சோழர் வரலாறு - இராசேந்திர சோழன்
இராசராசன் தமக்கையான குந்தவ்வையார் கணவனான வல்லவரையர் வாண்டிய தேவர் என்பவன் வடஆர்க்காடு கோட்டத்தில் பிரம்ம தேசத்தைச் சுற்றியுள்ள பகுதிக்குத் தலைவனாக இருந்தான். இவனுடைய வேறொரு மனைவி குந்தள தேவி என்பவள்; மற்றொருத்தி குந்தா தேவியார் என்பவள். குந்தவ்வைப் பிராட்டியார் பழையாறையில் இருந்த அரண்மனையிலேயே இருந்தவர்[71]. இவ்வல்லவரையன் சாமந்தர் தலைவன் (பெரிய சேனாதிபதி) போலும்! இவன் பெயர்கொண்ட நாடு சேலம்வரை பரவி இருந்தது[72].
தென் ஆர்க்காடு கோட்டத்தில் திருக்கோவிலுரைச் சார்ந்த மலைநாட்டுப் பகுதிக்கு யாதவ பீமன் என்ற உத்தம சோழ மிலாடுடையார் கி.பி. 1016-இல் சிற்றரசனாக இருந்தான்[73]. கி.பி. 1023-24-இல் கங்கை கொண்ட சோழ மிலாடுடையார் என்பவன் காளத்தியில் உள்ள கோவிலுக்கு விளக்கிட்டதைக் கல்வெட்டு ஒன்று குறிக்கிறது[74], சங்காள்வார் என்பவர் மைசூரை ஆண்ட சிற்றரசர். கொங்காள்வார் என்பவர் சிற்றரசர் ஆவர். ஆண்டுகள் செல்லச் செல்லக் கொங்காள்வார் தம்மைச் சோழர் மரபினர் என்றே கூறலாயினர்; அங்ஙனமே சில தெலுங்கு-கன்னட மரபினரும் கூறிக்கொண்டனர்.
படைகள் : அரசனிடம் யானைப்படை, குதிரைப்படை, காலாட்படைகள் இருந்தன; தேர்ப்படை இல்லை. தேர் இருந்ததாக ஒரு கல்வெட்டிலும் குறிப்பில்லை. எந்த வீரனும் போர்க்களத்தில் தேரைச் செலுத்தி வந்தான் என்னும் குறிப்பே இல்லை. அரசராயினார் யானை அல்லது குதிரை மீது இருந்து போர் செய்தனர் என்பதே காணப்படுவது. காலாட்படை 'கைக்கோளப் பெரும்படை' எனப்பட்டது. ஒவ்வொரு படையும் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ‘வில்லிகள், வாள்பெற்ற கைக்கோளர்’ என்னும் பெயர்கள் கல்வெட்டுகளிற் காண்கின்றன. இவற்றால், போரில், வில் அம்பு, வேல், வாள் முதலியனவே பயன்பட்டன என்பது அறியக் கிடக்கிறது. படைகள், வென்று அடக்கிய நாடுகளில் எல்லாம் நிறுத்தப்பட்டு இருந்தன. சோழர் கடற்படை குறிப்பிடத்தக்க சிறப்புடையது; கடல் கடந்து சுமத்ரா, மலேசியா முதலிய நாடுகட்கும் படைவீரரைக் கொண்டு சென்றது; கடல் வாணிகத்தைப் பெருக்கி வளர்த்த பெருமை பெற்றது.
காசுகள் : இராசேந்திரன் காலத்து அரசியற் செய்திகள் ‘சோழர் அரசியல்’ என்னும் பகுதியிற் காண்க. இவன் தன் பெயரால் காசுகளை அச்சிட்டு வழங்கினான். அவை ‘இராசேந்திரன் மாடை’ எனவும். இராசேந்திர சோழக் காசு எனவும் கல்வெட்டுகளிற் கூறப்பட்டுள்ளன.
