சோழர் வரலாறு - இராசேந்திர சோழன்
மலைநாட்டுப் போர் : இராசாதிராசன் மலை நாட்டை ஆண்ட அரசர் பலரைப் பொருது வெற்றிகொண்டான் என்று அவனது மெய்ப்புகழ்[37] கூறுகிறது. இராசாதிராசன் பாண்டி மண்டலத்தினின்றும் காந்தளுர்ச்சாலையில் கலம் அறுக்கச் சென்றான்; வழியில் வேள்நாட்டு அரசனைத் தாக்கிக் கொன்று, கூபக நாட்டு (தென் திருவாங்கூர்) அரசனை விடுவித்தான்[38]. எலிமலைக்குப் பக்கத்தில் இருந்த, நாடு ‘இராமகுடம்’ என்பது ‘எலி நாடு’ எனவும் படும். அதன் அரசன் மூவர் திருவடி எனப்பட்டான்[39]. இராசாதிராசன் அவனை வென்று, சேரனைத் துரத்தி அடித்தான், இச்செய்திகளை இவனது “திங்களேர்தரு’ என்று தொடங்கும் கல்வெட்டிற் காணலாம்.
மேலைச் சாளுக்கியப் போர் : இராசேந்திரனது இறுதிக் காலத்தில் மேலைச் சாளுக்கியர் சோழருடன் மீண்டும் போர் தொடுத்தனர். கி.பி.1042-இல் சாளுக்கிய மன்னன் இரண்டாம் ஜயசிம்மன் இறந்தான். அவன் மகனான முதலாம் சோமேசுவரன் அரசன் ஆனான். அவனுக்கு ஆகவமல்லன், திரைலோக்கிய மல்லன் என்னும் வேறு பெயர்களும் உண்டு. சோழர் கல்வெட்டுகளில் அவன் ‘ஆகவமல்லன்’ என்றே குறிக்கப்பட்டான். இதனாற் போர் மூண்டது. இராசாதி ராசன் சாளுக்கிய சேனையைப் புறங்கண்டான். சேனைத் தலைவர்களான தண்டப் பையன், கங்காதரன் என்போரைக் கொன்றான். சோமேசுவரன் மக்களான விக்கிரமாதித்தனும் விசயாதித் தனும் சங்கமையன் என்ற தானைத் தலைவனும் போர்க்களத்தினின்றும் ஓடி மறைந்தனர். இராசாதித்தன் பகைவர் பொருள்களைக் கைக்கொண்டு கொள்ளிப் பாக்கையை எரியூட்டினான்[40]. சிறு துறை, பெருந்துறை, தைவ பீமகசி என்னும் முத்துறைகளிலும் [41]யானைகளைக் குளிப்பாட்டிச் சாளுக்கியரது பன்றிக்குறி பொறிக்கப் பட்ட குன்றுகளில் புலிக்குறி பொறித்தான்[42].
சோழரை வெல்ல முடியாதென்பதை உணர்ந்த ஆகவமல்லன் தூதுவர் சிலரை இராசாதிராசனிடம் அனுப்பினான். சோழன் அவருள் இருவரைப்பற்றி ஒருவற்கு ‘ஐங்குடுமி’ வைத்தும், மற்றவர்க்குப் பெண் உடை தரித்தும் அலங்கரித்தான்; அவர்க்கு முறையே ஆகவமல்லன், ஆகவமல்லி’ என்ற பெயரிட்டுத் திருப்பி அனுப்பினான். இதனாற் சிறந்த ஆகவமல்லன் ‘பூண்டி’ என்னுமிடத்திற் போர் செய்து படுதோல்வி அடைந்தான். இராசாதிரா சன் கலியாணபுரத்தைக் கைக்கொண்டு, அங்கு வீராபிடேகம் செய்து விசய ராசேந்திரன் என்ற பட்டம் சூடிக்கொண்டான்[43]. இவன் அப்பெரு நகரத் தையும் சூறையாடிப் பல பொருள்களைக் கைப்பற்றினான். அவற்றுள் குறிப்பிடத்தக்கது வாயிற்காவலர் சிலை ஒன்று. அதன் பீடத்தில், “ஸ்வஸ்தி ரீ உடையார் பூர் விசயராசேந்திர தேவர் கலியாணபுரம் எறிந்து கொடுவந்த துவார பாலகர்” என்பது பொறிக்கப் பட்டுள்ளது. அச்சிலை தாராசுரம் ஐராவதேச்சுரர் கோவிலில் இருந்தது; இப்பொழுது தஞ்சைப் பெரிய கோவிலில் இருக்கிறது[44].
கங்கைகொண்ட சோழபுரம்[45] : இஃது இராசேந்திர சோழனால் புதிதாக அமைக்கப்பட்ட பெரிய நகரம் ஆகும். இது திருச்சிராப்பள்ளிக் கோட்டத்தில் உடையார் பாளையம் தாலுக்காவில் இப்பொழுது ஒரு சிற்றூராக இருக்கின்றது.இராசேந்திரன் வடநாடு வென்ற பெருமைக்கு அறிகுறியாக கங்கைவரை இருந்த நாடுகளை வெற்றி கொண்டதற்கு அடையாளமாகவே இக் கங்கை கொண்ட சோழபுரம் கட்டினான்[46]; இதிற்கிடைத்த பழைய கல்வெட்டு வீர ராசேந்திர சோழ தேவனதே ஆகும்[47]. இவன் தஞ்சைப் பெரிய கோவிலைப் போலக் ‘கங்கை கொண்ட சோழேச்சரம்’ என்னும் அழகு மிக்க கோவிலைக் கட்டினான்; ‘சோழ கங்கம்’ என்னும் வியத்தகு ஏரி ஒன்றை எடுத்தான்.
