சோழர் வரலாறு - இராசேந்திர சோழன்
சுரங்கம் :- அரண்மனையையும் கோவிலையும் இணைக்கும் சுரங்கம் ஒன்று இருந்தது. அதன் உண்மையை இன்று கோவிற்கும் மாளிகைமேட்டிற்கும் இடையில் உள்ள ஒடையிற் காணலாம். செங்கற் சுவர்களுடைய நிலவறைப் பகுதி ஒடையிற் காணப்படுகின்றது.
கோவிற்கு 365 காணிநிலம் இருக்கின்றது. ஒரு காணிக்கு ரூ. 5-10-0 ஆண்டு வருவாய். இங்ஙனம் இருந்தும் தக்க கண்காணிப்பு இன்மையால், வரலாற்றுப் புகழ்பெற்ற இக்கோவில் இழிநிலையில் இருக்கின்றது. இந்நிலை நீடிக்குமாயின், இதன் சிறப்பே அழிந்து படும் என்பதில் ஐயமில்லை. நல்லறிவும் பக்தியுமுள்ள பெருமக்களிடம் கோவிற் பணியை ஒப்படைத்துக் கோவிலை நன்னிலையில் வைக்கச் செய்தல் அறநிலையப் பாதுகாப்பாளர் கடமையாகும். –
உறை கிணறுகள் முதலியன :- கோவிலுக்கு ஒரு கல் தொலைவுவரை நாற்புறங்களிலும் உறை கிணறுகள் அகப்படுகின்றன. பழைய செங்கற்கள் நிரம்பக் கிடைக்கின்றன, கருங்கற்கள் எடுக்கப்படுகின்றன.
கோவில் கோபுரம் :- இன்று, இடிந்து கிடக்கும் கோபுரம் ஏறத்தாழ 25மீ. உயரமாக இருந்ததாம். அது முழுவதும் கருங்கல் வேலைப்பாடு கொண்டது; மேலே சாந்தாலான கலசங்கள் ஏழு இருந்தனவாம். அக்கோபுரம், அணைக்கட்டிற்கு கல் வேண்டி 75 ஆண்டுகட்கு முன் வெடி வைத்தபோது இடிந்து விழுந்துவிட்டதாம். அச்சிதைவுகள் அப்புறப்படுத்தப்பட்டில; கோவில் திருச்சுற்று முழுவதும் முட்செடிகள் நிறைந்துள்ளன; செருப்பின்றி நடத்தல் இயலாத கேவல நிலையில் உள்ளது.
சோழ கங்கம் : இஃது இராசேந்திரனால் வெட்டப்பட்ட ஏரி. இஃது இப்போது ‘பொன்னேரி எனப் பெயர் பெற்றுள்ளது. இஃது இப்பொழுது மேடாக இருக்கிறது. ஊருக்கு வடக்கே உள்ள இந்த ஏரி, தெற்கு வடக்காக 25 கி.மீ. நீளமுடையது; உயர்ந்த கரைகளை உடையது. இந்த ஏரிக்கும் கொள்ளிடத்திற்கும் இடையில் அறுபது கல் தொலைவு. அங்கிருந்து பெரிய கால்வாய் ஒன்று வெட்டப்பட்டது. அதன் வழிவந்த நீரே இந்த ஏரியை ஒரளவு நிரப்பியது. மற்றொரு கால்வாய் வெள்ளாற்றிலிருந்து வந்தது. தெற்கும் வடக்கும் இருந்த இக்கால்வாய்கள் இரண்டு ஆறுகளிலிருந்தும் நீரைப் பெய்து வந்தமையால் ஏரி எப்பொழுதும் கடல் போலக் காட்சி அளித்தது. இக் கால்வாய்களின் கரைகள் இன்றும் காணக்கூடிய நிலையில் உள்ளன. இந்த ஏரி நீர் திருச்சிராப்பள்ளி, தென் ஆர்க்காடு கோட்டங்களுக்கு நீரை உதவியதாகும். இதன் பாய்ச்சலால் பயன் பெற்ற விளை நிலங்கள் பலவாகும். ஆனால் இன்று இந்தப் பெரிய ஏரி தன் பழைமையை மட்டுமே உணர்த்திக் கிடப்பது வருந்தற்குரியதே. இந்த ஏரி இப்பொழுது காடடர்ந்த இடமாகிவிட்டது. பிற்காலத்தில் படை எடுத்தவர் இதனைப் பாழாக்கினர் என்று ஒரு மரபு கூறப்படுகிறது.[55]
இந்த ஏரி இப்பொழுது புதுப்பிக்கப்படுகிறது; வேலை நடைபெற்று வருகிறது. இது தன் பண்டைய நிலை எய்துமாயின், நாடு செழிப்புறும்.
