முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் » மெனஸ் (கி.மு. 3100)
மெனஸ் (கி.மு. 3100)

முதலாவது எகிப்திய அரச மரபின் ஆதி அரசராகிய மெனஸ் (Menes), எகிப்து நாட்டை முதலில் ஒருங்கிணைத்ததன் மூலம், மனித நாகரிகத்தில் ஒரு நீண்ட காலத்திற்குச் கீர்த்திமிகு பங்கினை ஆற்றிய முடியரசை நிறுவினார்.
மெனஸ் பிறந்த, இறந்த தேதிகள் தெரியவில்லை. எனினும் இவர் கி.மு. 3100 ஆம் ஆண்டில் பிறந்தவரெனப் பொதுவாக நம்பப்படுகிறது. அதற்கு முந்தைய காலத்தில் எகிப்து ஒருங்கிணைந்த ஒரு நாடாக இருக்கவில்லை. மாறாக, இரு சுதந்திரமான முடியரசுகளைக் கொண்டிருந்தது. ஒன்று வடக்கில் நைல் ஆற்றின் கழிமுகப் பகுதியிலும், மற்றொன்று தெற்கில் நைல் ஆற்றின் கழிமுகப் பகுதியிலும், மற்றொன்று தெற்கில் நைல் பள்ளத்தாக்கின் நெடுகிலும் அமைந்திருந்தன. (நைல் ஆறு கடலை நோக்கிக் கீழாகப் பாய்வதால் பண்டைய எகிப்திய நாட்டுப் படங்களில், நைல் ஆற்றின் முகவாய்கள், பக்கத்தின் அடியின் காணப்பட்டன. அந்தக் காரணத்தினால், வடக்கிலிருந்து கழிமுகப் பகுதியை கீழ் எகிப்து என்றும், தெற்கு முடியரசை மேல் எகிப்து என்றும் எகிப்தியர்கள் அழைத்தனர்). பொதுவாகக் கூறின், தென் எகிப்தைவிடக் கீழ் எகிப்து, பண்பாட்டில் அதிக முன்னேற்றமடைந்திருந்ததாகத் தெரிகிறது. ஆனால், வடக்கு எகிப்தை வெற்றி கொண்டு, அதன் மூலம் நாடு முழுவதையும் ஒருங்கிணைத்தவர் தெற்கு எகிப்தின் (மேல் எகிப்து) மன்னராகிய மெனசே ஆவார்.
மெனஸ் நார்மர் (Narmer) என்றும் அழைக்கப் பெற்றார். இவர், தென் எகிப்திலிருந்து தினிஸ் (Thinis) என்னும் நகரைச் சேர்ந்நதவர். இவர் வடக்கு முடியரசை வெற்றி கொண்டதும், தம்மை " மேல் மற்றும் கீழ் எகிப்து அரசர்" எனக் கூறிக் கொண்டார்; இதே பட்டத்தையே, பின்னர் வந்த ஃபாரோவா (Pharaohs) அரசர்களும் பல்லாயிரம் ஆண்டுகள் வரைச் சூட்டிக் கொண்டார்கள். இரு முடியரசுகளுக்கிடையிலுமிருந்த பழைய எல்லையின் அருகே, மெம்பிஸ் (Memphis), என்ற புதிய நகரை மெனஸ் நிறுவினார். இந்நகரம், மையப் பகுதியில் அமைந்திருந்தமையால், ஒருங்கிணைந்த நாட்டுக்குத் தலைநகராவதற்குப் பொருத்தமாக இருந்தது. இந்நகரம் பல நூற்றாண்டுகள் வரை எகிப்தின் தலைசிறந்த நகரங்களுள் ஒன்றாகவும், ஒரு கணிசமான காலத்திற்கு அதன் தலைநகராகவும் விளங்கியது. இன்றையக் கெய்ரோ நகருக்கு மிக அருகிலேயே மெம்பிஸ் நகரின் சிதைவுகள் இன்று காணப்படுகிறது.
மெனஸ் பற்றி கிடைக்கும் தகவல்கள் மிகக் குறைவு. எனினும், இவர் 62 ஆண்டுகள் வரை நீண்டகாலம் ஆட்சி புரிந்தார் என ஒரு பண்டையச் செய்தி கூறுகிறது. ஆனால், இச்செய்தியும் மிகையானது என்றே தோன்றுகிறது.
