முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் » ஹோமர் (கி.மு. 8 நூற்றாண்டு)
ஹோமர் (கி.மு. 8 நூற்றாண்டு)
ஹோமர் கவிதை எழுதியவர் யார் என்பது பற்றிப் பல நூற்றாண்டுகளாக கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இலியட் ஒடிசி எப்போபது, எங்கே, எவ்வாறு இயற்றப் பட்டன? ஏற்கெனவே இருந்த இலக்கியத்தை அவை எந்த அளவிற்குத் தழுவி எழுதப் பெற்றன? இலியட் ஒடிசி ஆகிய இரண்டையும் ஒருவரே எழுதினாரா? அவை ஒவ்வொன்றையும் தனித்தனியே ஒவ்வொருவருவர் எழுதினாரா? ஒரு வேளை ஹோமர் என்றொருவர் இல்லாதிருக்கலாம். இரு படைப்புகளும் இயல்பாக வளர்ந்திருக்கலாம். அல்லது பல்வேறு கவிஞர்கள் இயற்றிய கவிதைகளைப் பதிப்பாசிரயர்கள் தொகுத்திருக்கலாம். இவற்றையெல்லாம் பல ஆண்டுகளாக ஆராய்ந்த அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. அப்படியிருக்கும்போது, பண்டைய இலக்கிய அறிவு இல்லாத ஒருவர் எப்படி இவற்றிற்கு உண்மையான விடைகளைக் கண்டுபிடிக்க முடியும்? எனக்கும் இவ்விடைகள் தெரியாது. ஆயினும் ஹோமர் இப்பட்டியலில் (இடம் பெறுவாரெனில்) எந்த இடத்தைப் பெறுவார் என்பதைத் தீர்மானிக்க கீழ்க்கண்ட கருத்துகளைக் காண்போம்.
முதலாவது, இலியட் படைப்பை ஒரு முக்கிய கவிஞர் படைத்திருக்க வேண்டும் எனலாம். (ஒரு குழுவினரால் படைக்கப் பெற்றிருக்க முடியாத அளவிற்கு அஃது அத்துணை அரியதாக இருக்கின்றது) ஹோமர் காலத்திற்கு முன் பல நூற்றாண்டுகள் அதே பொருள் பற்றிப் பல கிரேக்கக் கவிஞர்கள் சிறு கவிதைகள் எழுதியிருந்தனர். அவற்றிலுள்ள கருத்துள் பலவற்றை ஹோமர் எடுத்துக் கொண்டார். ஆனால், அவர் முந்திய சிறு கவிதைகளை ஒன்று திரட்டித் தொகுத்தாரெனக் கூறுவது தவறாகும். அவர் சில கருத்துகளைத் தெரிந்தெடுத்து ஒருங்கிணைத்து, வேறு சொற்களில் புனைந்து, புதியன இணைத்து தமது தனிக் கலைத்திறனுக்கேற்ப இறுதி வடிவம் கொடுத்தார். இந்த அரிய படைப்பை உருவாக்கிய ஹோமர் கி.மு. 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கக் கூடும். அதற்கு முந்திய காலத்தில் அவர் வாழ்ந்ததாகவும் சிலர் கருதுகின்றனர். அவரே, ஒடிசி யை எழுதிய முக்கிய கவிஞரெனவும் நான் நினைக்கிறேன். இரு கவிதைப் படைப்புகளும் (நடைவேறு பாட்டின் காரணமாக) இருவேறு கவிஞர்களால் இயற்றப் பட்டன எனக் கூறுவதில் ஓரளவு உண்மை இருப்பதுபோல் தோன்றினாலும், அவ்விரு படைப்புகளுக்குமிடையே காணப்படும் வேறுபாடுகளைவிட ஒற்றுமைகளே மிகுதியாகும்.
மேலே கூறியவற்றிலிருந்து, ஹோமரைப் பற்றி நமக்கு மிகக் குறைவாகவே தெரிந்திருக்கின்றது என்பது புலனாகும். அவரது வாழ்க்கை பற்றி திட்டவட்டமான விவரங்கள் நமக்குக் கிடைக்கவில்லை. ஹோமர் பார்வையிழந்தவராக இருந்தாரெனப் பண்டையக் கிரேக்க காலம் முதல் மக்கள் நம்பி வந்தனர். ஆயினும், அவருடைய இரு படைப்புகளிலும் காணப்படும் அரிய கற்பனைக் காட்சியை பார்க்கும் போது, பிற்பிலிருந்தே அவர் குருடராக இல்லை என்பது தெளிவாகின்றது. அவரது கவிதை நடையிலிருந்து அவர் ஈஜீயக் கடலில் கிழக்குப் பகுதியான அயோனியாவைச் சேர்ந்தவர் எனத் தெரிகின்றது.
