முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » ஐங்குறுநூறு » 13. கிழவற்கு உரைத்த பத்து
ஐங்குறுநூறு - 13. கிழவற்கு உரைத்த பத்து
நெய்தல் நிலத்தில் ஊடல் பொருளமைந்த பாடல்கள்.
கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே முண்டகக் கோதை நனையத் தெண்டிரைப் பௌவம் பாய்ந்துநின் றோளே. | 121 |
உன் உறவுக்காரி நீ அணிவித்த முண்டகப் பூ மாலை நனையும்படி உன்னோடு கடலலையில் பாய்ந்ததை நான் பார்த்தேன் அல்லவா?
கண்டகும் அல்லமோ கொண்கநின் கேளே ஒள்ளிழை உயர்மணல் வீழ்ந்தென வெள்ளாங் குருகை வினைவு வோளே. | 122 |
நீ அணிவித்த அணிகலன் உன்னோடு விளையாடும்போது மணல்மேட்டில் விழுந்துவிட்டது என்று அங்கு மேயும் வெள்ளாங்குருகை,’பார்த்தாயா’ என்று உன் உறவுக்காரி வினவுவதை நான் பார்த்தேன் அல்லவா?
கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே ஒண்ணுதல் ஆயம் ஆர்ப்பத் தண்ணென் பெருங்கடல் திரைபாய் வோளே. | 123 |
உன் உறவுக்காரி உன்னுடன் கடல் அலையில் பாய்வதைப் பார்த்து விளையாட்டுத் தோழிமார் ஆரவாரம் செய்வதை நான் பார்த்தேன் அல்லவா?
கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே வண்டற் பாவை வெளவலின் நுண்பொடி அளைஇக் கடல்தூர்ப் போளே. | 124 |
நீயும் அவளும் விளையாடிய வண்டல் பாவையைக் கடலலை பாய்ந்து கரைத்துவிட்டது என்று நுண்ணிய கடல் மண்ணை அள்ளி அலைமீது வீசி உன் உறவுக்காரி கடலைத் தூர்ப்பதை நான் பார்த்தேன் அல்லவா?
கண்டிகும் அல்லமோ கொண்கநின் தெண்டிரை பாவை வெளவ ஊண்கண் சிவப்ப அழுதுநின் றோளே. | 125 |
நீங்கள் விளையாடிய மணல் பாவையை அலை கொண்டு சென்றது என்று உன்னை அள்ளஅத் தின்ற கண் சிவக்கும்படி உன் உறவுக்காரி அழுவதை நான் பார்த்தேன் அல்லவா?
கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே யுண்கண் வண்டினம் மொய்ப்பத் தெண்கடற் பெருந்திரை மூழ்கு வோளே. | 126 |
மலர் என்று எண்ணி வண்டு மொய்க்கும் கண்களுடன் உன் உறவுக்காரி உன்னுடன் கடலலையில் மூழ்கி விளையாடுவதை நான் பார்த்தேன் அல்லவா?
கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே தும்பை மாலை இளமுலை நுண்பூண் ஆகம் விலங்கு வோளே. | 127 |
உன் உறவுக்காரி நீ அணிவித்த தும்பைப் பூ மாலையை விலக்குவதைப் நான் பார்த்தேன் அல்லவா?
கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே உறாஅ வறுமுலை மடாஅ உண்ணாப் பாவையை ஊட்டு வோளே. | 128 |
உன் உறவுக்காரி பால் ஊறித் துன்புறுத்தாத வெற்று முலைமேல் வைத்து தன் பொம்மைக்குப் பாலூட்டுவதை நான் பார்த்தேன் அல்லவா?
கிடைக்காத பாடல் | 129. |
கிடைக்காத பாடல்....
கிடைக்காத பாடல் | 130. |
கிடைக்காத பாடல்....
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 11 | 12 | 13 | 14 | 15 | ... | 49 | 50 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு, Ainkurunooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - கொண்கநின், அல்லமோ, கண்டிகும், கேளே, வோளே, பாடல், கிடைக்காத, றோளே, பாவை