முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் » சீயோப்ஸ் (கி.மு. 26 ஆம் நூற்றாண்டு)
சீயோப்ஸ் (கி.மு. 26 ஆம் நூற்றாண்டு)
எகிப்தில் கீஸா என்னுமிடத்திலுள்ள மாபெரும் பிரமிடைக் கட்டியதற்காக அழியாப் புகழ்பெற்றவர் எகிப்திய அரசர் குஃபூ (KhufU) (இவருடைய பெயரின் கிரேக்க வடிவம் தான் சீயோப்ஸ் ஆகும்) இவர் தமக்குக் கல்லறையாக இந்தப் பிரமிடைக் கட்டினார் என்பர். இவரது பிறந்த, இறந்த தேதிகள் சரியாகத் தெரியவில்லை. எனினும், இவர் கி.மு. 26 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. இவர் மெம்பிஸ் நகரைத் தமது தலைநகராகக் கொண்டிருந்தார் என்றும், இவர் மிக நீண்ட காலம் ஆட்சி புரிந்தார் என்றும் அறிகின்றோம். இதைத் தவிர, இவருடைய வாழ்க்கை குறித்து வேறு தகவல்கள் தெரியவில்லை.
இந்த மாபெரும் பிரமிடு மிகப் புகழ் பெற்றதும், மனித முயற்சியால் எழுப்பப்பட்ட மிகப் பிரம்மாண்டமானதுமான ஒரு கட்டுமானம் என்று மட்டுமே சொல்ல முடியும். பண்டைய நாட்களில் கூட இது, உலகின் ஏழு அதிசயங்களும் ஒன்றாகக் கருதப்பட்டது. மற்ற ஆறு அதிசயங்களுள் காலத்தால் அழிந்துவிட்ட போதிலும் இந்த மாபெரும் பிரமிடு காலத்தை வென்று இன்று அழியாமல், அதைக் கட்டிய மன்னருக்கு நிலைத்த நினைவுச் சின்னமாக விளங்குகிறது.
இதைக் கட்டுமானம் செய்துள்ள துல்லியமும். இதன் பிரம்மாண்ட வடிவளவும் மலைக்க வைக்கின்றன. இந்த மாபெரும் பிரமிடின் முகட்டுப் பகுதியில் 30 அடி நாசமாகி விட்டபோதிலும் இன்றும் கூட இதன் உயம் 450 அடி உயரத்திற்கு இருக்கிறது. இது 35 அடுக்கு மாடி கட்டிடத்தின் உயரத்திற்கு சமமானது! இது சுமார் 23,00,000 கற்பாளங்களால் கட்டப்பட்டது. இக்கற்பாளங்கள் ஒவ்வொன்றும் சராசரியாக இரண்டரை டன் எடை கொண்டவை. இந்த மாபெரும் பிரமிடில், பல உள்ளறைகளும், நடைபாதைகளும் அமைந்துள்ளமையால் இதைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டக் கற்களைப் பல்வேறு வடிவளவுகளில் வடிவாக்கம் செய்யவேண்டியிருந்தது. அது இப்பிரமிடைக் கட்டும் பணியை மேலும் சிக்கலாக்கியது.
ஏறத்தாழ 46 நூற்றாண்டுகளுக்கு முன்பு, பண்டைய எகிப்தியர்கள், இக்கால நவீன எந்திர சாதனங்களில் உதவியின்றி, இத்துணை மாபெரும் கட்டுமானத்தை எவ்வாறு கட்டினார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்த மகத்தான பணிக்கு நாட்டின் வளவசதிகளை வெற்றிகரமாகத் திரட்டுவதற்குக் கவனமாக திட்டமிடுதலும் மிகச் சிறந்த நிர்வாகத் திறமையும் தேவைப்பட்டன என்பதில் ஐயமில்லை. இந்தப் பெரும் பிரமிடு கட்ட சுமார் நூறாயிரம் மக்கள் 20 ஆண்டுக்காலம் உழைத்தார்கள் என்ற கணிப்பை ஏற்றுக் கொள்வதாயின், ஒவ்வொரு நாளும், சராசரியாக முன்னூறுக்கும் அதிகமான கற்பாளங்கள் பொருத்தப் பட்டிருக்க வேண்டும். அத்துணை பெருமளவு எண்ணிக்கையிலான கற்பாளங்கள் பிரமிடு கட்டப்பட்ட இடத்திற்க்கு கொண்டுச் செல்வதும் அவற்றை வேண்டிய இடங்களில் துல்லியமாக பொருத்தி வைப்பதும் மிகப் பெரிய பணியாக இருந்திருக்க வேண்டும்.இந்தக் கற்பாளங்களைக் கொண்டு செல்ல ஏராளமான படகுகளைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் பணியாற்றிய ஏராளமான தொழிலாளர்களுக்கு இன்றியமையாத தேவைப் பொருள்களைத் தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு நன்கு திட்டமிட்ட பொருள் வழங்கும் முறை ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
இந்த மாபெரும் பிரமிடு ஏற்கெனவே 4,500 ஆண்டுகளுக்கு மேலாக நிலைபெற்று வாழ்ந்துள்ளது. நவீன பொறியியல் வல்லுநர்கள் எழுப்பிய கட்டிடங்கள் ஒவ்வொன்றும் இடிந்து மண்ணோடு மண்ணாகிப் போய்விட்ட பின்னருக் கூட நெடுங்காலத்திற்கு இந்த பிரமிடு வாழ்ந்திருக்கும் எனலாம். இவ்வாறு, இது அழிக்க முடியாததாக விளங்குகின்றனது. இதன் மீது ஓர் அணுகுண்டு நேரடியாக வீழ்ந்தால் கூட இது அழிந்து விடுமெனத் தோன்றவில்லை! எனினும் இது சிறிது சிறிதாகச் சிதிலமடைந்து வருகிறது. ஆனாலும் இன்றைய அரிமான வீதம் நீடித்தால் கூட இது இன்னும் பத்து இலட்சம் ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழும்.
எனவே உலகில் தனது அழியா முத்திரையைப் பதித்துச் சென்றுள்ள சீயோப்ஸ் அரசர் உலகில் இதுகாறும் தோன்றிய வேறு எந்த ஒரு மனிதன€யும் விட அழியாப் புகழை ஈட்டியிருக்கிறார் ( நெப்போலியனையோ, மகா அலெக்சாந்தரையோ இன்னும் 10,000 ஆண்டுகளுக்கு பின் யாராவது நினைவில் வைத்திருப்பார்களா?) ஆனால், புகழ் என்பது செல்வாக்கிலிருந்து முற்றிலும் வேறுப்பட்டது. சீயோப்ஸ் தமது சமகாலத்து எகிப்தியர்களின் வாழ்வில் மிகப்பெரும் விளைவினை ஏற்படுத்தினார் என்பதில் ஐயமில்லை. எனினும் அவர், அயல் நாடுகளின் மீதோ, முந்திய தலைமுறைகளின் மீதோ பெருமளவுச் செல்வாக்கைச் செலுத்தியதாகத் தோன்றவில்லை.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 109 | 110 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீயோப்ஸ் (கி.மு. 26 ஆம் நூற்றாண்டு), மாபெரும், பிரமிடு, வேண்டும், இவர், ஆண்டுகளுக்கு, இதன், எனினும், சீயோப்ஸ், தெரியவில்லை, மிகப், Life Notes of Historians - வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்