கல்வித்துறை-தமிழ் : இராசேந்திரன் ‘பண்டித சோழன்’ எனப் பெயர் பெற்றவன். அதனால் இவன் தமிழில் சிறந்த புலமை எய்தியவனாதல் வேண்டும். இவனுடைய 'மெய்ப் புகழ்' பல கல்வெட்டுகளில் சிறந்த புலமை உணர்ச்சியுடன் வரையப்பட்டுள்ளது. அதனால் இவனது அவையில் தமிழ்ப் புலவர் சிலரேனும் இருந்திருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது. யாப்பருங்கலம், காரிகை என்பன செய்த ‘அமித சாகர’ரும் இவற்றுக்கு உரை வகுத்த ‘குணசாகர’ரும் இக்காலத்தவர் எனக் கூறலாம். சிறந்த சிவனடியாரான கருவூர்த் தேவர் இக்காலத்தவரே ஆவர். இராசேந்திரன் மகனான வீரராசேந்திரன் தமிழ்ப் புலமை அவன் பெயரைக் கொண்ட ‘வீர சோ புத்தமித்திரர் இக்காலத்தவரே. திருமுறை வகுத்த நம்பியாண்டார் நம்பியையும் இராசேந்திரன் பார்த் திருத்தல் கூடியதே.
வடமொழி : இராசேந்திரனைப் பற்றிய வடமொழிப் பட்டயங்களும் கல்வெட்டுகளும் காவிய நடையில் அமைந்தவை. சிறப்பாகத் திருவாலங்காட்டுச் செப்பேடு களை வரைந்த நாராயண கவி சிறந்த வடமொழிப் புலவர் ஆவர். தென் ஆர்க்காட்டுக் கோட்டத்தில் எண்ணாயிரம் என்பது ஒர் ஊர். அஃது ‘இராசராசச் சதுர்வேதி மங்கலம்’ எனப்பட்டது. அங்கொரு பெரிய வடமொழிக் கல்லூரி நடந்து வந்தது. அதைப்பற்றிய விவரங்களும்[77] பிறவும் ‘சோழர் காலத்துக் கல்வி நிலை’ என்னும் பகுதியிற்பார்க்க. இங்ஙனமே ‘திரிபுவனை’ என்னும் இடத்திலும் வட மொழிக் கல்லூரி நடந்துவந்தது[76]. அதன் விவரங்களும் ஆண்டுக் காண்க.
அரசன் சிறப்பு : இராசராசன் சோழப் பேரரசை நிலை நிறுத்தினான்: இராசேந்திரன் அதனை மேலும் வளப்படுத்தினான்; கடல்கடந்து வெற்றி பெற்றான்; சோழர் புகழை நெடுந்துரம் பரப்பினான். இராசராசன் கோவில் கட்டித் தன் பக்திப் பெருமையை நிலைநாட்டினான்; இராசேந்திரன் அதனைச் செய்ததோடு, புதிய நகரையும் வியத்தகு பெரிய ஏரியையும் அமைத்தான். இராசராசன் சிவபக்தனாக இருந்தது போலவே இவனும் இருந்து வந்தான்; தந்தையைப் போலவே பிற சமயங்களையும் மதித்து நடந்தான் கடல் வாணிகம் பெருக்கினான்.இவனது செப்புச் சிலை ஒன்று தஞ்சைப் பெரிய கோவிலில் இருக்கின்றது. இராசேந்திரன் எல்லாச் சமயங்களிடத்தும் பொதுவாக நடந்து கொண்டான். இவன் தனது 24-ஆம் ஆட்சி ஆண்டில், சேர அரசனான இராசசிம்மன் திருநெல்வேலி கோட்டத்தில் மன்னார்கோவிலில் கட்டிய இராசேந்திர சோழ விண்ணகர்க்கு நிலதானம் செய்துள்ளான்[77]. இப்பேரரசன் ஒப்புயர்வற்ற நிலையில் அரசாண்டு கி.பி.1044-இல் விண்ணக வாழ்வை விழைந்தான்.
- ↑ 71. 350 óf 1907; 639 of 1909
- ↑ 72. 157 of 1915.
- ↑ 73. 20 of 1905
- ↑ 74. 291 of 1904, Ep. Carnataka, Vol, I, Int. 12-13; Vol. V. Int. 7.
- ↑ 75. 338 of 1917; M.E.R. 1918, p.147; 343 of 1947
- ↑ 76. 176 of 1919
- ↑ 77. 112 of 1905
தேடல் தொடர்பான தகவல்கள்:
இராசேந்திர சோழன் - History of Chola - சோழர் வரலாறு - இராசேந்திரன், என்னும், சிறந்த, இராசராசன், இவன், கோட்டத்தில், பெரிய, புலமை, சோழர், ஆவர், என்பது, கடல்