சோழர் வரலாறு - இராசேந்திர சோழன்
கங்கை கொண்ட சோழேச்சரம் : இது கங்கைகொண்ட சோழன் கட்டியதால் இப்பெயர் பெற்றது. இதன் அமைப்பு முழுவதும் இராசராசன் கட்டிய பெரிய கோவிலைப் போன்றதாகும். இஃது ஆறு கோபுரங்களைக் கொண்டிருந்தது இக்கோவில் பெரிய கோவிலைவிடச் சிறியதாக இருப்பினும், சிற்பவேலையில் அதைவிட மிகச் சிறந்தது. இச்சிறந்த கோவில் இப்பொழுது அழிந்து கிடக்கிறது. இதன் திருச்சுற்றுகள் காணப்படவில்லை. கோபுரங்களில் கீழைக்கோபுரம் ஒன்றே இப்பொழுது இடிந்த நிலையில் இருக்கின்றது. உள்ளறையும் அதைச் சுற்றியுள்ள திருச்சுவருமே இப்பொழுது ஒரளவு காணத்தக்க நிலையில் இருக்கின்றன.
விமானம்: இது தஞ்சைப் பெரிய கோவில் விமானத்தைப் போன்றது. இதன் உயரம் 50 மீ. இது 30 மீ. சதுரமாக அமைந்துள்ளது; ஒன்பது அடுக்குகளை உடையது. இவற்றுள் முதல் இரண்டு அடுக்குகள் ஒன்றன்மேல் ஒன்றாக நிமிர்ந்து நிற்கின்றன. மற்றவை மேலே செல்லச் செல்ல சிறுத்துச் சரிவாக அமைந்துள்ளன; விமானத்தின் நாற்புறங்களிலும் வாயில்களும் மாடங்களும் இருக்கின்றன. விமானம் முழுவதும் அழகிய பதுமைகள் காட்சி அளிக்கின்றன. விமான உச்சியில் பெரிய கோவில் விமானத்தில் உள்ளதைப் போலவே ஒரே கல்லாலான சிகரம் ஒன்று இருக்கிறது. அதன் கலசம் இப்பொழுது இல்லை.
சிவலிங்கம் : தஞ்சைப் பெரிய கோவிலில் உள்ள சிவலிங்கத்தைப்போலவே இது பெரியது. இஃது ஒரே கல்லால் ஆனது. இஃது இடி விழுந்து இப்பொழுது இரண்டாகப் பிளந்துள்ளது என்பது கூறப்படுகிறது. இச் சிவலிங்கப் பெருமானைப் பெரிய கோவிற்பெருமானைப் பாடிய கருவூர்த் தேவர் ஒரு பதிகத்தாற் சிறப்பித்துள்ளார். அஃது ஒன்பதாம் திருமுறையிற் சேர்க்கப்பட்டுள்ளது. கொள்ளிடத்தில் கீழணைக்கட்டுக் கட்டிய பொழுது இக்கோவிற்பகுதிகளும் திருச்சுற்றுகளும் தகர்த்துக்கொண்டு போகப்பட்டனவாம். எளிய சிற்றூரார் தடுத்தனர். பயன் என்ன? தடுத்தவர் தண்டிக்கப்பட்டனர்.இடித்த கற்சுவருக்குப் பதிலாகச் செங்கற் சுவர் வைப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டதாம்.ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை[52].
இன்றைய காட்சி
திருமதில் : நீளம் ஏறத்தாழ 200 மீ அகலம் 150 மீ; கனம் 1 மீ. முழுவதும் கற்களால் இயன்றதே ஆகும். அத்திரு மதிலை அடுத்து இரண்டு அடுக்குத் திருச்சுற்று மாளிகை இருந்தது. இன்று ஒரு பகுதி மட்டுமே காணக்கிடக்கிறது.
