சோழர் வரலாறு - இராசேந்திர சோழன்
6. இராசேந்திர சோழன்
(கி.பி. 1012 - 1044)
பிறப்பு : இராசராசனது ஒரே மகனான பரகேசரி இராசேந்திரன் ‘உடைய பிராட்டியார் தம்பிரான் அடிகள் வானவன் மாதேவியாரான திரிபுவன மாதேவியார்க்கு[1] மார்கழித் திங்கள் திரு ஆதிரை நாளிற்[2] பிறந்தவன். வேறு இவனது இளமைப் பருவத்தைப் பற்றிக் கல்வெட்டுகளைக் கொண்டு ஒன்றுமே அறியக் கூடவில்லை. இவன் கல்வெட்டுகள் ‘திருமன்னி வளர’ என்னும் தொடர்புடையன.
பெயர் : இராசராசனது இயற்பெயர் ‘அருள் மொழி’ என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் செப்புகின்றன. அங்ஙனமே இவன் இயற்பெயர் மதுராந்தகன் என்று அச்செப்பேடுகள் குறிக்கின்றன.[3]
வளர்ப்பு : விசயாலயன் வழிவந்த மன்னர்க்குப் பழை யாறையில் அரண்மனை ஒன்று உண்டு.அங்கு இராசராசன் தம்க்கையாரான குந்தவ்வையார் இருந்தார். இராசராசன் பாட்டியாரான (கண்டராதித்தன் மனைவியாரான) செம்பியன் மாதேவியார் இருந்தார்.இவ்விருவரும் சிவபக்தி நிறைந்தவர். இராசேந்திரன் இம்மூதாட்டியரிடம் வளர்ச்சி பெற்றவனாதல் வேண்டும்.[4]
இளவரசன் : இராசராசன் தன் தந்தையான இரண்டாம் பராந்தகன், தமையனான ஆதித்தன், சிற்றப்பனான மதுராந்தகன் ஆகிய மூவரும் ஆண்டு இறந்த பிறகு பட்டம் பெற்றவன் ஆதலின், அவன், தான் பட்டம் பெற்ற கி.பி. 985-லேயே முதியவனாக இருந்திருத்தல் வேண்டும். அதனால், அவன் பட்டம் பெற்ற காலத் திற்றானே அவன் மகனான இராசேந்திரன் வயது வந்த இளைஞனாக இருத்தல் கூடியதே ஆம். அதனாற்றான் இராசராசன் நான்காம் ஆண்டுக் கல்வெட்டில் (கி.பி. 988) ‘இராசேந்திர சோழ தேவன்’ குறிப்பிடப்பட்டுள்ளான்[5]. இராசராசன் ஏறத்தாழ 30 ஆண்டுகள் அரசாட்சி செய்துள்ளான். இராசேந்திரன் அந்தக் காலம் முழுவதும் தந்தையுடன் இருந்து பல போர்களில் ஈடுபட்டிருந்தான். எனவே, இராசேந்திரன் பட்டம் பெற்ற காலத்தில் ஏறத்தாழ 50 வயது உடையவனாக இருந்தானாதல் வேண்டும்.
சென்ற பகுதியிற் கூறப்பட்ட இராசராசன் ஆட்சியில் நடந்த போர்களில் எல்லாம் இளவரசனாக இருந்த இராசேந்திரற்குப் பங்குண்டு என்பது முன்னரே கூறப்பட்டதன்றோ? இராசேந்திரன் ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் போர்த்திறத்திலும் அரசியலிலும் நன்கு பண்பட்டிருந்தான். இராசராசன் தன் ஒப்பற்ற மகனான இராசேந்திரனிடமே தனது முதுமைப்பருவத்தில் அரசியலை ஒப்புவித்தான். அவன் உயிருடன் இருந்தபோதே கி.பி.1912-இல் இராசேந்திரற்கு முடிசூட்டினான் என்பது ஐயமற விளங்குகிறது. என்னை? இராசராசன், தன் மகனான இராசேந்திரனது மூன்றாம் ஆட்சி ஆண்டில் ஒரு தேவதானம் கொடுத்தான் என்று திருமுக்கூடல் கல்வெட்டு[6] கூறுதலால் என்க.
