சோழர் வரலாறு - இராசேந்திர சோழன்
அர்த்த மண்டபம் : அர்த்த மண்டபத்துத் துாண்கட்கு மேல் நடனச் சிலைகள் பல செதுக்கப்பட்டுள்ளன. அவை பலவகை நடன நிலைகளைக் குறிக்கின்றன. இலிங்கத்தை நோக்கிய எதிர்ச்சுவர் மீது (காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோவில் சுவரில் உள்ள சிற்பங்கள் போல) 6 வரிசைச் சிற்பங்கள் இருக்கின்றன. அவை, (1) சண்டீசர் வரலாறு (2) தடாதகை திருமணம் (3) பார்த்தனும் பரமனும் போரிடல் (4) மார்க்கண்டன் வரலாறு முதலியன உணர்த்துகின்றன. அவை அனைத்தும் உயிர் ஒவியங்களாகக் காட்சி அளிக்கின்றன.
மகா மண்டபம் : இத்தகைய மண்டபமே பிற்கால ஆயிரக்கால் மண்டபத்திற்கு அடிகோலியதென்னலாம். இங்கு சம்பந்தர் கற்சிலை மிக்க அழகோடு காணப்படுகிறது, துர்க்கையம்மன் சிலை அற்புத வேலைப்பாடு கொண்டது. நவக்கிரக அமைப்பு வேறெங்கும் காணப்படாத புதுமை வாய்ந்தது. சூரியன் தேர்அட்டதிசைப் பாலகர் - அவர்க்கு மேல் நவக்கிரக அமைப்பு-நடுவண் பதும பீடம், இவை அனைத்தும் ஒரே வட்டக்கல்லில் அமைந்துள்ள காட்சி கண்டு வியத்தற் குரியது. மகா மண்டபத்தில் உள்ள இரண்டு அறைகளில் விமானத்தின் கலசமும் பல சிலா விக்கிரகங்களும் திருமேனிகளும் இருக்கின்றன.
வாயிற் காவலர் : ஏறத்தாழ 4 மீ. உயரம் கொண்ட கம்பீரத் தோற்றமுள்ள வாயிற் காவலர் சிலைகள் உள. அவருள் முதல் இருவர் சிலைகள் கோபுரச் சிதைவில் உள. எஞ்சிய பத்தும் கோவில் வாயில், அர்த்த மண்டப வாயில், உள்ளறை வாயில், வடக்கு - தெற்கு வாயில்கள் இவற்றண்டை இருக்கின்றன.
சிற்பங்கள் : விமானத்தில் நிறைந்துள்ள சிற்பங்களும் கோவிலின் வெளிப்பாகத்தில் உள்ள சிற்பந்திகழ் உரு வங்களும் மிக்க வனப்புற்றவை. தென் இந்தியாவிலுள்ள சிற்பங்களிலும், அவற்றைப் பின்பற்றிச் சாவகத்திலுள்ள உயர்ந்த சிற்பங்களும் இவை மேம்பட்டன என்று அறிஞர் கூறுகின்றனர். தென்மேற்கில் சபாபதியும், மேற்கில் இலிங்கோற்பவ அருணாசல ஈசுவரரும், தெற்கில் விநாயகரும், வடக்கில் திருவாயிலுக்கு அணித்தாய், சண்டேசுவரர்க்கு இறைவன் அருள் புரிகின்ற அருட்கோலமாய்ச் சண்டேசுவர அருள்புரி மூர்த்தியும் அருமையான வேலைப்பாடு உடையன. மற்றும் கணங்களும், அப்சர மாதரும், இராக்கதக் கூட்டங் களுமாக எவ்விடத்தும் அமைந்துள்ளதை நோக்குங்கால், இக்கோவிலின் கம்பீரமான தோற்றத்திற்கு வனப்பை அவை தருவன என்னலாம். இவற்றுட் பெரும்பாலான வற்றிற்கு நரசிம்மவர்மனுடைய மாமல்ல புரத்துச் சிற்பங்களே அடிப்படையானவை; எனினும், இவை அவற்றினும் மேம்பட்டுச் சிற்பக்கலை வளர்ச்சியை நன்கு விளக்குவனவாகும். மற்றும், இக்கோவில் சோழர் காலத்துக் கோவில்களுள், அழகிலும், சிற்பத் திறனிலும் ஒரு தனி நிலை எய்தியுள்ளது என்பதைக் கூறலாம்[53]. இச் சிற்பங்களின் விரிவு சோழர் சிற்பங்கள் என்னும் பிரிவில் விளக்கப்பெறும்.
