யாப்பெருங்கலக் காரிகை

உதாரண இலக்கிய முதனினைப்புச் செய்யுள்
| திருமழை உள்ளார் அகவல் சிலைவிலங் காகும்வெள்ளை
மருளறு வஞ்சிமந் தாநிலம் வந்துமை தீர்கலியின் தெரிவுறு பந்தநல் லாய்செல்வப் போர்க்கதக் கண்ணனென்ப துரிமையின் கண்ணின்மை ஓரசைச் சீருக் குதாரணமே | 11 |
அடி
| குறளிரு சீரடி சிந்துமுச் சீரடி நாலொருசீர்
அறைதரு காலை அளவொடு நேரடி ஐயருசீர் நிறைதரு பாத நெடிலடி யாநெடு மென்பணைத்தோள் கறைகெழு வேற்கணல் லாய்மிக்க பாதங் கழிநெடிலே | 12 |
உதாரண இலக்கிய முதனினைப்புச் செய்யுள்
| திரைத்த விருது குறள்சிந் தளவடி தேம்பழுத்து
விரிக்கு நெடிலடி வேனெடுங் கண்ணிவென் றான்வினையின் இரைக்குங் கணிகொண்ட மூவடி வோடிடங் கொங்குமற்றும் கரிக்கைக் கவான்மருப் பேர்முலை மாதர் கழிநெடிலே | 13 |
நான்கு பாக்களுக்கும் அடியின் சிறுமையும் பெருமையும்.
| வெள்ளைக் கிரண்டடி வஞ்சிக்கு மூன்றடி மூன்றகவற்
கெள்ளப் படாகலிக் கீரிரண் டாகும் இழிபுரைப்போர் உள்ளக் கருத்தின் அளவே பெருமையண் போதலைத்த கள்ளக் கருநெடுங் கட்சுரி மென்குழற் காரிகையே | 14 |
உதாரண இலக்கிய முதனினைப்புச் செய்யுள்
| அறத்தா றிதுவென வெள்ளைக் கிழிபக வற்கிழிபு
குறித்தங் குரைப்பின் முதுகுறைந் தாங்குறை யாக்கலியின் திறத்தா றிதுசெல்வப் போர்ச்செங்கண் மேதிவஞ் சிச்சிறுமை புறத்தாழ் கருமென் குழல்திரு வேயன்ன பூங்கொடியே | 15 |
தொடை
| எழுவா யெழுத்தொன்றின் மோனை இறுதி இயைபிரண்டாம்
வழுவா எழுத்தொன்றின் மாதே எதுகை மறுதலைத்த மொழியான் வரினு முரணடி தோறு முதன்மொழிக்கண் அழியா தளபெடுத் தொன்றுவ தாகும் அளபெடையே | 16 |
| அந்த முதலாத் தொடுப்பதந் தாதி அடிமுழுதும்
வந்த மொழியே வருவ திரட்டை வரன்முறையான் முந்திய மோனை முதலா முழுதுமொவ் வாதுவிட்டால் செந்தொடை நாமம் பெறுநறு மென்குழல் தேமொழியே | 17 |
உதாரண இலக்கிய முதனினைப்புச் செய்யுள்
| மாவும்புண் மோனை யியைபின் னகைவடி யேரெதுகைக்
கேவின் முரணு மிருள்பரந் தீண்டள பாஅவளிய ஓவிலந் தாதி உலகுட னாமொக்கு மேயிரட்டை பாவருஞ் செந்தொடை பூத்தவென் றாகும் பணிமொழியே | 18 |
| இருசீர் மிசையிணை யாகும் பொழிப்பிடை யிட்டொருவாம்
இருசீ ரிடையிட்ட தீறிலி கூழை முதலிறுவாய் வருசீ ரயலில் மேல்கீழ் வகுத்தமை தீர்கதுவாய் வருசீர் முழுவதும் ஒன்றின்முற் றாமென்ப மற்றவையே | 19 |
உதாரண இலக்கிய முதனினைப்புச் செய்யுள்
| மோனை விகற்ப மணிமலர் மொய்த்துட னாமியைபிற்
கேனை யெதுகைக் கினம்பொன்னி னன்ன இனிமுரனிற் கான விகற்பமுஞ் சீறடிப்பேர தளபெடையின் தான விகற்பமுந் தாட்டாஅ மரையென்ப தாழ்குழலே | 20 |
உறுப்பியல் செய்யுட்களின் முதனினைப்புச் செய்யுள்
| கந்தமுந் தேனுஞ் சுருக்கமுங் காதற் குறில்குறிலே
