மதுரை - தமிழக மாவட்டங்கள்
தலைநகரம் : | மதுரை |
பரப்பு : | 3,710 ச.கி.மீ |
மக்கள் தொகை : | 3,038,252 (2011) |
எழுத்தறிவு : | 2,273,430 (83.45 %) |
ஆண்கள் : | 1,526,475 |
பெண்கள் : | 1,511,777 |
மக்கள் நெருக்கம் : | 1 ச.கீ.மீ - க்கு 819 |
வரலாறு :
தமிழர் நாகரீகம், தமிழ்மொழி, தமிழ்ப்பண்பு இவற்றின் தாயகமாய் விளங்கி வருவது மதுரை மாவட்டம். குறிஞ்சி, முல்லை, மருதம் என்னும் மூவகை நிலப்பண்புகளை இம்மாவட்டம் கொண்டுள்ளது. இம்மாவட்டம் பல மலைத் தொடர்களைக் கொண்டுள்ளது. பலநூறு ஆண்டுகள் பாண்டியர்களின் ஆளுகையின் கீழ் மதுரை மாவட்டம் இருந்தது. இம்மாவட்டம் புராண, வரலாற்றுச் சிறப்புடையது. கி.பி. 77இல் பிளினி என்பவரும், கி.பி. 140 இல் தாலமி என்பவரும் மதுரையின் பழம்பெருமையைத் தத்தமது நூல்களில் குறித்துள்ளனர்.
மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்த அசோகனின் கற்றுண்களில் பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலும் பாண்டியர்தம் பழம்பெருமை விளக்கப்ட்டுள்ளது. மெகஸ்தனிஸ் எனும் கிரேக்க நாட்டுத் தூதர் தமது 'இண்டிகா' நூலில் பாண்டியநாடு தென்கடற்கரை வரை பரவியிருந்தது என்று கூறியுள்ளார். கெளடில்யர் தம் அர்த்தசாஸ்திரம் என்னும் நூலில் பாண்டிய நாட்டின் சிறப்புகளை விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் வரலாற்றுக் காவியமாக விளங்கும் மகாவம்சம் என்னும் நூலும் பாண்டியர்தம் பெருமையைப் பலவாறாகப் பெருமைப்படுத்திக் கூறுகிறது. மதுரையில்தான் தமிழ்மறையான திருக்குறளும் அரங்கேற்றம் செய்யப் பட்டுள்ளது. தமிழ்ச்சங்கம் கண்ட மதுரையில் தமிழ்ப்புலவர்கள் கூடி தமிழாராய்ந்த காரணத்தால் மதுரைக்குக் கூடல் என்னும் பெயரும் அமைந்தது.
பாண்டியர்கள் கடல் வாணிகத்தில் மிகுந்த சிறப்புற்றிருந்தனர். காயல் துறைமுகத்தை வணிகத் தலைநகராய் கொண்டிருந்தனர். இவர்கள் ஆட்சிகாலத்தில் கோயில், கலை, தொழில், தமிழ்மொழி அனைத்தும் ஏற்றம் பெற்றன. பாண்டியர்தம் நாகரிகம் சுமார் 5000 ஆண்டுகளுக்கும் முந்தையது என்பதை மொகஞ்சதாரோ, ஹரப்பா கல்வெட்டுகளைக் கொண்டு கணக்கிட்டுள்ளனர். சங்க இலக்கியங்களின் வாயிலாகவே பாண்டியர் பலரைப் பற்றி நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இச்சங்கக் காலத்தை முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூன்றாகப் பிரித்துக் கூறுவர்.
முதற்சங்கம் : இது அகத்தியர் முதலானோரால் நடத்தப்பட்டது. பல்லாண்டுகள் நடைபெற்ற இச்சங்கக் காலத்தில் அகத்தியம், பரிபாடல் முதலிய நூல்கள் அரங்கேற்றப்பட்டன.
இடைச்சங்கம் : இது 59 மன்னர்களின் ஆதரவைப் பெற்று (வெண் தேர்ச் செழியன் முதல் முடத்திருமாறன் வரை) விளங்கியது.
கடைச்சங்கம் : முடத்திருமாறன் முதல் உக்கிரப் பெருவழுதியின் காலம் வரை கடைச்சங்கம் சிறப்புற்றது. பிற்கால பாண்டியர்களில் ஒருவரான குலசேகர பாண்டியன் காலத்தில் இன்றுள்ள மதுரை மாநகரின் அடிப்படை அமைப்பு உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 1786 இல் மதுரை மாவட்டம் உருவாக்கப்பட்டது. முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் காலத்தில்தான் இத்தாலியிலிருந்து மார்கோபோலோ பாண்டிய நாட்டிற்கு வருகை தந்தான். இவன் காலத்துடன் பாண்டியப் பேரரசு மறைந்தது. அதன் பின் ஏறத்தாழ 50 ஆண்டுகள் மதுரைச் சீமை இஸ்லாமியர் ஆட்சியில் சிக்கிக் கிடந்தது.
ஹரிகரர், புத்தர் என்போர் தென்னிந்தியாவில் முஸ்லீம் ஆட்சி பரவுவதைத் தடுத்து, மதுரையில் முகமதியராட்சியை ஒழித்து, அங்கு விஜய நகர பேரரசை அமைத்தனர். மதுரை இஸ்லாமியர் ஆட்சியிலிருந்து மீட்கப்பட்டதுடன், மூடிக்கிடந்த மீனாட்சியம்மன் கோயிலும் திறக்கப்பட்டது. விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் மதுரையில் நாகம நாயக்கரைப் பிரதிநிதியாய் நியமித்து ஆட்சி செய்தார். தமிழ்நாட்டில் நாயக்கர் ஆட்சி சுமார் 200 ஆண்டுகள் நீடித்திருந்தது. இவர்கள் காலத்தில் தான் மதுரை, ஸ்ரீரங்கம் கோயில்கள் கட்டப்பட்டன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மதுரை - Madurai - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - மதுரை, tamilnadu, என்னும், மாவட்டங்கள், தமிழக, ஆண்டுகள், இம்மாவட்டம், கடைச்சங்கம், மதுரையில், காலத்தில், பாண்டியர்தம், மாவட்டம், ஆட்சி, தமிழ்நாட்டுத், தகவல்கள், | , இடைச்சங்கம், முதற்சங்கம், குலசேகர, முடத்திருமாறன், இஸ்லாமியர், இச்சங்கக், பாண்டியன், என்பவரும், மக்கள், information, districts, madurai, தமிழ்மொழி, கொண்டுள்ளது, இவர்கள், பாண்டிய, நூலில், சுமார்