மாளிகை மேடு[54] : இந்த இடம் அரண்மனை இருந்த இடமாகும். இது மிகப் பரந்த இடத்தில் அமைந்துள்ளது, இப்போது இவ்விடம் திருத்திய வயலாக விளங்குகிறது. வயல்களில் ஆங்காங்கு மேடுகள் இருக்கின்றன. அவற்றிலும் வயல்களிலும் உடைந்த மட்பாண்டச் சிதைவுகள் நிரம்பிக் கிடக்கின்றன. செங்கல் 38 செ.மீ. நீளம், 20 செமீ அகலம், 10 செ.மீ. கனம் உடையதாக இருக்கின்றது. பெரிய மாளிகை மேட்டைத் தோண்டிக் கற்றுரண்கள் எடுக்கப் பட்டுப் புதுச்சாவடிக் குளத்தின் படிக்கட்டுகள் கட்டப்பட்டனவாம். காறைக் கலப்புண்ட செங்கற் சிதைவுகள் நிரம்பக் கிடைக்கின்றன. இம்மேட்டின் கிழக்கில் வெங்கற்சுவர் நீளமாகப் போவதை இன்றும் காணலாம். வழி நெடுகச் செங்கற் கவர்த் தளம் காணப் படுகிறது. பழைய அரண்மனைக் கழிவு நீர், மழை நீர் செல்ல வாய்க்கால் இருந்தது. ஒருவகைக் கல்லால் ஆகிய மதகின் சிதைவுகள் இன்றும் காணக் கிடைக்கின்றன. கோவிலுக்குப் பின்னே இன்றுள்ள ஒடை புதியது. அதன் இரு புறமும் செங்கற்சுவர்களின் சிதைவுகள் காண்கின்றன.மாளிகைமேடு தெற்கு வடக்கில் இரண்டு கி.மீ. நீளமுடையது. கிழக்கு மேற்கில் ஒன்றரை கிமீ நீளமுடையது.
பண்டை நகரம் : இராசேந்திரன் அமைத்த புதிய நகரத்தின் நான்கு புறங்களிலும் நான்கு காளிகளை எல்லைத் தெய்வங்களாக நிறுத்தினான் போலும் மேற்கு வாசல் காளி கோவில் 5 கி.மீ. தொலைவில் இருக்கிறது; வடக்கு வாசல் காளி கோவில் இரண்டு கல் தொலைவில் (சலுப்பை என்னும் சிற்றூரில்) உள்ளது; செங்கம் மேடு என்ற கிராமத்தில் உள்ளது; கிழக்கு வாசல் காளிகோவில் இரண்டு கல் தொலைவில் இருக்கிறது. தெற்கு வாசல் காளிகோவில் இரண்டு கல் தொலைவில் (வீராரெட்டி என்னும் கிராமத்தண்டை இருக்கிறது. அங்குத் தீர்த்தக் குளம் (தீர்த்தம் கொடுக்கப் பிரகதீச்சுரர் அங்குப் போதல் வழக்கமாக இருந்ததாம்) இருக்கிறது. இக்குறிப்புகளால், பண்டை நகரம் ஏறத்தாழ 6 கி.மீ. சதுர அமைப்புடைய தாக இருந்த தென்னலாம்.
சுற்றிலும் சிற்றூர்கள் : கோவிலைச் சுற்றிலும் இரண்டு கல் தொலைவு வரை உள்ள சிற்றூர்களாவன: சுண்ணாம்புக் குழி (கோவில் பணிக்குச் சுண்ணாம்பு தயாரித்த இடம்), கணக்கு விநாயகர்கோவில், பொன்னேரி (சோழங்க ஏரியைச் சார்ந்த சிற்றுரர்), பள்ளி ஒடை, பாகல்மேடு, சலுப்பை,செங்கம்மேடு, முத்து சில்பா மடம், சப்போடை மண்மலை (இது முக்கால் கல் தொலைவில் உள்ளது; கோவில் தேர் இங்குத்தான் இருந்ததாம். அங்கு ஒருமேடு தேர்மேடு என்னும் பெயருடன் இருக்கிறது), மெய்க்காவல் புத்துார், வீரசோழபுரம், வாண தரையன் குப்பம் (இஃது இன்று ‘வானடுப்பு’ எனப்படுகிறது), குயவன் பேட்டை, தொட்டி குளம், கழனி குளம், உட்கோட்டை (இது 2 கல் தொலைவில் உள்ளது) என்பன. பரணை மேடு என்னும் சிற்றூர் கோவிலுக்கு 7 கல்தொலைவில் உள்ளது.அங்கிருந்து பருத்தி மூட்டைகளை அடுக்கிப் பரணை கட்டி விமானத்தில் கொண்டு செல்லப்பட்டதாம்.
- ↑ 53. J.M.S. Pillai’s ‘Solar Koyir Panigal’, pp. 44-45.
- ↑ 54. கோவில் வேலை பார்க்கும் சுப்பராயபிள்ளை (72 வயது) யுடன் நான் ஒரு மணி நேரம் இம் மேட்டைப் பார்வையிட்டேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இராசேந்திர சோழன் - History of Chola - சோழர் வரலாறு - இரண்டு, கோவில், தொலைவில், இருக்கிறது, என்னும், உள்ளது, சிதைவுகள், இருக்கின்றன, உள்ள, சிற்பங்கள், வாசல், குளம், தெற்கு, சிலைகள், வாயில், அர்த்த, மேடு