முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.056.திருப்பாற்றுறை
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.056.திருப்பாற்றுறை

1.056.திருப்பாற்றுறை
பண் - பழந்தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - பழந்தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - திருமூலநாதர்.
தேவியார் - மோகாம்பிகையம்மை.
601 |
காரார் கொன்றை கலந்த முடியினர் சீரார் சிந்தை செலச்செய்தார் பாரார் நாளும் பரவிய பாற்றுறை யாரா ராதி முதல்வரே. |
1.056.1 |
உலக மக்கள் நாள்தோறும் வந்து வழிபட்டுப் போற்றும், ஆத்தி மலர் அணிந்த திருப்பாற்றுறையில் விளங்கும் ஆதிமுதல்வராகிய பெருமானார் கார்காலத்தே மலரும் கொன்றை மலர் மாலை சூடிய திருமுடியினராய் அன்பு கனிந்த நம் சிந்தையைத் தம்மிடமே செல்லச் செய்தார்.
602 |
நல்லா ரும்மவர் தீய ரெனப்படும் சொல்லார் நன்மலர் சூடினார் பல்லார் வெண்டலைச் செல்வரெம் பாற்றுறை எல்லா ருந்தொழு மீசரே. |
1.056.2 |
பற்கள் பொருந்திய வெண்மையான தலையோட்டை அணிந்தவரும், எல்லாராலும் தொழப்படுபவருமாகிய எம் திருப்பாற்றுறைச் செல்வராகிய ஈசர், நல்லவருக்கு நல்லவராவர். தீயை ஏந்தியதால் தீயர் எனவும் படுவார். அவர் நல்ல மலரைச் சூடியவர்.
603 |
விண்ணார் திங்கள் விளங்கு நுதலினர் எண்ணார் வந்தெ னெழில்கொண்டார் பண்ணார் வண்டினம் பாடல்செய் பாற்றுறை உண்ணா ணாளு முறைவரே. |
1.056.3 |
இயற்கையில் பண்ணிசை போல முரலும் வண்டினங்கள் பாடும் திருப்பாற்றுறையுள் எக்காலத்தும் உறைபவரும், விண்ணகத்தே தவழும் திங்கள் விளங்கும் திருமுடியினரும் ஆகிய இறைவர் என் இதயத்தில் இருப்பவராய் வந்து என் எழில்நலம் அனைத்தையும் கவர்ந்தார்.
604 |
பூவுந் திங்கள் புனைந்த முடியினர் ஏவி னல்லா ரெயிலெய்தார் பாவந் தீர்புனன் மல்கிய பாற்றுறை ஓவென் சிந்தை யொருவரே. |
1.056.4 |
மூழ்கியவருடைய பாவங்களைப் போக்கும் தீர்த்த நலம் உடைய திருப்பாற்றுறையுள் மலர்களையும் பிறைமதியையும் புனைந்த திருமுடியினராய்க் கணையொன்றால் பகைவராய் வந்தடைந்த அசுரர்களின் முப்புரங்களை அழித்த இறைவரே என் மனம் பிறவற்றில் செல்லாது ஓவுதல் செய்த ஒருவராவர்.
605 |
மாகந் தோய்மதி சூடி மகிழ்ந்தென தாகம் பொன்னிற மாக்கினார் பாகம் பெண்ணு முடையவர் பாற்றுறை நாகம் பூண்ட நயவரே. |
1.056.5 |
தம் திருமேனியின் ஒருபாதியாய்ப் பெண்ணைக் கொண்டுள்ளவரும், நாகத்தை அணிகலனாகப் பூண்டவரும் ஆகிய, திருப்பாற்றுறை இறைவர், வானகத்தே தோயும் பிறைமதியை முடியிற் சூடி மகிழ்ந்து வந்து எனது உடலைப் பொன்னிறமான பசலை பூக்கச் செய்தவராவார்.
606 |
போது பொன்றிகழ் கொன்றை புனைமுடி நாதர் வந்தெ னலங்கொண்டார் பாதந் தொண்டர் பரவிய பாற்றுறை வேத மோதும் விகிர்தரே. |
1.056.6 |
தொண்டர்கள் தம் திருவடிகளைப் பரவத் திருப்பாற்றுறையுள் விளங்கும் வேதங்களை அருளிய விகிர்தரும், பொன்போல் திகழும் கொன்றை மலர்களைப் புனைந்த திருமுடியினை உடைய தலைவருமாகிய சிவபிரானாரே என்பால் வந்து என் அழகினைக் கவர்ந்தவராவார்.
