சோழர் வரலாறு - இராசேந்திர சோழன்
இராசேந்திரன் தாய் வானவன் மாதேவி என்பவள். இராசேந்திரன் தாய்க்கு ஒரு படிமம் செய்தான்; அதை நாகப்பட்டினத்தைச் சேர்ந்த “செம்பியன் மாதேவி” என்னும் ஊரில் உள்ள கோவிலில் நிறுவினான்; அதை வழிபடற்குரிய தானங்கள் அளித்தான்[64]. இறந்தவரைக் கோவிலில் வழிபட ஏற்பாடு செய்தல் பெரிதும் வழக்கமில்லை. இந்த அம்மை சிறந்த சிவபக்தி உடையவளாய் இருந்தமையால், இவள் வடிவம் வழிபடப்பட்டது போலும்!
இராசராச விசயம் : இந்நூல் இராசராசனைப் பற்றியது போலும்; இந்நூல் விசேட காலங்களில் படிக்கப்பட்டது. இதனை அரசற்குப் படித்துக் காட்டியவன் நாராயணன் பட்டாதித்தன் என்பவன். அரசன் அவனுக்கு நிலம் அளித்துள்ளான்[65]. இந்நூல் இப்பொழுது கிடைக்க வில்லை. இஃது இருந்திருக்குமாயின், இராசராசன் வரலாற்றை விரிவாக அறிந்து இன்புறக் கூடுமன்றோ?
அரசன் ஆசிரியர் : இராசராசன் காலத்தில் பெரிய கோவிலில் சர்வசிவ பண்டிதர் இராசராசேந்திரன் பெரு மதிப்புக்கு உரியவராக இருந்தார். அவரும் அவருடைய சீடர்களும் எந்த நாட்டில் இருந்தபோதிலும் கொடுக்கும் படி ஆசாரிய போகமாக ஆண்டுதோறும் நெல் அளப்பதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது.[66] லகுலீச பண்டிதர் என்பவர் மற்றோர் ஆசிரியர்[67]. அவர் சைவத்தின் ஒரு பிரிவாகிய காளாமுக சமயத்தைச் சேர்ந்தவர். இச்சமயத்தவர் பலர் பண்பட்ட பண்டிதராக அக்காலத்தில் விளங்கினர். அவர்களே சில அறநிலையங் களைப் பாதுகாத்து வந்தார்கள்.
பெளத்த விஹாரம் : இராசராசன் காலத்தில் நாகப் பட்டினத்தில் கட்டத்தொடங்கிய பெளத்த விஹாரம் இராசேந்திரன் காலத்தில் சிறப்புற்று இருந்தது. அது முன்சொன்ன பூரீ விசய நாட்டு அரசனான சைலேந்திர மரபைச் சேர்ந்த மாரவிசயோத்துங்கவர்மன் கட்டிய தாகும். அவன் நாட்டுப் பெளத்தர் நாகையில் தொழுவதற்கென்றே அது கட்டப்பட்டது. அவன் வேண்டுகோட்கிசைந்து இராச ராசன் இடம் தந்து ஆதரித்தான். அஃது இராசேந்திரன் காலத்திற்றான் கட்டி முடிக்கப்பட்டது. பூரீ விசயநாட்டு அரசன் அக்கோவி லுக்குத் தன் தந்தை பெயரை இட்டான். அதன் பெயர் ‘சூடாமணி வர்ம விஹாரம்’ என்பது. அதற்கு ஆனை மங்கலம்’ என்னும் கிராமம் தானமாக (பள்ளிச்சந்தம்) விடப்பட்டது. அத் தானப் பட்டயமே ‘லீடன் பட்டயம்’. எனப்படுவது. ‘லிடன்’ என்பது ஹாலந்து நாட்டில் உள்ள நகரம். ஆனைமங்கலப் பட்டயம் அங்கு எடுத்துச் செல்லப்பட்டது; அதனால் இப்பெயர் பெற்றது.
சீனர் உறவு : முன்னர் இராசராசன் சீனத்துக்குத் தூதுக் குழுவைப் பரிசிற் பொருள்களோடு அனுப்பினாற் போலவே, இராசேந்திரன் கி.பி. 1033-இல் தூதுக் குழு ஒன்றைச் சீன அரசனிடம் அனுப்பினான். சீன அரசன் அவர்களை வரவேற்று வேண்டியன செய்தான் என்று சீன நூல்கள் கூறுகின்றன. இந்த உறவால் சோழநாடு சீனத்துடன் கடல் வாணிகம் சிறக்க நடத்திவந்தது என்பதை நன்குணரலாம்.
