முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் » மகா சைரஸ் (கி.மு.590 - கி.மு.529)
மகா சைரஸ் (கி.மு.590 - கி.மு.529)

பாரசீகப் பேரரசை நிறுவியவர் மகா சைரஸ் ஆவார். தென் மேற்கு ஈரானில் ஒரு சிற்றரசராக இருந்த இவர் பல சிறந்த வெற்றிகளைப் பெற்று, மூன்று பெரும் பேரரசுகளை (மெடிஸ், லிதியர், பாபிலோனியா) வெற்றி கண்டார். பண்டைய மத்திய கிழக்கின் பெரும்பாலான பகுதிகளை, இந்தியா முதல் மத்தியத் தரைக்கடல் வ€டிர விரிந்த தனியொரு அரசின் கீழ் இவர் ஒருங்கிணைத்தார்.
சைரசின் இயற்பெயர் குரூஷ் என்பதாகும். இவர் தென்மேற்கு ஈரானில் (இப்போது ஃபார்ஸ் என்றழைக்கப்படும்) பெர்சிஸ் என்ற மாநிலத்தில் கி.மு. 590 ஆம் ஆண்டில் பிறந்தார். இந்தப் பகுதி அப்போது மெடிஸ் பேரரசில் ஒரு மாநிலமாக இருந்து வந்தது. மெடிஸ் பேரரசுக்கு உட்பட்ட ஒரு சிற்றரசின் வழித்தோன்றல் சைரஸ்.
பின்னர் சைரஸ் பற்றிய வழிவழி மரபுச் செய்தியொன்று உருவாகியது. இது ஈடிப்பஸ் என்ற கிரேக்க அரசரைப் பற்றிய கதையை நினைவூட்டுகிறது. இந்தக் கதையின் படி, மெடிஸ் அரசன் அஸ்டியாஜஸ் என்பவரின் பேரன் சைரஸ். ஒரு நாள் தன்னை ஆட்சியிலிருந்து கவிழ்த்து விடுவான் எனக் கனவு கொண்டான். எனவே, குழந்தையைப் பிறந்தவுடனேயே கொன்று விடும்படி ஆணையிட்டான். ஆனால், குழந்தையைக் கொல்லும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்த அரசு அதிகாரி அக்குழந்தையை ஓர் இடையர் தம்பதியினரிடம் கொடுத்து அதனைக் கொன்று விடும் படி கூறினான். ஆனால், அவர்களும் அந்தச் சிறுவனைக் கொல்ல மனமின்றி, தாங்களே அவனை வளர்க்கலாயினர். அவன் பெரியவனானதும், அரசனை வீழ்த்தினான்.
இந்தக் கதையை ஹெரோடோட்டசில் காணப்படுகிறது. இது கற்பனைக் கதை என்பதில் ஐயமில்லை. சைரசின் இளமைக் காலம் குறித்து நம்பகமான தகவல்கள் எதுவும் தெரியவில்லை. இவருடைய தந்தை முதலாம் காம்பிசஸ் மெடிஸ் பேரரசுக்கு அடி பணிந்து, பாரசீகர்களின் அரசால் ஆட்சி புரிந்து வந்தார். தந்தை இறந்ததும், கி.மு.558 ஆம் ஆண்டு வாக்கில் சைரஸ் ஆட்சி பீடம் ஏறினார் என்று தெரிகிறது. எனினும், கி.மு. 553 ஆம் ஆண்டில், இவர் பேரரசருக்கு எதிராகப் புரட்சி செய்தார். மூன்றாண்டுகள் நடந்த போருக்குப் பிறகு, இவர் பேரரசரை ஆட்சியிலிருந்து கவிழ்த்தார்.
