இலக்கணச் சுருக்கம்

4. உரியியல்
335. உரிச்சொல்லாவது, பொருட்கு உரிமை பூண்டு நிற்கும் பண்பை உணர்த்துஞ் சொல்லாம்.
336. உலகத்துப் பொருள், உயிர்ப் பொருளும், உயிரல் பொருளும் என, இரு வகைப்படும்.
337. இப்பொருள்களுக்குரிய பண்பு, குணப்பண்புந் தொழிற்பண்பும் என இரு வகைப்படும்.
338. உயிர்ப் பொருள்களின் குணப்பண்புகளாவன: அறிவு, அச்சம், மானம், பொறுமை, மயக்கம், வருப்பு, வெறுப்பு, இரக்கம், நன்மை, தீமை முதலியனவாம்.
339. உயிர்ப்பொருள்களின் றொழில் பண்புகளாவன: உண்ணல், உடுத்தல், உறங்கள், அணிதல், தொழுதல், நடத்தல், ஆக்கல், காத்தல், அழித்தல் முதலியனவாம்.
340. உயிரல் பொருள்களின் குணப்பண்புகளாவன: பல்வகை வடிவங்களும், இரு வகைநாற்றங்களும், ஐவகை நிறங்களும், அறு வகைசுவைகளும், எண்வகைப் பரிசங்களுமாம்.
பல்வகை வடிவங்களாவன: வட்டம், இருகொணம், முக்கோணம், சதுர முதலியன.
இருவகை நாற்றங்களாவன: நறு நாற்றம், தீநாற்றம் என்பவைகளாம்.
ஐவகை நிறங்களாவன: வெண்மை, செம்மை, கருமை, பொன்மை, பசுமை என்பவைகளாம்.
அறு வகைசுவைகளாவன: கைப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கார்ப்பு, இனிப்பு என்பவைகளாம்.
எண்வகைப் பரிசங்களாவன: வெம்மை, தண்மை, மென்மை, வன்மை, நொய்மை, சீர்மை, இழு மெனல், சருச்சரை என்பவைகளாம்.
341. உயிர்ப்பொருள், உயிரல் பொருள் என்னும் இரு வகைப் பொருள்களுக்கும் உரிய தொழிற்பண்புகளாவன: தோன்றல், மறைதல், வளர்தல், சுரங்கள், நீங்கள், அடைதல், நடுங்கள், ஒலித்தல் முதலியவைகளாம்.
342. மேற்கூறிய குணப்பண்பும், உண், உறங்கு முதலிய முதனிலையளவிற் பெறப்படுந் தொழிற்பண்பும், ஆகிய பொருட் பண்பை உணர்த்துஞ் சொற்கள் வினைச் சொற்கள் எனப்படும்.
343. இவ்வுரிச் சொற்கள், ஒரு குணத்தையும் பல குணத்தையும் பல குணத்தையும் உணர்த்தி வரும்.
344. சால், உறு, தவ, நனி, கூர், கழி, என்பன, மிகுதி என்னும் ஒரு குணத்தை உணர்த்தும் உரிச்சொற்களாம்.
உதாரணம்.
சால் - தென்மலை யிருந்த சீர்சான் முனிவரன்
உறு - உறுயுனறந் துலகூட்டி
தவ - ஈயாது வீயு முயிர் தவப் பலவே
நனி - வந்து நனி வருந்தினை வாழிய நெஞ்சே
கூர் - துணிகூ ரெவ்வமொடு
கழி - கழிகண் ணோட்டம்
345. செழுமை என்பது வளனுங் கொழுப்பும் என்னும் இரு குணத்தை உணர்த்தும் உரிச்சொல்லாம்.
உதாரணம்.
வளம் - செழும் பல் குன்றம்
கொழுப்பு - செழுந் தடிதின்ற செந்நாய்
இவ்வாறே ஒரு குணத்தையும் பல குணத்தையும் உணர்த்தி வரும் உரிச்சொற்களெல்லாவற்றையும் நிகண்டு வாயிலாக அறிந்து கொள்க.
-----
- தேர்வு வினாக்கள்
335. உரிச் வொல்லாவது யாது?
336. உலகத்துப் பொருள் எத்தனை வகைப்படும்?
337. இப்பொருள்களுக்குரிய பண்பு எத்தனை வகைப்படும்?
338. உயிர்ப் பொருள்களின் குணப்பண்புகள் எவை?
339. உயிர்ப் பொருள்களின் றொலிற்பண்புகள் எவை?
340. உயிரல் பொருள்களின் குணப்பண்புகள் எவை?
