திருப்புகழ் - பாடல் 762 - திருநல்லூர்
ராகம் - ....;
தாளம் -
|
தான தந்ததன தான தந்ததன தான தந்ததன தான தந்ததன தான தந்ததன தான தந்ததன ...... தந்ததான |
|
மூல முண்டகனு பூதி மந்திரப ராப ரஞ்சுடர்கள் மூணு மண்டலஅ தார சந்திமுக மாறு மிந்த்ரதரு ...... வுந்தளாமேல் மூது ரம்பலவர் பீட மந்தமுமி லாத பந்தவொளி யாயி ரங்கிரண மூணு மிந்துவொளிர் சோதி விண்படிக ...... விந்துநாதம் ஓல மென்றுபல தாள சந்தமிடு சேவை கண்டமுதை வாரி யுண்டுலகி ரேழு கண்டுவிளை யாடி யிந்துகதி ...... ரங்கிசூலம் ஓடு மந்தகலி காலொ டுங்கநடு தூணில் தங்கவரி ஞான வண்கயிறு மீத ணைந்துசத கோடி சந்த்ரவொளி ...... சந்தியாதோ சூலி யந்தரிக பாலி சங்கரிபு ராரி யம்பரிகு மாரி யெண்குணசு வாமி பங்கிசிவ காம சுந்தரியு ...... கந்தசேயே சூர சங்கரகு மார இந்திரச காய அன்பருப கார சுந்தரகு காஎ னுஞ்சுருதி யோல மொன்றநட ...... னங்கொள்வேலா சீல வெண்பொடியி டாத வெஞ்சமணர் மாள வெங்கழுவி லேறு மென்றுபொடி நீறி டுங்கமல பாணி சந்த்ரமுக ...... கந்தவேளே தேவ ரம்பையமு தீண மங்கைதரு மான ணைந்தபுய தீர சங்கரதி யாகர் வந்துறைந லூர மர்ந்துவளர் ...... தம்பிரானே. |
மூலாதார கமலத்தில் உள்ள அனுபவ ஞானத்தைத் தரும் மந்திரம் மேல் நிலையில் உள்ள (சூரிய, சந்திர, அக்கினி எனப்படும்) முச்சுடர்கள், மூன்று மண்டலங்கள், ஆதாரங்களாக சந்திக்கப்படும் ஆறு ஆதாரங்கள்*, கற்பக விருக்ஷம் (போல விரும்பிய எல்லாம் அளிக்க வல்ல மேலைச் சிவ வீதி இவைகளை எல்லாம்) தாண்டி அவைகளின் மேல் சென்று, பழைய (எல்லா தத்துவங்களும் ஒடுங்கும் பரவொளிப்) பீடமாகிய லலாட மண்டபத்தில், முடிவில்லாத திரண்ட ஒளியாய் விளங்கும், ஆயிரம் கிரணங்கள் வீசும் மூன்றாம் பிறை நிலவின் வடிவைக் கொண்ட ஆக்ஞை ஆதாரத்தில், சந்திர ஒளியுடன் கூடி மேல் நிலையில் பளிங்கு போல் விளங்கும் விந்து சம்பந்த (சிவசக்தி ஐக்கிய) நாத ஒலி அபயம் என்று அழைத்தல் போன்ற ஒலியுடன் பல வகையான தாளங்கள் சந்தங்கள் கலக்கும் நடன தரிசனத்தைக் கண்டு தேவாம்ருத கடலைப் பருகி, பதினாலு உலகங்களையும் அங்கே விளக்கமுறத் தரிசித்து அனுபவித்து, சந்திரன், சூரியன், அக்கினி (இடைகலை, பிங்கலை, சுழுமுனை என்னும்) மூன்று நாடிகளின் வழியே சூலம் போல ஓடுகின்ற அந்தப் பிராண வாயு ஒடுங்க, (வீணா தண்டம் என்னும்) முதுகு எலும்பில் தங்கி, ஞான வளப்பம் பொருந்திய சுழு முனைக் கயிற்றின் வழியே மேலே தழுவி, நூறு கோடி சந்திரர்களின் ஒளியை (சிவப் பேரொளியைச்) சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிட்டுமோ? சூலாயுதத்தை