முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் » ஜான் எஃப் கென்னடி (கி.பி.1917 - கி.பி.1963)
ஜான் எஃப் கென்னடி (கி.பி.1917 - கி.பி.1963)
ஜான் பிட்ஜரால்டு கென்னடி அமெரிக்காவில் மசாசூட்ஸ் மாநிலத்தில் புரூக்ளின் என்ற நகரில் பிறந்தவர். இவர், 1961 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் நாள் முதல் 1963 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் நாள் வரை அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக இருந்தார். இவர் 1963 நவம்பர் 22 அன்று டெக்சாஸ் மாநிலத்திலுள்ள டல்லாஸ் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார். கென்னடி வாழ்க்கை பற்றிய மற்ற விவரங்களைப் பொதுவாக எல்லோரும் நன்கறிவர் என்பதாலும் முக்கியமாக அவருடைய சொந்த மற்றும் அரசியல் நடவடிக்கைகள், அவர் இப்பட்டியலில் இடம் பெறுவதற்குக் காரணம் அல்ல என்பதாலும், அந்த விவரங்களை இங்குக் கூறாமல் விடப்பட்டுள்ளது.
ஓராயிரம் ஆண்டுகளுக்குக் கென்னடியின் "அமைதி அணி"யோ, "முன்னேற்றத்திற்குக் கூட்டணி" என்ற திட்டமோ, பிக்ஸ் வளைகுடாப் படையெடுப்போ நினைவிற் நிற்கப்போவதில்லை. மேலும், வரிகள் அல்லது குடியுரிமைச் சட்டங்கள் பற்றிய கென்னடியின் கொள்கைகள் அத்துணை முக்கியத்துவம் வாய்ந்தனவும் அல்ல. அப்போலோ விண்வெளி ஆராய்ச்சித் திட்டததை தொடங்கி வைத்தவர் என்ற ஒரே காரணத்திற்காகவே கென்னடி இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இடைப்பட்ட காலத்தில் இந்தப் பூமி வெடித்துச் சிதறிப் போகாமல் இருந்தால், இன்னும் 5,000 ஆண்டுகள் கழிந்தாலும், மனித குலத்தின் சந்திர மண்டலப் பயணம் உண்மையிலேயே ஓர் அற்புதச் சாதனையாக, மனித வரலாற்றில் ஒரு பெருந் திருப்புமுனையாகக் கருதப்படும் என்பதில் ஐயமில்லை.
இங்கு, சந்திர மண்டலப் பயணத் திட்டத்தின் முக்கியத்துவத்தைச் சற்று விரிவாக விளக்குவது நலம் எனினும், முதலில் சந்திர மண்டலப் பயணத்திற்கான பெருமையின் பெரும் பகுதிக்கு உண்மையிலேயே கென்னடி தகுதியுடையவர்தானா? சந்திரனில் முதலில் காலடி வைத்தவர்கள் நீல் ஆம்ஸ்டிராங், எட்வின் ஆல்டிரின் ஆகிய இருவருமாவர். எனவே அவர்களில் ஒருவருக்குத்தானே இந்தப் பெருமை சேர வேண்டும? நீடித்த புகழின் அடிப்படையில் நாம் ஆட்களை வரிசைப்படுத்துவதாயின், அவ்வாறு செய்வதுதான் சரியானதாக இருக்கும். ஆனால், கென்னடியை விட நீல் ஆம்ஸ்டிராங் இன்னும் 5,000 ஆண்டுகளுக்கு நினைவில் நிற்பார் என்று தோன்றவில்லை. ஏனெனில், செல்வாக்கின் கண்ணோட்டத்தில் நோக்கும்போது, ஆம்ஸ்டிராங்கும், ஆல்டிரினும் அடியோடு முக்கியத்துவ மற்றவர்களாகி விடுகிறார்கள். ஏதோவொரு தீவினையின் பயனாக, அந்த இருவரும் அப்போலோ-11 ஏவப்படுவதற்கு இரு மாதங்களுக்கு முன்னரே இறந்து போக நேர்ந்திருந்தால், அவர்களின் இடங்களை நிரப்புவதற்கு நல்ல பயிற்சியும், சிறந்த தகுதியும் வாய்ந்த வேறு விண்வெளி வீரர்கள் பலர் தயாராக இருந்தனர்.
