மதுரை - தமிழக மாவட்டங்கள்
அ. வல்லாளப்பட்டி :
அழகர் கோவில் வல்லாளப்பட்டி, பீமலூர் - அழகர் கோவில் வழியிலுள்ள சிறு நகரம். வேளாண்மை சிறப்புற நடைபெறுகிறது. அழகர் மலையைப் பிண்ணணியாகக் கொண்டு இயற்கை எழில் நிரம்பி நிற்கிறது. இதை ஒட்டியுள்ள தெற்குத்தெரு எனப்படும் சிற்றுரில் மண்பானை வாணிபம் சிறப்பாக நடைபெறுகிறது.
வெள்ளலூர் :
தொன்மையான ஊர். சோழரது ஆட்சியில் சிறப்புற்றிருந்தது. கரும்பு வளம் மிகுந்தது. வெள்ளலூர் நாடு என்பது இதன் பழையபெயர். காட்டுக்குள் ஏழைகாத்த அம்மன் கோவில் உள்ளது.
நாவினிப்பட்டி :
மேலூரிலிருந்து 2கி.மீ. தொலைவில் உள்ளது. வேளாண்மையில் சிறந்து விளங்கும் இவ்வூரில் நூண் அலை நிலையம் அமைந்துள்ளது. மங்கள சித்தி விநாயகர் கோயிலும், காசி விசுவநாதர் கோவிலும் இவ்வூரில் உள்ளன.
மருதூர் :
இவ்வூர் கந்தப்பட்டிக்குத் தென்கிழக்கே 6கி.மீ. தொலைவில் உள்ளது. தமிழக அரசு தொல்பொருள் ஆய்வுத் துறை பிற்காலப் பாண்டியர் ஆட்சியைச் சேர்ந்த கண்ணாழ்வார் கோயிலைக் கண்டுபிடித்துள்ளது.
தும்பைப்பட்டி :
மேலூரை அடுத்துள்ளது. காங்கிரஸ் அமைச்சரவையில் பணியாற்றிய கக்கனின் சொந்த ஊர். இவ்வூரில் பாண்டியர் காலத்தில் பல போர்கள் நிகழ்ந்ததைக் குறிக்கும் வகையில் சாலக்கியப்பட்டி என்னும் சிற்றுர் உள்ளது.
சொக்கலிங்கபுரம் :
தென்னந்தோப்புகள் நிறைந்த அழகான ஊர். இங்கிருந்து சற்றுத் தொலைவில் தொழில் பேட்டை அமைக்கப்பட்டுளளது. சிவன் கோவில் ஒன்றுள்ளது.
கொட்டாம்பட்டி :
எல்லை காத்த வீரர்கள் கொட்டம் அடித்த இடம் என்பதால் கொட்டாம்பட்டி என வழங்குகிறது. இது மேலூருக்கு வடக்கே 22கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே பறம்பு மலை உள்ளது. பாலாற்றுக்கு அருகே உள்ளது. ஊராட்சி மன்ற ஒன்றிய அலுவலகம் உள்ளதால் இவ்வூர் வளர்ச்சி கண்டுள்ளது.
திருச்சுனை :
மதுரை-திருச்சி நெடுஞ்சாலைக்குச் சற்று தெற்கே கருங்காலக்குடிக்கு அருகே உள்ளது. அழகிய சுனை ஒன்று உள்ளது. 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவிலும், அதில் கல்வெட்டுகளும் உள்ளன. நாயக்க மன்னர்களால் விரிவாக்கப்பட்ட பதினாறு கால் மண்டபமும் காணப்படுகின்றது.
கருங்காலக்குடி :
இது திருச்சி நெடுஞ்சாலையின் இருபுறத்திலும் அமைந்த பழைய வளமான ஊர். இவ்வூர் மலைகளில் கருங்கல் தகடு கிடைக்கிறது. சிறந்த வேலைபாட்டுக்குரிய கற்களும், கட்டிடங்களுக்குத் தேவைப்படும் கற்களும், சிகைகாய்ப்பொடி செய்ய உதவும் உசிலை இலையும் ஏற்றுமதியாகின்றன. ஊரின் குன்றின் மேலமைந்த திருச்சுனை சிவன் கோயில் சுந்தர பாண்டியனால் கட்டப்பட்டதாகும். இது பதினேழாம் நூற்றாண்டில் நாயக்கர்களால் செப்பனிடப்பட்டு விரிவுப்படுத்தப்பட்டது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்திய கல்லறைப் படிவங்கள் உள்ளன. இங்கு சமண தீர்த்தங்கரர் உருவம் உள்ளது.
சமயநல்லூர் :
மதுரைக்கும் சோழவந்தானுக்கும் இடையில் அமைந்துள்ளது. இரயில் மற்றும் சாலை வசதிகள் பெற்றுள்ளது. டி.வி.எஸ். தொழிற்கூடமும், தொழிலாளர் குடியிருப்புகளும், கத்தோலிக்க தேவாலயமும், அதன் கல்வி நிலையமும் இவ்வூருக்குப் பெருமை சேர்க் கின்றன. ரோஜா மலர்கள் இங்கு ஏராளமாய் விளைவிக்கப்படுகின்றன. இவ்வூரருகே உள்ள டபேதார் என்னும் சிற்றுரில் திங்கட்கிழமைதோறும் சந்தை கூகிறது. இச் சந்தையில் தோல் வாணிபம் முக்கியமாய் நடைபெறுகிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 11 | 12 | 13 | 14 | 15 | ... | 16 | 17 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மதுரை - Madurai - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - உள்ளது, தமிழக, மதுரை, தொலைவில், tamilnadu, கோவில், மாவட்டங்கள், நடைபெறுகிறது, இவ்வூர், இவ்வூரில், அழகர், தமிழ்நாட்டுத், தகவல்கள், கொட்டாம்பட்டி, சிவன், | , இங்கு, திருச்சி, அருகே, கற்களும், என்னும், திருச்சுனை, வெள்ளலூர், information, districts, madurai, வல்லாளப்பட்டி, சிற்றுரில், கோவிலும், அமைந்துள்ளது, வாணிபம், பாண்டியர்