ஸ்கந்த புராணம் - பகுதி 5 - பதினெண் புராணங்கள்
பார்வதிக்கு எட்டு வயதாகும் பொழுது, சிவன் தவம் செய்யும் இடத்தில் அவளைக் கொண்டு விட்டு சிவனுக்குப் பணிவிடை செய்யுமாறு கூறினார் இமவான். ஆனால் தவத்தில் மூழ்கிய சிவன் அவளைக் கண்டுகொள்ளவே இல்லை. இந்நிலையில் தேவர்கள் அனைவரும் கூடி மதனன் என்ற பெயருடைய காமனை அழைத்து ‘சிவன் மனத்தில் காதல் தீயை மூட்டுவாய்' என்றனர். பூக்களையே வில்லாகவும், அம்பறாத் துணியாகவும், அதிலுள்ள பாணங்களாகவும் வைத்திருந்த மதனன் சிவன் தவம் செய்யும் இடத்திற்குச் சென்று வசந்த காலத்தை உண்டாக்கி அந்த இனிமையான நேரத்தில் அம்புகளை சிவன் மீது எய்தான். தவம் கலைந்து கண்ணைத் திறந்த சிவன் எதிரே பார்வதி மலர் மாலையுடன் நின்றாள். அதைப் பற்றிக் கவலைப்படாத சிவன் அவள் பின்னே நிற்கும் மன்மதனைப் பார்த்தவுடன் கடுங்கோபம் கொண்டு தன் நெற்றிக் கண்ணைத் திறந்தார். அதிலிருந்து புறப்பட்ட தீ மதனனை எரித்துச் சாம்பலாக்கி விட்டது. மிக்க கோபத்துடன் சிவன் அந்த இடத்தை விட்டுப் போய்விட்டார். தேவர்கள் மன்மதன் எரிந்ததைக் கண்டு 'ஓ'வென்று கதறினர். இமவான் வந்து தன் மகளை அழைத்துச் செல்ல விரும்பிய போது, பார்வதி மறுத்து விட்டாள். சிவன் இருந்த பர்ண சாலையிலேயே கடுந்தவம் புரிய ஆரம்பித்தாள். எட்டு வயதுச் சிறுமியாக இருந்தும், பச்சை இலைகளைத் தின்றும், பிறகு காய்ந்த இலைகளைத் தின்றும் அதன்பிறகு அந்த இலைகளைக் கூடத் தின்னாமல் விரதம் அனுஷ்டிக்கத் தொடங்கினாள். அதனால் அவளுக்கு “அபர்ணா” என்ற பெயர் வந்தது.
பார்வதியின் தவத்தை மெச்சிய சிவன் அவளை மணந்து கொள்ள முடிவு செய்தாலும், அவளைச் சற்று சீண்டிவிட்டு வேடிக்கை பார்க்க நினைத்தார். அதனால் தன் வடிவை மாற்றிக் கொண்டு மாறு வேடத்தில் பார்வதி எதிரே வந்து, சிவனை ஏன் மணக்க நினைக்கிறாய். அவன் அறியாமை நிறைந்த பயித்தியக்காரன், எப்பொழுதும் சாம்பலைப் பூசிக் கொண்டு சுடுகாட்டில் திரிபவன். அவன் அணிந்திருக்கும் மாலை மயான மண்டை ஒடுகள். சுற்றி இருப்பவை அலறும் பிசாசுகள். இதைக் கேட்ட பார்வதி, தாட்சாயணியைப் போல் கோபம் கொண்டு எதிரிலே நிற்பவனைப் பார்த்து, “உம் சொற்களை நான் கேட்கத் தயாரில்லை. இங்கிருந்து போய் விடு” என்றாள். இந்த வார்த்தைகளை அவள் பேசியவுடன் சிவன் தன் உண்மையான சொரூபத்துடன் எதிரிலே நிற்கவும், பார்வதி அளவற்ற நாணத்துடன் அவரிடம் ஒரு வரம் வேண்டினாள். சென்ற பிறப்பில் நான் தாட்சாயணியாக இருக்கும் பொழுது தாங்கள் தானே என் கணவர். இந்தப் பிறப்பிலும் நான் தங்கள் மனைவியாக இருக்க விரும்புகிறேன். தங்களை மணந்து பிறக்கப் போகும் குழந்தை தாரகாசுரனை வெல்லும் குழந்தையாகவே எண்ணி மணம் புரிந்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். சிவன் அதற்கு ஒத்துக்கொள்ளவே பார்வதியின் தந்தையாகிய இமவான் மிக்க ஆடம்பரத்துடன் பார்வதியைச் சிவனுக்கு மண முடித்தான்.
ஸ்கந்தனின் தோற்றமும், லீலைகளும்
பார்வதியை மணந்து கொண்ட சிவன் கந்தமாதன மலைக்குச் சென்று அங்குள்ள கோயிலில் தங்கிவிட்டார். கோயில் கதவு சாத்தப்பட்டு இருந்தது. ஒராயிரம் ஆண்டுகள் உருண்டுவிட்டன.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸ்கந்த புராணம் - பகுதி 5 - Skanda Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, சிவன், பார்வதி, கொண்டு, தவம், இமவான், தேவர்கள், நான், அந்த, மணந்து