341. உயிர்ப்பொருள், உயிரல் பொருள் என்னம் இரு வகைப் பொருள்களுக்குமுரிய தொழிற்பண்புகள் எவை?
342. தொழிற் சொல்லை மேலே வினைச் சொல்லென்றும் இங்கே உரிச்சொல்லென்றுஞ் சொல்லியது என்னை?
343. இவ்வுரிச் சொற்கள் பொருட் குணங்களை எவ்வாறு உணர்த்தி வரும்?
345. பல குணங்களை உணர்த்தும் உரிச் சொல் எது?
உரியியல் முற்றிற்று.
சொல்லதிகாரம் முற்றுப் பெற்றது.
3. தொடர்மொழியதிகாரம்
3.1 தொகை நிலைத் தொடரியல்
346. தொடர் மொழியாவது, ஒன்றோடொன்று பொருள் படத் தொடர்ந்து நிற்கும் இரண்டு முதலிய சொற்களினது கூட்டமாம்.
347. சொல்லோடு சொற்றொடருந் தொடர்ச்சி, தொகைநிலைத் தொடர், தொகா நிலைத் தொடர் என இரு வகைப்படும்.
348. தொகைநிலைத் தொடராவது, வெற்றுமையுருபு முதலிய உருபுகள் நடுவே கெட்டு நிற்ப, இரண்டு முதலிய சொற்கள் ஒரு சொற்றன்மைப்பாட்டுத் தொடர்வதாம்.
ஒரு சொற்றன்மைப்பட்டுதலாவது பிளவு படாது நிற்றல்.
----
- தேர்வு வினாக்கள்
346. தொடர் மொழியாவது யாது?
347. சொல்லோடு சொற்றொடருந் தொடர்ச்சி எத்தனை வகைப்படும்?
348. தொகைநிலைத் தொடராவது யாது?
தொகைநிலைத் தொடர்ப்பாகுபாடு
349. அத்தொகைநிலைத் தொடர் வேற்றுமைத் தொகை, வினைத் தொகை, பண்புத் தொகை, உவமைத் தொகை, உம்மைத் தொகை, அன்மொழித் தொகை என, அறு வகைப்படும்.
-----
- தேர்வு வினா
349. தொகை நிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
வேற்றுமைத் தொகை
350. வேற்றுமைத் தொகையாவது, ஐ, முதலிய ஆறு வேற்றுமையுருபும் இடையிலே கெட்டு நிற்கப், பெயரோடு பெயரும் பெயரோடு பெயரும் பெயரோடு வினை வினைக்குறிப்புப் பெயர்களுந் தொடர்வதாம்.
உதாரணம்.
நிலங்கடந்தவன் - இரண்டாம் வேற்றுமைத்தொகை
தலைவணங்கினவன் - மூன்றாம்; வேற்றுமைத்தொகை
சாத்தன்மகன் - நான்காம் வேற்றுமைத்தொகை
ஊர்நீங்கினவன் - ஐந்தாம் வேற்றுமைத்தொகை
சாத்தன்கை - ஆறாம் வேற்றுமைத்தொகை
குன்றக்கூகை - ஏழாம் வேற்றுமைத்தொகை
கையையுடைய களிறு என்பது கைக்களிறு எனவும், பொன்னாற் செய்தகுடம் என்பது பொற்குடம் எனவும், வருவன, உருபும் பொருளும் ஒருங்கு கெட்ட வேற்றுமைத் தொகை எனக் கொள்க.
351. ஐயுருபுங் கண்ணுருபும், தொடர் மொழியின் இடையிலன்றி, இறுதியிலுங் கெட்டு நிற்கும்.
உதாரணம்.
கடந்தானிலம் - ஐயுருபு தொக்கது
இருந்தான்மாடத்து - கண்ணுருபு தொக்கது
இவ்வாறு வருவனவெல்லாம், உருபு கெட்டு நிற்கினும் ஒரு சொற்றொன்மைப் படாது பிளவுபட்டு நிற்றலினாலே, தொகாநிலைத் தொடரெனவே கொள்ளப்படும்.
352. வேற்றுமையுருபுகள், விரிந்து நிற்குமிடத்து எப்பொருள் படுமோ அப்பொருள் படுமிடத்தே, தொக்கு நிற்கப் பெறும்; அப்பொருள் படாவிடத்தே தொக்கு நிற்கப் பெறவாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 34 | 35 | 36 | 37 | 38 | ... | 45 | 46 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இலக்கணச் சுருக்கம், Ilakkana Surukkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்