மெடியர்களும், பாரசீகர்களும், தோற்றத்திலும், மொழியிலும் மிக நெருங்கிய உறவுடையவர்கள். மெடிஸ் பேரரசரைக் கவிழ்த்துவிட் சைரஸ் பேரரசரான பிறகு, பெரும்பாலான மெடிஸ் சட்டங்களையும், நிருவாக நடைமுறைகளையும் சைரஸ் அப்படியே வைத்துக் கொண்டார். எனவே, அவருடைய ஆட்சி ஒரு அயல்நாட்டுப் படையெடுப்பினால் ஏற்பட்டதெனக் கூறுவதை விட, ஓர் அரச அரபு மாற்றம் என்றே சொல்ல வேண்டும்.
சைரஸ் விரைவிலேயே அயல்நாடுகளை வெல்வதற்குப் படையெடுப்புகளைத் தொடங்கினார். முதலில் சிற்றாசியாவிலிருந்த லிதியப் பேரரசைத் தாக்கினார். லிதியப் பேரரசை அப்போது குரோஸ் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவருடைய அரசு மிகுந்த செல்வச் செழிப்புடையது எனப் பெயர் பெற்றிருந்தது. அவரிடம் ஏராளமான தங்கம் இருப்பதாகக் கூறுவர். எனினும், குரேசசின் தங்கம், சைரசின் இரும்புக் கரத்திற்கு ஈடு கொடுக்கவில்லை. கி.மு.546 ஆம் ஆண்டில், லிதியப் பேரரசை சைரஸ் வெற்றி கொண்டு, குரோசசைச் சிறைப்படுத்தினார்.
பின்னர், சைரஸ் கிழக்குத் திசையில் தம் கவனத்தைத் திருப்பினார். பல படையெடுப்புகளை மேற்கொண்டு, கிழக்கு ஈரான் முழுவதையும் வென்று தம் பேரரசில் இணைத்துக் கொண்டார். கி.மு. 540 ஆம் ஆண்டில் பாரசீகப் பேரரசுக, இந்தியாவில் சிந்து ஆறு வரையிலும் மத்திய ஆசியாவில ஜாக்ஸ் சாகட்டிஸ் (இன்றைய சிர் தாரியா) வரையிலும் பரவியிருந்தது.
இவ்வாறு பாரசீகப் பேரரசின் பின்புலத்திற்குப் பாதுகாப்பு ஏற்படுத்தியதும், மெசப்பட்டோமியாவிலேயே மிகச் செல்வ வளம் நிறைந்த மண்டலம் எனப் பெயர பெற்றிருந்த பாபிலோனியப் பேரரசின் மீது சைரஸ் கவனம் செலுத்தலானார். இந்தப் பேரரசு, பண்டைய மத்திய கிழக்கில் மிகுந்த வளமான பகுதி முழுவதையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டிருந்தது. பாபிலோனிய அரசர் நாபோனிடஸ் சைரசைப் போல் குடிமக்களிடம் செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை. சைரசின் படைகள் முன்னேறி வந்ததுமே, போரிடுவதில் பொருளில்லை எனப் பாபிலோனியப் படையினர் கருதினர். கி.மு. 539 ஆம் ஆண்டில் பாபிலோன் போரிடாமலேயே சரணடைந்தது. பாபிலோனியப் பேரரசில் சிரியாவும், பாலஸ்தீனமும் இணைந்திருந்ததால், அந்த மண்டலங்களும் சைரசின் ஆளுகையிலிருந்த பேரரசில் இணைக்கப்பட்டன.
அடுத்த சில ஆண்டுகளைத் தம் ஆட்சியை நிலைப்படுத்துவதிலும், தாம் வென்ற மிகப் பெரிய பேரரசைச் சீரமைப்பதிலும் சைரஸ் செலவிட்டார். பிறகு, மத்திய ஆசியாவில், காஸ்பியன் கடலுக்குக் கிழக்கே வாழ்ந்து வந்த மாசாகிடேயி என்ற நாடோடி இன மரபினரை வெல்வதற்காக வட கிழக்குத் திசையில் தம் படையைச் செலுத்தினார். முதல் போரில் பாரசீகர்கள் வெற்றி பெற்றனர். ஆனால், கி.மு.529 ஆம் ஆண்டில் நடந்த இரண்டாம் போரில், பாரசீகப் படைகள் தோற்கடிக்கப்பட்டன. உலகின் மிகப் பெரிய பேரரசின் பேரரசாக விளங்கிய சைரஸ் இப்போரில் கெல்லப்பட்டார்.