அந்தப் பண்டையக் காலத்து நிகழ்ச்சிகள் குறித்து மிகக் குறைந்த செய்திகளே கிடைத்துள்ள போதிலும், மெனசின் சாதனை மிகப் பெரிய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை மறுப்பதற்கில்லை. மெனசுக்கு முந்திய காலத்தில், இன்று ஈராக்கில் அமைந்துள்ள சுமேரிய நாகரிகத்தைவிட எகிப்தியப் பண்பாடு வெகுவாக வளர்ச்சி குன்றியதாகவே இருந்தது. ஆனால், எகிப்திய மக்களிடம் குடிகொண்டிருந்த உள்ளார்ந்த ஆற்றல்கள் பீறிட்டெழுந்தன. ஒருங்கிணைப்புக்குப் பிறகு, எகிப்து, சமூக பண்பாட்டுத் துறைகளில் மிக விரைவாக முன்னேற்றமடைந்தது. மெனஸ் ஆட்சிக் காலத்தின் தொடக்க ஆண்டுகளில் அரச மற்றும் சமூக நிறுவனங்கள், அதிக மாற்றமின்றி 2000 ஆண்டுகள் நிலைபெற்றுத் திகழ்ந்தன. சித்திர எழுத்துமுறை (Hieroglyphic Writing) விரைவாக வளர்ச்சி பெற்றது. கட்டிடங்கள் எழுந்தன; தொழில் நுட்ப திறம்பாடுகளும் வளர்ந்தன. சில நூற்றாண்டுகளுக்குள்ளேயே, எகிப்தியப் பண்பாடு சுமேரிய நாகரிகத்திற்கு உண்மையைக் கூறின் மெனசுக்குப் பிந்திய 2000 ஆண்டுகளில் பெரும்பாலான கால அளவின்போது, செல்வ வளத்திலும் பண்பாட்டிலும், எகிப்து, உலகிலேயே முன்னேறிய நாடாக, அல்லது மிக நெருங்கிய இரண்டாவது நாடாக விளங்கியது. இந்த நிலைபேறுடைய சாதனைகளைப் புரிந்த நாகரிகங்கள் மிகச் சிலவே.
இந்தப் பட்டியலில் மெனசுக்குரிய இடத்தை நிருணயிப்பது மிகக் கடினம். ஏனெனில், வடக்கு எகிப்தை வெற்றிக் கொண்டு எகிப்தை ஒருங்கிணைத்ததில் மெனசின் சொந்த நடவடிக்கைகள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருந்தன என்பதை கணிப்பதற்கு நேரடியான தகவல்கள் போதிய அளவில் கிடைக்கவில்லை. நம்பகமான செய்திகள் குறைவாக இருப்பதால், அவர் எத்துணை பேரளவு பங்கு பெற்றார் என்பதில் ஊகிக்கவே முடியாது. எனினும், அவருடைய பங்கு மிக முக்கியமானது என்பதில் ஐயமில்லை. பொதுவாக எகிப்திய அரசர்கள், பெயரளவுக்கு மட்டும் ஆட்சி தலைவர்களாக இருக்கவில்லை. அவர்கள் ஏராளமான அதிகாரங்களைக் கொண்டு உள்ளபடிக்குத் தீவிரமாக ஆட்சிப் புரிந்தார்கள். மேலும், திறமையற்ற அரசரரின் தலைமையின் கீழ் முடியரசுகள் தங்கள் வெற்றிகளை வலுப்படுத்தி நிலைபெறச் செய்திருக்கவும் முடியாது. எனவே, மெனசிங் காலத்திய மிகச் சிறப்பான நிகழ்ச்சிகளுக்கு அவருடைய சொந்தத் திறமையும் செல்வாக்கும் மிக முக்கியமான உந்து சக்தியாக விளங்கியது எனக் கருதுவதில் தவறில்லை, அவரைப் பற்றிய தகவல்கள் மிகக் குறைவாகக் கிடைத்துள்ள போதிலும், வரலாற்றில் மிகவும் செல்வாக்குப் பெற்றவர்களாக விளங்கிய பெருமக்களில் மெனசும் ஒருவர் என்பதில் ஐயமில்லை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மெனஸ் (கி.மு. 3100), எகிப்து, மெனஸ், நைல், எகிப்திய, மிகக், கீழ், இவர், ஆண்டுகள், கொண்டு, விளங்கியது, முடியரசை, என்பதில், எகிப்தை, தகவல்கள், வடக்கு, கழிமுகப், ஆற்றின், எனினும், என்றும், மேல், நாடாக, Life Notes of Historians - வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்