நாட்டு நிலை : இராசேந்திரன் பட்டம் பெற்ற காலத்தில் (கி.பி. 1012-ல்)[7] சோழப்பேரரசு வடக்கே கிருஷ்ணை துங்கபத்திரை வரை பரவி இருந்தது. சோழநாடு போகப் புதிதாக வென்ற நாடுகளைத் திறமுற ஆள நம்பிக்கையுடைய அதிகாரிகள் இருந்தனர். சில நாடுகளில் பழைய அரசர்களே ஆட்சி புரிய விடப்பட்டிருந்தனர். நன்றாகப் பயிற்சி பெற்ற ‘தெரிந்த’ படையினர் ஆங்காங்கு நிறுத்தப்பட்டிருந்தனர். இங்ஙனம் புதிய நாடுகளைப் படைப் பலமும் அரசியல் அறிவும் பெற்ற அதிகாரிகள் ஆண்டு வந்தமையின், பேரரசன் கவலை இன்றிப் பிற நாடுகளை வெல்ல வசதி பெற்றிருந்தான்; பேரரசிலும் அமைதி நிலவி இருந்தது.
இளவரசன் - இராசாதிராசன் : இராசராசன் தன் ஆட்சியின் இறுதியிற்றான் இராசேந்திரற்கு முடிசூட்டினான். ஆனால், இராசேந்திரன் தன் ஆட்சியின் ஏழாம் ஆண்டிலேயே (கி.பி.1018-இல்) தன் மகனான இராசகேசரி என்பாற்கு முடிசூட்டி வைத்தான்.[8] அது முதல் தந்தையும் மைந்தனும் ஏறத்தாழ 25 ஆண்டுகள் சேர்ந்தே அரசு புரிந்து வந்தனர் என்பது, இராசாதிராசன் மெய்ப்புகழால் நன்குணரலாம்.[9] இப் பழக்கம் போற்றத்தக்கதும் புதியதும் ஆகுமன்றோ? நாட்டின் பெரும் பகுதியை இராதிராசனே ஆண்டு வந்தான்.[10] திரு மழபாடியில் கிடைத்த இராசாதிராசனது 26-ஆம் ஆண்டுக் கல்வெட்டு, ‘தன் தந்தையின் வெண் கொற்றக்குடை நிழலைப்போால இராசாதிராசன் குடை இருந்தது. வடக்கே கங்கையையும் தெற்கே ஈழத்தையும் மேற்கே மகோதையையும் கிழக்கே கடாரத்தையும் கொண்ட இராசேந்திரன் பேரரசை இராசாதிராசனே ஆண்டுவந்தான்,’ என்று கூறுகிறது[11]. மகன் தன் தந்தையின் ஆட்சியிலேயே முடிசூடப் பெற்றது சிறப்பு: அதனுடன் தந்தையுடனே இருந்து ஏறத்தாழ 26 ஆண்டுகள் ஆட்சி அறிவு சிறக்கப்பெற்றமை மிக்க சிறப்பு. இவ்வரிய செயல், இராசேந்திரன் இந்திய அரசர் எவரும் செய்யாத பெரியதொரு அரசியல் நுட்பம் வாய்ந்த வேலை செய்தான்-சிறந்த அரசியல் அறிஞன் என்பதை மெய்ப்பித்துவிட்டது.
- ↑ 1. S.I.I. vol 5, No.982
- ↑ 2. 271 of 1927.
- ↑ 3. S.I.I. iii, p.422.
- ↑ 4. 639 of 1909; 463 of 1908.
- ↑ 5. விக்டோரியா அம்மையார்க்குப் பின்வந்த ஏழாம் எட்வர்ட் மன்னர் வயது இங்கு நினைவு கூர்தற்குரியது.
- ↑ 6. 196 of 1917.
- ↑ 7. Ep. Indica, Vol.8, p.260.
- ↑ 8. Ep. Ind, Vol. 9. p. 218.
- ↑ 9. 75 of 1895.
- ↑ 10. இராசாதிராசன் கல்வெட்டுகள் ‘திங்களேர் தரு’ என்னும் தொடக்கத்தையுடையன.
- ↑ 11. 75 of 1895.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இராசேந்திர சோழன் - History of Chola - சோழர் வரலாறு - இராசேந்திரன், இராசராசன், பெற்ற, பட்டம், ஏறத்தாழ, மகனான, ஆண்டுகள், அவன், அரசியல், இராசாதிராசன், ஆட்சி, என்பது, வேண்டும், ஆண்டு