சைரசுக்குப் பிறகு அவரது மகன் இரண்டாம் காம்பிசயஸ் ஆட்சிக்கு வந்தார். அவர் மாசாடோயி இனத்தவரைத் தோற்கடித்து, அவர்களிடமிருந்து, தம் தந்தையின் உடலை மீட்டு, பழைய பாரசீகத் தலைநகராகிய பாசர்காடேயில் நல்லடக்கம் செய்தார். காம்பிசஸ் பின்னர், எகிப்தையும் வென்றார். இவ்வாறு, பண்டைய மத்திய கிழக்கு முழுவதும், ஒரு தனிப் பேரரசில் ஒருங்கிணைந்தது.
சைரஸ் மிகச் சிறந்த திறமை வாய்ந்த இராணுவத் தலைவராக விளங்கினார். ஆனால், இராணுவத் திறமை அவருடைய பண்பியல்களில் ஓர் அம்சமேயாகும். அவருடைய நல்லாட்சியே அவருடைய புகழுக்கு மேலும் பெருமை சேர்த்தது. உள்நாட்டுச் சமயங்களிடமும், மரபுகளிடமும் மிகுந்த சகிப்புணர்வோடு நடந்து கொண்டார். வேறு பல வெற்றியாளர்கள் கையாண்ட அட்டூழியங்களையும், கொடூரங்களையும் அவர் சிறிதும் கையாளவில்லை. எடுத்துக்காட்டாக, பாபிலோனியர்களும் அவர்களை விடச் சிறப்பாக அசீரியர்களும், பல்லாயிரக்கணக்கில் மக்களைப் படுகொலை செய்தார்கள். மக்கள் தங்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்வார்கள் என அஞ்சி, மக்கள் அனைவரையுமே நாடு கடத்தியதும் உண்டு. உதாரணமாக, பாபிலோனியர்கள் 586 ஆம் ஆண்டில் ஜூடியாவை வென்றபோது, அந்நாட்டு மக்களில் பெரும்பான்மையோரைப் பாபிலோனுககு நாடு கடத்தினார்கள். அதற்கு 50ஆண்டுகளுக்குப் பிறகு, பாபிலோனியாவை சைரஸ் வெற்றி கண்ட போது யூதர்கள் தங்கள் தாயகம் திரும்புவதற்கு அனுமதித்தார். சைரஸ் மட்டும் இல்லாது போயிருப்பின், கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் யூதர்கள் ஒரு தனிக் குழுவாக மாண்டு போயிருப்பார்கள். அவர்களின் உயிரைக் காப்பாற்ற சைரஸ் முடிவு எடுத்ததற்கு அரசியல் நோக்கங்கள் இருந்திருக்கலாம். எனினும், அவர் காலத்திலிருந்த அரசர்கள் அனைவரிலும் மிகவும் மனிதாபிமானம் வாய்ந்தவராக விளங்கியவர் சைரஸ் என்பதை மறுப்பதற்கில்லை. பாரசீகப் பேரரசைத் தங்களின் சுதந்திரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக நெடுங்காலமாகக் கருதி வந்த கிரேக்கர்கள் கூட, சைரசை ஒரு போற்றத்தக்க அரசன் என எப்போதும் பாராட்டி வந்தார்கள்.
சைரஸ் தம் பேரரசுக்கு அரும்பணியாற்றினார். அதனால் அவருடைய மரணத்திற்குப் பிறகும், பாரசீகப் பேரரசுத் தொடர்ந்து விரிவடைந்து வந்தது. அத்தகையப் பேரரசு 200 ஆண்டுகள் வரை அதாவது மகா அலெக்சாந்தர் வெற்றி கொள்ளும் வரையில்-நிலைத்திருந்தது. இந்த 200 ஆண்டு காலத்தின் பெரும்பகுதியில் பாரசீகத்தில் உள்நாட்டு அமைதியும், செல்வச் செழிப்பும் நிலவியது.