நன்கு புனையப் பெற்ற இவ்விரு நீண்ட கவிதைப் படைப்புகளும் எழுதப் பெறாமல் இயற்றப்பட்டன என்பதை நம்மால் நம்ப முடியவில்லையெனினும், அவை பெரும்பாலும், சில வேளை முழுவதுமே, வாய்மொழியாக இயற்றப்பட்டவை எனப் பல அறிஞர்கள் கருதுகின்றனர். அவை எப்போது எழுத்து வடிவம் பெற்றன என்பது உறுதியாகத் தெரியவில்லை. அவற்றின் நீளத்தைப் பார்க்கும் போது (இரண்டும் சேர்ந்து 28,000 செய்யுள்களைக் கொண்டது) அவை இயற்றப்பட்ட கொஞ்ச காலத்திற்குள் எழுதப் பெற்றிருந்தாலன்றி, அவற்றை நுட்பதிட்பமாக வாய் மொழி மூலம் வழங்கியிருக்க முடியாது என்பது தெரிகின்றது. அஃது எப்படி இருப்பினும், கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் அவ்விரு கவிதைப் படைப்புகளும் இருபெறும் இலக்கியப் படைப்புகளாகக் கருதப் பெற்றன.ஹோமரின் வாழ்க்கை பற்றிய செய்திகளும் மறந்து விட்டன. அதன் பிறகு, கிரேக்கர்கள், ஒடிசி யையும் இலியடையும் தம் நாட்டின் மேலான இலக்கிய படைப்புகளாகக் கருதி வந்தனர். பிந்திய நூற்றாண்டுகளிலெல்லாம் இலக்கிய மரபுகள் மாறி வந்துள்ள போதிலும், ஹோமரின் புகழ் குறைந்து விடவில்லை.
ஹோமரின் பெருமையையும் புகழையும் பார்க்கும் போது, சற்று தயக்கத்துடனேதான் அவருக்கு இப்பட்டியலில் தாழ்ந்த இடத்தைக் கொடுக்கிறேன். பிற இலக்கிய, கலைப்படைப்பாளருக்கும் ஓரளவு தாழ்ந்த இடத்தையே கொடுத்திருக்கிறேன் என்பது இதற்கு ஒரு காரணமாகும். ஹோமரைப் பொறுத்தவரையில், அவருடைய புகழுக்கும் அவரால் வரலாற்றில் ஏற்பட்ட விளைவுகளின் அளவிற்கும் பெரும் வேறுபாடு இருக்கின்றது. அவருடைய படைப்புகளைப் பள்ளிகளில் மாணவர் அடிகடி படிக்கின்ற போதிலும், இன்றைய உலகில் பள்ளியையோ, கல்லூரியையோ விட்டு வெளியேறியபின் ஒருசிலரே அவற்றை வாசிக்கின்றனர். இதற்கு மாறாக ஷேக்ஸ்பியரின் நாடகங்களையும் கவிதைகளையும் பலர் வாசிக்கின்றனர். அவருடைய நாடகங்களும் பலமுறை நடிக்கப் பெறுகின்றன. மக்களும் திரளாக அவற்றைப் பார்க்கின்றனர்.
ஹோமர் கவிதைகளிலிருந்தும் மேற்கோள் பரவலாக எடுத்துக் கூறப்படுவதில்லை. பார்ட்லெட்டின் நூலில் ஹோமரின் மேற்கோள் இடம் பெற்றிருப்பினும், அன்றாட உரையாடலில் அவை இடம் பெறுவதில்லை. மாறாக ஷேக்ஸ்பியரையும், பெஞ்சமின் ஃபிராங்க்ளின், உமர்கய்யாம் போன்ற எழுத்தாளரையும் குறிப்பிடலாம். பலமுறை கூறப்படும், சேமித்த காசு ஈட்டிய காசைப் போன்றது எனும் மேற்கோள் தனிமனிதனின் செயலையும் அரசியல் நோக்குகளையும், முடிவுகளையுமே பாதிக்கக் கூடியது. இவ்வாறு பரவலாக எடுத்தாளப்படும் மேற்கோள் ஹோமரின் கவிதைகளில் இல்லை.
