இலக்கணச் சுருக்கம்

226. உருபேற்குமிடத்து, எல்லாரென்பது, தம்முச்சாரியையும்,
எல்லீரென்பது நும்முச்சாரியையும் பெற்று உருபின் மேல் முற்றும்மையும்
பெறும்.
உதாரணம்.
எல்லார் தம்மையும் எல்லீர் நும்மையும்
எல்லார் தம்மாலும் எல்லீர் நும்மாலும்
எல்லாரையும், எல்லாராலும், எ-ம். எல்லீரையும், எல்லீராலும், எ-ம். சாரியை பெறாதும் வரும்.
227. இவ்வாறு உருபு புணர்ச்சிக்குக் கூறிய முடிபுகள், உருபு தொக்க பொருட்புணர்ச்சிக் கண்ணும், வரும்.
உதாரணம்.
என்கை, எங்கை, எங்கள் கை, நங்கை, நங்கள் கை, நின்கை, உன்கை, நுங்கை, நுங்கள் கை, உன்கை, உங்கை, உங்கள் கை, தன்கை, தங்கை, தங்கள் கை, எ-ம். கிளியின் கால், கொக்கின் கண், ஆவின் கொம்பு, பலவற்றுக்கோடு, மரத்துக்கிளை, எல்லாவற்றுக்கோடும். எ-ம். வரும்.
-
தேர்வு வினாக்கள்
218. ஐ முதலிய உருபேற்குமிடத்துத் தம்மைப் பெயர்கள் எப்படி விகாரப் பட்டு வரும்?
முன்னிலைப் பெயர்கள் எப்படி விகாரப் பட்டு வரும்?
தான், தாம், தாங்கள் என்னும் படர்க்கைப் பெயர்கள் எப்படி விகாரப் பட்டு வரும்?
இவைகளுள்ளே, தனிக்குற்றொற்றிறுதியாக நின்ற பெயர்களோடு நான்கனுரும் ஆறனுருபுகளும் புணருமிடத்து எப்படியாம்?
219. உயிரையும், மெய்யையும், குற்றியலுகரத்தையும் ஈறாகவுடைய பெயர்ச் சொற்கள் உருபேற்குமிடத்து எப்படியாம்?
220. ஆ, மா, கோ என்னும் பெயர்கள், உருபேற்கு மிடத்து இன்சாhயையேயன்றி, வேறு சாரியையும் பெறுமோ?
221. அது, இது, உது, என்னுஞ் சுட்டுப்ப் பெயர்களும், எது, ஏது, யாது, என்னும் வினாப் பெயர்களும் உருபேற்குமிடத்து, எப்படியாம்?
222. அவை, இவை, உவை, எவை, கரியவை, நெடியவை, முதலிய ஐகாரவீற்றஃறிணைப் பன்மைப் பெயர்களும் உருபேற்கு மிடத்து எப்படியாம்?
223. பல, சில, சிறிய, பெரிய, அரிய, முதலிய அகரவீற்றஃறிணைப் பன்மைப் பெயர்களும், யா வென்னும் அஃறிணைப் பன்மை வினாப் பெயரும் உருபேற்கு மிடத்து எப்படியாம்?
224. மகரவீற்றுப் பெயர்கள் உரு பேற்குமிடத்து எப்படியாம்?
225. எல்லாமென்னும் பெயர் அஃறிணைப் பொருளில் உருபேற்குமிடத்து எப்படியாம்?
226. உருபேற்குமிடத்து எல்லார் என்பது எப்படியாம்? எல்லீர் என்பது எப்படியாம்?
227. இவ்வாறு ஊருபு புணர்ச்சிக்குக் கூறிய முடிபுகள், உருபு தொக்க பொருட் புணர்ச்சிக் கண்ணும் வருமோ?
பெயரியல் முற்றிற்று.
2.2 வினையியல்
228. வினைச் சொல்லாவது, பொருளினது, புடைப் பெயர்ச்சியை உணர்த்துஞ் சொல்லாம்.
புடைப்பெயர்ச்சியெனினும், வினை நிகழ்ச்சியெனினும், பொருந்தும். வினை, தொழில் என்பவை ஒரு பொருட் சொற்கள்.
-----
--
தேர்வு வினாக்கள்
228. வினைச் சொல்லாவது யாது?
புடைப் பெயர்ச்சி என்பது என்ன? வினைக்கு பாரியாயநாமம் என்ன?