அலெக்சாந்தரின் வெற்றிக்குப் பின்னரும், பாரசீகப் பேரரசு நிரந்தரமாக முடிவுற்று விடவில்லை. அலெக்சாந்தர் இறந்த பிறகு, அவருடைய தளபதிகளில் ஒருவராகிய முதலாம் செலியுக்கஸ் நிக்கேட்டர், சிரியா, மொசப்பட்டோமியா, ஈரான் ஆகியவற்றையும் தம் ஆட்சியின் கீழ் கொண்டு வந்து செலியூசிட் பேரரசை நிறுவினார். ஆயினும், ஈரான் மீது அயல் நாட்டவர் ஆதிக்கம் நெடுங்காலம் நீடிக்கவில்லை. கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் மத்தியில் சைரஸ் அரச மரபின் வழித்தோன்றல் எனத் தன்னைக்கூறிக் கொண்ட முதலாம் அர்சாசஸ் என்பவன், செலியூசிட் அரசரை எதிர்த்துக் கிளர்ச்சி செய்து, அச்சாசிட் அரசை நிறுவினான். இந்த அரச பாத்தியன் பேரரசு என அழைக்கப்பட்டது. இப்பேரரசு ஈரானிலும், மெசப்பட்டோமியாவிலும் ஆட்சியை நிறுவியது. கி.பி. 224 ஆம் ஆண்டில், அச்சாசிட் அரசை வீழ்த்தி விட்டு, சஸ்ஸானிட்ஸ் என்ற புதிய பாரசீக அரச மரபு ஆட்சியை ஏற்படுத்தியது. இவர்களும், தங்கள் சைரஸ் மரபினர் எனக் கூறினர். இவர்களுடைய பேரரசு பல ஆண்டுகள் நீடித்திருந்தது. இன்றுங்கூட, ஈரானில் பாரசீக அரசை நிறுவியவர் என சைரஸ் போற்றப்படுகிறார்.
மகா சைரசின் ஆட்சிக் காலம் உலக வரலாற்றில் ஒரு பெருந் திருப்புமுனை எனக் கருதப்படுகிறது. கி.மு.3000-க்கு முன்னரே சுமேரியாவில் முதலில் நாகரிகம் தோன்றியிருந்தது. 25 ஆம் நூற்றாண்டுகளுக்கு மேலாக சுமேரியர்களும், அவர்களுக்குப் பின்வந்த அக்காடியர்கள், பாபிலோனியர்கள், அசிரியர்கள் போன்ற செமிட்டிக் மக்களும், இந்நாகரிகத்தின் மையமாக விளங்கினார்கள். அந்தக் காலம் முழுவதிலும் (எகிப்து நீங்கலாக) உலகிலேயே மிகுந்த செல்வச் செழிப்பும், முன்னேறிய நாகரிகமும் வாய்ந்ததாக மெசப்பட்டோமியா திகழ்ந்தது. ஆனால், எழுதப்பட்ட வரலாற்றில் ஏறத்தாழ மத்திய பகுதியில் தோன்றிய சைரஸ் ஆட்சி, அந்த உலக வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அவர் காலம் முதற்கொண்டு, அரசியலிலாயினும், பண்பாட்டிலாயினும், நாகரிக உலகின் மையமாக மெசப்பட்டோமியாவோ, எகிப்தோ விளங்கவில்லை.
