முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » ஐங்குறுநூறு » 18. தொண்டிப் பத்து.
ஐங்குறுநூறு - 18. தொண்டிப் பத்து.

துறைமுகம் தொண்டி பற்றி இதில் உள்ள 10 பாடல்களும் பேசுகின்றன.
|
திரைஇமிழ் இன்னிசை அளைகி அயலது முழவுஇமிழ் இன்னிசை மறுகுதொறு இசைக்கும் தொண்டி அன்ன பணைத்தோள் ஒள்தொடி அரிவைஎன் நெஞ்சுகொண் டோளே. | 171 |
தொண்டி போல் இனிக்கும் தோளைக் கொண்டவள், என் நெஞ்சைக் கொண்டவள். கடலில் அலை இசையும், தெருவில் முழவின் இசையும் கேட்கும் ஊர் தொண்டி.
|
ஒள்தொடி அரிவை கொண்டனள் நெஞ்சே வண்டிமிர் பனித்துறைத் தொண்டி ஆங்கண் உரவுக் கடல்ஒலித் திரையென இரவி னானும் துயிலறி யேனே. | 172 |
தொண்டடிப் பனித்துறையில் அரிவை என் நெஞ்சைப் கொண்டாள். கடலலை போல இரவும் பகலும் உறங்காமல் இருக்கிறேன்.
|
இரவி னானும் இந்துயில் அறியாது அரவுறு துயரம் எய்துப தொண்டித் தண்நறு நெய்தல் நாறும் பின்இருங் கூந்தல் அணங்குற் றோரே. | 173 |
பின்னிய கூந்தலில் தொண்டியில் பூத்த நெய்தல் மலரைச் சூடிக்கொண்டிருக்கும் அவள் அழகில் மயங்கி வருந்துபவர் இரவிலும் கூடப் பாம்பு பாய வருவது போல் தூங்காமல் இருப்பர்.
|
அணங்குடைப் பனித்துறைத் தொண்டி யன்ன மணங்கமழ் பொழிற்குறி நல்கினள் நுணங்கு இழை பொங்கரி பரந்த உண்கண் அம்கலில் மேனி அசைஇய எமக்கே. | 174 |
தெய்வம் வாழும் தொண்டி நகரப் பனித்துறைக்கு வருமாறு எனக்கு அவள் குறியிடம் தந்தாள். அவள் பொங்கும் அழகு பரந்துகிடக்கும் கண்ணை உடையவள்.
|
எமக்குநயந் தருளினை யாயின் பணைத்தோள் நல்நுதல் அரிவையொடு மென்மெல இயலி வந்திசின் வாழியா மடந்தை தொண்டி யன்னநின் பண்புல கொண்டே. | 175 |
தோழிப் பெண்ணே, என்மீது உனக்கு அருள் இருந்தால், தொண்டி நகரம் போன்ற பண்பு நலம் கொண்ட உன் தோழி பணைத்தோள் மடந்தையை மெல்ல மெல்ல அழைத்துக்கொண்டு வருக.
|
பண்பும் பாயலும் கொண்டனள் தொண்டித் தண்கமழ் புதுமலர் நாறும் ஒண்டொடி ஐதுஅமைந்து அகன்ற அல்குல் கொய்தளிர் மேனி கூறுமதி தவறே. | 176 |
பண்போடு படுக்க இடம் தந்தாள். அவள் புதுமணம் கமழும் தளிர் போன்ற மேனி உடையவள். மென்மையான அல்குல் உடையவள். அவள் எனக்குத் தந்ததில் என்ன தவறு இருக்கிறது?
|
தவறிலர் ஆயினும் பனிப்ப மன்ற இவறுதிரை திளைக்கும் இடுமணல் நெடுங்கோட்டு முண்டக நறுமலர் கமழும் தொண்டி அன்னோள் தோள்உற் றோரே. | 177 |
கடல்லை மோதும் மணல்மேட்டில், மணக்கும் முண்டக மரத்தடியில் தொண்டி போன்ற அவள் தந்த தோளைத் தழுவியவர் தவறு இல்லாதவர் என்றாலும் நடுங்குவர் அன்றோ?
|
தோளும் கூந்தலும் பலபா ராட்டி வாழ்தல் ஒல்லுமோ மற்றே செங்கோல் குட்டுவன் தொண்டி யன்ன என்கண்டும் நயந்துநீ நல்காகக் காலே. | 178 |
செங்கோல் ஆட்சி நடத்தும் அரசன் குட்டுவனின் தொண்டி போன்றவள் நான். அவர் என்னைக் காணுமாறு நீ கொடுக்காவிட்டால் அவர் என் தோளையும் கூந்தலையும் பாராட்டும்படி நான் வாழ முடியுமா?
|
நல்குமதி வாழியோ நளிநீர்ச் சேர்ப்ப அலவன் தாக்கத் துறையிறாப் பிறழும் இன்னொலித் தொண்டி அற்றே நின்னலது இல்லா இவள்சிறு நுதவே. | 179 |
சேர்ப்பு நிலத் தலைவனே! நீ இவளுக்கு உன்னைத் தா. நண்டு தாக்கியதால் இறா மீன் பிறழும் தொண்டியில் இவளுக்கு உன்னைத் தவிர யாரும் உறவுக்காரர் இல்லை.
|
சிறுநனை வரைந்தனை கொண்மோ பெருநீர் வலைவர் தந்த கொழுமீன் வல்சிப் பறைதபு முதுகுருகு இருக்கும் துரைகெழு தொண்டி அன்னஇவள் நலனே. | 180 |
கடலில் வலை போட்டுப் பிடித்துக்கொண்டு வந்த மீனைச் சிறகு கெட்டுப்போன நாரை இரையாக்கிக்கொள்ளும் தொண்டி போன்றது இவள் பெண்மை நலம். இவளைத் திருமணம் செய்து அழைத்துச் செல்க.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 16 | 17 | 18 | 19 | 20 | ... | 49 | 50 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு, Ainkurunooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தொண்டி, நாறும், தொண்டித், றோரே, யன்ன, மேனி, னானும், இரவி, பணைத்தோள், ஒள்தொடி, கொண்டனள், பனித்துறைத், இன்னிசை