சந்தமுந் தீரசை தேமாத்தண் குன்றந்தண் சீர்திருவுங் கொந்தவிழ் கோதாய் குறளடி வெள்ளைக் கறத்தெழுவாய் அந்தமு மாவும் இருசீரு மோனையு மாமுறுப்பே | 21 |
செய்யுளியல்
பாவுக்குரிய அடியும் ஓசையும்
| வெண்பா அகவல் கலிப்பா அளவடி வஞ்சியென்னும்
ஒண்பா அடிகுறள் சிந்தென் றுரைப்ப ஒலிமுறையே திண்பா மலிசெப்பல் சீர்சால் அகவல்சென் றேங்குதுள்ளல் நண்பா அமைந்த நலமிகு தூங்கல் நறுநுதலே | 22 |
உதாரண இலக்கிய முதனினைப்புச் செய்யுள்
| வளம்பட வென்பது வெள்ளைக் ககவற் குதாரணஞ்செங்
களம்படக் கொன்று கலிக்கரி தாயகண் ணார்கொடிபோல் துளங்கிடை மாதே சுறமறி தென்னலத் தின்புலம்பென் றுளங்கொடு நாவலர் ஓதினர் வஞ்சிக் குதாரணமே | 23 |
வெண்பாவும் அதன் இனமும்
குறள்வெண்பா நேரிசை வெண்பா
| ஈரடி வெண்பாக் குறள்குறட் பாவிரண் டாயிடைக்கட்
சீரிய வான்றனிச் சொல்லடி முய்ச்செப்ப லோசைகுன்றா தோரிரண்டாயும் ஒருவிகற் பாயும் வருவதுண்டேல் நேரிசை யாகு நெறிசுரி பூங்குழல் நேரிழையே | 24 |
இன்னிசை வெண்பா, ப·றொடை வெண்பா
| ஒன்றும் பலவும் விகற்பொடு நான்கடி யாய்த்தனிச்சொல்
இன்றி நடப்பின· தின்னிசை துன்னும் அடிபலவாய்ச் சென்று நிகழ்வ ப·றொடை யாஞ்சிறை வண்டினங்கள் துன்றுங் கருமென் குழற்றுடி யேரிடைத் தூமொழியே | 25 |
சிந்தியல் வெண்பா, வெண்பாவின் இறுதியடி
| நேரிசை யின்னிசை போல நடந்தடி மூன்றின்வந்தால்
நேரிசை யின்னிசைச் சிந்திய லாகு நிகரில்வெள்ளைக் கோரசைச் சீரு மொளிசேர் பிறப்புமொண் காசுமிற்ற சீருடைச் சிந்தடி யேமுடி வாமென்று தேறுகவே | 26 |
குறள் வெண்செந்துறை, குறட்டாழிசை
| அந்தமில் பாத மளவிரண் டொத்து முடியின்வெள்ளைச்
செந்துறை யாகுந் திருவே யதன்பெயர் சீர்பலவாய் அந்தங் குறைநவுஞ் செந்துறைப் பாட்டி னிழிபுமங்கேழ் சந்தஞ் சிதைத்த குறளுங் குறளினத் தாழிசையே | 27 |
வெண்தாழிசை, வெண்டுறை, வெளிவிருத்தம்
| மூன்றடி யானு முடிந்தடி தோறு முடிவிடத்துத்
தான்றனிச் சொற்பெறுந் தண்டா விருத்தம்வெண் டாழிசையே மூன்றடி யாய்வெள்ளை போன்று மூன்றிழி பேழுயர்வாய் ஆன்றடி தாஞ்சில அந்தங் குறைந்திறும் வெண்டுறையே | 28 |
ஆசிரியப்பாவும் அதன் இனமும்
நான்குவகை ஆசிரியப்பா
| கடையயற் பாதமுச் சீர்வரி னேரிசை காமருசீர்
இடைபல குன்றின் இணைக்குற ளெல்லா அடியுமொத்து நடைபெறு மாயி னிலைமண் டிலநடு வாதியந்தத் தடைதரு பாதத் தகவல் அடிமறி மண்டிலமே | 29 |
ஆசிரியத் தாழிசை, துறை, விருத்தம்
| தருக்கியல் தாழிசை மூன்றடி யப்பன நான்கடியாய்
எருத்தடி நைந்தும் இடைமடக் காயும் இடையிடையே சுருக்கடி யாயுந் துறையாங் குறைவில்தொல் சீரகவல் விருத்தங் கழிநெடில் நான்கொத் திறுவது மெல்லியலே | 30 |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
யாப்பெருங்கலக் காரிகை, Yapperungalak Karikai, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்