ஹோமரின் பெயரை ஏன் இப்பட்டியலில் சேர்க்க வேண்டும் எனும் கேள்வி எழலாம். முதலாவது, கடந்த பல நூற்றாண்டுகளாக ஹோமரின் கவிதைகளைப் பெருந்திரளானோர் கேட்டிருக்கின்றனர் அல்லது படித்திருக்கின்றனர். பண்டைய உலகில் ஹோமரின் கவிதைகள் இன்றிருப்பதைவிட மிகப் புகழ் பெற்றிருந்தன. கிரேக்க நாட்டில் அவருடைய படைப்புகளைப் பொது மக்கள் அறிந்திருந்தனர். அவை, சமய, அறநெறி நோக்குகளை நீண்டகாலமாகப் பாதித்து வந்தன. ஒடிசி, இலியட் ஆகிய இலக்கியங்களை இலக்கிய அறிஞர்கள் மட்டுமின்றி, படைத்துறை அரசியல் தலைவர்கள் நன்கு அறிந்திருந்தனர். பல பண்டைய ரோமானியத் தலைவர்கள் ஹோமர் கவிதைகளிலிருந்தும் மேற்கோள் காட்டினர். மகா அலெக்சாந்தர் தம் படையெடுப்புகளின் போது இலியடை எடுத்துச் சொல்வாராம். இன்றும் சிலர் மிகுதியாக விரும்பும் கவிஞராக ஹோமர் இருக்கின்றார். நம்மில் பலர் அவருடைய படைப்புகளை (ஓரளவாவது) பள்ளியில் படித்திருக்கிறோம்.
இலக்கியத்தில் ஹோமர் ஏற்படுத்திய விளைவுகள் இதைவிட முக்கியமானவை. எல்லா பண்டைய கவிஞரிடமும் நாடக ஆசிரியரிடமும் ஹோமரின் விளைவுகளைக் காணலாம். சோஃபோக்கிளிஸ் யூரிப்பிடிஸ், அரிஸ்டாட்டில் போன்றோர் ஹோமரின் மரபில் திளைத்தவர்கள். அவர்கள் அனைவரும் இலக்கிய சிறப்பு பற்றிய கருத்துகளை அவரிடமிருந்தே பெற்றனர்.
பண்டைய ரோமானிய எழுத்தாளரையும் ஹோமர் பெரிதும் கவர்ந்தார். அவர்கள் அனைவரும் ஹோமரின் கவிதையையே சிறப்பின் அளவுகோளாகக் கொண்டனர். ரோமானி எழுத்தாளருள் மிகச் சிறந்தவராகக் கருதப்படும் வெர்ஜில் தமது ஈனிட் எனும் அரும் படைப்பை ஹோமரின் இலியட் ஒடிசி போலவே அமைத்தார்.
தற்காலத்திலும்கூட, சிறந்த எழுத்தாளர் எல்லோரையும் ஹோமர் கவர்ந்துள்ளார். அல்லது அவரால் ஈர்க்கப் பெற்ற சோஃபோக்கிளிஸ் அல்லது வெர்ஜில் போன்றோர் கவர்ந்துள்ளனர். வரலாற்றில் வேறு எந்த எழுத்தாளரும் இவ்வளவு பரவலான, நீண்டகாலச் செல்வாக்கைப் பெற்றிருக்கவில்லை.
இறுதியில் கூறிய குறிப்பு முக்கியமானது. கடந்த ஒரு நூற்றாண்டாக ஹோமரைவிட அதிகச் செல்வாக்கை டால்ஸ்டாய் பெற்றிருக்கக் கூடும். மேலும் ஹோமரைவிட டால்ஸ்டாயை அதற்குமுன் 26 நூற்றாண்டுகளாக எவ்வகையான செல்வாக்கையும் பெறவில்லை. ஆனால் ஹோமரின் செல்வாக்கு தொடர்ந்து 2,700 ஆண்டுகளாக நிலைப் பெற்று வந்துள்ளது. அது மிக நீண்ட காலமாகும். பல இலக்கிய படைப்பாளர்கள் அல்லது மனிதனின் முயற்சியில் எத்துறையைச் சேர்ந்தவர்களும் அத்தகைய நிலைக்கு உயர இயலாதெனலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 109 | 110 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஹோமர் (கி.மு. 8 நூற்றாண்டு), ஹோமரின், ஹோமர், இலக்கிய, ஒடிசி, அவருடைய, என்பது, மேற்கோள், அவர், அல்லது, பண்டைய, இலியட், படைப்புகளும், போது, பார்க்கும், வேறுபாடு, எனும், நூற்றாண்டுகளாக, எந்த, எழுதப், பெற்றன, இப்பட்டியலில், இடம், படைப்பை, கவிதைப், Life Notes of Historians - வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்