திருச்சுற்று : (திருச்சுற்றில் இன்று பல கோவில்கள் காண்கின்றன; சந்திரசேகரர் கோவில் அழிந்து கிடக்கிறது. இவை யனைத்தும் (சண்டீசர் சிறு கோவில் தவிர) பிற்பட்டவையே ஆகும். அம்மன் கோவில் பிற்காலத்தே உள்ளே கொணர்ந்து கட்டப்பெற்றதாகும்.) திருமதிலின் முன்புற மூலைகள் இரண்டிலும் பின்புறமதிலின் நடுப்பகுதியிலும் அரை வட்டமான ‘காவற்கூடம்’ போன்ற கட்டட அமைப்பு இருந்திருத்தல் வேண்டும் என்பதற்குரிய குறிகள் காண்கின்றன.
உட்கோவிலுக்கு எதிரே முற்றும் செங்கற்களாலான பெரிய நந்தி ஒன்று படுத்துள்ளது. அதன் தலை வரை உயரம் 6 மீ. முதுகு வரை உயரம் 4 மீ. அதற்கு வலப்புறம் நேர் எதிரே சிங்கமுகக் கிணறு ஒன்று அற்புதமாக அமைந்துள்ளது. அருகில் உள்ள கிணற்றுக்குச் செல்லும் படிக்கட்டுகள் டகர வரிசையில் அமைந்துள்ளன. அப் படிக்கட்டுக்கு மேல் செங்கற்களாலான சிங்கம் காட்சி அளிக்கிறது. அதன் வயிற்றில் உள்ள வாசல் வழியே படிக்கட்டுகளில் இறங்கிச் சென்றால், பக்கத்தில் உள்ள கிணற்று நீரைக் காணலாம். ஏறத்தாழ 30 படிக்கட்டுகள் நீருள் இருக்கின்றனவாம்; நீருக்குமேல் 20 படிகள் உள. படிகள் அனைத்தும் கருங்கற்களே யாகும்.
உட்கோவில் : இதன் நீளம் 260 மீ., அகலம் 250மீ, இதனுள் மகா மண்டபம் 57மீ. நீளமும் 30 மீ. அகலமும் உடையது. இறை அறைக்கும் இம்மண்டபத்திற்கும் இடையே உள்ள அர்த்த மண்டபத்தின் இருபக்கங் களிலும் தெற்கிலும் வடக்கிலும் அழகிய திருவாயில்கள் படிகளுடன் உள்ளன. கோவிலை அணுகும் திருவாயில் கிழக்கே உள்ளது. மகா மண்டபத்தில், எட்டுப்பந்தி களாய் 140 கற்றுண்கள் அணி அணியாக உள்ளன. நடுப்பகுதி 6.மீ. உயரமுடையதாய், இரு பக்கங்களும் 5 மீ. உயரம் கொண்டனவாய் மேலே கல் கொண்டு மூடிய மண்டபமாகும். அர்த்த மண்டபம் இருவரிசைகளாலான பெரிய சதுரக் கற்றூண்களாலானது. விமானம் 60 மீ. உயரமுடையது. கோவிலின் அடிப்பாகம் 30 மீ சதுர மானது. இதன் உயரம் 10 மீ. இரண்டு மேல் மாடிகளை உடையது, இதற்குமேல் உள்ள பகுதி எட்டு மாடிகள் உள்ளதாய் விளங்கும்.
லிங்கம் : லிங்கம் 13 முழச் சுற்றுடையது; பீடம் 30 முழச் சுற்றுடையது; லிங்கத்தின் உயரம் 4 மீ. பீடத்தைத் தாங்கச் சிறிய கற்றூண்கள் உள்ளன. பீடம் இரண்டாக வெடித்துள்ளது. மூல அறையைச் சுற்றியுள்ள திருச்சுற்றின் அகலம் 3 மீ. ஆகும். இது கோவில் தரை மட்டத்திற்குமேல் 6 மீ. உயரத்தில் அமைந்துள்ளது.
- ↑ 52. Ind. Ant. Vol. in p.274; K.A.N. Sastry’s ‘Cholas’, p.289.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இராசேந்திர சோழன் - History of Chola - சோழர் வரலாறு - பெரிய, கோவில், உள்ள, உயரம், இப்பொழுது, இதன், ஒன்று, முழுவதும், அகலம், காட்சி, ஆகும், உடையது, விமானம், அமைந்துள்ளது, இஃது, இரண்டு