நாட்டுப் பிரிவுகள் : இராசேந்திரன் காலத்தில் தொண்டை நாடு - சயங்கொண்ட சோழமண்டலம் என்றும், பாண்டி நாடு இராசராசப் பாண்டி மண்டலம் என்றும், இலங்கை - மும்முடிச் சோழ மண்டலம் என்றும், கங்கபாடி - முடிகொண்ட சோழ மண்டலம் என்றும், நுளம்பபாடி - நிகரிலி சோழ மண்டலம் என்றும் பெயர் பெற்றன. சோழ மண்டலம், மலைமண்டலம், கொங்கு மண்டலம், வேங்கி மண்டலம் என்பன பண்டைப் பெயர்களைக் கொண்டே இருந்தன. நாட்டு உட்பிரிவு முதலியன பற்றிய செய்திகள் நான்காம் பாகத்திற் கூறப்படும். ஆண்டுக் காண்க.
அரசியல் அலுவலாளர் சிற்றரசர் : அரசியலை நடத்த அலுவலாளர் பலர் இருந்தனர். அவர்கள் ‘கருமிகள்’ ‘பணியாளர்’ என இருதிறப்பட்டனர். முன்னவருள் பெருந்தரம், சிறுதரம் என இருவகையினர் இருந்தனர்.இவர் அரசியல் தொடர்பான பல பிரிவுகளைக் கவனித்து அரசியலைக் குறைவற நடத்திவந்தனர். உயர் அலுவலாளர் தம் தகுதிக்கேற்ப அரசனிடமிருந்து நிலம் அல்லது அதன் வருவாய் பெற்றுப் பணிசெய்து வந்தனர். இராசேந்திரன் ஆட்சியில் அவன் பெற்ற வெற்றிகட்குக் காரணமாக இருந்தவர் மூவர் ஒருவன் அரையன் இராசராசன். இவன் சாளுக்கியர் போர்களிற் புகழ் பெற்றவன். இவன் படையொடு சென்றதைக் கேட்ட வேங்கி மன்னன். ஒடிவிட்டான் என்று ஒரு கல்வெட்டு கூறுகிறது[68]. இவன் ‘நால்மடி பீமம், சாமந்தா பரணம், வீரபூஷணம், எதிர்த்தவர் காலன்’ முதலிய விருதுகளைப் பெற்றவன். இவன் இராசராசன் கால முதலே சோழர் தளகர்த்தனாக இருந்தவன்[69] கிருஷ்ணன் இராமன் என்பவன் மற்றொரு சேனைத் தலைவன். இவனும் இராசராசன் காலத்தவன். இவன் மகனான மாராயன் அருள்மொழி ஒருவன். இவன், இராசேந்திரன் கி.பி.1033-இல் கோலாரில் பிடாரி கோவில் ஒன்றை எடுப்பித்தபொழுது உடன் இருந்து ஆவன செய்தவன்[70]. இவன் ‘உத்தமசோழப் பிரம்மராயன்’ என்னும் பட்டம் பெற்றவன். அரசன் அவரவர் தகுதிக்கேற்பப் பட்டங்களை அளித்துவந்தான், அமைச்சர், தானைத் தலைவர் முதலிய உயர் அலுவலாளர்க்குத் தனது பட்டத்துடன் அல்லது விருதுடன் ‘மூவேந்த வேளான்’ என்பதைச் சேர்த்து அளித்துவந்தான் வேறு துறையிற்சிறந்தார்க்கு ‘மாராயன், பேரரையன்’ என்பனவற்றை அளித்தான். ‘வாச்சிய மாராயன்’, ‘திருத்தப் பேரரையன்’ போன்றன கல்வெட்டுகளிற் பயில்வனவாகும்.
- ↑ 64. 481 of 1925.
- ↑ 65. 120 of 1931.
- ↑ 66. S.I.I. Vol.2, No.20
- ↑ 67. 271 of 1927.
- ↑ 68. 75 of 1917.
- ↑ 69. 23 of 1917.
- ↑ 70. 480 of 1911
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இராசேந்திர சோழன் - History of Chola - சோழர் வரலாறு - இராசேந்திரன், இராசராசன், மண்டலம், இவன், அரசன், என்றும், காலத்தில், என்னும், பெற்றவன், அலுவலாளர், கோவிலில், இந்நூல், அவன்