சோழர் வரலாறு - இராசேந்திர சோழன்
இராசாதிராசன் முதல் மகனல்லன். இராசேந்திரன் அவனை இளவரசன் ஆக்கிப் பேரரசை ஆளும் பொறுப்பை ஒப்படைத்தான் எனின், இந்த இளவல் ஏனை மக்களினும் பல்லாற்றானும் சிறப்புப் பெற்றவனாக இருந்திருத்தல் வேண்டும் அன்றோ? இங்ஙனம் அவரவர் ஆற்றல் அறிந்து அவரவர்க்கேற்ற அரசப் பதவி அளித்த பெருமை இராசேந்திரன் ஒருவர்க்கே உரியதாகும், என்னல் மிகையாகாது. தென் இந்திய வரலாற்றிலே இது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.
இளவல்-சுந்தரசோழன் : இராசேந்திரன் தன் மற்றொரு மகனான சுந்தரசோழன் என்பானைப்பாண்டிய நாட்டிற்குத் தலைவன் ஆக்கினான். இவ்விளவல் கல்வெட்டுகளில் சடாவர்மன் சுந்தர சோழ பாண்டியன் எனப் படுகிறான். பாண்டிய நாட்டை ஆண்டதால் ‘பாண்டியன்’ எனப்பட்டான்; அப்பாண்டியர் சடாவர்வன், மாறவர்மன் என்பவற்றில் ஒன்றை வைத்திருந்ததைப் போலச் ‘சடாவர்மன்’ எனப் பெயர் தாங்கினான்; தனது இயற் பெயரான ‘சுந்தர சோழன்’ என்பதையும் கொண்டு விளங்கினான். இவ்விளவல் பின்னர்ச் சேர நாட்டையும் சேர்த்து ஆளும் உரிமை பெற்றான். அதனால், சோழ கேரளன் எனப்பட்டான். இங்ஙனம் இவ்விளவரசன் தன் தந்தை காலம் முழுவதும் சேர, பாண்டிய நாடுகளை ஆண்டுவந்தான்.
இங்ஙணம் மண்டலங்களை ஆண்டவர் தம் பேரரசன் மெய்ப்புகழைக் கூறியே தம் பெயரில் கல்வெட்டுகள் விடுதல் மரபு. ஆயின் ஆட்சி ஆண்டு அவரதாகவே இருக்கும். இராசேந்திரன் தன் மக்களிடமும் தன் நம்பிக்கைக்குரிய பிற அரசியல் தலைவர்களிடமுமே மண்டலம் ஆளும் பொறுப்பை விட்டிருந்தான். பேரரசன் தன் மக்களையே மண்டலத் தலைவர்கள் ஆக்கி வைத்தமையால், பேரரசு குழப்பம் இன்றிச் செவ்வனே நடைபெற்று வந்தது.
போர்ச் செயல்கள் : இராசேந்திரன் காலத்துப் போர்ச் செயல்கள் மூன்றுவகையின. அவை (1) இவன் இளவரசனாக இருந்து நடத்தியவை, (2) அரசனாக இருந்து நடத்தியவை, (2) இவன் காலத்தில் இளவரசனான இராசாதிராசன் நடத்தியவை எனப்படும். முதற் பிரிவு இராசராசன் வரலாறு கூறும் பகுதியிற் காணலாம். இரண்டாம் பகுதியை இங்கு விளக்குவோம்.
இடைதுறை நாடு : இது கிருஷ்ணைக்கும் துங்க பத்திரைக்கும் இடைப்பட்ட சமவெளி. அஃதாவது இப்போது ‘ரெய்ச்சூர்’ எனப்படும் கோட்டம் என்னலாம்.[12] இஃது ‘எடதொறே இரண்டாயிரம்’ என்று கன்னடர் கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளது.
கொள்ளிப் பாக்கை : இஃது ஐதராபாத்துக்கு நாற்பத்தைந்து கல் வடகிழக்கே உள்ளது. இதன் இன்றைய பெயர் ‘கூல்பாக்’ என்பது. இது ‘கொள்ளிப் பாக்கை ஏழாயிரம்’ எனப்படும். இந்நாடு 13-ஆம் நூற்றாண்டுவரை சிறப்புற்றிருந்தது.[13] இதன் மதில் சுள்ளிமரங்கள் நிறைந்தது. இஃது ஆறாம் விக்கிரமாதித்தனின் காலத்தில் அவனுடைய மகனான மூன்றாம் சோமேசுவரனால் ஆளப்பட்டு வந்தது.