மலையோ, குன்றோ இல்லாத சமவெளியில் 26 கி.மீ. நீளம் பலமான கரை போடுதல், நீரைத் தேக்குதல், 100 கி.மீ. நீளமுள்ள கால்வாய் வெட்டி நீரைக் கொணர்தல் என்பன எளிதான செயல்கள் ஆகா. இவ்வரிய செயல்களைச் செய்து முடித்த இராசேந்திரன் நோக்கம், தன் குடிகள் நல்வாழ்வு வாழக் கண்டு, தான் இன்புறல் வேண்டும் என்பதொன்றே அன்றோ? இத்தகைய பேரரசனைப் பெற்ற தமிழ் நாடு பேறு பெற்றதே அன்றோ?
அரசன் விருதுகள் : இராசேந்திரன் விருதுப் பெயர்கள் பலவாகும். அவற்றுள் மருராந்தகன், உத்தம சோழன், விக்கிரமசோழன், வீரராசேந்திரன்[56] என்பன இவன் முன்னோர்க்கும் பின்னோர்க்கும் இருந்த பெயர்கள். இவனுக்கே உரியவை முடிகொண்ட சோழன்[57], கங்கை கொண்ட சோழன், கடாரம் கொண்டான், பண்டித சோழன்[58] என்பன.
அரச குடும்பம் : அரச குடும்பம் பெரும்பாலும் பழையாறையில் இருந்ததுபோலும் பழையாறை அக்காலத்தில் ‘முடிகொண்ட சோழம்’ எனப் பெயர் பெற்று இருந்தது. இராசேந்திரன் முதல் மனைவியான பஞ்சவன் மாதேவிக்கு அங்குப் பள்ளிப்படை அமைக்கப்பட்டது[59]. இராசேந்திரனுக்கு மனைவியர் பலர் இருந்தனர். அவருள் பஞ்சவன் மாதேவியார், திருபுவன மாதேவியார் எனப்பட்ட வானவன் மாதேவியார்[60]. முக்கோக்கிழான் அடிகள்[61]. வீர மாதேவியார் என்போர் குறிப்பிடத் தக்கவராவர். வீரமாதேவியார் இராசேந்திர னுடன் உடன்கட்டை ஏறினவர் ஆவர்[62]. இப் பேரரசர்க்குப் பிள்ளைகள் பலர் இருந்தனர். அவர் நமக்குத் தெரிந்தவரை இராசாதிராசன், இராசேந்திரதேவன், வீர ராசேந்திரன் என்போர் ஆவர். இம் மூவருள் சடாவர்மன் சுந்தர சோழன் ஒருவனா அல்லது வேறானவனா என்பது விளங்கவில்லை. பிரானார் எனப்படும் அருமொழி நங்கை ஒரு பெண்; அம்மங்கா தேவி ஒரு பெண். அருமொழி நங்கை இராசாதிராசன் ஆட்சி முற்பகுதியில் திருமழப்பாடிக் கோவிலுக்கு விலை உயர்ந்த முத்துக்குடை அளித்தி ருக்கிறாள்[63]. இராசராசன் மகளான குந்தவ்வைக்கும் சாளுக்கிய விமலாதித்தற்கும் பிறந்த இராசராச நரேந்திரன் என்பவன் இராசேந்திரன் மகளான அம்மங்கா தேவியை மணந்து கொண்டான். இவ்விருவர்க்கும் பிறந்தவனே பிற்காலப் பேரரசனான முதற் குலோத்துங்கன்.
- ↑ 55. Ind Ant. IV. P. 274.
- ↑ 56. 61 of 1914.
- ↑ 57. காவிரியின் கிளையாறு ‘முடிகொண்டான்’ என்னும் பெயரை உடையது. அஃது இவனால் வெட்டப் பட்டது போலும்!
- ↑ 58. S.I.I. Vol.3, No. 127.
- ↑ 59. 271 of 1927.
- ↑ 60. 624 of 1920.
- ↑ 61. 73 of 1921.
- ↑ 62. 260 of 1915.
- ↑ 63. 71 of 1920.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இராசேந்திர சோழன் - History of Chola - சோழர் வரலாறு - சோழன், இராசேந்திரன், மாதேவியார், என்பன, கால்வாய், இஃது, இப்பொழுது, இன்று