ஸ்கந்த புராணம் - பகுதி 25 - பதினெண் புராணங்கள்
பார்வதியின் சொற்களைக் கேட்ட சிவன் உடனே பார்வதியை அழைத்துக் கொண்டு தன் காளை வாகனத்தில் ஏறி காசிக்கு வந்து சேர்ந்தார். சிவனுடைய உத்தரவினால் விஸ்வகர்மா முன்னரே காசி நகரத்தை அமைத்திருந்தார். வான் உயர்ந்த கட்டடங்கள், பெரிய பெரிய பூஞ்சோலைகள் இவற்றைக் கொண்டு காசி விளங்கிற்று. காசி தங்கத்தால் ஆகிய சுவர்களையும், நவரத்தின மணி முதலியவை பதித்த பகுதிகளையும் கொண்டு விளங்கிற்று. சிவனும் பார்வதியும் பலகாலம் காசியில் தங்கினர். பார்வதி தன் பிறந்த இடத்தை மறந்தே விட்டாள். பலகாலம் கழித்து சிவன் கைலைக்கு மீண்டார். காசியை விட்டுப் புறப்படுமுன் ஒரு கோடி லிங்கங்களைக் காசியில் பல இடங்களில் நிர்மாணித்து விட்டு, கைலைக்கு வந்தார். இது நடந்தது துவாபர யுகத்தில். அதன் பின்னர் பல அரசர்கள் காசியில் இருந்து ஆட்சி செய்தனர். அவர்களில் ஒரு மன்னன் காலத்தில் காசி நகரம் முழுவதும் தீயால் அழிந்தது. அவன் நீண்ட காலம் தவம் செய்து சிவன் எதிர்ப்பட்டபொழுது கிருஷ்ணனைத் தோற்கடிக்கும் சக்தி தனக்கு வேண்டும் என்று வரம் கேட்டான். சிவன் அப்படியே தருவதாகச் சொல்லி, போரில் தானும் உதவுவதாக வாக்களித்தார். இந்த அரசன் கிருஷ்ணனைப் போருக்கு அழைத்தான். போரில் கிருஷ்ணனின் சக்கரம், அந்த முட்டாள் அரசனைக் கொன்று, அவனுடைய படைகளை எல்லாம் கொன்று குவித்தது. மேலும் காசி நகரம் முழுவதையும் தீக்கிரையாக்கி சக்கரம் சிவனிடத்தில் வந்தது. பின் தோல்வியை ஒப்புக் கொண்டார்.
பிரபச தீர்த்தம்
ஸ்கந்த புராணத்தின் கடைசி காண்டம் பிரபச காண்டம். பிரபச என்ற சொல்லுக்கு ஒளி பொருந்தியது என்று பொருள். இத்தீர்த்தம் சமுத்திரக் கரையில் உள்ளது. இத்தீர்த்தத்தில் குளித்தாலும் முழுப்பயனை அடைய முடியாது. இத்தீர்த்தம் மிகவும் பெருமை வாய்ந்தது.
மழைத்துளிகளை எண்ணினாலும் ஸ்கந்த புராணத்தில் உள்ள பாடல்களை எண்ண முடியாது. எவ்வளவு பாடல்களைக் கேட்டாலும், அவ்வளவுக்குரிய புண்ணியம் கிடைக்கும் என்று சூத முனிவரே சொன்னார் என்று புராணம் முடிவடைகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸ்கந்த புராணம் - பகுதி 25 - Skanda Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, காசி, சிவன், பிரபச, காசியில், கொண்டு