மண்ணைக் கடக்கம் : இஃது இராட்டிரகூடர்க்குக் கோநகராக இருந்த இடம். இது, பிறகு வந்த மேலைச் சாளுக்கியர்க்கும் சிறிதுகாலம் தலை நகரமாக இருந்தது. வடக்கே பரமார அரசரும் தெற்கே சோழரும் இதனைத் தாக்கத் தாக்க, சாளுக்கியர் தமது தலைநகரைக் கலியான புரத்துக்கு மாற்றிக் கொண்டனர். மண்ணைக்கடக்கம் இப்பொழுது மான்யகேடம் எனப்படும். இதன் மதி: கடக்க முடியாத வன்மை உடையது.
இந்நாடுகளை இராசேந்திரன் வென்றான் என்று இவனது மூன்றாம் ஆண்டுக் கல்வெட்டுகள் குறிக்கின்றன.[14] திருவொற்றியூர் மண்டபம் ஒன்றுக்கு ‘மண்னை கொண்ட சோழன்’ என்னும் பெயர் இடப்பட்டது.[15]
ஈழப்போர் : இராசராசன் காலத்தில் நடந்த ஈழப்போரில் தோற்றோடி ஒளிந்த ஐந்தாம் மஹிந்தன் என்னும் ஈழ அரசன், சில ஆண்டுகள் கழித்துப் பெரும் படை திரட்டிச் சோழர் ஆட்சிக்குட்பட்ட ஈழப்பகுதியை மீட்க முயன்றான். அதைக் கேள்வியுற்ற இராசேந்திரன் பெரும்படையுடன் சென்றான்; போரில் வெற்றி கொண்டான். ஈழத்து அரசனுக்கும் அவன் மனைவியர்க்கும் உரிய முடிகளையும் அணிகலன்களையும் பொன்மணிகளையும் பிற சின்னங்களையும் கைப்பற்றி மீண்டான்; இவற்றுடன் ஒரு நூற்றாண்டுக்கு முன் இராசசிம்ம பாண்டியன் விட்டிருந்த மணிமுடி முதலியவற்றையும் கைப்பற்றினான்.[16] இப்போர் நிகழ்ச்சி கி.பி. 1017-18-இல் நடைபெற்றதாதல் வேண்டும். சோழ சேனைகள் இலங்கையைச் சூறையாடின, தோல்வியுற்ற மஹிந்தன் மீட்டும் காட்டிற்கு ஒடிவிட்டான்’ என்று மகாவம்சம் கூறுகிறது. ஆயினும், அவன் எவ்வாறோ சோணாட்டிற்குப் பிடித்துச் செல்லப்பட்டான். அங்கு அவன் சோழர்க்கு முற்றும் பணிந்துவிட்டான்[17]. அவன் சோழ நாட்டிலே கி.பி. 1029-இல் இறந்தான். இப்போரினால் ஈழநாடு முற்றிலும் சோழர் ஆட்சிக்கு உட்பட்டு விட்டது. இராசேந்திரன் கல்வெட்டுகள் இலங்கையிற் கிடைத்துள்ளன.[18]
சோழ நாட்டில் இறந்த மஹிந்தனது மகன் மறைவாக ஈழத்தவரால் வளர்க்கப்பட்டான். அவன் தன் தந்தை சோணாட்டில் மடிந்ததைக் கேட்டு, ரோஹணப் பகுதிக்குத் தானே அரசனாகி, முதலாம் விக்கிரமபாகு என்னும் பெயருடன் கி.பி. 1029 முதல் 1041 வரை ஆண்டுவரலானான்.[19]
- ↑ 12. Ep. Ind. Vol. 12, pp.295-296.
- ↑ 13. J.A.S., 1916, pp.-17.
- ↑ 14. ‘நெடிதியல் ஊழியுள இடைதுறை நாடும்
தொடர்வன வேலிப் படர் வென வாசியும்
சுள்ளிச் சூழ்மதில் கொள்ளிப் பாக்கையும்
கண்ணரு முரண மண்ணைக் கடக்கமும்’ என்பது மெய்ப் புகழ். - ↑ 15. 103 of 1912.
- ↑ 16. 4 of 1890; 247 of 1903
- ↑ 17. 642 of 1909
- ↑ 18. 595, 618 of 1912.
- ↑ 19. Chola Vamsam, Chap. 55
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இராசேந்திர சோழன் - History of Chola - சோழர் வரலாறு - இராசேந்திரன், அவன், இஃது, எனப்படும், என்னும், இதன், காலத்தில், ஆளும், பெயர், கல்வெட்டுகள், நடத்தியவை