ஏந்தியவள், பராகாச வடிவை உடையவள், கபாலம் ஏந்திய சங்கரி, திரிபுரம் எரித்தவள், திரி புரம் எரித்த போது அம்பாக இருந்த வைஷ்ணவி, என்றும் இளையவள், எட்டு** குணத்தினரான சிவபெருமான் பாகத்தில் உறைபவள் ஆகிய சிவகாம சுந்தரி மகிழும் குழந்தையே, சூரனை அழித்த குமார வேளே, இந்திரனுக்கு உதவி செய்தவனே, அடியார்களுக்கு உபகாரம் செய்தவனே, அழகனே, குகனே என்றெல்லாம் வேதங்கள் முறையிட்டு உரைக்க நடனம் செய்த வேலனே, பரிசுத்தமான திருவெண்ணீற்றை அணியாதவர்களும் கொடியவர்களும் ஆகிய சமணர்கள் இறக்கும்படி கொடிய கழுமரத்தில் ஏறுங்கள் என்று (திருஞானசம்பந்தராக வந்து) திருவிளையாடல் இயற்றி திருநீற்றை (கூன் பாண்டியனுக்கும், அடியார்களுக்கும்) அளித்த தாமரைக் கையனே, சந்திரன் போன்ற (ஆறு) முகமுடைய கந்த வேளே, தேவ லோகத்து ரம்பை போன்றவளும் பாற் கடல் அமுதத்துடன் தோன்றியவளும் ஆகிய லக்ஷ்மிதேவி அளித்த மானாகிய வள்ளி (அமுதவல்லி) அணைந்த திருப் புயத்தை உடையவனே, தீரனே, சங்கரத் தியாகர் என்னும் நாமம் உடைய சிவ பெருமான் வந்து எழுந்தருளிய திரு நல்லூர்*** என்னும் தலத்தில் பொருந்தி வீற்றிருக்கின்ற தம்பிரானே.
* இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.
ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம்
** சிவனின் எண் குணங்கள்:1. தன்வயத்தனாதல்,2. தூய உடம்பினன் ஆதல்,3. இயற்கை உணர்வினன் ஆதல்,4. முற்றும் உணர்தல்,5. இயல்பாகவே பாசங்களினின்று நீங்குதல்,6. பேரருள் உடைமை,7. முடிவிலா ஆற்றல் உடைமை,8. வரம்பிலா இன்பம் உடைமை.
*** திருநல்லூர்ப் பெருமணம், சிதம்பரத்திலிருந்து 3 மைலில் உள்ள கொள்ளிடத்துக்கு அருகில் உள்ளது. சங்கரத் தியாகர் என்பது திருநல்லூர் சிவபெருமானின் திருநாமம்.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 760 | 761 | 762 | 763 | 764 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - இதழ், தந்ததன, கரம், என்னும், பிங்கலை, மேல், உள்ள, இடைகலை, வந்து, என்று, இந்த, பத்து, அக்கினி, என்றும், உடைமை, சந்திர, மூன்று, சுழு, ஆகிய, சக்கரம், உடலில், ஸஹஸ்ராரம், என்ற, சுவாசம், யும், பெயர்களும், உரிய, ஆதல், உள்ளது, முனை, ஒன்று, விடும், பெயர், நாடிகளுள், வேளே, மண்டலங்கள், எல்லாம், சென்று, நிலையில், மூலாதார, மூணு, கோடி, தம்பிரானே, விளங்கும், போன்ற, சங்கரத், தியாகர், திரு, அளித்த, செய்தவனே, சந்திரன், சுழுமுனை, வழியே, காற்றுக்கு

