகிய பழனத்தலத்துப் பெருமானின் ஆயிரம்நாமங்களை நீர் எண்ணுவீராக.
1420 | மூர்க்கப் பாம்பு பிடித்தது மூச்சிட வாக்கப் பாம்பினைக் கண்ட துணிமதி பாக்கப் பாம்பினைப் பற்றும் பழனத்தான் தார்க்கொண் மாலை சடைக்கணிந் திட்டதே. |
5.035.4 |
பிடித்த கொடுமையை உடைய பாம்பு நெடுமூச்சுவிடவும், அப்பாம்பினைக்கண்ட பிறைமதி நடுங்கிக் காண அப் பாம்பைப் பற்றியாடுபவனாகிய கொன்றைத்தாரும் மாலையும் உடைய பழனத்தலத்துப் பெருமான் இவற்றைச் சடைக்கணிந்திட்டது என்னையோ?
1421 | நீல முண்ட மிடற்றினன் நேர்ந்ததோர் கோல முண்ட குணத்தால் நிறைந்ததோர் பாலு முண்டு பழனன்பா லென்னிடை மாலு முண்டிறை யென்றன் மனத்துளே. |
5.035.5 |
நேர்ந்ததாகிய கோலமாக நஞ்சினை உண்ட குணத்தால் நிறைந்த நீலகண்டனும், பழனத்தலத்தின் கண் உள்ள இறைவனும் ஆகிய பெருமானிடத்து என்றன் மனத்துள் சிறிது மயக்கம் உளதாகின்றது.
1422 | மந்த மாக வளர்பிறை சூடியோர் சந்த மாகத் திருச்சடை சாத்துவான் பந்த மாயின தீர்க்கும் பழனத்தான் எந்தை தாய்தந்தை யெம்பெரு மானுமே. |
5.035.6 |
பெருமை தரும்படியாக வளர்பிறையைச் சூடி ஒரு சந்தமாகத் திருச்சடை சாத்துவானும், பந்தமாயினவற்றைத் தீர்ப்பானும் ஆகிய திருப்பழனத்து இறைவன் எந்தையும், தாயும், தந்தையும், எம்பெருமானும் ஆவன்.
1423 | மார்க்க மொன்றறி யார்மதி யில்லிகள் பூக்க ரத்திற் புரிகிலர் மூடர்கள் பார்க்க நின்று பரவும் பழனத்தான் தாட்க ணின்று தலைவணங் கார்களே. |
5.035.7 |
எல்லோரும் பார்க்க நின்று பழனத்தின்கண் பரவுவார்க்கு அருள் வழங்கும் இறைவனின் திருவடிக்கண் நின்று தலைவணங்காதவர்கள், அறிவிலிகளாகி வழியொன்றறியாதவர்களும், பூக்களைக்கொண்டு கரத்தால் தொழ விழையாத மூடர்களும் ஆவர்.
1424 | ஏறி னாரிமை யோர்கள் பணிகண்டு தேறு வாரலர் தீவினை யாளர்கள் பாறி னார்பணி வேண்டும் பழனத்தான் கூறி னானுமை யாளொடுங் கூடவே. |
5.035.8 |
இமையோர்களாகிய தேவர்கள் பணி பல கண்டு தம் பதவியினின்றும் மேலே உயர்ந்தது கண்டும். தீவினையாளர்கள் தௌவடைந்தாரல்லர். இழிந்தவராய மக்கள் பணியையும் விரும்பும் பழனத்தலத்து இறைவன் உமையாளொடுங் கூடி ஒரு கூறனாயினன்.
1425 | சுற்று வார்தொழு வார்சுடர் வண்ணன்மேல் தெற்றி னார்திரி யும்புரம் மூன்றெய்தான் பற்றி னார்வினை தீர்க்கும் பழனனை எற்றி னான்மறக் கேனெம் பிரானையே. |
5.035.9 |
திரியும் புரங்கள் மூன்றையும் எய்தவனும், பற்றியவர்களுடைய வினைகளைத் தீர்க்கும் பெருமானுமாகிய பழனத்தலத்து இறைவன் சுற்றுவாரையும் தொழுவாரையும் மேலே உயர்த்தும் ஒளிவண்ணனாயுள்ளனன்; எம்பெருமானை எதனால் அடியேன் மறக்கக்கூடும்?
1426 | பொங்கு மாகடல் சூழிலங் கைக்கிறை அங்க மான இறுத்தருள் செய்தவன் பங்க னென்றும் பழன னுமையொடும் தங்கன் தாளடி யேனுடை யுச்சியே. |
5.035.10 |
பழனத்தலத்து இறைவன், பொங்குகின்ற பெருங் கடல் சூழ்ந்த இலங்கைக்கரசனாம் இராவணனது அங்க மானவற்றை இறுத்து அருள்செய்தவனும், உமையொருபங்கனும், அடியேனுடைய உச்சியிலே தன் தாளிணைகளைத் தங்குமாறு செய்தவனும் ஆவான்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 33 | 34 | 35 | 36 | 37 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்பழனம் - ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - பழனத்தான், இறைவன், பழனத்தலத்து, சூழ்ந்த, தீர்க்கும், நின்று, பாம்பு, குணத்தால், திருச்சடை, திருமுறை, பழனத்தலத்துப், பார்க்க, பாடும், நிறைந்த, திருச்சிற்றம்பலம், விரும்பும், வணங்கி, திருப்பழனம், காலங்கள், இறைவனும்