607 |
வாடல் வெண்டலை சூடினர் மால்விடை கோடல் செய்த குறிப்பினார் பாடல் வண்டினம் பண்செயும் பாற்றுறை ஆட னாக மசைத்தாரே. |
1.056.7 |
பாடல்கள் பலவற்றைப் பாடும் வண்டினங்கள் சிறந்த பண்களை மிழற்றும் திருப்பாற்றுறையுள், ஆடுதலில் வல்ல நாகப்பாம்பைத் திருமேனியில் பல இடங்களிலும் கட்டியுள்ள இறைவர், உலர்ந்த வெள்ளிய தலையோடுகளை மாலையாகச் சூடியவராவர். பெரிய இடபத்தின் மேல் ஏறி வந்து என் அழகைக் கவர்ந்து செல்லும் குறிப்பினர்.
608 |
வெவ்வ மேனிய ராய்வெள்ளை நீற்றினர் எவ்வஞ் செய்தெ னெழில்கொண்டார் பவ்வ நஞ்சடை கண்டரெம் பாற்றுறை மவ்வல் சூடிய மைந்தரே. |
1.056.8 |
கடலிடைத் தோன்றிய நஞ்சடைந்த கண்டரும், முல்லை மலர் சூடிய மைந்தரும் ஆகிய எம் திருப்பாற்றுறை இறைவர் விரும்பத்தக்க திருமேனியராய், வெண்மையான திருவெண்ணீறு அணிந்தவராய் வந்து, என் எழிலைக் கொண்டு பின் பிரிவுத்துன்பம் தந்தவராவர்.
609 |
ஏன மன்னமு மானவ ருக்கெரி ஆன வண்ணத்தெ மண்ணலார் பான லம்மலர் விம்மிய பாற்றுறை வான வெண்பிறை மைந்தரே. |
1.056.9 |
நீலோற்பல மலர்கள் நிறைந்த நீர் நிலைகளோடு கூடிய திருப்பாற்றுறையுள் வானகத்தே விளங்கும் வெண்மையான பிறை மதியைச் சூடி எழுந்தருளியுள்ள மைந்தராகிய இறைவர், பன்றியும், அன்னமுமாய் அடிமுடி தேடிய திருமால், பிரமன் ஆகியோருக்கு அழலுருவமாய் ஓங்கி நின்ற அண்ணலார் ஆவார்.
610 |
வெந்த நீற்றினர் வேலினர் நூலினர் வந்தெ னன்னலம் வெளவினார் பைந்தண் மாதவி சூழ்தரு பாற்றுறை மைந்தர் தாமோர் மணாளரே. |
1.056.10 |
பசுமையான குளிர்ந்த குருக்கத்திக் கொடிகள் சூழ்ந்துள்ள திருப்பாற்றுறையுள் எழுந்தருளியுள்ள மைந்தராகிய இறைவர், மேனி மீது வெந்த நீறு பூசியவராய், கையில் வேலேந்தியவராய், மார்பில் பூணூல் அணிந்தவராய் வந்து என் அழகினை வவ்விச் சென்றார். அவர் முன்னரே மலைமகளை மணந்த மணாளர் ஆவார்.
611 |
பத்தர் மன்னிய பாற்றுறை மேவிய பத்து நூறு பெயரனைப் பத்தன் ஞானசம் பந்தன தின்றமிழ் பத்தும் பாடிப் பரவுமே. |
1.056.11 |
அடியவர்கள் நிறைந்துள்ள திருப்பாற்றுறையுள் எழுந்தருளிய ஆயிரம் திருநாமங்களையுடைய இறைவனை, பக்தனாகிய ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய இனிய தமிழ்ப் பாடல்களாகிய இப்பத்தையும் பாடிப் பரவுமின்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 54 | 55 | 56 | 57 | 58 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்பாற்றுறை - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - பாற்றுறை, திருப்பாற்றுறையுள், இறைவர், திருப்பாற்றுறை, விளங்கும், கொன்றை, திங்கள், வெண்மையான, புனைந்த, பாடிப், மைந்தராகிய, வானகத்தே, மைந்தரே, எழுந்தருளியுள்ள, அணிந்தவராய், நீற்றினர், வண்டினம், திருச்சிற்றம்பலம், திருமுறை, முடியினர், சிந்தை, வண்டினங்கள், னெழில்கொண்டார், பாடும்