முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் » மோசஸ் (கி.மு.13 ஆம் நூற்றாண்டு)
மோசஸ் (கி.மு.13 ஆம் நூற்றாண்டு)
தலைசிறந்த ஹீப்ரு அருட்போதகர் மோசசைப் போல் வரலாற்றில் வேறெந்த மனிதரும் உலகளாவிய போற்றுதலைப் பெற்றதில்லை எனில் அது மிகையன்று. மேலும் அவருடைய புகழும், அவரை மதித்துப் போற்றும் மக்களின் எண்ணிக்கையும் காலந்தோறும் படிப்படியாகப் பெருகி வந்திருக்கின்றன. எகிப்திலிருந்து யூதர்கள் பெருமளவில் வெளியேறிச் செல்வதற்குக் காரணமாக இருந்ததாகக் கருதப்படும் எகிப்திய பாரோ அரசன் இரண்டாம் ராம்சே கி.மு. 1237 இல் இறந்ததாகப் பொதுவாகக் கருதப்படுகிறது. எனவே, மோசஸ் 13 ஆம் நூற்றாண்டில் உயிர் வாழ்ந்திருக்கலாம், பழைய ஏற்பாட்டில் எகிப்திலிருந்து யூதர் வெளியேற்றம் பற்றிக் கூறும் பகுதியில் தெளிவுபடுத்தப் பட்டிருப்பதைப் போன்று, மோசசின் வாழ்நாளிலேயே அவருடைய கொள்கைகள் கணிசமான எண்ணிக்கையிலான ஹீப்ருக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், ஐந்து நூற்றாண்டுகளுக்குள்ளாகவே யூத மக்கள் அனைவரும் மோசசைப் பூசிக்கலாயினர். கி.பி. 500 வாக்கில் அவருடைய புகழும், மதிப்பும் கிறிஸ்துவ சமயத்தோடு சேர்ந்து, ஐரோப்பா முழுவதும் பரவின. இதற்கு ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, நபிகள் நாயகம் மோசசை உண்மையான தீர்க்கதரிசி என்று ஏற்றுக் கொண்டார். இஸ்லாம் பரவியதும், எகிப்து உள்ளடங்கலாக முஸ்லிம் உலகம் முழுவதிலும் மோசஸ் போற்றுதற்குரியவரானார். மோசஸ் வாழ்ந்த 32 நூற்றாண்டுகளுக்குப் பிறகு இன்று. யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் ஆகிய அனைவரும் மோசசைப் போற்றுகிறார்கள். உலோகாயதவாதிகள் கூட அவரை மதிக்கிறார்கள். நவீன செய்தித் தொடர்புச் சாதனங்களின் துணையினால், கடந்த காலத்தைவிட இன்று மோசஸ் அதிகமான எண்ணிக்கையினரால் போற்றப்படுகின்றனர்.
மோசஸ் இத்தனை பெரும்புகழ் வாய்ந்தவராக இருந்தும் அவருடைய வாழ்க்கை பற்றிய உண்மைத் தகவல்கள் மிக அரிதாகவே கிடைக்கின்றன. மோசஸ் ஓர் எகிப்தியர் என்று கூடச் சிலர் ஊகித்தனர். இதற்கு அவருடைய பெயர் ஹீப்ரு மரபில் இல்லாமல் எகிப்திய மரபில் இருப்பதை அவர்கள் ஆதாரமாகக் கூறினர். (மோசஸ் என்றால் 'குழந்தை' அல்லது 'மகன்' என்று பொருள். எகிப்திய பாரோக்கள் பலருடைய பெயர்களில் இந்தச் சொல் இணைந்திருக்கின்றன). ஆனால், இந்த ஊகங்கள் அனைத்தையும் பெரும்பாலான அறிஞர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மோசசைப் பற்றி பழைய ஏற்பாட்டில் உள்ள கதைகள், முக நிலையில் ஏற்றுக் கொள்ளத்தக்கவை இல்லை. ஏனெனில், அவற்றில் பெரும்பாலானவை இயல்பு கடந்த அற்புதங்களாக அமைந்துள்ளன. மோசஸ் காட்டை எரித்தழித்தல், தன் கைத்தடியைப் பாம்பாக மாற்றுதல் போன்ற நிகழ்ச்சிகள் நம்ப முடியாத தெய்விகச் செயல்களாக உள்ளன. யூதர்கள் எகிப்திலிருந்து வெளியேறிய நிகழ்ச்சி நடந்தபோது மோசஸ் ஏறத்தாழ எண்பது வயதானவராக இருந்தார். எனவே, அந்த முதிய வயதில் அந்த 40 ஆண்டுக்காலப் பயணத்தில் யூதர்களை மோசஸ் நடத்திச் சென்றார் எனக் கூறுவது நம்பத்தக்கதாக இல்லை. இது போன்ற புராணக்கதைக் குவியல்களுக்குள் மோசசின் வரலாறு புதைந்து போவதற்கு முன்னர் அவரைப் பற்றிய உண்மை வரலாற்றை அறிந்து கொள்ளவே நாம் விரும்புகிறோம்.
பத்து கற்பாளங்கள், செங்கடலைத் தாண்டுதல் போன்ற விவிலியக் கதைகளுக்கு நம்பகமான விளக்கங்களை அளிப்பதற்குப் பலர் முயன்றுள்ளனர். மோசசைப் பற்றி பழைய ஏற்பாட்டில் காணப்படும் கதைகள் புராணக் கதைகளாகும். இவை வேறு புராணங்களில் காணப்படும் கதைகளுடன் ஒத்திருக்கின்றன. உதாரணமாக, மோசஸ் நாணற் செடிகளைப் பற்றிய கதையானது. கி.மு. 2360 முதல் கி.மு. 2305 வரை ஆட்சி புரிந்த அக்காட் சார்கோன் என்ற அரசன் பற்றிய பாபிலோனியக் கதையைப் பெரிதும் ஒத்திருக்கின்றன.
