திருப்புகழ் - பாடல் 1165 - பொதுப்பாடல்கள்
ராகம் -
..... ; தாளம் -
|
தனனதன தான தான தனனதன தான தான தனனதன தான தான ...... தனதான |
|
நகரமிரு பாத மாகி மகரவயி றாகி மார்பு நடுசிகர மாகி வாய்வ ...... கரமாகி நதிமுடிய சார மாகி உதயதிரு மேனி யாகி நமசிவய மாமை யாகி ...... எழுதான அகரவுக ரேத ரோம சகர வுணர் வான சூரன் அறிவிலறி வான பூர ...... ணமுமாகும் அதனைஅடி யேனும் ஓதி இதயகம லாலை யாகி மருவுமவ தான போதம் ...... அருள்வாயே குகனுமரு ளாண்மை கூர மகரமெனு சாப தாரி குறையகல வேலை மீது ...... தனியூருங் குழவிவடி வாக வேநம் பரதர்தவ மாக மீறு குலவுதிரை சேரு மாது ...... தனைநாடி அகிலவுல கோர்கள் காண அதிசயம தாக மேவி அரியமண மேசெய் தேக ...... வலைதேடி அறுமுகவன் மீக ரான பிறவியம ராசை வீசும் அசபைசெகர் சோதி நாத ...... பெருமாளே. |
('நமசிவய' என்னும் பஞ்சாக்ஷரத்தில்(*1)) 'ந' என்னும் எழுத்து (நடராஜ மூர்த்தியின்) இரண்டு பாதங்களாகும். 'ம' என்னும் எழுத்து அவருடைய திரு வயிறு ஆகும். நடுவில் உள்ள 'சி' என்னும் எழுத்து அவருடைய மார்பு ஆகும். 'வ' என்னும் எழுத்து அவருடைய வாய் ஆகும். கங்கையைத் தாங்கிய திருமுடி, 'ய' என்னும் எழுத்தின் சாரமாக விளங்கும். இங்ஙனம் தோன்றி இறைவனது திருமேனியாக விளங்கும் 'நமசிவாய' என்னும் பஞ்சாக்ஷரம் ஆகிய அழகுடன் கூடிய ஐந்து எழுத்துக்களும் அகரம், உகரம் என்னும் எழுத்துக்கள் மூல காரணமாக உள்ளவருடைய ஓம் (அ + உ+ ம்) என்று கூடிய அப்பிரணவத்தின் பொருள் உணர்ந்த சூரபத்மனுடைய(*2) அறிவின் அறிவொளி பரி பூரணப் பொருளாகும். அந்தப் பொருளை அடியேனும் உணர்ந்து, எனது உள்ளத் தாமரையை ஆலயமாகக் கொண்டு விளங்கும் அனுபவ ஞானத்தை அருள்வாயாக. (தன் தாய் பார்வதி தேவிக்கு உற்ற சாபத்தைப் பொறாத) முருகன்(*3) தன் அருளையும், ஆண்மையையும் நிரம்பக் காட்டுவதற்காக, சுறா மீனாகச் சாபம் பெற்ற (சிவ வாகனமாகிய) நந்தி தேவரின் குறை நீங்குமாறு, (பார்வதி தேவியும்) கடற்கரையில் தனியாகக் கிடந்த பெண்குழந்தை வடிவு கொண்டு, நமது வலைஞர் குலத்தவர் செய்த தவத்தின் பயனாக மிக்கு எழுகின்ற அலைகள் வீசும் கடற்கரையில் சேர்ந்த செம்படவப் பெண்ணாக வளர்ந்த பார்வதியைத் தேடி வந்து, எல்லா உலகங்களில் உள்ளவர்களும் பார்க்கும்படி அதிசயமான (வலைஞர்) உருவத்துடன் வந்து, அருமையான திருமணம் செய்து நீங்கிய அந்த 'வலை - தேடி' யாக வந்த சிவபெருமான்தான் ஆறு முகத்தராய் எனக்கு விளங்கி வன்மீக நாதர் என்னும் பெயருடன் (இந்தத் திருவாரூரில்) விளங்கி நிற்க, பிறப்பையும், யம ராஜனையும் (இறப்பையும்) ஒதுக்கித் தள்ள வல்ல அஜபா(*4) மந்திரப் பொருளாகி, உலக மக்கள் காண ஜோதி வடிவமாய் விளங்கும் பெருமாளே.
என்று சூரனுக்கு முருகவேள் தரிசனம் அளித்தபோது போற்றி நின்றான் ( - கந்த புராணம் 4.13.430).அந்த ஞானத்தை எனக்கும் அருள் புரிக என்று அருணகிரியார் வேண்டுகிறார்.(*3) இது சிவபெருமான் வலை வீசிய திருவிளையாடலைக் குறிக்கும்.தாய்க்கு உற்ற சாபத்தைக் கேட்ட விநாயகரும், முருகனும் கோபித்து சிவபெருமானின் புத்தகங்களைக் கடலில் வீசி எறிந்தனர். முருகனை நீ வணிகர் குலத்தில் ருத்திர சன்மன் என்ற ஊமைப் பிள்ளையாகப் பிறக்கக் கடவாய் என்று சபித்தார். தந்தை முன் அஞ்சாது நின்றதால் முருக வேள் ஆண்மையாளர் எனப்பட்டார். செம்படவப் பெண்ணாக வந்த பார்வதியை சிவபெருமான் வலைஞராக வந்து மணந்தார்.(*4) இது அஜபா மந்திரம்.ஸோஹம் = ஸஹ + அஹம் = 'அவன் நான்' எனப்படும் ஸோஹம்.அதாவது 'ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒன்று' என்று பாவித்தல் வேண்டும் என்பது கருத்து.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 1163 | 1164 | 1165 | 1166 | 1167 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - என்னும், என்று, எழுத்து, விளங்கும், வந்து, ஆகும், தனனதன, அவருடைய, மாகி, யாகி, செம்படவப், தேடி, பெண்ணாக, அந்த, ஸோஹம், சிவபெருமான், வந்த, விளங்கி, அஜபா, கொண்டு, பெருமாளே, வீசும், நமசிவய, மார்பு, கூடிய, ஞானத்தை, கடற்கரையில், உற்ற, பார்வதி, வலைஞர்