விண்வெளிப் பயண அறிவியலுக்கு அருந்தொண்டு புரிந்த வெர்னர் வான் பிரானுக்கு அல்லது வேறெவரேனும் விஞ்ஞானிக்கு அல்லது பொறியியல் வல்லுநருக்கு அந்தப் பெருமையை அளிக்கலாமா? விண்வெளி ஆராய்ச்சியின் முன்னேற்றத்தில் வெர்னர் வான்பிரான் மிகப் பெருமளவுக்குப் பங்கு பெற்றார் என்பதில் ஐயமில்லை. (அவரைப் போலவே, அவருக்கு முன்பிருந்த கான்ஸ்டான்டைன் திசியால்கோவ்ஸ்கி, ராபர்ட் எச். கோடார்டு, ரெஹ்மான் ஓபர்த் ஆகியோரும் முக்கிய பங்கு பெற்றுள்ளனர்). எனினும், அப்போலோ திட்டத்தை நிறைவேற்றுவதென அரசியல் முடிவு எடுக்கப்பட்டவுடனேயே, அதன் வெற்றியில் எந்த ஒரு தனி விஞ்ஞானியும் அல்லது எந்த ஒரு பதின்மர் விஞ்ஞானிகள் குழுவும் முக்கியத்துவம் பெறவில்லை. சந்திர மண்டலப் பயணத்தில் முக்கியமான ஒரு தடையை நீக்கியது எந்த ஒரு குறிப்பிட்ட அறிவியல் முன்னேற்றமும் அன்று. மாறாக, அந்தத் திட்டத்தை மேற்செலுத்தவும், அத் திட்டத்திற்கு 2,400 கோடி டாலர் செலவிடவும் எடுக்கப்பட்ட அரசியல் முடிவே மிக முக்கியமானதாகும்.
இனி அந்த அரசியல் முடிவை நோக்குவோம். கென்னடி இல்லாதிருந்தாலும், முன்னரோ, பின்னரோ அந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கும் எனலாம். அதுதான் ஐயத்திற்கிடமாக இருக்கிறது. மனிதர் இயக்கும் சந்திர மண்டலப் பயணத்திற்கு நிதியுதவியளிக்கப் பிந்திய அரசு எதுவும் முடிவு எடுத்திருக்குமா என்பது மிகவும் ஐயப்பாட்டிற்குரியதாகும். கென்னடி கூட, பொதுமக்களின் எதிர்ப்பினைப் புறக்கணித்து விட்டு அந்தத் திட்டத்தை நிறைவேற்றவில்லை என்பது உறுதி.
மாறாக, இந்த மாபெரும் திட்டத்திற்கு ஆதரவாக பொதுமக்களிடமிருந்து நிர்ப்பந்தம் வரவில்லை. 1959 ஆம் ஆண்டிலோ, 1960 ஆம் ஆண்டிலோ அமெரிக்க நாடாளுமன்றம் அப்போலோ திட்டத்தை வகுத்து, அதற்கு நிதியும் ஒதுக்கிச் சட்டங்கள் இயற்றியிருக்குமானால், அந்தச் சட்ட முன்வடிவுகளைக் குடியரசுத் தலைவர் ஐசன்ஹோவர் தமது தடை அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடுத்து நிறுத்தியிருப்பாரானால் அப்போது பொதுமக்களின் கருத்துக்கிணங்கவே கென்னடி செயற்பட்டார் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். ஆனால், உண்மை முற்றிலும் வேறாக இருந்தது. ஒருவகை விண்வெளி ஆராயச்சித் திட்டத்தைப் பல அமெரிக்கர்கள் விரும்பினர். ஆனால், ஒரு பெரிய விண்வெளித் திட்டத்திற்குப் பொதுமக்களிடமிருந்து உரத்த கோரிக்கை எதுவும் எழவில்லை. அப்போலோ 11 திட்டத்தின் வெற்றிக்குப் பின்னருங்கூட இத்திட்டத்திற்கு இத்துணை பணம் செலவழிப்பது தக்கதுதானா என்பது குறித்து பொதுமக்களிடையே பெரும் வாக்குவாதம் நடந்து வந்தது. அதனால், 1969 ஆம் ஆண்டு முதற்கொண்டு "நாசா" என்ற விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் வரவு செலவுத் திட்டம் வெகுவாகக் குறைக்கப்பட்டு வந்தது.