மேலும், செழிப்பான வள மண்டலத்தின் மக்கள் தொகையில் பெரும்பான்மையினராக விளங்கிய செமிட்டிக் மக்கள் அதன்பின் பல நூற்றாண்டுகள் வரை தங்கள் சுதந்திரத்தை மீண்டும் பெறவில்லை. இந்தோ-ஐரோப்பிய மக்களாகிய பாரசீகர்களுக்குப் பிறகு, மாசிடோனியர்களும், கிரேக்கர்களும், அதன் பின்னர் நீண்ட காலம் இந்தோ-ஐரோப்பியக் குடும்பத்தைச் சேர்ந்த பார்த்தியர்களும், ரோமானியர்களும், சஸ்ஸானிடுகளும் ஆண்டார்கள். 7 ஆம் நூற்றாண்டில் முஸ்லிம்கள் வெற்றி கொள்ளும் வரையிலும், மகா சைரசுக்குப் பிறகு ஏறத்தாழ 12 நூற்றாண்டுகள் வரையில் செமிட்டிக் மக்கள் ஆட்சியைப் பெறவில்லை.
ஏராளமான போர்கள் புரிந்து, ஏராளமான நிலப் பகுதியை வென்றவர் என்ற காரணத்தால் மட்டுமே சைரஸ் முக்கியத்துவம் வாய்ந்தவர் எனக் கருதப்படவில்லை. அவர் நிறுவிய பேரரசு, பண்டைய உலகின் அரசியல் கட்டமைப்பு நிரந்தரமாக மாற்றியமைத்தது என்ற காரணத்தினாலேயே அவர் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவராகிறார்.
பாரசீகப் பேரரசு கணிசமான அளவு நிலப்பரப்பைக் கொண்டிருந்தது. நீண்ட காலம் நீடித்திருந்த போதிலும், அது ரோமானிய, பிரிட்டிஷ் அல்லது சீனப் பேரரசுகளைப் போன்று வரலாற்றில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடவில்லை. ஆனால், சைரசின் செல்வாக்கினை மதிப்பிடும் போது, அவர் தோன்றாதிருந்தால், அவர் புரிந்த சாதனை ஒருபோதும் நிகழ்ந்திருக்காது என்பதை நினைவிற் கொள்ளுதல் வேண்டும். சைரஸ் பிறப்பதற்கு ஒரு தலை முறைக்கு முன்னர், கி.மு. 620 ஆம் ஆண்டில், இன்னும் ஒரு நூற்றாண்டுக் காலத்திற்குள் பண்டைய உலகம் முழுவதும், தென் மேற்கு ஈரானில் ஊர் பெயர் தெரியாதிருந்த ஒரு மரபுக் குழுவின் ஆட்சியின் கீழ் வந்துவிடும் என்று யாரும் நினைத்திருக்க முடியாது. இப்போது பின்னுற நோக்கும் போதும் கூட, பாரசீகப் பேரரசின் எழுச்சியானது அதற்கு முன்பு நிலவிய சமூக அல்லது பொருளாதார அம்சங்களின் காரணமாக, முன்னரோ, பின்னரோ நிகழ்ந்திருக்க வேண்டிய ஒரு வரலாற்று நிகழ்ச்சி எனக் கருத முடியவில்லை. எனவே தான், வரலாற்றின் போக்கை அடியோடு மாற்றிய அரிய மனிதர்களில் ஒருவர் என சைரஸ் கருதப்படுகிறார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 109 | 110 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மகா சைரஸ் (கி.மு.590 - கி.மு.529), சைரஸ், ஆண்டில், பாரசீகப், பிறகு, அவர், பேரரசு, சைரசின், மெடிஸ், அவருடைய, காலம், மத்திய, வெற்றி, மிகுந்த, மக்கள், எனக், இவர், பண்டைய, பேரரசில், ஆட்சி, பின்னர், கீழ், ஈரானில், பேரரசை, பேரரசின், ஆட்சியை, பாபிலோனியப், ஆட்சியின், செமிட்டிக், அரசை, வரலாற்றில், தங்கள், உலகின், எனினும், வந்தார், ஆண்டு, முதலாம், பேரரசுக்கு, பெரும், கொண்டார், லிதியப், ஈரான், ஏராளமான, எனப், செல்வச், வரையிலும், Life Notes of Historians - வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்