மோசஸ் முக்கியமாக மூன்று பெருஞ்சாதனைகளைப் புரிந்ததாகக் கூறுவர். முதலாவதாக, எகிப்திலிருந்து யூதர்கள் வெளியேறிச் செல்வதற்குத் தலைமை தாங்கிய அரசியல் தலைவர் என்ற பெருமைக்கு அவர் உரியவராகிறார். இந்தப் பெருமைக்கு அவர் தகுதியுடையவரேயாவார். இரண்டாவதாக, விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் முதல் ஐந்து ஏடுகளும் மோசசுக்கு உரிமைப் படுத்தப்பட்டுள்ளன. தோற்றம், வெளித்தோற்றம், கிளை மரபு, மக்கள் கணிப்பு, ஐந்தாம் ஏடு ஆகிய ஐந்தும் இந்த ஏடுகளாகும். இந்த ஏடுகளும், " மோசசின் ஐந்தேடுகள்" என அழைக்கப்படுகின்றன. இவை யூதர்களின் 'திருமறை' யாக அமைந்துள்ளன. இந்த ஏடுகளில், மோசசின் இறை நீதித் தொகுதியும் (Mosaic Code) அடங்கியுள்ளன. விவிலியக் காலத்தில் யூதர்களின் வாழ்க்கையை நெறிப்படுத்திய நெறிமுறைகளையும் இது உள்ளடக்கியிருக்கிறது. 'பத்துக் கட்டளை' களும் இதில் அடங்கும். இறைநீதித் தொகுதியும், பத்துக் கட்டளைகளும் உலகில் பெருஞ் செல்வாக்கைப் பெற்றுள்ளமையால், அவற்றைப் படைத்த ஆசிரியர் நிச்சயமாகத் தலைசிறந்தவராகவும், ஒப்புயர்வற்றவராகவும் போற்றத்தக்கவராகவும் உள்ளார். ஆயினும், இந்த ஏடுகளின் ஆசிரியர் ஒருவர் அல்லர் என்பதை பெரும் பாலான விலிலிய நூலறிஞர்கள் ஒப்புக் கொள்கின்றனர். இந்த நூல்களைப் பல ஆசிரியர்கள் இயற்றியிருக்க வேண்டும். இந்நூல்களில் அடங்கியுள்ள பொருள்களில் பெரும் பகுதி மோசஸ் இறந்த பிறகு நெடுங்காலத்திற்குப் பின்னரே எழுத்து வடிவம் பெற்றது. அப்போதிருந்த ஹீப்ரு மரபு நெறிகளைத் தொகுப்பதில் மோசஸ் முக்கியப் பங்கு ஏற்றிருக்கக் கூடும். ஹீப்ரு வாழ்க்கை நெறிகளை அவரே வகுத்தமைத்திருக்கலாம். ஆனால், அவருடைய பணியின் அளவு எவ்வளவு என்பதைத் துல்லியமாக மதிப்பிடுவதற்கு உண்மையில் வழி ஏதுமில்லை.
மூன்றாவதாக, யூதர்களின் ஒரு கடவுட் கோட்பாட்டினை நிறுவியவர் மோசஸ்தான் என்று பலர் கருதுகின்றனர். அவ்விதம் கருதுவதற்கு ஆதாரமே இல்லை. மோசஸ் பற்றிய தகவல்களை அறிவதற்கு ஒரே ஆதாரம் பழைய ஏற்பாடு தான். அந்தப் பழைய ஏற்பாட்டில், ஒரு கடவுட் கோட்பாட்டை நிறுவியவர் ஆபிரகாம் என்று திட்ட வட்டமாக கூறப்பட்டிருக்கிறது. ஆனாலும், ஒன்றை மட்டும் உறுதியாகக் கூறலாம். மோசஸ் மட்டும் இல்லாது போயிருப்பின், யூதரின் ஒரு கடவுட் கோட்பாடு என்றோ மறைந்து போயிருக்கும். இக்கோட்பாட்டினைப் பேணிக்காத்து, பிந்திய தலைமுறையினருக்கு அளித்ததில் மோசஸ் பெரும் பங்கு கொண்டார் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. உலகில் இரு பெரிய சமயங்களாகிய கிறிஸ்தவமும் இஸ்லாமும், யூதர்களின் ஒரு கடவுட் கோட்பாட்டிலிருந்து தான் தோன்றின. "ஒருவனே தேவன்" என்ற கொள்கையில் மோசஸ் மிகத் தீவிரமாக நம்பிக்கை கொண்டிருந்தார். இந்தக் கொள்கை உலகின் பெரும் பகுதிக்குப் பரவியது. அந்த வகையில் தான் மோசசின் முக்கியத்துவம் புரிகிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 109 | 110 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மோசஸ் (கி.மு.13 ஆம் நூற்றாண்டு), மோசஸ், பழைய, அவருடைய, பற்றிய, ஏற்பாட்டில், மோசசின், மோசசைப், கடவுட், பெரும், யூதர்கள், ஏற்றுக், எகிப்திலிருந்து, ஹீப்ரு, யூதர்களின், தான், எகிப்திய, பிறகு, இல்லை, அந்த, Life Notes of Historians - வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்