வினை நிகழ்ச்சிக்குக் காரணம்
229. வினையானது வினைமுதல், கருவி, இடம், செயல், காலம், செயப்படு பொருள் என்னும் இவ்வாறுங் காரணமாவேணும், இவற்றுட் பல காரணமாகவேனும், நிகழும்.
உதாரணம்.
வனைந்தான்: இத்தெரிநிலை வினை, வினைமுதன் முதலிய ஆறுங் காரணமாக, வந்தது. வினைமதல் குயவன்; முதற்கருவி மண்; துணைக்கருவி தண்டசக்கர முதலியன் இடம் வனைதற்கு ஆதாரமாகிய இடம்; செயல் வனைதற்கு மதற்காரணமாகிய செய்கை; காலம் இறந்தகாலம்; செயப்படு பொருள் குட முதலியன.
இருந்தான்: இத்தெரிநிலை வினை, வினைமுதன் முதலிய ஆறுங் காரணமாக, வந்தது.
உடையன்: இக்குறிப்பு வினை, கருவியுஞ் செயப்படு பொருளுமொழிந்த நான்குங் காரணமாக வந்தது.
230. வினை முதன் முதலிய ஆறனுள்ளே, தெரிநிலை வினைமுற்றின் கண், விணைமுதலுஞ் செயலுங் காலமுமாகிய மூன்றும் வெளிப்படையாகவும், மற்றை மூன்றுங் குறிப்பாகவுந் தோன்றும்.
தெரிநிலை வினைப் பெயரெச்ச வினையெச்சங்களின்கண் செயலுங் காலமுமாகிய இரண்டும் வெளிப்படையாகவும், மற்றை நான்கும் குறிப்பாகவுந் தோன்றும்.
வினைமுதல் பால் காட்டும் விகுதியினாலும், செயல் பகுதியினாலும், காலம் இடைநிலையும் விகுதியும் விகாரப்பட்ட பகுதியுமாகிய மூன்றனுள் ஒன்றினாலுந் தொன்றும். எச்ச வினைகட்குப் பால் காட்டும் விகுதி யின்மையால், அவற்றில் வினைமுதல் வெளிப்படத் தோன்றதாயிற்று.
உதாரணம்.
உண்டான்: இத்தெரிநிலை வினைமுற்றிலே, பகுதியாற் செயலும், இடைநிலையாற் காலமும், விகுதியால் வினைமுதலும் வெளிப்படையாகவும், மற்றவை
உண்ட: இத் தெரிநிலைவினைப் பெயரெச்சத்திலே, பகுதியாற் செயலும், இடைநிலையாற் காலமும் வெளிப்படையாகவும், குறிப்பாகவுந் தோன்றின.
உண்டு: இத்தெரிநிலை வினையெச்சத்திலே, பகுதியாற் செயலும், இடைநிலையாற் காலமும் வெளிப்படையாகவும், குறிப்பாகவுந் தோன்றின.
---
231. வினைக்குறிப்பு முற்றிக்கண் வினை முதன் மாத்திரம் வெளிப்படையாகவும், மற்றவையெல்லாங் குறிப்பாகவுந் தோன்றும்.
வினைக்குறிப்பு வினையெச்சங்களின் கண், வினைமுதன் முதலியவெல்லாங் குறிப்பாகவே தோன்றும்.
உதாரணம்.
கரியன்: இக்குறிப்பு வினைமுற்றிலே, விகுதியால் வினைமுதல் வெளிப்டையாகவும், மற்றவையெல்லாங் குறிப்பாகவுந் தோன்றும்.
கரிய: இக்குறிப்புவினைப் பெயலெச்சத்திலே, வினைமுதன் முதலியவெல்லாங் குறிப்பாகவே தோன்றின.
இன்றி: இக்குறிப்புவினை வினையெச்சத்திலே, வினைமுதன் முதலியவெல்லாங் குறிப்பாகவே தோன்றின.
- தேர்வு வினாக்கள்
229. வினையானது எவை காரணமாக நிகழும்?
230. தெரிநிலைவினைமுற்றிற்கண், வினைமுதன் முதலய ஆறும் எப்படித் தோன்றும்?
தெரிநிலை வினைப் பெயரெச்ச வினையெச்சங்களின் கண் வினைமுதன் முதலிய ஆறும் எப்படித் தோன்றும்? வினைமுதல், செயல், காலம், என்னும் மூன்றும் எவ்வௌ; வுறுப்புக்களினாலே தோன்றும்?
