ஐங்குறுநூறு - 10. எருமைப் பத்து

மருதநிலத்துக் கருப்பொருளான எருமையை முன்வைத்துத் தொடர்புடைய செய்திகளைக் கூறி தலைவன், தலைவி, தோழி ஆகியோரின் நினைவோட்டங்களைக் கூறும் பாடல்கள் இவை.
|
நெறிமருப்பு எருமை நீலைரும் போத்து வெறிமலர்ப் பொய்கை ஆம்பல் மயக்கும் கழனியூரன் மகளிவள் பழன வெதிரின் கொடிப்பிணை யலளே. | 91 |
இவள் இளையவள். வயலில் முளைக்கும் மூங்கில் போல் இளையவள். பற்றிப் படரும் கொடி போன்றவள். நன்செய்க் கழனி மிக்க ஊரனின் மகள். அவன் ஊரில் முறுக்கிய கொம்புகளை உடைய கருநிற எருமைக்கடா பொய்கையில் பூத்திருக்கும் ஆம்பல் கொடி மயங்கும்படி அழிக்கும்.
|
கருங்கோட்டு எருமைச் செங்கண் புனிற்றுஆக் காதற் குழவிக்கு ஊறுமுலை மடுக்கும் நுந்தை நும்மூர் வருதும் ஒண்தொடி மடந்தை நின்னையாம் பெறினே. | 92 |
ஒளி வீசும் வளையல் அணிந்த மடந்தைப் பருவத்தவளே! உன் தந்தை ஊரில் அணிமையில் புதிதாகக் கன்று போட்டிருக்கும் தாய்-எருமை தன் கன்றுக்கு தன் சுரக்கும் மடியைத் தந்து பாலூட்டும். உன்னை நான் பெற்றால், அப்படிப்பட்ட எருமை வைத்திருக்கும் உன் தந்தை ஊருக்கு உன்னைப் பெண் கேட்டு வருவேன்.
|
எருமைநல் ஏற்றினம் மேயல் அருந்தெனப் பசுமோ ரோடமோடு ஆம்பல் ஒல்லா செய்த இனைய மன்ற பல்பொழில் தாதுண வெறுக்கைய ஆகி இவள் போதுஅவிழ் முச்சி யூதும் வண்டே. | 93 |
இவள் முச்சிக்கொண்டைப் பூவில் தேன் உண்ணும் வண்டுகள் மிகுதியாக மொய்க்கின்றன. மேயும் ஆண் எருமைகள் மாரோடம், ஆம்பல் பூக்களை மேய்ந்து அழித்துவிட்டதால் இவள் தலையில் மொய்க்கின்றன. – தோழி தலைவியின் தாயிடம் தாயிடம் கூறுகிறாள்.
|
மள்ளர் அன்ன தடங்கோட்டு எருமை மகளிர் அன்ன துணையோடு வதியும் நிழல்முதிர் இலஞ்சிப் பழனத் ததுவே கழனித் தாமரை மலரும் கவின்பெறு சுடர்நூதல் தந்தை ஊரே. | 94 |
அவள் தந்தையின் ஊர், வளமான உடல் படைத்த மள்ளரும் மகளிரும் கூடியாடுவது போல, ஆண்-எருமை பெண்-எருமை அருகில் படுத்திருக்கும் நிழலைக் கொண்டது. வயலில் பூக்கும் தாமரை குளத்தில் பூக்கும் பழனப் பூஞ்சோலை கொண்டது. – அவன் நினைக்கிறான்.
|
கருங்கோட்டு எருமை கயிறுபரிந்து அசைஇ நெடுங்கதிர் நெல்லின் நாள்மேயல் ஆரும் புனல்முற் றூரன் பகலும் படர்மலி அருநோய் செய்தனன் எமக்கே. | 95 |
எருமைக்கடா கயிற்றை அறுத்துக்கொண்டு விளைந்திருக்கும் நெல்லை வயிறார மேயும் நீர்வளம் மிக்க ஊரினை உடையவன் அவன். அவன் என்னை நினைக்கவைக்கும் துன்பத்தைத் தருகிறான். – தலைவி தோழியிடம் சொல்கிறாள்.
