திருப்புகழ் - பாடல் 1163 - பொதுப்பாடல்கள்
ராகம் - அமிர்தவர்ஷணி
தாளம் - சதுஸ்ர த்ருவம் - கண்டநடை - 35
- எடுப்பு - /4/4/4 0
நடை - தகதகிட
|
தனதனன தனதனன தந்தனந் தந்தனந் தனதனன தனதனன தந்தனந் தந்தனந் தனதனன தனதனன தந்தனந் தந்தனந் ...... தனதான |
|
தரணிமிசை அனையினிட வுந்தியின் வந்துகுந் துளிபயறு கழலினிய அண்டமுங் கொண்டதின் தசையுதிர நிணநிறைய அங்கமுந் தங்கவொன் ...... பதுவாயுந் தருகரமொ டினியபத முங்கொடங் கொன்பதும் பெருகியொரு பதினவனி வந்துகண் டன்புடன் தநயனென நடைபழகி மங்கைதன் சிங்கியின் ...... வசமாகித் திரிகியுடல் வளையநடை தண்டுடன் சென்றுபின் கிடையெனவு மருவிமனை முந்திவந் தந்தகன் சிதறுவுயிர் பிணமெனவெ மைந்தரும் பந்துவும் ...... அயர்வாகிச் செடமிதனை யெடுமெடுமி னென்றுகொண் டன்புடன் சுடலைமிசை யெரியினிட வெந்துபின் சிந்திடுஞ் செனனமிது தவிரஇரு தண்டையுங் கொண்டபைங் ...... கழல்தாராய் செருவெதிரு மசுரர்கிளை மங்கஎங் கெங்கணுங் கழுகருட னயனமிது கண்டுகொண் டம்பரந் திரியமிகு அலகையுடன் வெங்கணந் தங்களின் ...... மகிழ்வாகிச் சினவசுர ருடலமது தின்றுதின் றின்புடன் டுமுடுமுட டுமுடுமுட டுண்டுடுண் டுண்டுடுண் டிமிலைபறை முழவுதுடி பம்பையுஞ் சங்கமுந் ...... தவமோதச் சரவரிசை விடுகுமர அண்டர்தம் பண்டுறுஞ் சிறையைவிட வருமுருக என்றுவந் திந்திரன் சதுமுகனு மடிபரவ மண்டுவெஞ் சம்பொருங் ...... கதிர்வேலா சகமுழுது மடையஅமு துண்டிடுங் கொண்டலுந் தெரிவரிய முடியினர வங்களுந் திங்களுஞ் சலமிதழி யணியுமொரு சங்கரன் தந்திடும் ...... பெருமாளே. |
இந்தப் பூமியில் தாயின் வயிற்றில் (கர்ப்பப்பையில்) வந்து சேரும் ஒரு துளி பயறு அளவு விழுதலாகி, இன்பகரமான முட்டை வடிவாகி, அதில் சதை, இரத்தம், கொழுப்பு இவை நிறைவு பெற, (பின்னர்) அவயவங்களும் வந்து கூட, ஒன்பது துவாரங்களும், ஏற்பட்ட கைகளுடன், அழகிய கால்களும் கொண்டு, அங்கே (கண் - 2, காது - 2, மூக்குத் தொளை - 2, வாய் - 1, மல, ஜலத்துவாரம் - 2 ஆகிய) ஒன்பது துவாரங்களும் தெளிவாக வந்து சேர்ந்து, ஒரு பத்து மாதத்தில் பூமியில் வந்து பிறந்து, அக்குழந்தையைக் கண்டு பெற்றோர்கள் அன்பு பூண்டு தங்கள் மகன் என்று மகிழும்படி வளர்ந்து, நடக்கக் கற்று, (வாலிப வயதில்) மாதர்களின் விஷமச் செயல்களில் அகப்பட்டு, சலிப்பு அடைந்து, நிலை மாறி, நிமிர்ந்த உடல் குனிய, தடியுடன் நடந்து செல்வதாகி, பிறகு படுக்கையில் கிடக்கை உற்றுக் கிடக்க, வீட்டின் முன் வாயில் வழியே யமன் வந்து உயிரைச் சிதறும்படிச் செய்ய, பிணம் என்று முடிவு செய்து, மக்களும் சுற்றமும் சோர்வடைந்து, இந்தப் பிணத்தை எடுத்துச் செல்லவும் என்று பன்முறைகள் சொல்ல, எடுத்துக் கொண்டு போய், அன்புடன் சுடுகாட்டில் நெருப்பில் இட, வெந்து சாம்பலாகி நீரில் கலந்து அழிகின்ற இந்தப் பிறவி இனி வராதிருக்க, தண்டைகள் அணிந்த உனது இரு திருவடிகளையும் தந்து அருள்வாயாக. போரில் எதிர்த்து வந்த அசுரர்கள் கூட்டம் அழிய, எல்லா இடத்திலும் கழுகு, கருடன் இவைகளின் கண்கள் (பிணங்களைக்) கண்டு உணர்ந்து ஆகாயத்தில் சுற்றிவர, மிக்கு வரும் பேய்களின் கொடிய கூட்டங்கள் தங்களுக்குள் மகிழ்ச்சி பூண்டு, கோபத்துடன் இறந்து பட்ட அசுரர்களின் உடல்களைத் தின்று, மகிழ்ச்சியுடன் டுமுடுமுட டுமுடுமுட டுண்டுடுண் டுண்டுடுண்டு - இவ்வாறு சப்திக்கும் திமிலை, பறை, முழவு, துடி பம்பை முதலிய பறை வகைகளை மிக்க பேரொலிகளுடன் எழுப்ப, அம்புகளை வரிசை, வரிசையாக செலுத்திய குமரனே, தேவர்களை முன்பு அடைபட்டிருந்த சிறையினின்றும் விடுவித்த முருகனே என்று கூறி வந்து இந்திரன், நான்முகன் பிரமன் முதலியோர் உன் அடிகளைப் போற்ற, எதிரிகளை நெருக்கி கொடிய போரைச் செய்த ஒளி வீசும் வேலாயுதனே, உலகம் எல்லாவற்றையும் முழுதாக அமுதென உண்ட மேக வண்ணத் திருமாலும் காண முடியாத ஜடாமுடியில் பாம்புகளையும், சந்திரனையும், கங்கை, கொன்றை ஆகியவற்றையும் தரித்துள்ள ஒப்பற்ற சிவபெருமான் அருளிய பெருமாளே.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 1161 | 1162 | 1163 | 1164 | 1165 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - வந்து, தந்தனந், தனதனன, என்று, டுமுடுமுட, இந்தப், டுண்டுடுண், கண்டு, பூண்டு, கொடிய, கொண்டு, பூமியில், டன்புடன், பெருமாளே, ஒன்பது, துவாரங்களும்