இராசேந்திரன் கங்கைநீர் கொணர்ந்து பெரு வெற்றியுடன் மீண்டுவந்த தன் தானைத் தலைவனையும் படைகளையும் கோதாவரிக் கரையில் சந்தித்தான்; திரும்பி வருகையில் தளிதோறும் தங்கித் தரிசித்து இறுதியில் தன் நகரை அடைந்தான்; கங்கை நீரைக் கொண்டு தான் புதிதாகக் கட்டிய மாநகரையும் கோவிலையும் ஏரியையும் துய்மைப் படுத்தினான். இக்கங்கைப் படையெடுப்பு மக்களால் வரவேற்கப்பட்டது[48].
நகர அமைப்பை அறியத்தக்க சான்றுகள் இல்லை. அங்குச் சோழ, கேரளன் என்னும் அரண்மனை ஒன்று இருந்தது.[49] அரண்மனை ஏவலாளர்தொகுதி ஒன்று இருந்தது. அதன் பெயர் ‘திருமஞ்சனத்தார் வேளம்’ என்பது. பெரிய கடைத்தெருவும் இருந்தது[50]. கோவிலுக்கு ஒரு கி.மீ. தொலைவில் மாளிகை மேடு எனப்படும் திடர் ஒன்று இருக்கிறது.அங்குதான் சோழரது அரண்மனை இருந்ததாம். அத்திடரின் அடியில் கட்டடத்தின் பகுதிகளும் அவற்றின் சின்னங்களும் காணப்படுகின்றன. அந்த இடம் அகழப் பெறுமாயின், பல குறிப்புகள் கிடைக்கலாம். ஏரியின் தென்கரை ஓரத்தில் சிற்றுரர் இருக்கிறது.அதன் பெயர் கங்கை கொண்ட (சோழ) புரம் என்பது. அதைச் சுற்றிக் காடு இருக்கிறது. அதற்கு அண்மையில் அழகிய பாழைடந்த கட்டடச் சிதைவுகள் பல காட்டிற்குள் இருக்கின்றன.இவை பழைய பாபிலோன் நகர அடையாளங்களாக இருந்த மேடுகளைப் போல இருக்கின்றன. இந்நகரம் செழிப்பாக இருந்த காலத்தில் சோழகங்கம் உதவிய நன்னீர் செய்த தொண்டு அளப்பரிதாக இருத்தல் வேண்டும்; இப்பொழுது காடாகக் கிடக்கும் பெரிய நிலப்பரப்பு அக் காலத்தில் பசுமைக் காட்சியைப் பரப்பி இருக்குமன்றோ?[51]
- ↑ 37. S.I.I. Vol. 3, p. 56.
- ↑ 38. 75 of 1895; M.E.R. 1913. ii. 26.
- ↑ 39. M.E.R. 1930. p.86; 523 of 1930.
- ↑ 40. S.I.I. Vol. 4. No 539; Vol. 5. No.465
- ↑ 41. இவை துங்கபத்திரை, கிருஷ்ணை, பீமா என்னும் ஆறுகள் - K.A.N. Sastry’s ‘Cholas’ I, p.277.
- ↑ 42. 172 of 1894; 92 of 1892.
- ↑ 43. 172 of 1894; 244 of 1925
- ↑ 44. இதனை என் நண்பர் திரு. J.M. சோமசுந்தரம் பிள்ளை அவர்கள் (பெரிய கோவில் நடைமுறை அலுவலாளர்) எனக்குக் காட்டினார்கள்.
- ↑ 45. இதனை யான் 25-4-42-இல் சென்று பார்வையிட்டேன். எனக்கு அங்கு வேண்டிய உதவி செய்த பெரு மக்கள் திருவாளர் க. முத்துவேலாயுதம் பிள்ளை, கோவில் நடைமுறை அலுவலாளர் (Executive Officer) ஞானப்பிரகாசம் பிள்ளை என்போர் ஆவர்.
- ↑ 46. Ep. Ind. Vol. 15, p. 49.
- ↑ 47. 82 of 1892.
- ↑ 48. M.E.R. 1932, p.50; Kalaimagal Vol.II p.326.
- ↑ 49. S.I.I. Vol. 2, No. 20.
- ↑ 50. 102 of 1926.
- ↑ 51. Ind. Ant. Vol. iv, p.274.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இராசேந்திர சோழன் - History of Chola - சோழர் வரலாறு - பெரிய, போர், என்னும், என்பது, இருக்கிறது, ஒன்று, இருந்த, ஆகவமல்லன், அரண்மனை, கொண்ட, கங்கை, இப்பொழுது, காலத்தில், இராசாதிராசன்