ஸ்கந்த புராணம் - பகுதி 24 - பதினெண் புராணங்கள்
ஒருமுறை கைலாசத்தில் சனகர் முதலிய முனிவர்கள் ஸ்கந்தனைப் பார்த்து காசியின் பெருமையைச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார்கள். காசியிலுள்ள எல்லா இடங்களும் ஒரு கோயிலையும் அதன் தொடர்பான பொருள்களையும் பெற்றிருப்பதால் எல்லா இடங்களுமே புண்ணியமானவை என்று கூறினர்.
காசியில் உள்ள சுடுகாட்டின் மேல் ஆகாயத்தில் சிவனுடைய கோயில் ஒன்று இருக்கிறது. சாதாரண மக்களின் கண்களுக்கு அது புலப்படாவிட்டாலும் மகான்களுக்கும் ஞானிகளுக்கும் பரமாத்மாக்களுக்கும் அது கண்ணில் படும்.
காசியில் வாழ்வதற்கும் நுழைவதற்கும் சில கட்டுத் திட்டங்கள் உண்டு. வேதவியாசர் கூட நினைத்த போதெல்லாம் காசியில் வாழ முடியாது. சுக்கிலபட்சத்தில் எட்டு, பதினாலு ஆகிய திதிகளில் மட்டுமே அவர் காசிக்குள் வரலாம் என்ற நியதி இருந்தது.
வேதவியாசர் ஒருமுறை இந்த நியதியை மீறி ஆறு மாதம் காசியில் தங்கிவிட்டார். அந்த ஆறு மாதங்களும் காசியில் உள்ளவர்கள் ஒருவர்கூடப் பிச்சை போட முன் வரவில்லை.
ஒருமுறை ஆறு மாதம் வரை ஒருவரும் பிச்சை போட முன்வரவில்லை என்றவுடன் மிகவும் கோபம் கொண்ட வேதவியாசர் அந்த நகரத்து மக்களைச் சபித்துவிட எண்ணினார். அந்த நேரத்தில் சிவனும் பார்வதியும் ஒரு கணவனும் மனைவியுமாக வேதவியாசர் முன்னே தோன்றி அவரைத் தங்கள் வீட்டிற்கு வருமாறு அழைத்து வயிறு நிரம்ப உணவளித்தனர். உண்ட பிறகு சிவன் வேதவியாசர் முன் தோன்றி, கோபத்தை அடக்கும் சக்தி உனக்கு இன்னும் வரவில்லை. ஆகவே காசியில் நிரந்தரமாகத் தங்கும் தகுதி உனக்கு இல்லை” என்று கூறினார். அதைக் கேட்ட வேத வியாசர் சிவனைப் பார்த்து அத்தகுதி தனக்கு இல்லை என்றாலும் சுக்கிலபட்சத்தில் எட்டு, (அஷ்டமி) பதினாலு (சதுர்த்தசி) ஆகிய இரண்டு நாட்களிலும் உள்ளே வர அனுமதி வேண்டினார். "அப்படியே ஆகட்டும்' என்று கூறிவிட்டு மறைந்தார்.
காசி தோன்றிய கதை
காசி தலம் விஸ்வகர்மாவினால் நிர்மாணிக்கப்பட்டதாகும். அதற்குரிய கதை வருமாறு:
சிவனுக்குக் கல்யாணம் நடந்து முடிந்த பிறகு பார்வதி கணவனுடன் தன் பிறந்த வீடாகிய இமாசலத்தில் தங்கி விட்டார். சிவனும் மாமனார் வீட்டில் தங்கி மகிழ்ச்சியாக இருந்து விட்டார். பார்வதியின் தாயாகிய மேனாவிற்கு மருமகன் வீட்டோடு தங்கியிருப்பது பிடிக்கவில்லை. மகளிடம் ஓயாது அதுபற்றி குத்திக்காட்டிக் கொண்டே இருந்தாள். “இந்த மாப்பிள்ளையிடம் எதைப் பார்த்து ஆசைப்பட்டாய். நீ? இளமையோ, அழகோ இல்லாத இவனிடம் நீ ஏன் ஆசை வைத்தாய்?’ என்று அடிக்கடி கேட்டுத் துன்புறுத்தினாள். “உன்னுடைய கணவன் உனக்கு ஒரு நகைகூடப் போடவில்லை. என்னுடைய மற்றப் பெண்களெல்லாம் அவர்களுடைய கணவன்மார் போட்ட நகைகளைச் சுமக்க முடியாமல் போட்டுக் கொண்டு இருக்கின்றனர். காலம் முழுவதும் உங்கள் இருவரையும் இங்கே வைத்துக் கொண்டு பராமரிக்க என்னால் முடியாது. ஆனாலும் இதைப் போய் உன் கணவனிடம் சொல்லிவிடாதே. வேடிக்கைக்குத்தான் இதை நான் சொன்னேன்” என்று கூறி முடித்தாள். பார்வதி கணவனிடம் சென்று தன் தாயார் கூறியதாகச் சொல்லாமல் தானே சொல்லுவது போல இவை அனைத்தையும் மிகவும் அன்போடு ஆனால் கடுமையாகவும் கூறிவிட்டாள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸ்கந்த புராணம் - பகுதி 24 - Skanda Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, காசியில், வேதவியாசர், உனக்கு, அந்த, பார்த்து, ஒருமுறை