யாது காரணத்தால் எச்ச வினைகளில் வினை முதல் வெளிப்படத் தோன்றாதாயிற்று?
231. வினைக்குறிப்பு, முற்றிக் கண் வினைமுதன் முதலிய ஆறும் எப்படிப்த் தோன்றும்?
வினைக்குறிப்புப் பெயரெச்ச வினையெச்சங்களின் கண் வினைமுதன் முதலிய ஆறும் எப்படித் தோன்றும்?
காலம்
232. காலம், இறப்பு, நிகழ்வு, எதிர்வு, என மூவகைப்படும்.
இறப்பாவது தொழிலது கழிவு நிகழ்வாவது தொழில் தொடங்கப்பட்டு முற்றுப் பெறாத நிலமை. எதிர்வாவது தொழில் பிறவாமை.
- தேர்வு வினாக்கள்
232. காலமாவது யாது? இறப்பாவது யாது? நிகழ்வாவது யாது? எதிர்வாவது யாது?
வினைச்சொற்களின் வகை
233. இக்காலத்தோடு புலப்படுவனவாகிய வினைச்சொற்கள், தெரிநிலைவினையுங் குறிப்பு வினையும் என, இருவகைப்படும்.
---
234. தெரிநிலை வினையாவது, காலங்காட்டும் உருப்புண்மையினாலே, காலம் வெளிப்படத் தெரியும்படி நிற்கும் வினையாம்.
உதாரணம்.
நடந்தான்: இது, தகரவிடை நிலையினால் இறந்தகாலம் வெளிப்படத் தெரியும் படி நிற்றலினாலே, தெரிநிலை வினை.
உண்கும்: இது, கும் விகுதியினால் எதிர்காலம் வெளிப்படத் தெரியும் படி நிற்றலினாலே, தெரிநிலை வினை.
பெற்றான்: இது, பெறு, பெற்று என விகாரப்பட்டு நின்ற பகுதியினால் இறந்தகாலம் வெளிப்படத் தெரியும் படி நிற்றலினாலே, தெரிநிலை வினை.
தெரிநிலை வினைகள் தோன்றுதற்குரிய முதனியடிகள் இவையென்பது பதவியலில் நாற்பத்தாறம் வசனத்திற் கூறப்பட்டது.
---
235. குறிப்பு வினையாவது, காலங்காட்டும் உறுப்பின்மையினாலே, காலம் வெளிப்படத் தெரிதலின்றிச் சொல்லுவோனது குறிப்பினாலே தோன்றும்படி, நிற்கும் வினையாம்.
உதாரணம்.
பொன்னன்: இது, பொன்னையுடையனாயினான் என இறந்தகாலங் கருதியாயினும், பொன்னையுடையனாகின்றான் என நிகழ்காலங் கருதியாயினும், பொன்னையுடையனாவான் என எதிர்காலங் கருதியாயினுந் தன்னை ஒருவன் சொல்ல, அக்காலம் அவனது குறிப்பாட் கேட்போனுக்குத் தோன்றும் படி நிற்றலினாலே, குறிப்பு வினை.
பொன்னன் என்பது, பொன்னுடைமை காரணமாக ஒருவனுக்குப் பெயராய் நின்று எழுவாய் முதலிய வேற்றுமையுரு பேற்கும் போது பெயர்ச் சொல்; முக்காலம் பற்றிப் புடை பெயரும் ஒருவனது வினை நிகழ்ச்சியை உணர்த்திப் பெயருக்குப் பயனிலையாய் வரும் போது குறிப்பு வினைமுற்றுச் சொல்; அங்ஙனம் வினைமுற்றாய் நின்று பின் அவ்வினை நிகழ்ச்சி காரணமாக அவனுக்குப் பெயராகி எழுவாய் முதலிய வேற்றுமையுருபேற்கும் போது குறிப்பு வினையாலணையும் பெயர்.
குறிப்பு வினைகள் தோன்றுதற் குரிய முதனிலையடிகாள் இவையென்பது பதவியலில் நாற்பத்து நான்காம் வசனத்திற் கூறப்பட்டது.
---
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 22 | 23 | 24 | 25 | 26 | ... | 45 | 46 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இலக்கணச் சுருக்கம், Ilakkana Surukkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்

