திருப்புகழ் - பாடல் 764 - சீகாழி
ராகம் - ....;
தாளம் -
|
தனதன தனதன தந்த தானன தனதன தனதன தந்த தானன தனதன தனதன தந்த தானன ...... தந்ததான |
|
அலைகடல் சிலைமதன் அந்தி யூதையும் அரிவையர் வசையுட னங்கி போல்வர அசைவன விடைமணி யன்றில் கோகிலம் ...... அஞ்சிநானும் அழலிடு மெழுகென வெம்பி வேர்வெழ அகிலொடு ம்ருகமத நஞ்சு போலுற அணிபணி மணிபல வெந்து நீறெழ ...... அங்கம்வேறாய் முலைகனல் சொரிவர முன்பு போல்நினை வழிவச மறஅற நின்று சோர்வுற முழுதுகொள் விரகனல் மொண்டு வீசிட ...... மங்கிடாதே முருகவிழ் திரள்புய முந்து வேலணி முளரியொ டழகிய தொங்கல் தாரினை முனிவற நினதருள் தந்தென் மாலைமு ...... னிந்திடாதோ சிலைநுதல் கயல்விழி செஞ்சொல் வானவி திரிபுரை பயிரவி திங்கள் சூடிய திகழ்சடை நெடியவள் செம்பொன் மேனியள் ...... சிங்கமேறி திரள்படை யலகைகள் பொங்கு கோடுகள் திமிலையொ டறைபறை நின்று மோதிட சிவனுட னடம்வரு மங்கை மாதுமை ...... தந்தவேளே மலைதனி லொருமுநி தந்த மாதுதன் மலரடி வருடியெ நின்று நாடொறு மயில்பயில் குயில்கிளி வம்பி லேகடி ...... தொண்டினோனே மழைமுகில் தவழ்தரு மண்டு கோபுர மதிள்வயல் புடையுற விஞ்சு காழியில் வருமொரு கவுணியர் மைந்த தேவர்கள் ...... தம்பிரானே. |
அலை வீசும் கடல், வில் ஏந்திய மன்மதன், மழைக் காலத்துக் காற்று, மாதர்களின் வசைப் பேச்சு இவை எல்லாம் நெருப்பு போல (என்னிடம்) வர, அசைந்து வருகின்ற மாடுகளின் மணிகளின் ஒலி, அன்றில் பறவை, குயில் இவற்றின் ஓசைக்குப் பயந்து நானும், நெருப்பிலிட்ட மெழுகு போல் உருகி, வியர்த்து விறுவிறுக்க, சாம்பிராணிப் புகையும், கஸ்தூரியும் விஷம் போலத் தாக்க, அணிந்துள்ள ஆபரணங்கள் ரத்ன மாலைகள் பலவும் வெந்து சாம்பலாக, உடல் நிலை வேறுபட்டு, மார்பகங்கள் நெருப்பைச் சொரிய, முன்பிருந்த நினைவானது அழிந்து, தன் வசம் மிகக் கெட நின்று, தளர்ச்சி உண்டாக, முழு நிலையில் வந்துள்ள விரக வேதனை நெருப்பை மொண்டு வீச, அதனால் நான் சோர்வு அடையாமல், வாசனை வீசுகின்ற திரண்ட புயங்கள் வேகமாகச் செலுத்தும் வேலாயுதம், அற்புதப் பாதத் தாமரை இவையுடன் அழகிய தொங்கும் பூ மாலையை, வெறுப்பு, கோபம் இல்லாமல் உன்னுடைய திருவருளைத் தந்து, என்னுடைய காம மயக்கத்தைக் கடிந்து நீக்காதோ? வில் போன்ற நெற்றி, கயல் மீன் போன்ற கண்கள், செம்மை வாய்ந்த சொல்லை உடைய வானவி தேவி, மும்மூர்த்திகளுக்கும் மூத்தவள், பைரவியாகிய சிவனது பத்தினி, சந்திரனைச் சூடிய விளக்கமுற்ற சடையை உடைய பெரியவள், செம்பொன் மேனி நிறத்தவள், சிங்க வாகனம் கொண்டவள், கூட்டமான படையாகப் பேய்களை உடையவள், ஒலி பொங்கி மேலெழும் ஊது கொம்புகள், திமிலைப் பறையுடன், முழங்கும் பறை இவையெல்லாம் இருந்து பேரொலி செய்ய, சிவபெருமானுடன் நடனம் செய்யும் மங்கை, மாது, உமை என்ற பார்வதி பெற்ற முருக வேளே, வள்ளி மலைச் சாரலில் தவம் செய்த ஒரு முனிவர் பெற்ற வள்ளியின் திருவடியை வருடி நின்று, நாள் தோறும், மயில், நெருங்கி வரும் குயில், கிளி இவைகளை, புதியனவாய் (கவண் கல் கொண்டு) கடிந்து (வள்ளிக்கு ஆயல் ஓட்டும் தொழிலில்) தொண்டு செய்தவனே, மழை கொண்ட மேகங்கள் தவழ்கின்ற நெருங்கிய கோபுரங்கள் மதில், வயல் இவை சூழ மேம்பட்டு விளங்கும் சீகாழியில்* அவதரித்தக் கவுணிய குலத்துப் பிள்ளையாகிய ஞானசம்பந்தனே, தேவர்களின் தம்பிரானே.
* சீகாழி சிதம்பரத்திற்கு 11 மைல் தெற்கே உள்ளது.சைவக் குறுவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த தலம்..சீகாழிக்கு உரிய மற்ற பெயர்கள்: சீகாழி - காளி என்னும் நாகம் பூஜித்த தலம், பிரமபுரம் - பிரமன் பூஜித்த தலம், வேணுபுரம் - கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன் பூஜித்த தலம், தோணிபுரம் - பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால் இப் பெயர் வந்தது, பூந்தராய் - பூவும் தாரையும் பூஜித்த தலம், சிரபுரம் - அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிக்கப்பட்ட ராகு கேதுக்கள் தலையைத் திரும்பப் பெற பூஜித்த தலம், புறவம் - புறாவான பிரஜாபதி என்னும் முனிவர் தம் உடல் மாமிசத்தைக் கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம், சண்பை - சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூஜித்த தலம், கொச்சை - பராசர முனிவர் மற்ற ரிஷிகளின் சாபத்தால் துர்க்கந்தம் உடலில் பெற்று, அது நீங்கப் பூசித்த தலம், வெங்குரு - பிரகஸ்பதி பூஜித்த தலம், கழுமலம் - ஆன்மாக்களின் மலம் கழுவப்படுகின்ற தலம், முதுநகர் - , புகலி - என்பன.இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில், புலவர் தம்மையே நாயகியாக எண்ணிப் பாடுவதாக அமைந்தது.அலைகடல், மன்மதன், காற்று, மாதர்களின் வசை, மாடுகளின் மணியோசை, அன்றில், குயில் முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 762 | 763 | 764 | 765 | 766 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தலம், பூஜித்த, தனதன, நின்று, தந்த, முனிவர், குயில், என்னும், தானன, சீகாழி, பெற்ற, உடல், கடிந்து, மற்ற, சண்பை, அன்றில், உடைய, போன்ற, காற்று, வானவி, சூடிய, மொண்டு, வெந்து, அலைகடல், செம்பொன், மங்கை, மாதர்களின், மன்மதன், வில், தம்பிரானே, மாடுகளின்