|
அணிநடை எருமை ஆடிய அள்ளல் மணிநிற நெய்தல் ஆமபலொடு கலிக்கும் கழனி ஊரன் மகளிவள் பழன் ஊரன் பாயல்இன் துணையே. | 96 |
அணிநடை போடும் எருமை ஆடித் திளைத்த சேற்றில் நெய்தலும் ஆம்பலும் பூத்திருக்கும் கழனிகள் கொண்ட ஊரன் இவளது தந்தை. இவளோடு படுத்திருப்பதே இனிமை. – தலைவன் நினைக்கிறான்.
|
பகன்றை வான்மலர் மிடைந்த கோட்டைக் கருந்தாள் எருமைக் கன்று வெரூஉம் பொய்கை ஊரன் மகளிவள் பொய்கைப் பூவினும் நறுந்தண் ணியளே. | 97 |
நெல் சேமிப்புக் கோட்டை மேல் பகன்றைக் கொடி ஏறி வெண்ணிறப் பூக்களைப் பூத்திருக்கும். அதனைத் தன் தாய்-எருமை என்று நோக்கிய எருமைக்கன்று கருநிறத் தாய் வெள்ளையாக இருக்கிறதே என்று அஞ்சுமாம். (இது உள்ளுரைப் பொருள் தரும் இறைச்சி) இப்படிப்பட்ட பொய்கை இருக்கும் தந்தையின் மகள் இவள். இவள் பொய்கைநீரில் பூத்திருக்கும் பூவைக் காட்டிலும் குளுமையாக இருக்கிறாளே. – தலைவன் நினைக்கிறான்.
|
தண்புணல் ஆடும் தடங்கோட்டு எருமை திண்பிணி அம்பியின் தோன்றும் ஊர ஒண்டொடி மடமகள் இவளினும் நுந்தையும் யாயும் துடியரோ நின்னே. | 98 |
நீரிலே குளிக்கும் எருமை நீரில் மிதக்கும்படிக் கட்டப்பட்டிருக்கும் அம்பி போல் தோன்றும் ஊரை உடையவனே! இவளை விலக்குகிறாய் [கடியள்]. நீ மிகவும் கொடுமைக்காரன். உன்னுடைய தந்தையும் தாயும் கூட உன் தகாத ஒழுக்கத்தைக் கடியமாட்டார்களோ? – தோழி இவ்வாறு தலைவனிடம் கடிந்துகொள்கிறாள்.
|
பழனப் பாகல் முயிறுமூசு குடம்பை கழனி யெருமை கதிரொடு மயக்கும் பூக்கஞல் ஊரன் மகளிவள் நோய்க்குமருந் தாகிய பணைத்தோ ளோளே. | 99 |
இவள் ஊரன் மகள். பூ மணக்கும் [கஞல்] ஊரன் அவன். முயிறு கூடு கட்டியிருக்கும் பழனப்பாகையைத் தின்ற கழனி-எருமை வயலில் விளைந்திருக்கும் கதிரையும் தின்று அழிக்கும் ஊரன் அவன். அவன் மகள் என் காம நோய்க்கு மருந்தாகிய தோளை வைத்திருக்கிளாளே! – தலைவன் எண்ணி மகிழ்கிறான். பழனம் = பழந்தோப்பு, கழனி – விளைவயல்.
|
புனலாடு மகளிர் இட்ட ஒள்ளிழை மணலாடு சிமையத்து எருமை கிளைக்கும் யாணர் ஊரன் மகளிவள் பாணர் நரம்பினும் இன்கிள வியளே. | 100 |
புனலில் விளையாடும்போது மகளிர் மணல்மேட்டில் கழற்றி வைத்த அணிகலன்களை அங்கு வந்த எருமை வாயால் கிண்டித் தள்ளிவிட்டு மேயும் ஊரை உடையவன் இவள் தந்தை. இவள் வாயிலிருந்து வரும் சொல் பாணர் மீட்டும் யாழிசையைக் காட்டிலும் இனிக்கிறதே. – தலைவன் சொல்கிறான். நரம்பு = யாழ்.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 49 | 50 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு, Ainkurunooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - எருமை, ஊரன், மகளிவள், கழனி, தடங்கோட்டு, மகளிர், கருங்கோட்டு, பொய்கை, ஆம்பல், மயக்கும், அன்ன

