முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » அருணகிரிநாதர் நூல்கள் » திருப்புகழ் »
பாடல் 878 - திருச்சக்கிரப்பள்ளி
திருப்புகழ் - பாடல் 878 - திருச்சக்கிரப்பள்ளி
ராகம் - ....; தாளம் -
|
தத்த தத்தன தத்தன தத்தன தத்த தத்தன தத்தன தத்தன தத்த தத்தன தத்தன தத்தன ...... தனதான |
|
திட்டெ னப்பல செப்பைய டிப்பன பொற்கு டத்தையு டைப்பன வுத்தர திக்கி னிற்பெரு வெற்பைவி டுப்பன ...... வதின்மேலே செப்ப வத்திம ருப்பையொ டிப்பன புற்பு தத்தையி மைப்பில ழிப்பன செய்த்த லைக்கம லத்தைய லைப்பன ...... திறமேய புட்ட னைக்கக னத்தில்வி டுப்பன சித்த முற்பொர விட்டுமு றிப்பன புட்ப விக்கன்மு டிக்குறி யுய்ப்பன ...... இளநீரைப் புக்கு டைப்பன முத்திரை யிட்டத னத்தை விற்பவர் பொய்க்கல விக்குழல் புத்தி யுற்றமை யற்றிட எப்பொழு ...... தருள்வாயே துட்ட நிக்ரக சத்தித ரப்ரப லப்ர சித்தச மர்த்தத மிழ்த்ரய துட்க ரக்கவி தைப்புக லிக்கர ...... செனுநாமச் சொற்க நிற்கசொ லட்சண தட்சண குத்த ரத்தில கத்திய னுக்கருள் சொற்கு ருத்வம கத்துவ சத்வஷண் ...... முகநாத தட்ட றச்சமை யத்தைவ ளர்ப்பவ ளத்தன் முற்புகழ் செப்பவ நுக்ரக சத்து வத்தைய ளித்திடு செய்ப்பதி ...... மயிலேறி சட்ப தத்திரள் மொய்த்தம ணப்பொழில் மிக்க ரத்நம திற்புடை சுற்றிய சக்கி ரப்பளி முக்கணர் பெற்றருள் ...... பெருமாளே. |
(பெண்களின் மார்பகங்களுக்குச் செப்புக் குடத்தை உவமை கூறலாம் என்றால்) திட் திட் என்று செப்புத் தட்டை அடிபடும்படிச் செய்வன. (பொற் குடத்தை உவமை கூறலாம் என்றால்) பொன்னாலாகிய குடத்தை உடைபடும்படி செய்வன. (மேரு மலையை உவமை கூறலாம் என்றால்) வடக்கு திசையில் பெருத்த மேரு மலையும் தள்ளி விடப்பட்டது. அதற்கு உவமை தேடிச் சொல்ல யானையின் தந்தமும் உண்டு என்றால் யானையின் தந்தத்தையும் அம் மார்பகங்கள் ஒடித்துத் தள்ளுவன. நீர்க் குமிழியை (ஒப்பிடலாம் என்றால்) அவற்றை இமைப் பொழுதினில் அழியும்படிச் செய்வன. வயல்களில் உள்ள தாமரை மொட்டை (உவமை கூறலாம் என்றால்) தாமரை மொட்டை நீரில் அலையச் செய்வன. வல்லமை உடைய சக்ரவாகப் பறவையை (உவமை கூறலாம் என்றால்) அந்தப் பக்ஷியை ஆகாயத்தில் பறக்க விடுப்பன. (ஆடவர்களின்) உள்ளத்தைத் தன்னோடு சண்டை செய்ய விட்டு அதை அழியச் செய்வன. புஷ்ப பாணத்தையும் கரும்பு வில்லையும் கொண்ட மன்மதனின் கி¡£டத்தை (உவமிக்கலாம் என்றால்), (அந்த முடியையும்) குறி வைத்துத் தள்ளுவன. இளநீரை (உவமிக்கலாம் என்றால்) அதுவும் எடுத்து உடைக்கப் படுவதாகும். (இங்ஙனம் எதுவும் நமக்கு உவமையாக அமையாது என்ற உண்மையை) முத்திரை இட்டு விளக்கும் மார்பகங்களை விற்கும் விலைமாதர்களின் நிலைத்திராத புணர்ச்சி இன்பத்தை வேண்டித் திரியும் புத்தி எனக்குப் பொருந்தி உள்ளதே. அது விலகி ஒழிந்து, நீ எப்போது அருள் புரிவாய்? துஷ்டர்களை அடக்கும் சக்தி வேலைத் தரிப்பவனே, புகழும் கீர்த்தியும் கொண்ட வல்லமை வாய்ந்தவனே, முத்தமிழில் முடிப்பதற்கு அருமையான (தேவாரப்) பாடல்களை (திருஞான சம்பந்தராக வந்து) சீகாழிக்கு அரசு என்னும் புகழ் பெற்று, (அப்பாடல்களைக் கற்றவர்களுக்கு) வீட்டுப் பேறு நிலைத்து நிற்கும்படி சொன்ன அழகை உடையவனே, தெற்கு திசையில் உள்ள பூமியாகிய பொதிகை மலையில் அகத்திய முனிவருக்கு மேன்மையாகிய வகையில் உபதேச சொல்லைச் சொன்ன குரு மூர்த்தியாகிய பெருமையை உடைய சத்துவ குணம் கொண்ட ஷண்முக நாதனே, குற்றமில்லாத வகையில் சைவ சமயத்தை வளர்ப்பவளாகிய பார்வதி, சிவபெருமான் ஆகியோரின் சந்நிதியில் உனது திருப்புகழைப் பாடும்படியான திருவருள் வலிமையை எனக்கு அருளிய வயலூரில் மயில் வாகனனாய் விளங்குபவனே, ஆறு கால்கள் கொண்ட வண்டுகளின் கூட்டம் மொய்க்கின்ற நறு மணச் சோலைகள் மிகுந்த ரத்தின மயமான மதில் பக்கங்களில் சுற்றியுள்ள திருச்சக்கிரப்பள்ளி* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் முக்கண்ணராகிய சிவபெருமான் பெற்றருளிய பெருமாளே.
இப்பாடலின் முதல் 10 வரிகள் பெண்களின் மார்பகங்களை உவமைகளைக் கூறி இன்ன காரணத்தால் அவை இணையாக மாட்டா என்று விளக்குகின்றன. இதே முறையைப் பின் வரும் திருப்புகழ்ப் பாடல்களிலும் காணலாம்.408 - கமலமொட்டை - (திருவருணை),563 - குடத்தைத்தகர் - (திருக்கற்குடி).
* திருச்சக்கிரப்பள்ளி தஞ்சாவூருக்கு வடகிழக்கே 11 மைலில் ஐயம்பேட்டை ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ளது.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 876 | 877 | 878 | 879 | 880 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தத்தன, என்றால், உவமை, கூறலாம், செய்வன, கொண்ட, குடத்தை, தத்த, உடைய, மொட்டை, உள்ள, தாமரை, வல்லமை, உவமிக்கலாம், வகையில், சிவபெருமான், சொன்ன, என்னும், மார்பகங்களை, தள்ளுவன, திசையில், பெண்களின், டைப்பன, பெருமாளே, புத்தி, முத்திரை, டிப்பன, திட், டுப்பன, மேரு, திருச்சக்கிரப்பள்ளி, என்று, யானையின்