எனவே, அப்போலோ திட்டத்தைத் தொடங்கி வைத்ததற்குக் கென்னடியின் தலைமைதான் உண்மையில் முக்கிய காரணம் என்பது மிகத் தெளிவு. "இந்தப் பத்தாண்டு முடிவுறுவதற்கு முன்பு" மனிதன் இயக்கும் ஒரு விண்வெளிக் கலத்தை சந்திரனில் இறங்கும்படி செய்வதற்கு அமெரிக்கா உறுதி பூண்டிருக்கிறத என்று 1961 ஆம் ஆண்டு மே மாதத்தில் அறிவித்தவர் கென்னடியே யாவார். அதற்கான நிதி ஒதுக்கீட்டை நாடாளுமன்றத்திடமிருந்து பெற்றவரும் அவர் தான். அந்தத் திட்டம் தொடங்கப் பெற்றதும் அவருடைய தலைமையின் கீழ் தான். முன்னரோ, பின்னரோ சந்திர மண்டலத் திட்டம் ஒன்று எவ்வாறேனும் தொடங்கப்பட்டிருக்கும் என்று ஒருவர் நம்பிக்கையோடு இருந்திருக்கலாம். (ஆனால், அந்த நம்பிக்கை ஈடேறியிருக்கும் என்றும் உறுதியாகக் கூறுவதற்கில்லை). எனினும், அதை உண்மையில் செய்து காட்டியவர் கென்னடியேயாவார்.
இன்றுங்கூட சிலர், அப்போலோ திட்டம் ஒரு "மாபெரும் விரயம்" என்றும், உண்மையிலேயே அது முக்கியத்துவம் வாய்ந்ததன்று என்றும் கருதுவர். சந்திரனில் மனிதன் முதன் முதல் தரையிரங்கிய 1969 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் நாளின் ஆண்டு நிறைவு நாளை ஒரு தேசிய விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டுமெனக் கோரி இதுவரையில் இயக்கம் எதுவும் தொடங்கப்படவில்லை. அதேசமயம், அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பசின் நினைவுநாள் 16 ஆம் நூற்றாண்டில் கொண்டாடப்படவில்லை என்பதையும், ஆனால், இன்று அந்த நாள் புதுயுகப் பிறப்பு நாளாகக் கொண்டாடப்படுவதையும் நினைவுகூர்வது நலம்.
அப்போலோ திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டிராதிருந்தால்கூட, அது மனிதகுலத்தின் மாபெருஞ் சாதனைகளுள் ஒன்றாக என்றென்றும் நினைவு கூறப்படும். எனினும், அபபோலோ திட்டம் தொடர்ந்து நிறைவேற்றப்படுமா என்பதும், கடந்த காலத்தைப் போல் அது எதிர் காலத்திலும் பெரும் பங்கு கொள்ளுமா என்பதும் ஐயத்திற்கிடமாகவே இருக்கிறது. அவ்வாறு, நடைபெறுமானால், அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்த கொலம்பசின் பெரும் பயணத்தைப் போலவே, அப்போலோ -11 இன் பயணமும் மனித வரலாற்றில் முற்றிலும் புதியதொரும் சகாப்தத்தைத் தொடங்கி வைத்தது என்று நமது சந்ததியினர் பாராட்டுவார்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 104 | 105 | 106 | 107 | 108 | 109 | 110 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜான் எஃப் கென்னடி (கி.பி.1917 - கி.பி.1963), அப்போலோ, கென்னடி, திட்டம், அந்த, சந்திர, ஆண்டு, விண்வெளி, ", மண்டலப், எனினும், பெரும், என்பது, இந்தப், திட்டத்தை, அல்லது, அரசியல், எந்த, முடிவு, அந்தத், எதுவும், என்றும், உண்மையிலேயே, தொடங்கி, முக்கியத்துவம், மனித, நாள், சந்திரனில், கென்னடியின், பங்கு, Life Notes of Historians - வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்